பிக்ஹுல் இஸ்லாம் – 26- தொழுகையை சுருக்கித் தொழுதல்.

எவ்வளவு தூரப் பயணம் செய்தால் கஸ்ர் செய்யலாம்:
எவ்வளவு தூரம் பயணம் செய்தால் கஸ்ர் செய்யலாம் என்ற கேள்விக்கு பதிலளிப்பதில் அறிஞர்கள் நியாயமான கருத்து வேறுபாட்டை எதிர் கொள்கின்றனர். இந்தக் கருத்து வேறுபாடுகளை சுருக்கமாக இப்படிப் பிரித்து நோக்கலாம்.

1. 48 மைல் அல்லது 85KM தூரம்:
ஒருவரது பயணத் தூரம் 48 மைல் அதாவது 85மKM தூரமுடையதாக இருந்தால் கஸ்ர் செய்யலாம் என்பதர்கும். இப்னு அப்பாஸ், இப்னு உமர்(ர), ஹஸனுல் பஸரி, ஸுஹ்ரி, இமாம்களான மாலிக், ஷாபிஈ, அஹ்மத், அல்லைத், இஸ்ஹாக்(ரஹ்) போன்றோர் இந்த கருத்தில் உள்ளனர்.

‘இப்னு உமர், இப்னு அப்பாஸ்(ர்) ஆகியோர் 48 மைல் தொலைவிற்குப் பயணம் செய்யும் போது கஸ்ர் செய்பவர்களாகவும், நோன்பை விடுபவர்களாகவும் இருந்தனர்.”
(புஹாரி)

நபியவர்கள் கஸ்ர் செய்த பயணத்தின் எல்லையை வைத்து இந்த முடிவை இவர்கள் எடுக்கின்றனர். பேணுதலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகவே இதை நாம் பார்க்க வேண்டியுள்ளது.

‘இப்னு அப்பாஸ்(ர) அறிவித்தார்: நபி(ச) அவர்கள் (மக்காவில்) பத்தொன்பது நாள்கள் தங்கினார்கள். அந்நாள்களில் கஸ்ரு செய்தார்கள். நாங்களும் பத்தொன்பது நாள்களுக்குப் பயணம் மேற்கொண்டால் கஸ்ரு செய்வோம். (அதை விட) அதிகமானால் முழுமையாகத் தொழுவோம். ” (புஹாரி: 1080)

இப்னு அப்பாஸ்(வ) அவர்களின் இந்தக் கூற்று மேலே உள்ள முடிவை அவர்கள் பேணுதலின் அடிப்படையில் எடுத்தார்கள் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. நபி(ச) அவர்கள் பயணத்தில் 19 நாள் கஸ்ர் செய்ததை வைத்து நாமும் 19 நாட்கள் பயணமாக இருந்தால் கஸ்ர் செய்வோம். அதற்கு மேல் தங்கினால் கஸ்ர் செய்ய மாட்டோம் என்கின்றார்கள். உண்மையில் இது பேணுதலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும்.

2. மூன்று நாள் ஒட்டகத்தின் நடைத்தூரம்:
ஒரு ஒட்டகம் மூன்று நாட்கள் பகல்-இரவுகள் நடந்தால் எவ்வளவு தூரம் பயணம் செய்யுமோ அவ்வளவு தூரம் பயணம் செய்தால் கஸ்ர் செய்யலாம் என்ற கருத்தில் சிலர் உள்ளனர்.
இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ‘எந்தப் பெண்ணும் மணம் முடிக்கத் தகாத ஆண் உறவினருடன் தவிர மூன்று நாள்களுக்கான பயணத்தை மேற்கொள்ளக் கூடாது’. என இப்னு உமர்(ர) அறிவித்தார்.”
(புஹாரி: 1086, 1087)

மூன்று நாள், மூன்று இரவு பயணத் தூரத்தை நபி(ச) அவர்கள் பயணமாகக் கூறியிருப்பதால் இவ்வளவு தூரம் பயணித்தவர்கள்தான் பயணிகள் ஆவார்கள் என்பது இத்தரப்பாரின் வாதமாகும்.

அத்தோடு, காலுறைகள் மீது மஸ்ஹ் செய்வது பற்றி நபியவர்கள் கூறும் போது ஊர்வாசி ஒரு நாளைக்கும் பயணி மூன்று நாட்களுக்கும் மஸ்ஹ் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்கள். எனவே, பயணம் என்பது மூன்று நாள் நடைபயணத் தூரமாகும் என்பது இத்தரப்பாரின் வாதமாகும்.

‘இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய எந்தப் பெண்ணும் ஒரு பகல் ஓர் இரவு தொலைவுடைய பயணத்தை மணம் முடிக்கத் தகாத ஆண் உறவினர் இல்லாமல் மேற்கொள்வது கூடாது.”
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ர)”
நூல்: (புஹாரி: 1088)

இந்த அறிவிப்பில் ஒரு பகல் ஒரு இரவு தூரத்தையும் நபி(ச) அவர்கள் பயணமாகக் கூறியிருப்பது கவனிக்கத்தக்கதாகும். குறைந்த அளவு தூரத்தில் கஸ்ர் செய்து விடக் கூடாது என்ற பேணுதலின் அடிப்படையில்தான் இத்தரப்பார் மூன்று நாள் பயணத் தூரம் என்ற முடிவை எடுக்கின்றனர். ஆனால், இது சரியான முடிவல்ல என்பது கவனத்திற் கொள்ள வேண்டியதாகும்.

4. பயணம் என்று குறிப்பிடக் கூடிய அனைத்துத் தூரத்திற்கும் கஸ்ர் செய்யலாம்:
கஸ்ர் செய்வதற்கென்று குறித்த பயணத் தூரம் எதுவும் இல்லை. பயணம் என்று சொல்லக் கூடிய தூரமுடையதாக அந்தப் பயணம் இருந்தால் போதும் என இத்தரப்பார் கருதுகின்றனர்.

‘நீங்கள் பூமியில் பயணிக்கும் போது நிராகரித்தோர் உங்களைத் தாக்குவார்கள் என அஞ்சினால் தொழுகையை நீங்கள் சுருக்கிக் கொள்வதில் உங்கள் மீது குற்றம் இல்லை. நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் உங்களுக்குப் பகிரங்க விரோதிகளாகவே இருக்கின்றனர்.”
(4:101)

பயணம் செய்தால் கஸ்ர் செய்யலாம் என்றுதான் குர்ஆன் குறிப்பிடுகின்றது.

எனவே, பயணம் என்று குறிப்பிடத்தக்க அனைத்துத் தூரத்திற்கும் கஸ்ர் செய்யலாம் என்பது இவர்களது வாதமாகும். இந்தக் கருத்தை லாஹிரி மத்ஹபினர் முன்வைக் கின்றனர். இமாம் இப்னுதைமிய்யா மற்றும் அவரது மாணவர் இமாம் இப்னுல் கையயூம்(ரஹ்) ஆகியோர் இந்தக் கருத்தையே தேர்ந் தெடுக்கின்றனர். இதுதான் மிக நெருக்கமான கருத்தாகும்.

அனஸ்(ர) அறிவித்தார்: ‘நான் நபி(ச) அவர்களுடன் லுஹர்த் தொழுகையை மதீனாவில் நான்கு ரக்அத்களாகத் தொழுதேன். துல்ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்களாகத் தொழுதேன்.” (புஹாரி: 1089)

மதீனாவில் நான்கு தொழுத நபியவர்கள் துல் ஹுலைபாவில் அஸரை இரண்டு ரக்அத்துக்களாகத் தொழுதுள்ளார்கள். இந்த அறிவிப்பு மூன்றாம் தரப்பாரின் கருத்தை உறுதி செய்கின்றது.

48 மைல்களுக்கு அதிகமாக இருந்தால்தான் கஸ்ர் செய்ய வேண்டும் என்ற கருத்துள்ள அறிஞர்கள் நபியவர்கள் 48 மைல் பயணம் செய்திருக்கலாம்! பயணம் ஆரம்பித்து மதீனா தாண்டிய பின்னர் கஸ்ர் செய்ய ஆரம்பித்திருக்கலாம் எனக் கருதுகின்றனர்.

அரபு மொழியில் ஒரு பர்ஸக் என்பது மூன்று மைல்களைக் குறிக்கும். இந்தத் தகவலுடன் பின்வரும் ஹதீஸையும் அவதானியுங்கள்.

‘கஸ்ர் தொழுகை பற்றி நான் அனஸ்(ர) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ‘நபியவர்கள் மூன்று மைல்கள் அல்லது மூன்று பர்ஸஹுகள் (அதாவது ஒன்பது மைல்கள்) பயணம் செய்தால் கஸ்ர் செய்பவர்களாக இருந்தார்கள்” எனக் கூறினர்கள்.”
அறிவிப்பவர்: யஹ்யா இப்னு யசீத் அல் ஹீனாயீ (ரஹ்)
நூல்: முஸ்லிம்: 691-12, 1113-88,
அபபூதாவூத்: 1201, அஹ்மத்: 12313

மூன்று மைலா அல்லது மூன்று பர்ஸஹா என்பது அறிவிப்பாளருக்கு ஏற்பட்ட சந்தேகமாகும். சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட முடிவாக இந்த ஹதீஸை எடுப்பதாக இருந்தால் ஒன்பது மைல் பயணித்தால் கஸ்ர் செய்யலாம் என்று முடிவு செய்யலாம்.

48 மைல் இருக்க வேண்டும் என்று கூறுபவர்கள் 48 மைல்களுக்கு அதிகமாக பயணம் செய்பவர் மூன்று மைல் அல்லது மூன்று பர்ஸஹ் பயணம் சென்றதும் கஸ்ரை ஆரம்பிக்கலாம் என்று இதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அபிப்பிராயப் படுகின்றனர்.

ஆனால், பைஹகியில் இடம்பெறும் அறிவிப்பில் அனஸ்(ர) அவர்களிடம் கேள்வி எவ்வாறு கேட்கப்பட்டது என்பதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. எவ்வளவு தூரம் பயணம் போனால் கஸ்ரை ஆரம்பிக்கலாம் என அவர் கேட்கவில்லை.

நான் (பஸராவில் இருந்து) கூபாவுக்குப் போகின்றேன். மீண்டும் வரும் வரை கஸ்ர் செய்கின்றேன் என்று கஸ்ர் சம்பந்தமாகக் கேட்ட போதுதான் இந்தப் பதில் கூறப்பட்டது. (பைஹகி5446)
நீண்ட தூரப் பயணத்தில் கஸ்ரை ஆரம்பிக்கும் இடம் பற்றி இங்கு கேட்கப்படவில்லை. பஸராவில் இருந்து கூபா சென்றால் கஸ்ர் செய்யலாமா என்று கேட்கப் படுகின்றது. மூன்று மைல் பயணம் சென்றால் அல்லது ஒன்பது மைல் பயணம் சென்றால் கஸ்ர் செய்யலாம் என்று கூறப்படுகின்றது.

நபி(ச) அவர்கள் மதீனாவில் இருந்து பகீஃ மற்றும் உஹது, குபா சென்று கஸ்ர் செய்யாமல் விட்டுள்ளார்கள். எனவே, பேணுதலின் அடிப்படையில் ஒன்பது மைல் தாண்டியதாக பயணம் இருந்தால் ஊரின் எல்லையைத் தாண்டியதிலிருந்து கஸ்ர் செய்ய ஆரம்பிக்கலாம் என முடிவு செய்யலாம். இதுவே ஆதாரங்களுக்கு மிகவும் நெருக்கமானதாக உள்ளது.
அல்லாஹு அஃலம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.