ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் பார்க்கவில்லையா? என திருக்குர்ஆன் கேட்கின்றது. ஒட்டகம் அல்லாஹ்வின் படைப்பில் அதிசயமானது. பாலைவனப் பயணத்திற்கு ஏற்றது. பாலைவனக் கப்பல் என அதனை அழைப்பார்கள்.
முன்னொரு காலத்தில் “தமூத்” என்றொரு சமூகம் வாழ்ந்து வந்தது. அல்லாஹ் அவர்களுக்கு பொருள் வளத்தை வழங்கி இருந்தால் நல்ல உடல்பலம்மிக்கவர்களாக அவர்கள் விளங்கினார்கள். அவர்கள் மலைகளைக் குடைந்து அழகிய வடிவமைப்பில் வீடுகளை அமைத்து வாழ்ந்து வந்தனர். அல்லாஹ் வழங்கிய அருள்களை அனுபவித்த அந்த மக்கள் ஆணவம் கொண்டனர். எம்மை யாராலும் அசைக்க முடியாது என்ற எண்ணத்தில் வாழ்ந்தனர்.
அந்த மக்களுக்கு போதனை செய்வதற்கு அல்லாஹ் “ஸாலிஹ்” என்றொரு நபியை அனுப்பினான். அவர் அந்த மக்களுக்குப் போதனை செய்தார். ஆனால், ஆணவமும் அகங்காரமும் கொண்ட அந்த மக்கள் அதை ஏற்கவில்லை.
ஸாலிஹ் நபியை அந்த சமூகத்தில் உள்ள பலவீனமான மக்கள் மட்டுமே ஏற்றுக் கொண்டனர். இதை வைத்து ஆணவக்காரக் கூட்டம் சத்தியத்தை எதிர்த்தது. “நீ ஒரு நபியென்பதற்கு ஒரு அத்தாட்சி வேண்டும்” என்று கேட்டனர். “அதிசயமாக ஒரு கற்பாறையில் இருந்து ஒரு ஒட்டகம் வர வேண்டும்” என்று கேட்டனர்.
ஸாலிஹ் நபி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள் அதிசயமான ஒரு ஒட்டகம் வந்தது. இருந்தும் அந்த மக்கள் சத்தியத்தை ஏற்கவில்லை. ஸாலிஹ் நபி “அந்த மக்களைப் பார்த்து இது அல்லாஹ்வின் ஒட்டகம் இதற்கு எந்தத் தீங்கும் செய்துவிடாதீர்கள். இந்த ஊரின் கிணற்றில் அதை நீரருந்தவிடுங்கள். பூமியில் அது மேய்ந்து திரியட்டும். அதற்கு தீங்கு செய்தால் அல்லாஹ்வின் தண்டனை வரும்” என்று எச்சரித்தார்கள்.
இருந்தும் அந்த ஊரில் உள்ள ஒன்பது குழப்பக்காரர்கள் ஒன்று சேர்ந்து அந்த அதிசய ஒட்டகத்தை அறுத்துவிட்டனர். அது மட்டுமன்றி நீ எச்சரிக்கை செய்த வேதனையைக் கொண்டு வா பார்க்கலாம் என்றும் ஸாலிஹ் நபிக்கு சவால் விட்டனர்.
ஸாலிஹ் நபி, ‘மூன்று நாட்கள் உங்களுக்கு அவகாசம் உண்டு. அதன் பின்னர் நீங்கள் அழிக்கப்படுவீர்கள்’ என்று கூறினார்கள். சமூத் கூட்டம் தமது கற்குகை வீடுகள் பாதுகாக்கும் என்று நம்பினர்.
அந்த மூன்று நாட்களும் நகர்ந்தன. மிகப்பெரும் இடி முழக்கத்தினால் அந்த மக்கள் அழிக்கப்பட்டனர். அவர்களது வீடுகளுக்குள்ளேயே சடலங்களாகக் கிடந்தனர். அந்த மக்கள் அழிக்கப்பட்ட பிரதேசம் “மதாயின் ஸாலிஹ்” என்ற பெயரில் இன்றும் காணக்கூடியதாக உள்ளது.