முஹர்ரம் அல்லாஹ்வின் மாதம் | கட்டுரை.

ஹிஜ்ரி ஆண்டுக் கணிப்பின் முதல் மாதமாக முஹர்ரம் திகழ்கின்றது. இம்மாதத்தை நபி(ச) அவர்கள் ‘ஷஹ்ருல்லாஹ்’ அல்லாஹ்வின் மாதம் என்று சிலாகித்துக் கூறியுள்ளார்கள். பொதுவாக எல்லா மாதங்களும் அல்லாஹ்வின் மாதம்தான் என்றிருப்பினும் முஹர்ரம் மட்டும் ஏன் அல்லாஹ்வின் மாதம் என்று அழைக்கப்படுகின்றது என்ற ஐயம் எழலாம்.

எல்லாமே அல்லாஹ்வுக்குரியது என்றிருந்தாலும் ஏதாவது ஒன்று அல்லாஹ்வுடன் இணைத்துக் கூறப்பட்டால் அது அப்பொருளின் சிறப்பைக் குறிப்பதாகச் கொள்ளப்படும். அல்லாஹ் ஸாலிஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் ஒட்டகத்தை அல்குர்ஆன் ‘நாகதுல்லாஹ்’ – அல்லாஹ்வின் ஒட்டகம் என்று குறிப்பிடுகின்றது. எல்லா ஒட்டகங்களும் அல்லாஹ்வுடையதுதான். என்றாலும் ஸாலிஹ் நபியின் ஒட்டகத்தின் விசேடத்தைக் குறிக்கவே இங்கே அது அல்லாஹ்வின் ஒட்டகம் என்று கூறப்படுகின்றது. இந்த அடிப்படையில் நபி(ச) அவர்கள் முஹர்ரம் மாதத்தை அல்லாஹ்வின் மாதம் என்று குறிப்பிட்டதினூடாக இம்மாதம் முக்கியத்துவமானது, தனிச்சிறப்பானது என்பதை உணர்த்தியுள்ளார்கள்.
01. போரை ஆரம்பிப்பது தடுக்கப்பட்ட மாதம்:
நான்கு மாதங்களில் போர் செய்வதை இஸ்லாம் தடுத்துள்ளது. எதிரிகள் தாக்குதல் நடாத்தினால் தற்காப்புக்காகத் தாக்குதல் நடாத்தலாம். ஆனால், முஸ்லிம்கள் இந்நான்கு மாதங்களில் போரை ஆரம்பிப்பது கூடாது. இவ்வாறு போர் செய்வது தடுக்கப்பட்ட புனித நான்கு மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்றாகும்.

‘அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் பன்னிரெண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமானவையாகும். இதுதான் நேரான மார்க்கம். இவைகளில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள். இணைவைப்போர் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போன்று நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியாளர்களுடன் இருக்கின்றான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.’
(9:36)

அந்த நான்கு மாதங்கள் எவை என்பது பற்றி நபி(ச) அவர்கள் பின்வருமாறு விளக்கியுள்ளார்கள்.

ஹஜ்ஜத்துல் வதாவில் உரையாற்றிய போது) நபி(ச) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் இருந்த (பழைய) நிலைக்கே காலம் திரும்பிவிட்டது. ஓர் ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்கள் ஆகும். அவற்றில் நான்கு மாதங்கள் (போரிடுதல் விலக்கப்பட்ட) புனித மாதங்களாகும். (அந்த நான்கு மாதங்களில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வருகின்றவையாகும். அவை ஃதுல்கஅதா, ஃதுல்ஹஜ், முஹர்ரம் மற்றும் ஜுமாதஸ்ஸானீக்கும் ஷஅபானுக்கும் இடையிலுள்ள முளர் குலத்து ‘ரஜப்’ மாதம் ஆகும்.’
அறிவிப்பவர்: அபூ பக்ரா(ர)
நூல்: புகாரி: 4662, 5550, 7447)

02. பிர்அவ்ன் அழிக்கப்பட்ட மாதம்:
இஸ்ரவேல் சமூகத்திற்கு இம்மாதத்தில்தான் ஈடேற்றம் கிடைத்தது. எகிப்தில் அவர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த பர்வோனிய அரசு அழிந்தது இம்மாதத்தில்தான். இஸ்ரவேல் சமூகம் எகிப்தில் அடிமைகளாக இருந்தனர்.

பர்வேனிய மன்னர்கள் அவர்களை அடிமைப்படுத்திக் கொடுமை புரிந்து வந்தனர். இஸ்ரவேல் சமூகத்தின் விடுதலைக்காக மூஸா, ஹாரூன் நபிமார்கள் போராடினர். இஸ்ரவேல் சமூகம் பாதுகாக்கப்பட்டு பர்வேனிய மன்னனும் அவனது இராணுவமும் கடலில் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது இம்மாதத்தில்தான். இந்த அடிப்படையில் பிர்அவன் அழிக்கப்பட்ட பத்தாம் நாள் ஆஷூரா என அழைக்கப்படும். இத்தினத்தில் முஸ்லிம்கள் நோன்பிருந்து இறைவனுக்கு நன்றி செலுத்துவார்கள்.

இஸ்ரவேல் சமூகம் இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராகவே இருந்து வருகின்றது. இருப்பினும் இஸ்ரவேல் சமூகம் அதன் தூதரும் பாதுகாக்கப்பட்ட இந்நாளை இன்று வரை முஸ்லிம்கள் நோன்பிருந்து நன்றி செலுத்திக் கொண்டாடுகின்றனர். இதுதான் இஸ்லாத்தின் நடுநிலை தவறாத நேரிய போக்காகும்.

இஸ்லாம் எல்லா இறைத்தூதர்களையும் மதிக்கின்றது. எல்லா அநியாயங்களையும் எதிர்க்கின்றது என்பதற்கான அடையாளமாக இது அமைந்துள்ளது.

இஸ்ரவேல் சமூகத்தின் ஆண் பிள்ளைகளைக் கொலை செய்து வந்த கொடியவன் பிர்அவ்னை அழித்த அல்லாஹ் பர்மா, சிரியா, காஷ்மீர், பலஸ்தீன் போன்ற பிரதேசங்களில் அக்கிரமம் புரிந்து வரும் அநியாயக்கார கூட்டங்களையும் அல்லாஹ் அழிப்பானாக!

3. நோன்புக்குச் சிறந்த முஹர்ரம்:
முஹர்ரம் மாத நோன்பை நபி(ச) அவர்கள் பெரிதும் சிறப்பித்துப் பேசியுள்ளார்கள்.

‘ரமழான் நோன்புக்கு அடுத்ததாக நோன்புகளில் சிறந்தது அல்லாஹ்வின் மாதமாகிய முஹர்ரம் நோன்பாகும். கடமையான தொழுகைக்கு அடுத்ததாக தொழுகையில் சிறந்தது நடுநிசித் தொழுகையாகும்’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ர)
நூல்: முஸ்லிம் 202-1163)

4. பிறை 9-10 நோன்பு:
முஹர்ரம் மாதம் பிறை 9-10 தினங்களில் நோன்பிருப்பது நபிவழியாகும். ஒன்பதாம் நாள் தாசுஆ என்றும் பத்தாம் நாள் ஆசூரா என்றும் அழைக்கப்படும். இந்த ஆசூரா நாள் ஆரம்ப கால அரபிகளால் சிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நாளில் அவர்கள் நோன்பிருந்துள்ளனர். அத்துடன் இத்தினத்தில்தான் கஃபாவுக்கு ஆடை அணிவிக்கப்படும். நபி(ச) அவர்கள் மூஸா நபி பாதுகாக்கப்பட்டதற்கு நன்றி செலுத்தும் முகமாக இத்தினத்தில் நோன்பு நோற்றுள்ளார்கள்.

இப்னு அப்பாஸ்(ர) அறிவித்தார்: ‘நபி(ச) அவர்கள் மதீனா வந்தபோது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றதைக் கண்டார்கள். ‘இது என்ன நாள்?’ என்று கேட்டார்கள். யூதர்கள் ‘இது நல்ல நாள், இஸ்ரவேலர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள்; இதற்காக மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள்’ என்று கூறினார்கள். நபி(ச) அவர்கள், ‘உங்களைவிட மூஸாவுக்கு அதிக உரிமை படைத்தவன் நான்’ என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையும் இட்டார்கள்.’ (புகாரி: 2004)

தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் யூதர்களுக்கு மாறு செய்யும் முகமாக அடுத்த ஆண்டு நான் உயிருடன் இருந்தால் 9உம் சேர்த்துப் பிடிப்பேன் என்று கூறினார்கள். ஆனால், அடுத்த வருடம் முஹர்ரம் வருவதற்கு முன்னரே அவர்கள் மரணித்துவிட்டார்கள். இந்த அடிப்படையில் முஹர்ரம் மாதம் 9-10 தினங்களில் நோன்பு நோற்பது நபிவழியாகும்.

5. யூதர்களுக்கு மாறு செய்தல்:
யூதர்கள் போன்று நடப்பதை இஸ்லாம் தடுத்துள்ளது. நல்ல விடயத்தில் கூட அவர்கள் போன்று செயற்படாமல் அவர்களை விட சற்று அதிகமாகச் செயற்பட வேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டுகின்றது. யூதர்கள் 10 மட்டும் நோன்பு நோற்கின்றனர். அவர்களுக்கு ஒப்பாகாமல் இருப்பதற்காக நாம் 9உம் 10உம் நோன்பிருப்போம் என நபி(ச) அவர்கள் வழிகாட்டுகின்றார்கள். ஒரு வழிபாட்டைச் செய்வதில் கூட யூதர்களுக்கு ஒப்பாகக் கூடாது என இஸ்லாம் வழிகாட்டும் போது யூத கலாச்சாரத்தையும் வழிமுறையையும் பின்பற்றுவது எவ்வளவு பெரிய தவறாகும் என்பதை நாம் உணர வேண்டும். யூத கலாச்சாரம் உலகை அழிவின் பக்கம் இட்டுச் செல்லும். யூத கலாச்சாரத்தைப் புறக்கணிப்பதுதான் உலகின் ஈடேற்றத்திற்கும் வழியாக இருக்கும். இது முஸ்லிம்களுக்கு மட்டும் அல்லாது மானிட ஈடேற்றத்திற்கே இது வழியாக அமையும்.

7. கர்பலாவும் துக்க தினமும்:
முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் இஸ்லாமிய வரலாற்றில் ஒரு சோக நிகழ்வு நடந்தது. அதுதான் முஹம்மத்(ச) அவர்களின் பேரர் சுவனத்து இளைஞர்களின் தலைவர் ஹுஸைன்(ர) அவர்கள் கர்பலா எனும் இடத்தில் கொலை செய்யப்பட்டார்கள். இஸ்லாமிய அடிப்படையில் மூன்று தினங்களுக்கு மேல் துக்க தினம் அனுஷ்டிப்பது தவறாகும். ஹுஸைன்(ர) அவர்கள் கொல்லப்பட்டது கவலை தரும் நிகழ்வென்றாலும் அந்தத் தினத்தை வருடா வருடம் துக்க தினமாக அனுஷ்டிப்பது வழிகேடாகும்.

ஷீஆக்கள் எனும் வழிகேடர்கள் இத்தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக் கின்றனர். இத்தினத்தில் படுகொலைக் கத்தம் ஓதுவது, கன்னத்தில் அறைந்து ஆடைகளைக் கிழித்துக் கொள்வது, ஒப்பாரி வைப்பது, உடலில் காயத்தை ஏற்படுத்தி இரத்தத்தை ஓட்டுவது… போன்ற வழிகேடான செயற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

உண்மையில் ஹுஸைன்(ர) அவர்கள் மீதுள்ள பாசத்தில் இவர்கள் இதைச் செய்யவில்லை. உமையாக்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தவும் ஷீஆக் கொள்கையைத் திணிக்கவும் இவர்கள் போடும் வேஷமே இதுவாகும்.

ஷீஆ கொள்கைப் பிரச்சாரம் ஹுஸைன்(ர) அவர்களை விட அலி(ர) அவர்கள் உயர்ந்தவர்கள். எமது கொள்கையும் உண்மையும் அதுதான். அலி(ர) அவர்களும் கொலை செய்யப்பட்டார்கள். ஹுஸைன்(ர) அவர்களின் கொலையை வைத்து இவ்வளவு கூத்துக்களையும் போடும் ஷீஆக்கள் அலி(ர) அவர்கள் கொல்லப்பட்ட தினத்தில் துக்கம் அனுஷ்டிப்பது இல்லை. அலி(ர) அவர்களைக் கொன்றவர்கள் கவாரிஜ்கள். அவர்களுடன் இவர்களுக்கு அரசியல் தகராறும் இல்லை. எனவே, அவர்கள் மீது மக்களின் வெறுப்பைக் கிளறிவிட வேண்டிய தேவை இவர்களுக்கு இல்லை.

ஹுஸைன்(ர) அவர்களைக் கொன்றவர்கள் உமையாக்கள். அவர்கள் மீது வெறுப்பைக் கிளறி அரசியல் ஆதாயம் தேட வேண்டிய நிலை இவர்களுக்கு இருந்தது. எனவேதான் கர்பலா துக்க அனுஷ்டிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இன்றும் நபித்தோழர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்த இதை ஒரு சாதனமாக இவர்கள் கையாளுகின்றனர். கர்பலா தின துக்க அனுஷ்டிப்பு என்பது வழிகேடானதாகும்.

முஹர்ரம் மாதம் புனிதமானது. இம்மாதம் 9-10 நோன்பு நோற்பது சுன்னாவாகும். ஏனைய நாட்களில் நோன்பிருப்பதும் சிறப்பானதாகும். இம்மாதத்திற்கென புது வருடக் கொண்டாட்டம் அல்லது வேறு விஷேட வணக்கங்கள் எதையும் இஸ்லாம் எம்மீது விதியாக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.