மூஸா நபியும் சமைத்த பின் உயிர்பிழைத்த அதிசய மீனும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-16]

முன்னொரு காலத்தில் மூஸா என்ற பெயரில் ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். அவருக்கு அல்லாஹ் ‘தவ்ராத்’ எனும் வேதத்தைக் கொடுத்து பனூ இஸ்ரவேலருக்கு நபியாகவும் அவரை ஆக்கினான். அந்த நபி தவ்றாத் வேதத்தைப் போதித்து மக்களை நல்வழிப்படுத்த படாதபாடு பட்டார். அவர் நல்ல நாவண்மை பெற்றிருந்தார். ஒரு நாள் அவர் மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருந்தார். அவரது அறிவையும் ஆற்றலையும் கண்டு ஆச்சரியப்பட்ட ஒருவர் “அல்லாஹ்வின் தூதரே! இந்த உலகில் உங்களை விட அறிவாளி யாரேனும் உண்டா?” எனக் கேட்டு விட்டார்.

மூஸா நபியும் நமக்கு அல்லாஹ் ‘வஹி’ எனும் வேத வெளிப்பாட்டை வழங்கியுள்ளான். நம்மைவிட வேறு யார்தான் அதிகம் அறிந்திருக்கப் போகின்றனர் என்ற எண்ணத்தில் “இல்லை நான்தான் அதிகம் அறிந்தவன் ” என்று கூறிவிட்டார். பெருமையும் ஆணவமும் அல்லாஹ்வுக்கே உரியன. அதில் எவருக்கும் அவன் பங்கு கொடுப்பதில்லை. எனவே அல்லாஹ் : மூஸாவே! உமக்கு நான் அறிவித்ததைத் தவிர வேறு எதுவும் உமக்குத் தெரியாது! எனது நல்லடியார் ஒருவர் உள்ளார் அவர் நீ அறியாத பலவற்றை அறிந்தவர்.

மூஸா : அந்த நல்லடியார் யார்? அவரை எங்கே காணமுடியும்? அவரிடம் சென்று நான் கற்க விரும்புகின்றேன்.

அல்லாஹ் : இரு கடல்கள் ஒன்றுசேரும் இடத்தில் நீ அவரைக் காணலாம்.

மூஸா : அந்த இடத்தை நான் எப்படிக் கண்டுகொள்ள முடியும்?

அல்லாஹ் : நீ உ ன் பயணத்தைத் தொடர்! அந்த இடத்தை இனங்காண உனக்கொரு அத்தாட்சியை (அற்புதத்தை) நாம் காட்டுவோம்.

இதன்பின் மூஸா அந்த நல்ல மனிதரைக் காண பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். மூஸாவுக்கு யூஸஃ இப்னு நூன் என்றொரு பணியாளர் இருந்தார். அவர் மூஸா நபியின் நம்பிக்கைக்கு உரியவராவார். நபியின் நட்பையும், அன்பையும் பெற்றவர் அவரிடம்.

மூஸா : யூஸஃ நான் ஒரு பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளேன். உனக்கு என் கூட வரமுடியுமா?

யூஸஃ : வருகிறேன். எங்கே?

மூஸா : போகும் இடம் தெரியாது. ஆனால் எமது பயணம் கடற்கரையை அண்டியதாக இருக்கும்.

யூஸஃ : எத்தனை நாள் பயணம்?

மூஸா : அதுவும் தெரியாது. இரு கடல்கள் ஒன்றுசேரும் இடத்திற்குச் செல்ல வேண்டும்.

யூஸஃ : இடத்தை எப்படி அறிந்துகொள்வீர்கள்?

மூஸா : அல்லாஹ் ஒரு அத்தாட்சியைக் காட்டுவான். அதன்மூலம் அறியலாம்.

மூஸாவும் அவர் பணியாளரும் பயணத்திற்குரிய சகல ஏற்பாடுகளையும் செய்தனர். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்துப் பயணத்தைத் துவங்கினர்.
நடந்தார்கள், நடந்தார்கள், நடந்துகொண்டே இருந்தார்கள்.

யூஸஃ : எவ்வளவு தூரம் வந்துவிட்டோம். இன்னும் எவ்வளவு தூரம்தான் செல்ல வேண்டுமோ…?

மூஸா : இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்று தெரியாது. ஆனால், ஆண்டுகள் பல ஆனாலும் அந்த இடத்தை அடையாமல் நான்
ஓயமாட்டேன். இந்த உறுதியுடனே பயணத்தைத் தொடர்ந்தனர். ஒருநாள் பயணத்தை நடுவே ஒரு பாறாங்கல்லைக் கண்டு “நாம் இதில் சற்று
ஓய்வெடுத்துவிட்டுச் செல்வோம் என எண்ணி இருவரும் அமர்ந்தனர். நடந்துவந்த களைப்பினால் அசதியுடன் மூஸா நபி தூங்கி விட்டார்.

யூஸஃ தூக்கக் கலக்கத்துடன் இருக்கும்போது ஒரு அற்புதம் நடந்தது. உண்பதற்காக சமைத்த மீன் உயிர் பெற்று பாறையைத் தாண்டி கடல் நீரில் சுரங்கம்
போல் பாதையை ஏற்படுத்திக் கொண்டு சென்றது.

யூஸஃவுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. சமைத்த மீன் ஓடிவிட்டதே! என்ன ஆச்சரியமிது. உடனே இதை நபி மூஸாவிடம் கூறவேண்டும் என
எண்ணினார். ஆனால், அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.நபியவர்கள் எழுந்ததும் உடனே இச்செய்தியைக் கூறவேண்டும் என எண்ணிக்
கொண்டார். சற்று நேரத்தில் அவரும் அயர்ந்து தூங்க ஆரம்பித்து விட்டார்.

தொடரும்,….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.