“(பாதுகாப்புக்கான) அல்லாஹ்வினது உத்தரவாதமும் மனிதர்களினது உத்தரவாதமும் இருந்தாலே தவிர, அவர்கள் எங்கு காணப்பட்ட போதும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டு விட்டது. மேலும், அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளானார்கள். இன்னும் அவர்கள் மீது வறுமை விதிக்கப்பட்டு விட்டது. அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் நிராகரித்தமையும், அநியாயமாக நபிமார்களைக் கொலை செய்து வந்தமையுமே இதற்கான காரணங்களாகும். இது அவர்கள் மாறு செய்து வந்ததாலும், வரம்பு மீறிக் கொண்டே யிருந்ததினாலுமாகும்.” (3:112)
யூதர்கள் மீது இழிவும் வறுமையும் சாட்டப்பட்டு விட்டது. அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கு உள்ளானவர்கள் என்று இந்த வசனம் கூறுகின்றது.
யூதர்கள் மீது இழிவு விதியாக்கப்பட்டுள்ளது. மக்கள் அவர்களை இழிவாகத்தான் பார்க்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்குரியவர்கள். ஆனால், அவர்கள் மீது வறுமை விதியாக்கப்பட்டதாக அல்லாஹ் கூறுகின்றானே அவர்கள் வறுமையில் இல்லையே! அவர்கள் செல்வச் செழிப்புடன்தானே இருக்கின்றனர். குர்ஆனின் கூற்று பொய்யாகிவிட்டதே என்ற எண்ணம் ஏற்படலாம்.
இந்த வசனம் குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சான்றாகவே இருக்கின்றது. யூதர்கள் மீது இழிவும் வறுமையும் விதியாக்கப்பட்டது என்ற கூற்று ஆயிரம் வருடங்களாக உண்மைப்படுத்தப் பட்டது. இழிவுற்றவர்களாக, நாடோடிகளாக உலகமெல்லாம் அலைந்து திரிந்தனர். இந்த வகையில் குர்ஆனின் கூற்று உண்மையாக்கப்பட்டது. குர்ஆன் இறைவேதம் என்பதை யூத இனம் அனுபவித்து வந்த இழிவின் மூலம் உறுதியானது.
சரி, இப்போது யூதர்கள் வறுமையில் இல்லையே என்ற எண்ணம் எழலாம். இங்கு அல்லாஹ் யூதர்கள் மீது வறுமை விதிக்கப்பட்டாலும் அவர்கள் அதில் இருந்து மீள இரு வழிகள் சொல்லப்படுகின்றன.
ஒன்று, அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு அல்லாஹ்வின் உதவியைப் பெறுவது. அத்துடன் இரண்டாவது, ஒரு வழி உண்டு. அதுதான் பிற மனிதர்களுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தம் மூலமும் அவர்கள் தம்மை வறுமையில் இருந்து காப்பாற்றிக் கொள்ளலாம் என இந்த வசனம் கூறுகின்றது.
யூதர்கள் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் பிரித்தானியா, அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பின் தமது நிலையை மாற்றிக் கொண்டனர். அவர்கள் தமக்கென தனியான நாட்டை உருவாக்கிக் கொண்டனர். மனிதர்களுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தத்தின் மூலம் யூதர்கள் தமது வறுமையை நீக்கிக் கொள்ளலாம் என குர்ஆன் கூறுகின்றது. அது நடந்திருப்பதைப் பார்க்கும் போது குர்ஆன் ஓர் இறைவேதம் என்பதற்கு இந்த வசனம் நிதர்சனமான சான்றாகத் திகழ்கின்றது.
இஸ்லாத்தை எதிர்ப்பவர்களின் இழிவையும் ஒப்பந்ததத்தின் மூலம் அவர்கள் இழிவிலிருந்து விடுபடலாம் என்ற முன்னறிவிப்பையும் செய்து இஸ்லாத்தின் எதிரிகளையே இஸ்லாம் உண்மை மார்க்கம் என்பதற்கான சான்றாக ஆக்கிய அல்லாஹ் பரிசுத்தமானவனாவான்.
உஹதில் ஏற்பட்ட தளர்வு:
“(நயவஞ்சகர்களின் சதியினால்) அப்போது உங்களில் இரு சாரார் கோழைகளாகி (பின் வாங்கி)ட நாடியதை (நபியே! நீர் எண்ணிப் பார்ப்பீராக!) அல்லாஹ்வே அவ்விரு சாராரின் பாதுகாவலனாவான். நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே முழுமையாக நம்பிக்கை வைக்கட்டும்.” (3:122)
உஹதுப் போர் குறித்து இந்த வசனம் பேசுகின்றது. பத்ரில் ஏற்பட்ட தோல்விக்குப் பழிதீர்க்க வேண்டும் என்ற வெறியில் 3000 பேர் கொண்ட ஒரு படை மதீனா நோக்கி வெறியுடன் வரும் செய்தி நபியவர்களுக்கு எட்டியது.
போரை எப்படி எதிர் கொள்வது என்று நபி(ச) அவர்கள் தோழர்களுடன் ஆலோசனை செய்தார்கள். சிலர் மதீனா உள்ளே இருந்து தற்காப்புப் போர் செய்வோம் என்றனர். மற்றும் சிலர் மதீனாவின் எல்லையில் எதிரிகளைச் சந்திப்போம் என்றனர். முனாபிக்குகளின் தலைவன் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலூல் மதீனாவுக்குள் இருந்து தற்காப்புப் போர் செய்வோம் என்ற கருத்தைக் கூறினான். நபி(ச) அவர்களின் முடிவு மாற்றமாக இருந்தது.
இதனால் வெறுப்புடன் உஹதுக்குச் சென்ற அவன் தன்னுடன் ஒரு கூட்டத்தை கழற்றிக் கொண்டு போரில் இருந்து பின்வாங்கினான். அவனது தலைமையில் 300 பேர் போரை விட்டும் விலகினர். பின்னர் நபித்தோழர்களில் ஒரு கூட்டம் எதிரிகளுடன் சண்டை செய்வதற்கு முன்னர் இவர்களை ஒரு கை பார்க்க வேண்டும் என்று நினைக்கும் நிலைக்கு உள்ளானார்கள்.
முனாபிக்குகளின் விலகல் முஃமின்களுக்கு மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இது குறித்துத்தான் இந்த வசனம் பேசுகின்றது. இதற்கு அடுத்த வசனத்தில் பத்ரில் இதை விட கொஞ்சமாக நீங்கள் இருந்த போது, ‘குறைந்த எண்ணிக்கையில் அல்லாஹ் உங்களுக்கு உதவினான்” என்று கூறி முஃமின்களை அல்லாஹ் உற்சாகப்படுத்தினான். அத்துடன் நபி(ச) அவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்ற வதந்தி பரவிய போது நபித்தோழர்களில் சிலர் விரண்டு ஓட முற்பட்டார்கள்.
உஹதின் இந்த நிலையை இந்த வசனம் கூறும் செய்தி என்பவற்றைப் பார்க்கும் போது நபித்தோழர்கள் மீது உள்ள மதிப்பும் மரியாதையும் குறையலாம். ஆனால் உஹது யுத்தத்தின் முடிவு பற்றி அல்லாஹ் பேசும் போது நபித்தோழர்களை மன்னித்துவிட்டதாக அல்லாஹ் கூறுகின்றான்.
“இரு அணியினரும் (போருக்காக) நேருக்கு நேர் சந்தித்த அந்நாளில் உங்களில் நிச்சயமாக எவர்கள் புறமுதுகிட்டுச் சென்றார்களோ, அவர்கள் செய்த (தவறுகள்) சிலவற்றின் காரணமாக ஷைத்தானே அவர்களை நிலைகுலையச் செய்தான். எனினும், நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், சகிப்புத் தன்மை உடையவன்.” (3:155)
எனவே, உஹதில் ஏற்பட்ட சூழ்நிலைகள் குறித்து படிப்பினைக்காக எடுத்துச் சொல்லலாம். ஆனால் அவற்றை வைத்து நபித்தோழர்களை விமர்சிக்க முடியாது!
அல்லாஹ்வே மன்னித்த பின் அதை வைத்துக் குறை கூறக் கூடாது! இதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.