சுலைமான் நபியும் ஹுத்ஹுத் பறவையும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-6]

“பறவைகளை அவர் அவதானித்து, ‘எனக்கு என்ன ஆயிற்று!, “ஹுத் ஹுதை” நான் காணவில்லையே! சமுகமளிக் காதோரில் அது ஆகி விட்டதா?’ எனக் கேட்டார்.”

“நிச்சயமாக நான் அதைக் கடுமையாகத் தண்டிப்பேன். அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது (சமுகமளிக்காததற்கான) தெளிவான ஆதாரத்தை அது என்னிடம் கொண்டு வர வேண்டும். (என்றும் கூறினார்.)”

“சிறிது நேரம் தாமதித்த அது (அவரிடம் வந்து), ‘நீங்கள் அறியாத ஒன்றை நான் அறிந்து, “ஸபஃ” (எனும் பிரதேசத்தி)லிருந்து உறுதியான ஒரு செய்தியுடன் உங்களிடம் வந்துள்ளேன்’ என்று கூறியது.”

“அவர்களை ஆட்சி செய்யும் ஒரு பெண்ணை நிச்சயமாக நான் கண்டேன். அவள் (தேவையான) அனைத்துப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளாள். மேலும், அவளுக்கு மகத்தானதொரு சிம்மாசனமும் உள்ளது.”

“அல்லாஹ்வை விட்டுவிட்டு சூரியனுக்கு சுஜூது செய்பவர்களாக அவளையும் அவளது கூட்டத்தாரையும் கண்டேன். ஷைத்தான் அவர்களது செயல்களை அவர்களுக்கு அலங்கரித்துக் காட்டி, அவர்களை (நேர்) வழியை விட்டும் தடுத்து விட்டான். எனவே, அவர்கள் நேர்வழி பெற மாட்டார்கள்.”

“வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்துகின்ற, மேலும் நீங்கள் மறைப்பவற்றையும் பகிரங்கப்படுத்துபவற்றையும் அறிகின்ற அல்லாஹ்வுக்கு அவர்கள் சுஜூது செய்ய வேண்டாமா?”

“(உண்மையாக) வணங்கப்படத் தகுதி யானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரு மில்லை. (அவன்) மகத்தான அர்ஷின் இரட்சகனாவான்.”

“நீ உண்மை உரைத்தாயா? அல்லது நீ பொய்யர்களில் இருக்கிறாயா? என்பதை நாம் அவதானிப்போம்” என (சுலைமான்) கூறினார்.

“எனது இக்கடிதத்தை எடுத்துச் சென்று, அவர்களிடம் அதைப் போட்டு விட்டு பின்னர் அவர்களை விட்டும் ஒதுங்கி, அவர்கள் என்ன முடிவு செய்கின்றனர் என்பதைக் கவனித்துப்பார் (என்றும் கூறினார்)”

“பிரமுகர்களே! நிச்சயமாக என்னிடம் சங்கையான ஒரு கடிதம் போடப்பட்டுள்ளது” என்று (ஸபஃ இளவரசி) கூறினாள்.

“நிச்சயமாக அது சுலைமானிடமிருந்து வந்துள்ளது. அது, ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்’ (அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையவனுமான அல்லாஹ் வின் பெயரால் என ஆரம்பிக்கின்றது.)”

“நீங்கள் என்னிடம் ஆணவம் கொள்ளாதீர்கள். முஸ்லிம்களாகவே என்னிடம் வாருங்கள். (என்று எழுதப்பட்டுள்ளது.)”

“பிரமுகர்களே! எனது விஷயத்தில் நீங்கள் எனக்கு ஆலோசனை கூறுங்கள். நீங்கள் என்னிடம் நேரடியாகக் கருத்துச் சொல்லாத வரையில் எந்தவொரு விஷயத் தையும் முடிவு செய்பவளாக நான் இல்லை” என்று கூறினாள்.”

“அ(தற்க)வர்கள், ‘நாம் பலசாலிகளாகவும் பலமாகப் போராடக் கூடியவர்களாகவும் இருக்கின்றோம். முடிவு உம்மிடமே உள்ளது. எதை (எமக்கு) ஏவுவது என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்” என்று கூறினர்.

“நிச்சயமாக அரசர்கள் ஒரு கிராமத்தில் நுழைந்தால், அதைச் சீரழித்து விடுவார்கள். அக்கிராமத்தவர்களில் கண்ணிய மிக்கவர்களை இழிவானவர்களாக ஆக்கி விடுவர். இவ்வாறே இவர்களும் செய்வார்கள்” என்று கூறினாள்.”

“நிச்சயமாக நான் அவர்களுக்கு ஒரு அன்பளிப்பை அனுப்பி, தூதர்கள் என்ன முடிவுடன் திரும்புகின்றனர் என்பதைக் கவனிக்கப் போகின்றேன் (என்றும் கூறினாள்)”

“அவர்கள் சுலைமானிடம் வந்த போது, ‘எனக்குப் பொருளைக் கொடுத்து நீங்கள் உதவப் போகிறீர்களா? அல்லாஹ் எனக்கு வழங்கியிருப்பது, அவன் உங்களுக்கு வழங்கியிருப்பதை விட மிகச்சிறந்ததாகும். எனினும் உங்கள் அன்பளிப்பைக் கொண்டு நீங்களே மகிழ்ச்சியடையுங்கள்’ என்று கூறினார்.”

“அவர்களிடம் திரும்பிச் செல்லுங்கள். அவர்களால் எதிர்கொள்ளமுடியாத படை களுடன் நிச்சயமாக நாம் அவர்களிடம் வந்து, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக இருக்கும் நிலையில் இழிவடைந்தவர்களாக, அதை விட்டும் அவர்களை நிச்சயமாக நாம் வெளியேற்றுவோம் (என்றும் கூறினார்)”

(27 : 20-37)

இந்த சம்பவம் இன்னும் நீண்டது. சுலைமான் நபியின் பறவைப் படையின் தளபதி ஹுத் ஹுத் பறவையை ஒரு நாள் அவர் காணவில்லை. அது சற்று தாமதித்து வந்தது. தனது தாமதத்திற்கான காரணத்தையும் அது கூறியது. சபா எனும் நாட்டைப் பற்றியும், அந்த மக்களை ஒரு பெண் ஆட்சி செய்வது பற்றியும் கூறியது. அவர்களுக்கு சகல வளங்களும் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால், அப்பெண்ணும் அந்நாட்டு மக்களும் சூரியனை வணங்குகின்றனர். அவர்கள் அல்லாஹ் ஒருவனை மட்டுமல்லவா வணங்க வேண்டும் என்று அந்தப் பறவை கூறியது.

அந்தப் பறவையின் உணர்வை நாம் பிள்ளைகளுக்கு ஊட்ட வேண்டும். அல்லாஹ் ஒருவன் மட்டுமே எச்சந்தர்ப்பத்திலும் வணங்கப்பட வேண்டியவன். சூரியனோ, சந்திரனோ, மண்ணோ அல்லது மரமோ வணக்கத்திற்குரியவை அல்ல. இவற்றையெல்லாம் படைத்த அல்லாஹ் ஒருவன் மட்டுமே வணங்கத் தகுதியானவன். இதை அந்தப் பறவை அறிந்து வைத்திருந்தது. மக்கள் சூரியனை வணங்குவதை அந்தப் பறவை கூட விரும்பவில்லை என்பதை விளக்க வேண்டும்.

பின்னர் சுலைமான நபி அந்தப் பறவை மூலம் ஸபா இளவரசிக்குக் கடிதம் அனுப்பி அந்தக் கடிதத்தை வைத்து அவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்பதை அந்தப் பறவை ஒட்டுக் கேட்டு அதை சுலைமான் நபியிடம் கூறியது. அந்தப் பறவை வழங்கிய தகவலின் படி சுலைமான் நபி செயற்பட்டு ஈற்றில் அந்த இளவரசி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை இந்த அத்தியாயத்தின்(27) 38-44 வரையுள்ள வசனங்கள் விளக்குகின்றன.

அவற்றை விளக்குவதுடன் இஸ்லாத்தின் சத்திய கொள்கையில் உறுதியுடன் இருப்பதுடன் பிறருக்கும் இந்த சத்தியத்தை தெளிவுபடுத்துவதன் அவசியத்தை இந்த ஹுத் ஹுத் பறவையிடமிருந்து நாம் பாடமாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதைப் புரிய வைக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.