பெண்ணே பெண்ணே! அறுவை வேண்டாம் | (‘பெண்களே உங்களுக்குத்தான்’ எனும் புத்தகத்திலிருந்து) | Article

மனிதர்களில் சிலர் சரியான அறுவைப் பாட்டியாக
இருப்பர். பேசிக் கொண்டே இருப்பர். இந்தப் பேச்சு
வெறுப்பேற்றுவதாகக்கூட இருக்கும். இத்தகைய
இயல்புடையோர் பெண்களிலும் இருக்கின்றனர்.

ஒரே விடயத்தை ஒரே நபரிடம் ஒன்பது தரம்
பேசுவர். அதன் பிறகும் பேசத் தயாராக இருப்பர். ஆனால்
பாவம்! கேட்பவர்கள் பாடோ படுதிண்டாட்டம்தான்.

சலிப்போ, களைப்போ இல்லாமல் கதைத்துக்
கொண்டிருப்பர். சிலருக்கு வீட்டில் வேலையிருக்காது.
ஓய்வு நேரத்தைக் கழிப்பதற்காக அடுத்த வீட்டிற்குப்
போய் அறுக்க ஆரம்பிப்பர் . இவளுக்கு
வேலையில்லாமல் பேசிக் கொண்டிருப்பாள். அவளுக்கும்
வேலையில்லாமல் இருக்குமா? அல்லது இவளது
பொழுதைப் போக்கும் விளையாட்டுப் பொருளாக அவள்
மாற முடியுமா? சலித்துப் போவார்கள்.

சிலர் தாங்க முடியாத நிலையில் ‘சரியான
வேலை, வொஷின் மெஷினில் போட்ட துணியெல்லாம்
அப்படியே இருக்கின்றது’ என நாசுக்காக கதையைக்
‘கட்’பண்ணப் பார்ப்பார்கள். ஆனால் அறுவைப்
பாட்டியோ விடுவதாக இல்லை. ‘ஒரே வேல வேலண்டு
செஞ்சுக்கிட்டிருக்க மனிஷன் என்ன மெஷினா? கொஞ்சம்
ரெஸ்டா இருங்கள்!’ என அட்வைஸ் பண்ணிவிட்டு
மீண்டும் ஆரம்பித்துவிடுவர் அறுவைப் பணியை.
இந்தபபழக்கம் உங்களிடம் இருந்தால், இந்தப் பழக்கத்தில்
சிறிதளவாவது உங்களிடம் இருந்தால் அதை நிறுத்திக்
கொள்ளுங்கள். இப்படி அடுத்த மனிதனின் கஷ்ட
நஷ்டங்களை அறியாமல் அறுத்துத் தள்ளுபவர்களை
யாருக்கும் பிடிக்காது. சரியான அறுவைப்பாட்டி என
வெருண்டு ஓட ஆரம்பித்துவிடுவர்.

எனவே நீங்கள் யாருடனாவது நேரத்தைப்
போக்குவதற்காகக் கதைக்க விரும்பினால் அவர்களது
நேரமும் பொருத்தமாக இருக்கின்றதா என ஒரு கணம்
சிந்தித்துப் பாருங்கள். மேலும் பேச்சை நீட்டிக்
கொண்டிருக்காதீர்கள். காலம் பொன்னானது. நீங்கள்
உங்கள் நேரத்தை வீணாக்குவதே தவறு எனும் போது
அடுத்தவர்களது நேரத்தை வீணாக்குவது எவ்வளவு
பெரிய குற்றம் என்பதை எண்ணிப் பாருங்கள்.

யாருடனாவது எதையாவது பேச வேண்டும்
என்றிருந்தால் சமயம், சந்தர்ப்பம் பார்த்துப் பேசுங்கள்.
ஒருவரிடம் ஒரு விடயத்தைப் பலதடவை திரும்பத்
திரும்பக் கூறாதீர்கள். அவர் உங்களைத் தவறாக
எடைபோடுவார். ஒன்றுமே விளங்காத மக்கு என அவரை
நீங்கள் தவறாக எடைபோட்டுவிட்டதாகவும் அவர்
நினைப்பார். அதனால்தான் ஒரே விடயத்தை திரும்பத்
திரும்பக் கூறுவதாக எண்ணுவார். இது அவருக்கு
கௌரவக் குறைவை உண்டுபண்ணும்.

எனவே, அளவோடு பேசுங்கள். அதிகம்
பேசுவதால் அந்தஸ்து குறைந்துவிடும். குற்றங்களும்,
பொய்யும் கூடிவிடும் என்பது ஒரு அரபுப்
பழமொழியாகும். அதிகம் கதைத்து உங்கள் அந்தஸ்தை
நீங்களே குறைத்துக் கொள்ளாதீர்கள். அதிகம் கதைக்கும
இயல்புள்ளவர்கள் பேசுவதற்கு செய்தி இல்லை எனும்
போது ஓன்றைப் பேசியதையே திரும்பத் திரும்பத்
பேசுவர். அல்லது தனது காதில் விழுந்ததையெல்லாம்
பேச ஆரம்பிப்பர்.

‘தான் கேட்டதையெல்லாம் பேசுவதே ஒருவர்
பொய்யனாக இருக்கப் போதுமானதாகும்’ என நபி(ச)
அவர்கள் கூறியுள்ளார்கள்.’
(முஸ்லிம்)

எனவே, கேட்டதையெல்லாம் பேசி பொய்யன்
லிஸ்டில் இடம்பிடித்துவிடாதீர்கள்.

அடுத்து, பேசிப் பழகியவர்களுக்குப் பேசாமல்
இருக்க முடியாது. எனவே அடுத்தவர்கள் விடயத்தில்
அவசியமில்லாமல் மூக்கை நுழைத்து அவர்கள்
செய்திகளைச் சேகரிப்பர். அதைக் கொஞ்சம் கூட்டிக்
குறைத்து அவிழ்த்துவிடுவர். இதன் மூலம் புறம், பொய்,
அவதூறு, அடுத்தவர்களின் குறைகளைத் தேடுதல்,
மேலும் தனக்குச் சம்பந்தமில்லாத விடயத்தில்
தலையிடுதல் எனப் பல தவறுகளில் விழ நேரிடும்.

எனவே அளவோடு பேசுங்கள், தேவையானதை
மட்டும் பேசுங்கள்.

‘யார் அல்லாஹ்வையும் மறுமையையும் நம்புகின்றாரோ
அவர் பேசினால் நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி
மௌனமாக இருந்து விடட்டும்’ என நபி(ச) அவர்கள்
கூறியுள்ளார்கள்.’

எனவே நல்லதை மட்டும் பேசுங்கள்.
நீங்கள் பேசும் ஒவ்வொரு பேச்சும் மலக்குகளால்
பதியப்படுகிறது என்பதைக் கவனத்திற் கொள்ளுங்கள்.

நீங்கள் அதிகம் பேசுபவராக இருந்தால்
உங்களுக்கு அறுவைப்பாட்டி ‘அபுல் கலாம்’ (பேச்சின்
தந்தை) என்றெல்லாம் பட்டம் சுமத்தி உங்களை விட்டும்
மக்கள் வெருண்டு செல்வார்கள். மக்கள் மட்டுமல்ல
நபி (ச) அவர்களும் உங்களை விட்டும்
ஒதுங்கிவிடுவார்கள் என்பதாகப் பின்வரும் ஹதீஸ்
கூறுகின்றது.

‘உங்களில் எனக்கு மிகவும் வெறுப்பானவரும்
மறுமையில் எனக்கு மிகவும் தூரமானவரும் யாரெனில் அதிகம்
பேசுபவர், அடுத்தவரை இழிவுபடுத்தும் விதத்தில் பேச்சை
நீட்டுபவர், தன்னைப் பற்றிப் பெருமை பேசுபவராவார்’ என
நபி(ச) அவர்கள் கூறினார்கள்.’
(அறிவிப்பவர்: ஜாபிர்(ர)
ஆதாரம்: திர்மிதி (2018)

நீங்கள் அதிகம் பேசுபவராக இருந்தால் நீங்கள்
நபியின் வெறுப்புக்குரியவராவீர்கள். நீங்கள் அதிகம்
பேசுபவராக இருந்தால் மறுமையில் நபிக்கு மிகவும்
தூரமாக இருப்பீர்கள்.

உங்களது அதிகரித்த பேச்சால் நட்புக்களை
இழந்திருப்பீர்கள். கணவனின் அன்பை இழந்திருப்பீர்கள்.
இதுகூடப் பரவாயில்லை என்று கூறலாம். நபியின்
வெறுப்பையும் அவரது நெருக்கத்தையும் கூட இழக்க
நேரிடுகின்றதே! இதைத் தாங்கிக் கொள்ள முடியுமா?

எனவே, அளவோடு பேசுங்கள். உங்களுக்கு ஓய்வு
இருக்கலாம். அதே நேரம் அடுத்தவருக்கு வேலை
இருக்கலாம். இதைப்பற்றி கொஞ்சம் சிந்தித்துப்
பேசுங்கள். அடுத்தவர்களுடன் உரையாடப் பொருத்தமான
சந்தர்ப்பத்தை அறிந்து பேசுங்கள். தொலைபேசியூடாகத்
தொடர்பு கொள்வதாக இருந்தாலும் அந்த நேரம்
பொருத்தம்தானா என்பதை அறிந்து பேசுங்கள்.

உங்களது பேச்சு குறைவாக, அளவாக
சந்தர்ப்பத்திற்கு அமைவாக இருந்தால் கேட்கப்படும்.
பேச்சு கூடக்கூட கேட்க வேண்டும் என்ற ஆர்வம்
அடிபட்டுப் போய் எப்படா முடியும் என்ற எண்ணம் தான்
எழும். எனவே அளவோடு பேசி அனைவரின் அன்பையும்
நட்பையும் பெறும் பெண்ணாக நீங்கள் மாற முயற்சி
செய்யுங்கள்!…..

(இதை நாலுவரியில் நறுக்கென்று சொல்லாமல்
இவ்வளவு நேரம் இவர் அறுத்துவிட்டாரே! என என்னுடன்
கோபமா? தயவு செய்து மன்னிக்கவும்.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.