இப்றாஹீம் நபியும்… கொழுத்த காளைக் கன்றும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-9]

இப்றாஹீம் என்றொரு இறைத்தூதர் இருந்தார். அவர் நற்பண்புகள் நிறைந்தவர். விருந்தினர்களை கண்ணியப்படுத்துவது அவரின் விஷேச பண்புகளில் ஒன்றாகும். ஒருநாள் அவரது வீட்டிற்கு இரண்டு விருந்தாளிகள் வந்து ஸலாம் கூறினர். இப்றாஹீம் நபியும் அவர்களுக்கு பதில் ஸலாம் கூறி அவர்களை வரவேற்றார். வந்தவர்கள் யார், எவர்? என்ற எந்த அறிமுகமும் அற்றவர்கள்.

இருப்பினும் அவர்களை அன்பாக வரவேற்று இப்றாஹீம் நபி அவர்களை அரவணைத்தார். தான் வளர்த்து வந்த ஒரு கொழுத்த காளைக் கன்றை அவர்களுக்காக சமைத்து அதை அவர்களுக்கு முன்னால் உண்பதற்காக வைத்தார். அவர்கள் உண்ணாமல் இருந்தனர். இதைப் பார்த்த இப்றாஹீம் நபிக்கு அச்சம் ஏற்பட்டது. அன்றைய காலத்தில் ஒருவரது வீட்டில் உண்டுவிட்டால் அவருக்கு உபாதை ஏதும் செய்யமாட்டார்கள். இவர்கள் உண்ணாமல் இருப்பதைப் பார்த்தால் ஏதேனும் கெட்ட நோக்கத்தில் வந்திருப்பார்களோ என்று அச்சம் ஏற்பட்டது.

‘நீங்கள் சாப்பிட மாட்டீர்களா?’ என்று கேட்டார்.

அதன் பின்புதான் வந்தவர்கள் மனித உருவத்தில் வந்த வானவர்கள் என்பது தெரிய வந்தது. வானவர்கள் மனித உருவத்தில் வந்தாலும் வானவர்களுக்குரிய இயல்புடன்தான் இருப்பார்கள். வானவர்களுக்கு ஆசாபாசங்களோ, பசி, தாகம் என்பனவோ இல்லை. அவர்கள் உண்ணவோ, பருகவோ மாட்டார்கள் பின்புதான் வானவர்கள் தாம் வந்த நோக்கத்தை தெளிவுபடுத்தினார்கள்

‘உங்களுக்கு அறிவுமிக்க ஆண் குழந்தையொன்று கிடைக்கப் போகின்றது என்ற நற்செய்தியைக் கூற வந்தோம்’ என்றனர்.

உள்ளே இருந்து இப்றாஹீம் நபியின் மனைவி அன்னை ஸாரா அவர்கள் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

‘நான் கிழவி, மலடி. எனக்கு எப்படி குழந்தை கிடைக்கும்?’ என்ற எண்ணத்தில் கண்ணதில் கை வைத்துக் கொண்டு ஆச்சரியத்தில் ‘நானோ கிழவி, மலடி. என் கணவரும் வயோதிகர்! இப்படி இருக்க எனக்கு குழந்தை கிடைக்குமா?’ என ஆச்சரியத்துடன் வினவினார்.

அதற்கு வானவர்கள் ‘அப்படித்தான் நடக்கும்’ என்று கூறினர்.

மலக்குகள் கூறிய பிரகாரம் அன்னை ஸாரா அவர்களுக்கு ‘இஸ்ஹாக்’ என்றொரு ஆண் குழந்தை கிடைத்தது. அவருக்கு ‘யஃகூப்’ என்றொரு குழந்தையும் கிடைத்தது. அவருக்கு 12 ஆண் குழந்தைகள் கிடைத்தனர். அவர்களின் பரம்பரையினர்தான் ‘இஸ்ரவேலர்கள்’ ஆவார்கள்.

அன்புள்ள தம்பி தங்கைகளே! இப்றாஹீம் நபி யார், எவறென்று தெரியாத விருந்தினர்களையே, தான் ஆசையோடு வளர்த்த கொழுத்த காளைக் கன்றை சமைத்து உணவு படைத்து உபசரித்துள்ளார்கள். எனவே, நாமும் விருந்தினர்களை உபசரித்து எமது ஈமானை உறுதிப்படுத்திக் கொள்வதுடன் அல்லாஹ்வின் அருளையும் பெற்றுக் கொள்ள முன்வருவோமாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.