அல் குர்ஆன் விளக்கம்┇முஸ்லிம்கள் பைபிளை நம்ப வேண்டுமா?┇கட்டுரை.

‘மேலும், அவருக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்றாத்தையும், இன்ஜீலையும் அவன் கற்றுக் கொடுப்பான்.’ (3:48)

ஈஸா நபிக்கு தவ்ராத்தையும் இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பது பற்றி இங்கே கூறப்படுகின்றது. மூஸா நபிக்கு தவ்றாத் வேதமும் ஈஸா நபிக்கு இன்ஜீல் வேதமும் அருளப்பட்டதாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயமாக இதை நம்ப வேண்டும்.

குர்ஆனில் தவ்றாத், இன்ஜீல் பற்றி புகழ்ந்து பேசப்பட்டுள்ளது. கிறிஸ்தவ உலகு மூஸா நபியின் வேதத்தைப் பழைய ஏற்பாடு என்றும் ஈஸா நபியின் போதனையை புதிய ஏற்பாடு என்றும் கூறி இரண்டையும் இணைத்து பைபிள் என அழைக்கின்றது.

பழைய ஏற்பாட்டில் முதல் ஐந்து ஆகமங்களும் மூஸா நபிக்கு அருளப்பட்ட வேதமாகப் நம்பப்படுகின்றது. மூஸா நபிக்குப் பின் வந்த தூதர்கள் சம்பந்தப்பட்ட செய்திகளும் பழைய ஏற்பாட்டில் அடங்கப்பட்டுள்ளன.

ஈஸா நபி மற்றும் அவருக்குப் பின்னர் வந்த அவரது சீடர்களாக நம்பப்படுபவர்களின் செய்திகள், கடிதங்கள் புதிய ஏற்பாடாகப் பார்க்கப்படுகின்றது.

குர்ஆன் தவ்றாத்தையும் இன்ஜீலையும் நம்புமாறு சொல்கின்றது என்பதைச் சாட்டாக வைத்து பைபிளை இஸ்லாம் ஏற்கச் சொல்வதாக கிறிஸ்தவ நண்பர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக கிறிஸ்தவ பாதிரிகள் இந்தப் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். இது முற்றிலும் தவறானதாகும்.

இயேசுவுக்கு இன்ஜீல் எனும் வேதம் அருளப்பட்டதை எல்லா முஸ்லிம்களும் நம்ப வேண்டும். ஆனால், இன்று புதிய ஏற்பாட்டில் இருப்பது இயேசுவின் இன்ஜீல் அல்ல. இயேசுவின் இன்ஜீலில் உள்ள சில செய்திகள் வேண்டுமானால் சில திரிவுகளுடன் அதில் இருக்கலாம்.

இயேசு போதித்த இன்ஜீலை கிறிஸ்தவ உலகு தொலைத்துவிட்டது அல்லது ஒழித்துவிட்டது. கிறிஸ்தவ அறிஞர்களால் 70 இற்கும் அதிகமான இன்ஜீல்கள் எழுதப்பட்டன. அதில் நால்வர் எழுதிய இன்ஜீல்கள் கிறிஸ்தவ உலகால் அங்கீகரிக்கப்பட்டு அதுவே இன்று புதிய ஏற்பாடாக ஏற்கப்பட்டுள்ளது.

ஏற்கப்பட்ட இந்த நான்கு இன்ஜீல்களும் இயேசு வாழும் போது அவரை எதிர்த்து வந்த பவுல் என்பவர் கிறிஸ்து உயர்த்தப்பட்ட பின்னர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி உருவாக்கிய கொள்கைக்கு ஏற்ப எழுதப்பட்டதாகும். இயேசுவின் நேரடிச் சீடர் பர்னபா என்பவரால் எழுதப்பட்டு புறக்கணிக்கப்பட்ட இன்ஜீல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது முழுமையாக குர்ஆனுக்கு ஒத்ததாகவும் கிறிஸ்தவ மதத்தின் இயேசு இறை குமாரன், இயேசு கடவுள், இயேசு சிலுவையில் மரணித்தார் போன்ற அடிப்படைகளுக்கு முரணாக உள்ளமை கவனிக்கத்தக்கதாகும்.

இன்று இருப்பது இயேசுவின் இன்ஜீல் அல்ல. மாற்கு, லூக்கா, மத்தேயு, யோவான்… என்பவர்களால் எழுதப்பட்ட இன்ஜீல் சுவிசேசங்களே உள்ளன. இயேசுவின் இன்ஜீவை விசுவாசிக்குமாறே நாம் ஏவப்பட்டுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

‘யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு, இயேசு கலிலேயாவிலே வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து:’
(மாற்கு 1:14)

இயேசு ராஜ்யத்தின் சுவிஷேசத்தைப் பிரசங்கித்ததாக இங்கே கூறப்படுகின்றது.

மத்தேயு 4:23, 9:35 ஆகிய வசனங்களும் ராஜ்யத்தின் சுவிஷேசம் பற்றிப் பேசுகின்றது. அந்த சுவிஷேசம் (இன்ஜீல்) இப்போது இல்லை.

மூஸா மற்றும் இயேசுவின் போதனைகளுடன் மனித யூகங்கள், கற்பனைக் கதைகள், பொய்கள், ஆபாசங்கள் என அனைத்தும் கலந்ததே இன்றைய பைபிளாகும்.

‘வேதத்தையுடையோரே! நீங்கள் அறிந்துகொண்டே ஏன் சத்தியத்தை அசத்தி யத்துடன் கலந்து சத்தியத்தை மறைக் கின்றீர்கள்? ‘ (3:71)

‘வேதத்தையுடையோரே! உங்கள் மார்க்கத்தில் நீங்கள் வரம்பு மீறாதீர்கள். அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர வேறு எதனையும் கூறாதீர்கள். மர்யமின் மகன் ஈஸா அல்மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது வார்த்தையுமாவார். அவன் அதை மர்யமுக்கு (ஜிப்ரீல் மூலமாக) போட்டான். இன்னும் (அவர்) அவனிடமிருந்து வந்த ஓர் ஆன்மாதான். எனவே, அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். (கடவுளை) மூவர் என்று கூறாதீர்கள். அதை விட்டு விடுங்கள். (அது) உங்களுக்கு நல்லதாகும். (உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே. அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூய்மை யானவன். வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. பொறுப்பேற்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.’ (4:171)

‘அற்ப கிரயத்தைப் பெறுவதற்காக தம் கைகளால் ஒரு நூலை எழுதி பின்னர், இது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகின்றவர்களுக்குக் கேடுதான். அவர்க ளுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான். (அதன் மூலம்) அவர்கள் சம்பாதித்ததற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்.’ (2:79)

இது போன்ற வசனங்கள் யூத, கிறிஸ்தவ சமூகம் வேதத்தில் விளையாடியுள்ளதையும் வேதத்தில் இல்லாததை நுழைத்துள்ளதையும் தாமே உருவாக்கியதை வேதம் என்று வேடம் போடுவதையும் தெளிவாக உணர்த்துகின்றது.

இதே வேளை, தவ்றாத், இன்ஜீல் வேதங்களில் இருந்த சில செய்திகளும் இப்போது உள்ள பைபிளில் சில மாற்றங்களுடன் இருக்கலாம் என்பதையும் நாம் உணரக் கடமைப்பட்டுள்ளோம்.

நபி(ச) அவர்களைப் பற்றிய முன்னறிவிப்புக்கள் இன்று வரை பைபிளில் அழியாமல் பாதுகாக்கப்பட்டுள்ளன. அவ்வாறே குர்ஆன் சொல்லும் சில செய்திகள் மாற்றங்களுடன் இன்றைய பைபிளில் இருப்பதை முறையாக ஆய்வு செய்யும் போது அறிந்து கொள்ளலாம். உதாரணமாக தவ்றாத், இன்ஜீலில் நபித்தோழர்கள் பற்றி கூறப் பட்டுள்ளதாக குர்ஆன் கூறுகின்றது.

‘முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார். மேலும், அவருடன் இருப்போர் நிராகரிப் பாளர்கள் மீது கடுமையானவர்களாகவும், தமக்கிடையே கருணையுடையோராகவும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் பொருத்தத் தையும், அருட்கொடையையும் நாடி, ரூகூஃ செய்பவர்களாகவும், சுஜூது செய்பவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர். அவர்களது அடையாளம் அவர்களது முகங்களிலுள்ள சுஜூதின் அடையாளமாகும். இதுவே, தவ்றாத்தில் அவர்களுக்குரிய உதாரணமாகும். இன்ஜீலில் மேலும் அவர்களுக்குரிய உதாரண மாவது ஒரு பயிரைப் போன்றதாகும். அது தனது முளையை வெளிப்படுத்தி, பின்னர் அதனைப் பலப்படுத்துகிறது. பின்னர் அது பலமாகி தனது தண்டின் மீது நிலையாக நிற்கின்றது. விவசாயிகளை அது ஆச்சரியமடையச் செய்கின்றது. இவர்கள் மூலம் நிராகரிப்பாளர் களை அவன் கோபமூட்டுவதற்காகவே (இவ்வாறு செய்கின்றான்.) மேலும், அவர்களில் நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிவோருக்கு மன்னிப்பையும் மகத்தான கூலியையும் அல்லாஹ் வாக்களிக்கின்றான்.’ (48:29)

இந்தச் செய்தி இன்றைய பைபிளிலும் சில மாற்றங்களுடன் இருப்பதைக் காணலாம்.

‘தேவனுடைய மனுஷனாகிய மோசே தான் மரணமடையுமுன்னே இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதித்த ஆசீர்வாதமாவது:’

‘கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி, சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்; பாரான் மலையிலிருந்து பிரகாசித்து, பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்; அவர்களுக்காக அக்கினி மயமான பிரமாணம் அவருடைய வலது கரத்திலிருந்து புறப்பட்டது.’

‘மெய்யாகவே அவர் ஜனங்களைச் சிநேகிக்கிறார்; அவருடைய பரிசுத்தவான் களெல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய பாதத்தில்விழுந்து, உம்முடைய வார்த்தை களினால் போதனையடைவார்கள்.’
(உபகாமம் 33:1-3)

‘அவர் அநேக விஷேசங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்; கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான்.’

‘அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப் போட்டது.’

‘சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது.’

‘வெயில் ஏறினபோதோ, தீய்ந்துபோய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று.’

‘சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது.’

‘சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது.’

‘கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக் கடவன் என்றார்.’
(மத்தேயு 13:3-9)

இவ்வாறு தவ்றாத், இன்ஜீலில் இருப்பதைக் குர்ஆன் சொன்ன சில செய்திகள் மாற்றங்களுடன் உள்ளன. இருப்பினும் இப்போதுள்ள பைபிளை தவ்றாத்தாகவோ இன்ஜீலாகவோ ஏற்கும் கடமை நமக்கில்லை. முஸா மற்றும் ஈஸா நபிமார்களுக்கு தவ்றாத், இன்ஜீல் எனும் வேதங்கள் அல்லாஹ்வினால் அருளப்பட்டன. அவற்றை அந்தந்த சமூகங்கள் சிதைத்துவிட்டன என்பதே இஸ்லாம் எமக்கு ஊட்டும் நம்பிக்கையாகும். அதுவே உண்மையுமாகும்.

இன்றைய பைபிளில் நல்ல போதனைகள் இருப்பது போலவே ஆபாசங்கள், அசிங்கங்கள், அறிவியல் முரண்பாடுகள், வரலாற்று முரண்பாடுகள், மூட நம்பிக்கைகள், முட்டாள்தனங்கள், பொய்கள், முன்னுக்குப் பின் முரணான தகவல்கள், நடைமுறைச் சாத்தியமற்ற போதனைகள்… என அனைத்தும் உள்ளன.

அந்தப் புனித வேதங்கள் மனித கரங்களால் மாசுபடுத்தப்பட்டுவிட்டன. அந்த வேதங்கள் அப்படியே இருந்தால் கூட அவை இன்று நாம் பின்பற்ற வேண்டியவை அல்ல. குர்ஆனே பின்பற்றுதலுக்குரியதாகும்.

கிறிஸ்தவ போதகர்கள் குர்ஆனை வைத்து பைபிளை நியாயப்படுத்த முற்படுவது அறிவீனமான போக்காகும் என்பதை இதிலிருந்து நாம் புரியலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.