முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும்

     மனிதனின் ஆன்மீக உணர்வுகளை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துவதற்காக இஸ்லாம் சில காலங்களை ஏற்படுத்தியுள்ளது. ரமழான் மாதம், துல்ஹஜ் மாதம் போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இத்தகைய மாதங்களில் ஒன்றுதான் முஹர்ரம் மாதமாகும்.

புனித மாதம்:
இந்த மாதம் போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்களில் ஒன்றாகும்.

‘அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் பன்னிரெண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமானவையாகும். இதுதான் நேரான மார்க்கம். இவைகளில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள். இணைவைப்போர் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போன்று நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியாளர்களுடன் இருக்கின்றான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.’
(9:36)

இந்த மாதத்தில் போர் செய்யக் கூடாது என்ற விதி அன்று வாழ்ந்த அறபிகளிடம் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொது விதியாகவே பின்பற்றப்பட்டு வந்தது. உலகில் யுத்தங்களும் யுத்த அழிவுகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இஸ்லாம் யுத்தங்களை முழுமையாகத் தடுக்கவில்லை. நான்கு மாதங்கள் அதாவது, வருடத்தில் 1Æ3 பகுதியில் எதிரிகள் தாக்கினாலே தவிர போர் செய்யக் கூடாது என இஸ்லாம் தடுத்துள்ளது என்பது இஸ்லாத்தைப் பயங்கரவாதமாகக் காட்ட முற்படுபவர்கள் அவசியம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய விடயமாகும்.

அறியாமைக் காலத்திலும் இம்மாதம் சிறப்பான ஒரு மாதமாகக் கணிக்கப்பட்டு வந்துள்ளது. இம்மாதத்தின் பத்தாம் நாள் அரபியில் ஆஷ_ரா என்று கூறப்படும். இந்நாளில் அவர்கள் நோன்பு நோற்று கஃபாவிற்கு புதிய திரை இட்டு இந்நாளைப் புனிதமாகப் பேணி வந்துள்ளனர்.

ஹிஜ்ரி கணிப்பீட்டின் முதல் மாதம்:

ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதமாக முஹர்ரம் திகழ்கின்றது. இந்த அடிப்படையில் இது இஸ்லாமிய புது வருடமாகும். எனினும், இஸ்லாத்தில் புது வருடத்திற்கென எந்தக் கொண்டாட்டங்களும், விழாக்களும் இல்லை. இருப்பினும், இம்மாத்தத்தில் ஹிஜ்ரத் சம்பந்தமாக மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டும் உபதேசங்களைச் செய்து இஸ்லாமிய எழுச்சிக்கு ஹிஜ்ரத் ஏற்படுத்திய உந்துதலை உணர்த்தி மக்களை விழிப்புணர்வூட்டலாம்.

அநியாயக்கார ஆட்சியாளன் அழிந்த மாதம்:

உலகில் வாழ்ந்த மிகப் பெரும் கொடுங்கோலர்களில் ஒருவனான பிர்அவ்ன் இம்மாதத்தின் பத்தாம் நாள்தான் அழிக்கப்பட்டு மூஸா நபியும் அவர் காலத்து இறை விசுவாசிகளும் பாதுகாக்கப்பட்டனர். கடல் பிளந்து அவர்களுக்காக வழிவிட்ட மாபெரும் அற்புதம் நிகழ்ந்த மாதம் இதுவாகும்.

இம்மாதத்தின் பத்தாம் நாள் நோன்பு நோற்பது ‘ஆஷ_ரா நோன்பு’ என அழைக்கப்படும். இதை இஸ்லாம் போற்றியுள்ளது. இன்று வரை இந்நோன்பை முஸ்லிம்கள் அனுஷ;டித்து வருகின்றனர். அநியாயக்கார அரசன் அழிக்கப்பட்டு இறைத் தூதர் மூஸா(ர) அவர்களும் அவர்களது தோழர்களான இஸ்ரவேல் சமூகமும் பாதுகாக்கப்பட்டதற்கு நன்றி செலுத்தும் முகமாக இந்நோன்பு நோற்கப்படுகின்றது.

இஸ்ரேல் சமூகம் இஸ்லாத்தினதும், முஸ்லிம்களினதும் பரம எதிரிகளாவார்கள்! இன்று முஸ்லிம் உலகில் நடக்கும் குழப்பங்களுக்கும், கொந்தளிப்புக்களுக்கும் இஸ்ரேலும் அதன் ஸியோனிச மொசாட் அமைப்புக்களுமே காரணமாகும். இருப்பினும் அன்று வாழ்ந்த மூஸா நபியை நம்பிய இஸ்ரவேலர்களை முஸ்லிம்கள் தமது சகோதரர்களாகப் பார்க்கின்றனர். யூதர்களுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர் மூஸா(ர) அவர்களை தமது நபியைப் போல ஏற்று மதிக்கின்றனர். ஏனெனில், அவர்கள் இருவரும் ஒரே இறைவனிடமிருந்து வந்த இறைத் தூதர்கள். முஹம்மத், மூஸா, ஈஸா ஆகிய தூதர்கள் போதித்த அடிப்படைக் கொள்கை ஒன்றுதான். எனவே, அவர்களை ஒன்று போல் ஏற்று மதிக்கும் சமூகமாக முஸ்லிம் சமூகம் இருக்கின்றது. கொள்கை ஒன்றாக இருந்தால் இனமோ, மொழியோ, பிரதேசமோ பிரிவுகளுக்குக் காரணமாக இருக்காது என்ற உண்மை இந்த நோன்பின் மூலமாக உணர்த்தப்படுகின்றது.

ஆஷூரா நோன்பின் சிறப்பு:

பாவங்களைப் போக்கும்:
‘முஹர்ரம் பத்தாம் நாள் நோற்கும் நோன்பு முன்னைய வருடத்தில் இடம்பெற்ற (சிறிய) பாவங் களைப் போக்கிவிடும் என நான் நினைக்கின்றேன்’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ கதாதா(வ)
ஆதாரம்: இப்னுமாஜா- 1738, அபூதாவூத்- 2425, திர்மிதி- 752

(அறிஞர் அல்பானி (ரஹ்), சுஅய்ப் அல் அர்னாஊத் ஆகியோர் இதனை ஸஹீஹான அறிவிப்பு என்று கூறுகின்றனர்.)

இந்த நபிமொழி ஆஷ_ரா நோன்பு கடந்த வருடத்தில் நடந்த (சிறிய) பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்ற நற்செய்தியைக் கூறி ஊக்குவிப்பதைக் காணலாம்.

சிறந்த நோன்பு:
ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது கட்டாயக் கடமையாகும். இஃதல்லாத பல சுன்னத்தான நோன்புகளை இஸ்லாம் விதித்துள்ளது. அவ்வாறு விதிக்கப்பட்ட சுன்னத்தான நோன்புகளில் சிறந்ததாக ஆஷ_ரா நோன்பு அமைந்துள்ளது.

‘ரமழான் மாத நோன்புக்குப் பின்னர் சிறந்த நோன்பு அல்லாஹ்வின் மாதமாகிய முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும்…..’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பர்: அபூ ஹூரைரா(வ)
ஆதாரம்: அபூ தாவூத்- 2429, திர்மிதி- 438-740, நஸாஈ- 1613

இந்த ஹதீஸின் அடிப்படையில் முஹர்ரம் மாத்தில் அதிகமாக சுன்னத்தான நோன்புகளை நோற்பதும் சிறப்பிக்கப் பட்டுள்ளது என்பதை அறியலாம்.

ஆஷூரா நோன்பும் அது கடந்து வந்த பாதையும்:
இஸ்லாமிய வரலாற்றில் ஆஷ_ரா நோன்பு பல கட்டங்களைத் தாண்டி வந்துள்ளது.

1.    மக்கா:
நபி(ச) அவர்கள் மக்காவில் இருந்த வேளையில் முஹர்ரம் பத்தாம் நாள் குறைஷpக் காபிர்கள் நோன்பு நோற்று வந்தார்கள். நபி(ச) அவர்களும் நோன்பு நோற்றார்கள். அதை அவர்கள் ஏவவில்லை.

2.    மதீனாவின் ஆரம்ப கட்டம்:
மதீனா வந்த பின்னர் தானும் இந்த நோன்பை நோற்றதுடன் மக்களையும் நோற்குமாறு ஏவினார்கள்.

3.    ரமழான் நோன்பு கடமையாக்கப் பட்ட பின்னர்:
ரமழான் நோன்பு கடமையாக்கப்பட முன்னர் இந்நோன்பைக் கட்டாயம் நோற்குமாறு ஏவிய நபியவர்கள் ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின்னர் விரும்பியவர்கள் பிடிக்கலாம், விரும்பியவர்கள் விடலாம் என போதித்தார்கள்.

4.    யூதர்களுக்கு மாறு செய்தல்:
நபியவர்கள் முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் மட்டுமே நோன்பு நோற்று வந்தார்கள். இது விடயத்தில் யூதர்களுக்கு மாறு செய்ய அவர்கள் விரும்பும் போது அடுத்த வருடம் நான் உயிருடன் இருந்தால் ஒன்பதையும் சேர்த்துப் பிடிப்பேன் என்றார்கள். அடுத்த ஆண்டு முஹர்ரம் மாதத்தை அவர்கள் அடையவில்லை. மரணித்துவிட்டார்கள். எனவே, இப்போது இந்த நோன்பை நோற்பவர்கள் முஹர்ரம் 9, 10 இரு நாட்களும் நோற்க வேண்டும் என்பதே சட்டமாகும்.

இந்த நான்கு படித்தரங்களையும் இந்நோன்பு தாண்டி வந்துள்ளது. பின்வரும் ஹதீஸ்கள் மூலம் இதை நாம் அறியலாம்.

‘ஆயிஷா(ரழி) அறிவித்தார். அறியாமைக் காலக் குறைஷியர் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றனர்; நபி(ச) அவர்களும் நோற்றனர். நபி(ச) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, தாமும் அந்நாளில் நோன்பு நோற்று மக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷூரா நோன்பை (கடமை என்ற நோக்கில் நோற்பதை) விட்டு விட்டனர். விரும்பியவர் நோன்பு நோற்றனர். விரும்பாதவர் விட்டுவிட்டனர். ‘ (புஹாரி: 2002, 3831, 4504)

நாம் மேலே கூறிய மூன்று கட்டங்களுக்கு இந்த ஹதீஸே ஆதாரமாக அமைகின்றது. நான்காவது கூட்டத்திற்கு பின்வரும் நபிமொழி ஆதாரமாக அமைகின்றது.

‘நபி(ச) அவர்கள் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்று எம்மையும் நோற்குமாறு ஏவினார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! யூதரும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் ஒரு நாளாயிற்றே’ என்று கூறினோம். அதற்கு நபியவர்கள், ‘அடுத்த வருடம் நான் இருந்தால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன்’ என்று கூறினார்கள். அடுத்த வருடம் முஹர்ரம் வருவதற்கு முன் நபி(ச) அவர்கள் வபாத்தாகிவிட்டார்கள்.’
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(வ)
ஆதாரம்: அபூதாவூத் 2445

யூதர்களுக்கு மாறு செய்தல்:
இந்த செய்தி யூத, கிறிஸ்தவர்களுக்கு மாறு செய்வதையும் முஸ்லிம் உம்மத் தனது தனித்துவத்தைப் பேணுவதன் அவசியத்தையும் எமக்கு உணர்த்துகின்றது. நாகரிகம் என்ற பெயரில் அந்நிய சமூகங்களுக்கு ஒப்பாக நடப்பதையும் அவர்களுடைய பழக்க வழக்கங் களில் கரைந்து காணாமல் போவதையும் இஸ்லாம் விரும்பவில்லை.

ஏன் நோற்கப்படுகின்றது:
இப்னு அப்பாஸ்(வ) அறிவித்தார். ‘நபி(ச) அவர்கள் மதீனா வந்தபோது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றதைக் கண்டார்கள். ‘இது என்ன நாள்?’ என்று கேட்டார்கள். யூதர்கள் ‘இது நல்ல நாள், இஸ்ரவேலர்களை அவர்களின் எதிரி களிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள்; இதற்காக மூஸா(ர) அவர்கள் நோன்பு நோற்றார் கள்’ என்று கூறினார்கள். நபி(ச) அவர்கள், ‘உங்களை விட மூஸாவுக்கு அதிக உரிமை படைத்தவன் நான்’ என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையும் இட்டார்கள். ‘
(புஹாரி: 2004, 3397)

மூஸா நபி பாதுகாக்கப்பட்டதற்கு நன்றி செலுத்துமுகமாகவே இந்த நோன்பு நோற்கப் படுகின்றது. அநியாயக்காரனின் அழிவு என்பது இஸ்ரவேல் சமூகத்திற்குக் கிடைத்த மிகப் பெரும் அருளாகும். இந்த அடிப்படையில் அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி செலுத்தும் முகமாக அதிகமதிகம் இபாதத்துக்கள் செய்ய வேண்டும் என்ற அடிப்படையையும் நாம் அறிந்து கொள்ளலாம்.

முஹர்ரம் மாதத்தையொட்டி ஏராளமான பித்அத்துக்களும், கட்டுக் கதைகளும் உள்ளன. இம்மாதத்தில்தான் கர்பலா போர் நடந்தது. இதில் ஹுஸைன்(வ) அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இது இஸ்லாமிய வரலாற்றில் நடந்த சோக நிகழ்வுதான். நபி(ச) அவர்களின் பேரர்,  சுவனத்தைக் கொண்டும் சுபசோபனம் சொல்லப்பட்டவர். அலி, பாத்திமா தம்பதிகளின் புதல்வர் கொல்லப்பட்டது சோக சம்பவம்தான். இருப்பினும் இத்தினத்தை ஷPஆக்கள் துக்க தினமாகக் கொண்டாடு கின்றனர். இதற்கு மார்க்கத்தில் எந்த இடம்பாடும் இல்லை. இவர்கள் ஹுஸைன்(வ) மீதான அன்பில் இதைச் செய்யவில்லை. உமையாக்களுக்கு எதிரான உணர்வுகளை ஊட்டுவதற்காகவும் ஷPஆயிசத்தைப் பரப்பவுமே இந்த வழிகேட்டை அரங்கேற்றி வருகின்றனர். அலி(வ) அவர்களும் கொல்லப்பட்டார்கள். அதற்கு துக்கம் கொண்டாடாதவர்கள் ஹுஸைன்(வ) அவர்களின் கொலைக்காக மட்டும் துக்கம் கொண்டாடுவதன் இரகசியம் இதுதான்.

எனவே, முஹர்ரம் சிறப்பானது. முஹர்ரத்தின் பெயரில் நடக்கும் அனாச்சாரங் கள், பித்அத்துக்கள் ஆபத்தானவை, அவை புறக்கணிக்கப்பட வேண்டியவை என்பதைப் புரிந்து செயற்படுவோமாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.