எறும்பின் கதை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-5]

“சுலைமான், தாவூதுக்கு வாரிசானார். அவர், ‘மனிதர்களே! பறவைகளின் மொழி எமக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. மேலும், (தேவையான) அனைத்துப் பொருட்களும் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நிச்சயமாக இதுவே தெளிவான பேரருளாகும்’ எனக் கூறினார்.”

“ஜின்கள், மனிதர்கள், பறவைகள் என்பவற்றிலிருந்து சுலைமானுக்கு அவரது படைகள் ஒன்று திரட்டப்பட்டு, அவர்கள் அணியணியாக நிறுத்தப்பட்டனர்.”

“அவர்கள் எறும்புகளின் (வசிப்பிடமான) பள்ளத்தாக்கிற்கு வந்தபோது, ஓர் எறும்பு, ‘எறும்புகளே! சுலைமானும் அவரது படையினரும் தாம் உணராதவர்களாக உங்களை மிதித்துவிடாதிருப்பதற்காக உங்கள் வசிப்பிடங்களுக்குள் நீங்கள் நுழைந்து கொள்ளுங்கள்’ என்று கூறியது.”

“அதன் பேச்சினால் சிரித்தவராக புன்னகை புரிந்தார். ‘எனது இரட்சகனே! என் மீதும் என் பெற்றோர் மீதும் நீ செய்த உனது அருளுக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்வதற்கும் நீ எனக்கு அருள் புரிவாயாக! உனது அருளால் உனது நல்லடியார்களுடன் என்னையும் இணைத்துக் கொள்வாயாக’ என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.”

(27:16-19)

சுலைமான் நபியுடன் சம்பந்தப்பட்ட இந்த சரித்திரத்தை எறும்பின் கதையாக சிறுவர்களுக்குப் புரிய வைக்கலாம்.

சுலைமான் நபிக்கு மகத்தான ஆட்சியை அல்லாஹ் வழங்கியிருந்தான். அவருக்கு பறவைகள், ஏனைய உயிரினங்களின் மொழியையும் அல்லாஹ் கற்றுக் கொடுத்திருந்தான் என்பதை விளக்கலாம்.

அவர் ஒருநாள் தன் படையுடன் பயணித்துக் கொண்டிருந்த போது ஒரு எறும்புக் கூட்ட ஓடையை அவர் அண்மித்தார். அப்போது ஒரு எறும்பு தனது சக எறும்புகளிடம், ‘ஓ எறும்புக் கூட்டமே! நீங்கள் உங்கள் பொந்துகளுக்குள் நுழைந்துவிடுங்கள். சுலைமானும் அவரது படையும் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை அறியாமல் அவர்கள் உங்களை மிதித்துவிடப் போகின்றார்கள்’ என்று கூறியது.

இது சுலைமான் நபிக்குக் கேட்டது! புரிந்தது! அவர் சிரித்தார். அல்லாஹ் தந்த மகத்தான ஆட்சி, அறிவுக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்.

இந்த எறும்புக் கதையூடாக எறும்பின் ஒற்றுமை, உற்சாகம், சுறுசுறுப்பு, கட்டுப்பாடு, கடமையைச் செய்தல்… என்ற நல்ல பண்புகளை சிறுவர்களுக்குக் கற்றுக் கொடுக்கலாம்.

இந்த எறும்பு தனது சக எறும்புகள் அழிந்துவிடக் கூடாது என்பதில் காட்டிய அக்கறையைத் தெளிவுபடுத்தி சமூக உணர்வுடன் செயற்படுவதன் முக்கியத்துவத்தைப் புரிய வைக்கலாம்.

சுலைமான் நபிக்கு அல்லாஹ் மகத்தான ஆட்சியையும், அதிகாரத்தையும், அறிவையும், செல்வத்தையும், செழிப்பையும் வழங்கியும் கூட அவர் ஆணவம் கொண்டவராக இருக்கவில்லை. அந்த ஆட்சியையும், அதிகாரத்தையும், அறிவையும், செல்வத்தையும், செழிப்பையும், தந்தவன் அல்லாஹ்தான். இது அவன் தந்த அருள் என பணிவுடன் நடந்தார். பக்குவமாக இருந்தார். இதற்கு நான் அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்ற நல்ல உணர்வுடன் நடந்தார். நாமும் அப்படி நடக்க வேண்டும் என்பதை உணர்த்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.