மரணித்த பின் உயிர் கொடுத்து எழுப்பப்படுதல் : குர்ஆனிய்யத்

மறுமை வாழ்வு உண்டு:  

    மரணித்த அனைவரும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவர் என்பது இறைத்தூதர்களின் போதனையில் அடிப்படையானதாகும். இறைத் தூதர்கள் மரணத்தின் பின் வாழ்வு உண்டு என போதித்த போது அக்காலத்தில் வாழ்ந்த பகுத்தறிவாளர்கள் (?) அதை மறுத்தனர். மனிதன் மரணித்து மண்ணோடு மண்ணாக மாறியதன் பின் அவனை உயிர் கொடுத்து மீண்டும் எழுப்ப முடியுமா? இது சாத்தியமே இல்லை என மறுத்தனர். அவர்களின் இப்போக்கை அல்குர்ஆன் பல இடங்களில் தர்க்க ரீதியாகவே தகர்த்தது. அப்படி தர்க்க ரீதியாக இந்தப் பிரச்சினையை அணுகிய இடங் களில் பின்வரும் வசனங்களும் உள்ளடங்கும்.

    மனிதர்களே! நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடக்கும் பொருட்டு உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர்களையும் படைத்த உங்கள் இரட்ச கனையே வணங்குங்கள்.’

‘அவனே உங்களுக்குப் பூமியை விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான். வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக வெளிப்படுத்தினான். எனவே, அறிந்துகொண்டே அல்லாஹ்வுக்கு இணையாளர்களை ஏற்படுத்தாதீர்கள்.’
(2:21-22)

மரணத்தின் பின் மனிதன் உயிர் கொடுத்து எழுப்பப்படுதல் என்பது சாத்தியமானதுதான் என்பதை மூன்று தர்க்கரீதியான வாதங்களின் அடிப்படையில் இந்த வசனம் நிரூபிக்கின்றது.

1.    முதல் படைப்பு:
மனிதனை முதன் முதலில் படைத்தவன் அவன் மரணித்த பின்னர் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பும் ஆற்றல் உள்ளவன் என்பதை மறுப்பது அறிவீனமானதாகும்.

உங்களையும், உங்களுக்கு முன் இருந்தவர்களையும் படைத்த உங்கள் இறைவனை வணங்குங்கள் என்ற வார்த்தை மூலம் நீங்களும் உங்களுக்கு முன்பிருந்தவர் களும் அவனால் படைக்கப்பட்டுள்ளீர்கள். ஒன்றுமே இல்லாத நிலையில் இருந்து உங்களைப் படைத்தவன் நீங்கள் மரணித்த பின் மீண்டும் உங்களைப் படைக்க முடியாது என்று எப்படிக் கூறுகின்றீர்கள் என அல்லாஹ் கேட்கின்றான்.

அல்குர்ஆனில் பல இடங்களில் இந்த அடிப்படையில் கேள்வி கேற்கப்படுவதை அவதானிக்கலாம்.

    ‘எங்களை மீட்டுபவன் யார்? என அவர்கள் கேட்கின்றனர். ‘எவன் உங்களை முதன் முறையாகப்; படைத்தானோ அவனே’ என்று நீர் கூறுவீராக! அப்போது அவர்கள் தமது தலைகளை உமது பக்கம் சாய்த்து, அது எப்போது என்று கேட்கின்றனர். அது மிக அண்மையில் இருக்கலாம் என்று கூறுவீராக!’ (17:51)

‘மேலும் அவன், தான் படைக்கப்பட்டதை மறந்துவிட்டு, நமக்கு, ஓர் உதாரணத்தைக் கூறுகின்றான். எலும்புகள் உக்கிப்போயிருக்க அவற்றை உயிர்ப்பிப்பவன் யார்? எனக் கேட்கின்றான்.’

‘முதன் முறை அதனைப் படைத்தவனே அதனை உயிர்ப்பிப்பான். அவன் அனைத்துப் படைப்பையும் நன்கறிந்தவன் என (நபியே!) நீர் கூறுவீராக!’ (36:78-79)

    மேற்போன்ற வசனங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

2.    பெரிய படைப்புக்கள்:
மனிதனை விட பெரிய படைப்புகளான வானம், பூமி, சூரியன், சந்திரன், கோள்கள்… போன்றவற்றைப் படைத்தவன் மரணித்த மனிதனை மீண்டும் படைக்க ஆற்றல் அற்றவனாக இருப்பானா? என்பது இரண்டாவது வாதமாகும்.

இதை உணர்த்தும் முகமாகவே வானம், பூமியின் படைப்பு பற்றி இங்கே பேசப் படுகின்றது. இதே கோணத்தில் குர்ஆன் பல இடங்களில் மனிதன் உயிர் கொடுத்து எழுப்பப் படுவது பற்றி வாதங்களை முன்வைக்கின்றது.

    ‘வானங்கள் மற்றும் பூமியைப் படைப்பது மனிதர்களைப் படைப்பதை விட மிகப் பெரியதாகும். எனினும், மனிதர்களில் அதிகமானோர்  அறிந்துகொள்ள மாட்டார்கள்.’ (40:57)

‘வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தவன் அவர்களைப் போன்றவர்களை (மீண்டும்) படைப்பதற்கு ஆற்றலுடையவனில்லையா? ஆம். அவன் மாபெரும் படைப்பாளன்ளூ  நன்கறிந்தவன்.’ (36:81)

    போன்ற மேற்படி வசனங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

3.    ஒப்பீட்டுவாதம்:
மனிதன் மரணித்த பின் மீண்டும் அவனை உயிர் கொடுத்து எழுப்ப முடியாது என வாதிடுபவர்களைப் பார்த்து இறந்து போன பூமி மீது மழையைப் பொழிந்து அதை உயிர்ப்பிக் கின்றான் அல்லாஹ். அப்படி உயிர்ப்பித்தவனுக்கு இறந்த மனிதனை உயிர்ப்பிக்க முடியாதா? என வாதிக்கின்றது இந்த வசனம். இந்த அடிப்படையில் தான் இந்த வசனங்களில் மழை பொழியச் செய்து பூமியை விளையச் செய்து அவன் உங்களுக்கு உணவளிக்கின்றான் என்பது இந்த இடத்தில் பேசப்படுகின்றது.

அல்குர்ஆன் பல இடங்களில் இந்த ஒப்பீட்டு வாதத்தை முன்வைப்பதைக் காணலாம்.

    ‘(நபியே!) நிச்சயமாக நீர் பூமியை வரண்டு போனதாகக் காண்பதும், பின்னர் அதில் நாம் மழையை இறக்கினால் அது செழித்து வளர்வதும், அவனது அத்தாட்சி களில் உள்ளவைகளாகும். நிச்சயமாக அதை உயிர்ப்பித்தவனே மரணித்தோரையும்; உயிர்ப்பிப்பவன். நிச்சயமாக அவன் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவன்.’ (41:39)

    இந்த அடிப்படையில் மேற்படி வசனத்தில் மூன்றுவிதமான வாதங்களின் அடிப்படையில் அல்லாஹ் மறுமை வாழ்வை நிரூபிப்பதை அவதானிக்கலாம். குர்ஆனுடைய வசனங்களை நுணுக்கமாக நோக்கினால் இது போன்ற பல அற்புதமான போக்கினைக் கண்டு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.