லைலத்துல் கத்ர்
கடந்த இதழில் கடமையான தொழுகைகளுக்கு முன், பின் உள்ள சுன்னத்தான தொழுகைகள் குறித்துப் பார்த்தோம். இந்த இதழில் கியாமுல் லைல் குறித்து நோக்கவிருக்கின்றோம்.
‘கியாமுல் லைல்’ – இரவுத் தொழுகை- என்பது இஷhவின் பின் சுன்னத்து முதல் பஜ்ர் வரையுள்ள நேரத்தில் தொழப்படும் தொழுகையைக் குறிக்கும்.
நடு இரவில் தொழப்படும் தஹஜ்ஜத் தொழுகையும் இரவில் தொழப்படும் வித்ர் தொழுகையும், ரமழான் காலங்களில் தொழப்படும் தராவீஹ் என அழைக்கப்படும் தொழுகையும் கியாமுல் லைல் என்ற பொதுப் பெயரால் அழைக்கப்படும். இந்த கியாமுல் லைல் தொழுகையின் சிறப்பு பற்றி அல்குர்ஆன், சுன்னாவில் அதிகம் பேசப்பட்டுள்ளது.
1. நல்லவர்களின் பண்பு:
அல்குர்ஆனில் யூத, கிறிஸ்தவர்கள் பற்றி அல்லாஹ் கண்டித்துப் பேசிக் கொண்டு வரும் போது அவர்களிலும் நல்லவர்களும் இருப்பதாகக் கூறுகின்றான். அந்த நல்லவர்கள் பற்றிக் கூறும் போது ‘கியாமுல் லைல்’ தொழுகையில் ஈடுபடுவது அவர்களின் சிறந்த பண்பாக இருக்கும் என்று அல்லாஹ் கூறுகின்றான்.
‘அவர்கள் (அனைவரும்) ஒரே சமமானவர்கள் அல்லர். வேதத்தையுடையோரில் (சத்தியத்தில்) நிலைத்திருக்கும் கூட்டத்தினரும் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை இரவு வேளைகளில் ஓதி, சிரம்பணிகின்றனர்.’ (3:113)
2. சுவனம் செல்லும் ரஹ்மானின் அடியார்கள்:
சுவனத்திற்குச் சொந்தக்காரர்களான ரஹ்மானின் அடியார்கள் பற்றி அல்லாஹ் கூறும் போது இரவுத் தொழுகையையும் அவர்களின் பண்பாகக் கூறுகின்றான்.
‘அர்ரஹ்மானின் அடியார்கள்தான் பூமியில் பணிவுடன் நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் தர்க்கித்தால், ‘ஸலாம்’ எனக் கூறுவார்கள்.’
‘மேலும், அவர்கள் தமது இரட்சகனுக்கு சுஜூது செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் இரவைக் கழிப்பார்கள்.’ (25:63-64)
3. இரவில் நீண்ட நேரம் வணங்குதல்:
இரவில் நீண்ட நேரம் வணங்குவது அல்குர்ஆனில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.
‘போர்த்திக் கொண்டிருப்பவரே’
‘இரவில் சிறிது நேரம் தவிர (தொழுகைக்காக) எழுந்து நிற்பீராக!’
‘அதில் அரைப்பகுதி அல்லது அதை விட சிறிதளவு குறைத்துக் கொள்வீராக!’
‘அல்லது அதைவிட அதிகமாக்கிக் கொள்வீராக! மேலும், இக்குர்ஆனை நேர்த்தியாக ஓதுவீராக!’ (73:1-4)
‘உமது இரட்சகனின் பெயரைக் காலையிலும், மாலையிலும் நினைவு கூர்வீராக!’
‘இரவில் அவனுக்கு சுஜூது செய்வீராக! மேலும், இரவில் நீண்ட நேரம் அவனைத் துதிப்பீராக!’ (76:25-26)
4. சமமாகமாட்டார்கள்:
இரவுத் தொழுகையில் ஈடுபடுபவர்களுக்கு அதில் ஈடுபாடு காட்டாதவர்கள் சமமாக முடியாது என பின்வரும் வசனம் கூறுகின்றது.
‘(நிராகரிப்பவன் சிறந்தவனா?) அல்லது மறுமையைப் பயந்து, தனது இரட்சகனின் அருளை ஆதரவு வைத்து, சுஜூது செய்தவராகவும், நின்றவராகவும் இரவு நேரங்களில் அடிபணிந்து வழிபடுபவரா? அறிந்தோ ரும் அறியாதோரும் சமமாவார்களா? என (நபியே!) நீர் கேட்பீராக! சிந்தனையுடையோர்தாம் நல்லுபதேசம் பெறுவார்கள்.’ (39:9)
5. ஈமானின் அடையாளம்:
கியாமுல் லைல் என்பது முழுமையான ஈமானின் அடையாளமாகத் திகழ்கின்றது.
‘எமது வசனங்கள் ஞாபகமூட்டப்பட்டால் அவற்றை நம்பிக்கை கொள்வோரே ‘சுஜூது’ செய்தவர்களாக விழுவார்கள். மேலும், தமது இரட்சகனின் புகழைக் கொண்டு துதிப்பார்கள். இன்னும், அவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள்.’
‘அவர்களது விலாப்புறங்கள் படுக்கைகளை விட்டும் விலகியிருக்க, அவர்கள் தமது இரட்சகனை அச்சத்துடனும், ஆதரவுடனும் பிரார்த்திப்பார்கள். மேலும், நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்லறங்களில்) செலவும் செய்வார்கள்.’
‘எனவே, அவர்கள் செய்துகொண்டிருந்த வற்றிற்குக் கூலியாக அவர்களுக்கு மறைத்து வைக்கப் பட்டிருக்கும் கண் குளிர்ச்சியை எந்த ஆன்மாவும் அறிந்து கொள்ளாது.’
(32:15-17)
6. சுவனத்திற்குரிய முஹ்ஸின்கள்:
இரவுத் தொழுகையை தக்வா உடையவர்களின் அடையாளமாகவும், ‘முஹ்ஸின்’ – நல்லவர்களின் அடையாளமாகவும், அமைந்துள்ளது. அவர்கள் சுவர்க்கத்தில் இருப்பார்கள் என்றும் பின்வரும் வசனங்கள் கூறுகின்றன.
‘நிச்சயமாக பயபக்தியாளர்கள் தமது இரட்சகன் தமக்கு வழங்கியதைப் பெற்றுக் கொண்டவர்களாக, சுவனச் சோலைகளிலும் நீரூற்றுக்களிலும் இருப்பார்கள். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்பவர்களாக இருந்தனர்.’
‘இவர்கள் இரவில் குறைவாகவே தூங்குபவர்களாக இருந்தனர்.’
‘மேலும் இவர்கள், இரவின் இறுதி வேளைகளில் பாவமன்னிப்புக் கோருவார்கள்.’ (51:15-18)
இவ்வாறு அல்குர்ஆனின் பல வசனங்கள் கியாமுல் லைல் தொழுகையின் சிறப்பு பற்றிப் பேசுவது போன்றே சுன்னாவும் இதன் சிறப்பு முக்கியத்துவம் குறித்துப் பேசி ஆர்வமூட்டுவதைக் காணலாம்.
சுவனம் செல்லும் வழி:
‘மனிதர்களே! ஸலாத்தைப் பரப்புங்கள். உணவளியுங்கள், உறவுகளைப் பேணுங்கள். மக்கள் உறங்கும் வேளையில் இரவில் தொழுங்கள். ஸலாமத்தாக சுவனத்தில் நுழைவீர்கள்’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(வ) ஆதாரம்: இப்னுமாஜா- 1334, 3251
(அறிஞர் அல்பானி(ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸ் ஸஹீஹானது என்று கூறுகின்றார்.)
சுவனத்தில் அந்தஸ்தை உயர்த்தும்:
‘சுவனத்தில் ஒரு மாளிகை உண்டு. அதன் வெளியில் இருந்து பார்த்தால் உள்ளே தெரியும். உள்ளே இருந்து பார்த்தால் வெளிப்புறம் தெரியும். அதனை உணவளித்தவர்களுக்கும், ஸலாத்தைப் பரப்பியவர்களுக்கும், மக்கள் உறங்கும் வேளையில் இரவில் தொழுதவர்களுக்குமாக அல்லாஹ் ஏற்பாடு செய்துள்ளான்.’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம்: இப்னு குஸைமா- 2137,
திர்மிதி- 1984)
(அறிஞர் அல்பானி(ரஹ்) அவர்கள் இதனை ஹஸனான அறிவிப்பு என்கின்றார்.)
சிறந்த தொழுகை:
‘பர்ழான தொழுகைக்குப் பின்னர் தொழுகையில் சிறந்தது இரவுத் தொழுகையாகும்’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(வ)
ஆதாரம்: அபூதாவூத்- 2429, திர்மிதி- 438, நஸாஈ- 1613
(அறிஞர் அல்பானி (ரஹ்) அவர்கள் இதனை ஸஹீஹான அறிவிப்பு என்கின்றார்.)
இவ்வாறு ஏராளமான செய்திகள் ‘கியாமுல் லைல்’ – இரவுத் தொழுகையின் சிறப்பு பற்றிப் பேசுகின்றன.
இரவுத் தொழுகையின் நேரம்:
இஷhவின் பின் சுன்னத்தில் இருந்து பஜ்ருடைய அதான் வரையுள்ள நேரம் கியாமுல் லைல் தொழுகைக்குரிய நேரமாகும். நபி(ச) அவர்கள் இதனைப் பல நேரங்களில் நிறைவேற்றி சமூகத்திற்கு வழிகாட்டியுள்ளார்கள்.
இரவில் எழுந்து தொழ முடியாத பட்சத்தில் தொழுதுவிட்டே உறங்கலாம். நடுநிசியில் எழுந்து தொழுவது ஏற்றமான தாகும். சில போது நபி(ச) அவர்கள் சுபஹுக்கு முன்னர் எழுந்து இரவுத் தொழுகையைத் தொழுதுவிட்டு பஜ்ரைத் தொழுவார்கள். ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கு ஏற்ற விதத்தில் இதைத் தொழுதுகொள்ளலாம்.
இரவின் இறுதிப் பகுதி:
இருப்பினும், இரவின் இறுதிப் பகுதியில் தொழுவதில் ஒரு சிறப்பு உள்ளது.
‘இரட்சகன் அடியானுக்கு இரவின் இறுதிப் பகுதியில் மிக அருகில் இருக்கின்றான். அந்த நேரத்தில் அல்லாஹ்வை நினைவுகூர்பவர்களில் உன்னால் இருக்க முடிந்தால் இருந்து கொள்’ என நபி(É) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(அறிவிப்பவர்: அம்ர் இப்னு அபஸா(வ)
ஆதாரம்: இப்னு குஸைமா- 1147,
நஸாஈ- 572)
(அறிஞர் அல்பானி இந்த ஹதீஸை ஸஹீஹ் என்கின்றார்.)
இரவின் மூன்றாம் பகுதியில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்குகின்றான் என ஏராளமான ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் கூறுகின்றன. இந்த நேரம் கியாமுல் லைலுக்கு மிகச் சிறப்பான நேரமாகும்.
நடுநிசி நேரம்:
நடு இரவில் விழித்து தொழுவதும் ஏற்றமானதாகும். மக்கள் உறங்கும் போது இரவில் தொழுவதை சிறப்பித்துப் பேசும் பல அறிவிப்புக்களை நாம் ஏற்கனவே பார்த்தோம்.
‘எமது வசனங்கள் ஞாபகமூட்டப்பட்டால் அவற்றை நம்பிக்கை கொள்வோரே ‘சுஜூது’ செய்தவர்களாக விழுவார்கள். மேலும், தமது இரட்சகனின் புகழைக் கொண்டு துதிப்பார்கள். இன்னும், அவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள்.’
‘அவர்களது விலாப்புறங்கள் படுக்கைகளை விட்டும் விலகியிருக்க, அவர்கள் தமது இரட்சகனை அச்சத்துடனும், ஆதரவுடனும் பிரார்த்திப்பார்கள். மேலும், நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்லறங்களில்) செலவும் செய்வார்கள்.’
‘எனவே, அவர்கள் செய்துகொண்டிருந்த வற்றிற்குக் கூலியாக அவர்களுக்கு மறைத்து வைக்கப் பட்டிருக்கும் கண் குளிர்ச்சியை எந்த ஆன்மாவும் அறிந்து கொள்ளாது.’
படுக்கையை விட்டும் எழுந்து தொழும் தொழுகை இங்கே சிறப்பிக்கப்படுகின்றது.
‘உமக்கு உபரியாக இருக்க, இரவின் ஒரு பகுதியில் தொழுகைக்காக எழுந்து நிற்பீராக! உமது இரட்சகன் (புகழப்பட்ட இடமான) ‘மகாமு மஹ்மூத்’தில் உம்மை எழுப்புவான்.’ (17:79)
இந்த சிறப்பான நேரங்களில் தொழ முடியாதவர்கள் தொழுதுவிட்டே உறங்கலாம்.
இரவுத் தொழுகையை அடைவதற் கான ஒழுங்குகள்:
இரவுத் தொழுகையில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் அதற்கான ஒழுங்குகளைப் பேணுவது அதற்குத் துணை செய்யும்.
இரவில் விழிப்பதற்கான ஏற்பாடுகள்
1. இரவில் விழிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம். தற்காலத்தில் அலாரம் வைத்துக் கொள்ளலாம்.
2. இரவில் விழித்திருப்பதற்காக பகலில் சிறிது கைலூலா தூங்கலாம்.
3. இஷh தொழுகையின் பின் வீணாக விழித்திருக்காமல் நேரத்துடன் உறங்குவது இரவில் விழித்துத் தொழ ஏதுவாக அமையும்.
இரவுத் தொழுகையில் ஈடுபட வேண்டும் என்ற நிய்யத்துடன் உறங்குதல்:
தூங்கும் போதே விழித்துத் தொழ வேண்டும் என்ற எண்ணத்துடன் தூங்க வேண்டும். இது விழித்து எழவும் உதவும். ஒரு வேளை தூக்கம் மிகைத்துவிட்டால் தொழுத நன்மையைப் பெற அது வழிவகுக்கும்.
‘இரவில் எழுந்து தொழ வேண்டும் என்ற எண்ணத்தில் யார் தனது படுக்கைக்குச் சென்று சுபஹ் வரை தூக்கம் அவரை மிகைத்து விடுகின்றதோ அவர் எண்ணியது (இரவுத் தொழுகையில் ஈடுபட்ட நன்மை) அவருக்குப் பதியப்படும். அவரது உறக்கம் என்பது ரப்பிடமிருந்து அவருக்குக் கிடைத்த ஸதகாவாக இருக்கும்’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர்தா(வ)
ஆதாரம்: இப்னு குஸைமா- 1172, இப்னு மாஜா- 1314, நஸாஈ- 1787.
(அறிஞர் அல்பானி(ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸ் ஸஹீஹான ஹதீஸ் என்று கூறுகின்றார்.)
எனவே, தூங்கச் செல்லும் போதே எழுந்து தொழ வேண்டும் என்ற உறுதியான எண்ணத்தில் உறங்க வேண்டும்.
இவ்வாறே,
வுழூவுடன் உறங்குவது, வலது புறமாக சாய்ந்து படுத்தல்:
இடது புறமாக ஒருக்கலித்து உறங்கும் போது ஆழமான உறக்கம் ஏற்படும் என்றும் வலப்புறமாக உறங்குவது உள்ளத்திற்கு நல்லது என்றும் இமாம் இப்னுல் கையூம் (ரஹ்) குறிப்பிடுகின்றார். (ஸாதுல் மஆத்: 1ஃ311)
இவ்வாறே இஸ்லாம் கூறும் உறங்கும் ஒழுங்குகளைப் பேணுவதுடன் ஓதவேண்டிய திக்ர்கள், அவ்ராதுகளையும் ஓதிக் கொள்வது நன்மையைப் பெற்றுத் தரும்.
விழித்து எழுந்ததும் ஓத வேண்டிய அவ்ராதுகளை ஓதி மிஸ்வாக் செய்து தொழுகைக்கு தயாராக வேண்டும்.
இதன் தொடர் அடுத்த இதழில்…
இன்ஷh அல்லாஹ்