உடல் – உள – ஆன்மீக ஆரோக்கியம்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) அறிக்கையின் படி மனிதனது ஆரோக்கியம் என்பது உடல், உள, ஆன்மீக ஆரோக்கியமாகும் இவைகள் சரியான நிலையில் உள்ள போதுதான் மனிதன் ஆரோக்கியம் என்ற நிலையை அடைகிறான் அந்த வகையில்,

உடல் ஆரோக்கியம்:

1. உணவு :-
இன்று அனேகமான மாணவ, மாணவிகள் அதிமிகைத்த உடற்பருமன் உடையவர்களாக காணப்படுகின்றார்கள். கடைகளிலும், பாடசாலை, சிற்றுண்டிச்சாலைகளிலும் காணப்படும் பராட்டா, அஜினமோடோ சேர்க்கப்பட்ட குழம்பு, பெட்டீஸ், சோடீஸ் வகைகள் என்று அதிகம் காபோவைதரேட்டு, கொழுப்புச் சத்துள்ள உணவுகளையே விரும்புகின்றனர். இதனால் பலூன் போல் ஊதியுள்ளனர்.

புரதச் சத்து நிரம்பிய கடலை, கௌப்பி, பயறு போன்ற தானியங்களையும், கீரை வகைகள், பழங்கள் பேன்றவைகளையும் விரும்பி உண்ண வேண்டும். இதனால் புத்திக் கூர்மை அதிகரிக்கும். இவற்றை தாய்மார்கள் பிள்ளைகள் விரும்பும் வகையில் தயாரித்துக் கொடுக்க வேண்டும்.

இதில் கவலைக்குரிய விடயம் யாதெனில், மிக்ஸர், பிஸ்கட் போன்றவற்றைக் கூட மாணவர்கள் காலை உணவாக உண்ணும் நிலையைக் காணலாம். இவ்வாறான உணவுகள் அவர்கள் உண்பதால் தொடர்ச்சியான கற்றலுக்கு பசி இடையூறாக அமைகின்றது. இதனால் பாடத்தில் கவனம் செலுத்துவதை விட்டும் தடம் புரள்கின்றனர். எனவே, மாணவர்கள் ருசியான உணவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு பங்கையாவது தனது உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான போசனையான உணவுக்குக் கொடுக்க வேண்டும்.

2. தேவையான அளவு தூக்கம்:-
‘தூக்கத்தை நாம் ஓய்வாக ஆக்கியுள்ளோம்’
(நபஉ: 09)

எனவே, உரிய அளவிலான தூக்கம் முறையாக பேணப்படுகின்ற போது மாணவர்களின் நுண்ணறிவு (IQ) அதிகரிப்பதுடன் அது ஒரு இபாதத்தாகவும் கருதப்படும்.

இரவில் தூங்குதல், அதிகலையில் சுபஹ் தொழுகைக்கு எழும்புதல் என்ற நேர முகாமைத்துவம் பேணப்பட வேண்டும். இரவில் எவ்வளவுதான் நேரம் கழித்து தூங்கினாலும் அதிகாலையில் சுபஹ் தொழுகைக்கு எழும்புவது அவர்மீது கட்டாயக் கடமையாக இருக்கின்றது. நபியவர்கள் தூங்கும் முன் வுழூ செய்து, படுக்கைகளை ஆயத்தம் செய்து, அவ்ராதுகளை ஓதி, இறை நினைவோடு வலப் பக்கமாக ஒருக்களித்துத் தூங்குவது போன்ற வழிகாட்டல்கள் இருக்க இன்று அனேமான மாணவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசித்தவர்களாகவும் கையடக்கத் தொலைபேசியுடன் தொடர்பு பட்டவர்களாகவும், பாடல்கள் கேட்பவர்களாகவும், படம் பார்ப்பவர்களாகவும், அன்பர்களுடன் உரையாடியவர்களாகவும், Facebook, Internet, Twitter, WhatsApp & Viber என்பவற்றில் நீண்ட நேரம் கழித்தவர்களாகவும், சிலர் இஸ்லாத்திற்கு முற்று முழுதாக முரணான விடயங்களில் ஈடுபட்டவர்களாகவும் தூங்கும் போது தூக்கத்தின் மூலம் எதிர்பார்க்கப்படும் ஓய்வு, இபாதத் எனும் தன்மை இழக்கப்படுகின்றது.

எனவே, இரவில் தூங்கச் செல்லும் முன்னர் மாணவர்கள் கற்ற பாடங்களை மீட்டியவர்களாக இறை நினைவோடு தூங்குவது சிறந்தது. அதேவேளை, அதிகாலை பாடங்களை மீட்டல் செய்வது சிறந்த பயனைத் தரும்.

3. உடற்பயிற்சி:-
தற்காலத்தில் மாணவர்களுக்கு விளையாட்டு என்பது ஓர் எட்டாக்கனியாகப் போய்விட்டது. பாடசாலை முடிவடைந்த பின் அடுக்கடுக்காய் இருக்கும் பிரத்தியேக வகுப்புக்கள் கிடைக்கும் ஒரு சில ஓய்வு நேரங்களில் கூட ஓடி, ஆடி விளையாடாமல் நான்கு சுவருக்குள் கழிக்கப்படுவது அவதானிக்க முடிகின்றது. வெளியே சென்று வியர்வை சிந்தி விளையாடிய காலம் மலையேறி கைபேசியிலும், கணிணியில் கேம்ஸ் விளையாடுவதிலும், அரட்டையடிப்பதிலும் நேரத்தை செலவு செய்கின்ற ஒரு வகையான மாய உலகம் காணப்படுகின்றது. இதனால் மாணவர்கள் உற்சாகம் அற்றவர்களாகவும் அவர்களின் உடல்களில் மேலதிக கொழுப்புக்கள் சேர்வதற்கும் காரணமாக அமைகின்றது. எனவே, மாணவர்கள் குறைந்தது அரை மணி நேரமாவது விளையாட்டுக்காக செலவளிப்பது உடல் ஆரோக்கியத்துக்கு ஒரு சிறந்த வழி முறையாகும்.

உள ஆரோக்கியம்:

உள ஆரோக்கியம் என்பது பரந்துபட்டு ஆராய வேண்டிய ஓர் விடயமாகும். இன்று பெரும்பாலும் ‘டீனேஜ்’ மாணவர்களின் உள ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை செலுத்தி அவர்களின் கல்வியிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு விடயத்தைப் பற்றி கவனிக்கலாம் என நினைக்கின்றேன்.

நவீன உலகில் காதலை மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஓர் விடயமாகக் கருதி அதை நடைமுறைப்படுத்தியும் வருகின்றனர்.

‘நபி(ச)அவர்கள் உங்களில் ஒருவர் அவருடைய தந்தை, பிள்ளை, மேலும் மனிதர்கள் அனைவர்களை விடவும் நான் மிக நேசத்துக்குரிய வனாக மாறாதவரை உங்களில் எவரும் ஈமான் கொண்டவராக மாட்டார் எனக் கூறியுள்ளார்கள்’
(புஹாரி)

அப்படியென்றால் எங்களுடைய நபிக்கு எந்த அளவுக்கு உள்ளங்களில் இடம் கொடுத்திருக்கின்றோம்?

‘ஒருவர் வந்து நபி(ச) அவர்களிடம், இந்த உலகில் யாரிடம் அதிகம் விருப்பம் உள்ளவராக இருக்க
வேண்டும் என வினவ உமது தாய் என்றார்கள். மீண்டும் வினவ உமது தாய் என்றார்கள். மீண்டும் வினவ உமது தாய் என மூன்று முறை பதில் அளித்து நான்காவது முறையாக வினவியதற்கு உனது தந்தை’ என்று சொன்னார்கள்.

டீனேஜில் ஏற்படும் எதிர்ப்பால் கவர்ச்சியானது இன்று எத்தனையோ திறமையான மாணவ, மாணவிகளின் கல்வியில் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வைத்தியராக, பொறியியலாளராக, பல்துறை சார்ந்தவர்களாக வரவேண்டிய எத்தனையோ டீனேஜினர் இன்று உள நோய்க்கு உள்ளாகி போதைக்கு அடிமையாகி, இதற்கு ஒரு படி மேலாக தற்கொலை முயற்சிக்குச்சென்று நிரந்தர நரகவாசியாக மாறுகின்றனர்.

பெற்றோர்களே! ‘தோளுக்கு மிஞ்சினால் தோழன்’ என்று சொல்வார்கள். உங்களது வயதுக்கு வந்த பிள்ளைகளுடனான உறவு எந்த அளவு ஆரோக்கியமான நிலைமையில் உள்ளது? அவர்களுக்கு கருத்துச் சொல்லும் உரிமை அவர்களை மதித்து அன்பு செலுத்தும் தன்மை எந்த அளவு பேணப்படுகிறது?

பிள்ளைகளிடம் சமத்துவம் எந்த அளவு பேணப்படுகின்றது? என்பதில் அதிகம் கவனம் செலுத்துங்கள்.
சிறுவயதில் பெற்றோர்-பிள்ளைகளுக்கு இடையில் இருக்கும் அந்த இறுக்கமான பிணைப்பு அவர்கள் இளைஞர்கள், யுவதிகளாக மாறுகிற போது விரிவடைந்து செல்கின்றமையாலும் கடுமையான வரையறைகள், ஆதிக்கம் செலுத்தல் போன்ற விடயங்கள் கூட அவர்கள் இன்னோர் இடத்தில் தனக்குத் தேவையான அன்பை, பாசத்தை தேடிச் செல்லக் காரணமாக அமைகின்றது.

எனவே, பெற்றோர்களும், பிள்ளைகளும் தங்களுக்கிடையிலான உறவுப் பாலத்தை சீர் செய்து கொள்வதுடன் மாணவர்கள் தங்களுக்குள் ஏற்படும் எதிர்ப்பால் கவர்ச்சிகளை கட்டுப்படுத்தி தங்களது கல்விக்கு தடைக் கல்லாக மாற்றிக் கொள்வதும் இஸ்லாத்திற்கு எதிராக பயன்படுத்திக் கொள்வதும் சிறந்ததல்ல.

ஆன்மீக ஆரோக்கியம்:
பெரும்பாலும் மனிதர்கள் பாவங்கள் செய்வதை தடுப்பதற்கான வழிவகைகள், சட்டதிட்டங்கள் அமுல்படுத்தப்பட்டும் மனிதர்கள் தீமையில் ஈடுபடுவதைக் காண்கின்றோம். பெற்றோரை ஏமாற்றும் பிள்ளைகளும், கணவனுக்குத் தெரியாமல் மனைவியும், மனைவிக்குத் தெரியாமல் கணவனும், முதலாளிக்குத் தெரியாமல் வேலையாளும்… என்று கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு கணகச்சிதமாய் பாவங்கள் செய்யப்படுகின்றன.

‘நீ எங்கிருந்தாலும் அல்லாஹ்வைப் பயந்து கொள்! நீ அல்லாஹ்வைப் பார்க்காவிட்டாலும் அல்லாஹ் உன்னைப் பார்த்துக் கொண்டிருக் கின்றான்’ என்ற நபி மொழியை ஒவ்வொருவரும் தம் ஆழ்மனதில் விதைத்துவிடுவார்கள் என்றால் இந்த பூமி கலங்கமற்றதாக மாறும் என்பதில் ஐயமில்லை.

‘நான் முஸ்லிம்’ என்று பெரும்பாலானோர் பெயரளவில் வாழ்கிறார்களே தவிர அவர்களிடத்தில் தக்வா (இறையச்சம்), இபாதத் (வணக்கம்), அஹ்லாக் (நற்குணங்கள்) மரண சிந்தனை என்பன துளியளவு கூட இல்லாத நிலை ஆரோக்கியமற்ற நிலையாகும். எனவே, மறுமையின் விளைநிலமான இவ்வையகத்தினை நல்ல முறையில் அமைத்துக் கொள்வோமாக!

இறுதியாக: ‘ஒவ்வொருவரும் பொறுப்பு தாரிகள்| அவர்களுடைய பொறுப்புக்கள் பற்றி நாளைய மறுமையில் விசாரிக்கப்படுவார்கள்’ என்ற நபி வாக்கிற்கு ஏற்ப மாணவர்களைப் பொறுத்தவரையில் கல்வி கற்பது கடமையாக இருக்கின்றது. இன்று அநேகமான மாணவர்கள் O/L முடிந்தவுடன் தங்களது கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றனர். ஆண்களைப் பொறுத்தவரையில் வியாபாரத்திலோ, வெளிநாட்டுக்குச் செல்வதிலோ நாட்டம் கொள்வதும் பெண்பிள்ளைகள் திருமணம் அல்லது வீட்டில் தாய்க்கு உதவியாக இருக்கின்ற நிலைமைகளையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. சிலர் இதற்கு விதிவிலக்கு.

பெரும்பாலும் இந்நிலைமையே காணப்படுகின்றது. மற்றைய சமூகத்தில் உள்ள மாணவர்கள், பெற்றோர்கள் கல்விக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தையும் எமது சமூகம் கல்விக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தையும் ஒப்பீட்டளவில் பார்க்கின்ற போது மிகவும் மந்த நிலையிலேயே உள்ளது. இதனால் நாம் பல துறை சார்ந்தவர்களை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன் மற்றவர்களில் தங்கியிருக்க வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

மாணவ, மாணவிகள் தமது கல்வியை O/L, A/L உடன் இடை நிறுத்துவதைத் தவிர்த்து உயர் கல்வியைத் தொடர்வதுடன் தற்காலத்தில் சமூகத்தில் பயன்களைத் தரக்கூடிய துறைகளை தெரிவு செய்வதும்
காலத்தின் கட்டாயமாகும்.

‘உயர்வு என்பது கல்வியிலேயே தங்கியுள்ளது’ என்பதை ஒவ்வொருவரும் கருத்திற் கொண்டு சிறந்த கற்றலை மேற்கொள்ள உடல், உள, ஆன்மீக ஆரோக்கிய நிலையைப் பேணுவதில் முயற்சிக்க வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் எங்கள் அனை வருக்கும் பயனுள்ள அறிவை வழங்குவானாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.