முஸ்லிம்களும் தேசிய ஒருமைப்பாடும்.

இந்நாட்டில் பல்லின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் இலங்கையின் இறைமைக்கு சவால் விடாத ஒரே சமூகமாக முஸ்லிம் சமூகம்தான் உள்ளது.

தமிழ் சமூகமும் ஆயுதப் போராட்டமும்:
தமிழ் சமூகத்திற்கு எதிராக எழுந்த இனவாத மொழிவெறி கொண்ட செயற்பாடுகளால் தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் குதித்தனர். அது பின்னர் பயங்கரவாதமாக உருவெடுத்தது. இதனால் ஏற்பட்ட போரில் நாட்டின் வளங்களும் அபிவிருத்தியும் நற்பெயரும் பெறுமதிமிக்க உயிர்களும் பறிபோயின. போர் மற்றும் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளால் மிகப் பெரிய உயிர் உடைமை இழப்பை முஸ்லிம் சமூகம் சந்தித்தது. தமிழ் சமூகத்தை விட அதிகமான இனவாத நெருக்கடிகளை முஸ்லிம் சமூகம் சந்தித்தாலும் இலங்கையின் இறைமைக்கு அவர்கள் சவாலாக மாறவில்லை. மாறவும் மாட்டார்கள்| மாறவும் கூடாது!

சிங்கள இளைஞர்கள்:
இந்த நாட்டின் இறைமைக்கு எதிராக சிங்கள இளைஞர்களில் ஒரு குழுவினர் செயற்பட்டுள்ளனர். சேகுவெரா புரட்சி மற்றும் ஜே.வீ.பீ. யின் ஆயுதப் போராட்டங்களும் நாட்டின் அமைதியையும் நற்பெயரையும் கெடுத்தன. ஈற்றில் ஜே.வீ.பீ. யினர் தமது புரட்சிப் பாதையைக் கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் கைகோர்த்து ஜனநாயக ரீதியான போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த இரு இனங்களும் ஆயுதம் ஏந்தியதன் மூலம் தேசத்தின் இறைமைக்கு சவால் விட்டுள்ள நிலையில் முஸ்லிம்கள் தேசத்தின் இறைமைக்கு சவால் விடாத சமூகம் என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும். இருப்பினும் இனவாத சக்திகள் முஸ்லிம்களைத்தான் அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், தேசப் பற்றற்றவர்கள், தேசத்தக்கு விரோதமானவர்கள் என விமர்சித்து வருவது ஆச்சரியமானதாகும்.

நாடு பிளவுபடுவதைத் தடுத்தவர்கள்:
வட-கிழக்கில் தமிழர்களும் முஸ்லிம்களும் செறிந்து வாழ்கின்றனர். வட-கிழக்கு தமிழர் மற்றும் முஸ்லிம்களின் பூர்வீக பூமியாகும்.

தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகள் அதிகரித்த போது தமது பிரச்சினைக்கு தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு என உறுதியாக நம்பியவர்கள் வட-கிழக்கைப் பிரித்து தமிழர் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில்தான் ஆயுதப் போராட்டத்தில் குதித்தனர். அந்தப் போராட்டத்தில் அவர்கள் வெற்றியும் ஈட்டி வந்தனர்.

புலிகளால் வடக்கு முஸ்லிம்கள் ஆயுத முனையில் விரட்டப்பட்டனர். வடக்கு முழுவதும் தமிழர் மட்டும் வாழும் பிரதேசமாக மாறியது. அடுத்து கிழக்கு முஸ்லிம்களும் வெளியேற வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டது. முஸ்லிம்களை வெளியேற்று வதற்காக திட்டமிட்டு நூற்றுக் கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் கிழக்கு முஸ்லிம்கள் கிழக்கை விட்டும் வெளியேறவில்லை. கிழக்கு முஸ்லிம்கள் கிழக்கை விட்டும் வெளியேறியிருந்தால் புலிகளின் வட-கிழக்கைத் தமிழ் ஈழமாக அறிவிக்கும் போராட்டம் வெற்றி பெற்றிருக்கும். நாடு பிளவுபட்டிருக்கும். முஸ்லிம்கள் பலநூறு உயிர்களைத் தியாகம் செய்து பல்லாயிரம் கோடி சொத்து இழப்புக்களைத் தாங்கி கிழக்கில் வாழ்ந்ததுதான் நாடு பிளவு படுவதைத் தடுத்தது என்கின்ற வகையில் தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு அவர்கள் ஆற்றிய பங்கு மகத்தானதாகும்.

தேச துரோகம்:
புலிகளின் மூன்றாம் கட்ட ஈழப் போர் திருமலையில் வெடித்த பின்னர் புலிகளின் தாக்குதல் இலக்காக கொழும்பும் சிங்கள பிரதேசங்களும் அமைந்தன. கொலன்னாவை எண்ணெய்க் குதங்கள், மத்திய வங்கி, பண்டாரநாயக்க விமான நிலையம் என அவர்களது தாக்குதல்கள் நீண்டு சென்றன. பணத்திற்காக இத்தகைய தாக்குதல்களுக்கு சிங்கள மக்களில் சிலர் உதவி செய்து வந்தனர். இக்கால கட்டத்தில்தான் சிங்களக் கொட்டி, தெமல கொட்டி – சிங்களப் புலி, தமிழ் புலி என்ற பதங்களும் பயன்படுத்தப்பட்டு வந்தன.

இவ்வாறு புலிகள் தலைநகர்நோக்கி தாக்கிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சிங்கள இனவாத சக்திகள் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத, மதவாதப் பிரச்சாரங்களை முடுக்கி விட்டிருந்தனர். இதன் விளைவாக கலகெதர, பம்மன்ன, மாவனெல்லை என சுமார் 13 கலவரங்கள் வெடித்தன. இனவாத செயற்பாடுகள் முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளோடு இணையச் செய்திருக்க வேண்டும். ஆனால், சிங்கள மக்களில் சிலர் பணத்துக்காக புலிகளுக்குத் துணை போயினர். இராணுவ மட்டத்தில் கூட இந்த துரோகம் நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் சிங்கள இனவாதிகள் முஸ்லிம்களை பயங்கரவாதத்தின் பக்கம் துரத்தும் விதத்தில் செயற்பட்ட போது கூட முஸ்லிம்கள் நாட்டுக்குத் துரோகம் செய்து தேச விரோத சக்திகளோடு கைகோர்க்கவில்லை. முஸ்லிம்களின் இந்த செயற்பாடு தேச நலனிலும், ஒருமைப்பாட்டிலும் அவர்கள் செய்த மிகப்பெரும் பங்களிப்பாகப் பார்க்க வேண்டியதாகும்.

சுதந்திரமும் முஸ்லிம் தலைமைகளும்:
நாடு பிரித்தானியரின் காலணித்துவத்தின் கீழ் இருந்த போது சுதந்திர தாகத்தில் இலங்கை மக்கள் தவித்தனர். இலங்கைக்கு சுதந்திரம் தருவதாக இருந்தால் அதை சிறுபான்மையினர் அங்கீகரிக்க வேண்டும் என்கின்ற நிலை இருந்தது. சிறுபான்மையினர் மறுத்தால் நாடு தொடர்ந்தும் பிரித்தானியாவின் கீழ் இருக்கும். இந்த நிலையில் முஸ்லிம்கள் நாட்டில் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வந்தனர். பிரித்தானிய அரசில் இனவாதமும் மதவாதமும் இருக்கவில்லை. இச்சூழலில் இம் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிப்பது முஸ்லிம்களுக்கு சில இழப்புக்களை ஏற்படுத்தும் என்பதை மிகத் தெளிவாகத் தெரிந்திருந்த முஸ்லிம் தலைவர்கள் நாட்டுக்காக, நாட்டின் விடுதலைக்காக தமது நலன்களை அர்ப்பணித்து சுதந்திரத்திற்கு ஆதரவளித்தனர்.

இது பற்றி டி.பி. ஜாயா பேசும் போது, ‘இந்த நாடு சுதந்திரம் அடைவதற்காக எமது சமூகத்திற்குக் கிடைக்க இருக்கும் அனுகூலங்களையும் நலன்களையும் நாம் தியாகம் செய்வதற்குத் தயாராக இருக்கின்றோம்’ என்று குறிப்பிட்டார்.

தமிழ் தலைமைகள் இதில் மாற்றுக் கருத்தில் இருந்த வேளை, சேர் ராஸிக் பரீத் அவர்கள்| அவர்களையும் இந்த மசோதாவுக்கு ஆதரவளிக்க வேண்டி உரை நிகழ்த்தினார். அப்போது அவர், சோனகர் போல் தமிழர்களும் சிங்கள சமூகத்துடன் ஒத்துழைத்தால் இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும்… சிங்களவர்களுடன் தமிழரும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து இந்நாட்டுக்கு டொமினியன் அந்தஸ்த்தைப் பெறுவதற்கு முன்னேறுவோமாக!’ என்று வேண்டிக் கொண்டார்.

இலங்கையின் சுதந்திரத்திற்காக சொந்த நலன்களை இழந்த சமூகம் என்கின்ற வகையிலும் மசோதாவுக்கு ஆதரவாக தமிழ் தலைமைகளை வேண்டியவர்கள் என்கின்ற வகையிலும் நாட்டின் சுதந்திரத்திற்கான முஸ்லிம்களின் பங்கு ஈன்று குறிப்பிடத்தக்கதாகும். முஸ்லிம்களின் தேசிய நலனுக்கான பங்களிப்பில் இது மீண்டும் மீண்டும் நினைவூட்டத்தக்கதாகும்.

சுதந்திரத்திற்கு முற்பட்ட இலங்கையின் முஸ்லிம்கள்:
போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், பிரித்தானியர் என்ற மூன்று வெளிநாட்டவர்களால் இலங்கை ஆக்கிரமிக்கப்பட்டது. அன்றைய காலத்தில் கடல் வழி பிரயாணம்தான் இருந்தது என்பதால் அவர்கள் முதலில் கடல் பகுதியில்தான் கால் பதித்தனர். வியாபாரிகளான முஸ்லிம்கள் கடற்கரை ஓரங்களில் அதிகமாக வசித்து வந்தனர்.

அவர்கள் கடற்கரை ராஜாக்கள் என்று அழைக்கப்பட்டனர். இந்த வகையில் அந்நிய நாட்டவரின் ஆக்கிரமிப்பை முதன் முதலாக எதிர் கொண்டவர்கள் முஸ்லிம்களே!

கண்டி மன்னனும் முஸ்லிம்களும்:
கண்டி இராச்சியம் 1815’இல்தான் அந்நியர் வசனமானது. மலைநாடு பற்றிய தகவல்களை அந்நிய சக்திகளுக்கு வழங்கியவர் ‘எஹலபொல’ என்பவராவார். ஜோன் டொயிலியின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களில் முஸ்லிம்கள் கண்டி மன்னனுடன் எவ்வளவு நெருக்கமாக இருந்துள்ளனர் என்பதை அறியலாம்.

‘அரசனின் மாளிகையைச் சுற்றி வர இடையறாது சேனையிலிருக்கும் போர் வீரர்கள் 400 பேர். இவர்களில் 300 பேர் முஸ்லிம்கள். ஏனைய 100 பேரும் சிங்களவர்கள். (றுவரயக்கு – பக்: 186-455 நிகழ்வுங்க) – நன்றி: நேர்வழி மாத இதழ்.

400 பேரில் 300 பேர் முஸ்லிம்கள் எனும் அளவுக்கு நாட்டின் பாதுகாப்பில் முஸ்லிம்கள் பங்களிப்புச் செய்துள்ளார்கள். மன்னர்களின் நம்பிக்கைக்குரியவர்களாகவும் முஸ்லிம்கள் திகழ்ந்துள்ளனர்.

போர்த்துக்கேயரை எதிர்ப்பதில் முஸ்லிம்கள் முன்னணியில் திகழ்ந்துள்ளனர். மாயாதுன்ன மன்னனுடன் இணைந்து போர்த்துக்கேயருக்கு எதிராகப் போராடிய 4000 முஸ்லிம் வீரர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர்.

ஒட்டகப்படை:


இரண்டாம் இராஜசிங்கன் காலப்பகுதியில் வெல்லவாய போரில் முஸ்லிம்கள் மன்னனுக்கு ஆதரவாகக் களம் இறங்கினர். அவர்களது படை ‘ஒட்டுப்பந்திய’ – ஒட்டகப்படை என்று புகழ்ந்து பேசப்பட்டது. ஹங்குரன்கட்ட தேவாலயத்திற்கு மன்னன் அன்பளிப்புச் செய்த புடவையில் இவ்வொட்டகப்படை பொறிக்கப்பட்டு முஸ்லிம்கள் கௌரவிக்கப்பட்டனர்.

மன்னனைக் காத்த மருத்துவர்:
1760 இல் மன்னரைக் கொல்வதற்கும் அந்த இடத்தில் வெளிநாட்டவர் ஒருவரைக் குடியமர்த்துவதற்குமான ஒரு சதி முயற்சி நடந்தது. இந்த சதி முயற்சியை மன்னருக்கு விசுவாசமான முஸ்லிம் மருத்துவர் ‘கோபால முதலியார்’ அறிந்து மன்னரைக் காத்தார். இதனால் கோபால முதலியார் மன்னரால் உயர் பட்டம் அளித்து கௌரவிக்கப்பட்டதுடன் அவருக்கு அன்பளிப்புக்களும் வழங்கப்பட்டன.

உயிர் கொடுத்த உத்தமி:

ஒரு நாட்டைப் பாதுகாப்பதில் நாட்டுத் தலைவரைப் பாதுகாப்பது மிக முக்கியமானதாகும். அந்நிய சக்திகள் நாட்டை ஆக்கிரமித்த வேளையில் முஸ்லிம்கள் நாட்டுத் தலைமையுடன் இணைந்து போராடினர். நாட்டு மன்னனைக் காப்பதில் உயிர்த் தியாகங்களும் செய்தனர்.

சிறீ விக்ரம இராஜசிங்க மன்னரைப் போர்த்துக் கேயர் விரட்டிக் கொண்டு வந்தனர். ஓடி வந்த மன்னர் ஒரு மரத்தின் பொந்தினுள் ஒளிந்து கொண்டார். இதை ஒரு முஸ்லிம் பெண்மணி கண்டார். போர்த்துக்கேய வீரர்கள் ‘இந்த வழியால் ஓடி வந்தவன் எங்கே?’ எந்த வழியால் போனான்? என்று கேட்ட போது அந்த முஸ்லிம் பெண்மணி மன்னனைக் காட்டிக் கொடுக்கவும் விரும்பவில்லை, பொய் சொல்லவும் விரும்பவில்லை. இதனால் மௌனமாக இருந்தாள். இதனால் ஆத்திரமுற்ற அவர்கள் அந்தப் பெண்ணை வெட்டிக் கொலை செய்தனர். போர்த்துக்கேய வீரர்கள் சென்ற பின் வெளியே வந்த மன்னன் ‘மா ரெக லே’ – என்னைக் காத்த இரத்தமே! என்று கூறினான். அத்துடன் அந்தப் பெண்ணின் தியாகத்தை மதித்து மஹியங்கன பிரதேசத்தில் பங்கரகம கிராமத்தை முஸ்லிம்களுக்கு வழங்கினான்.

(இந்த வரலாறு இலங்கை அரச பாடசாலை பாடப் புத்தகத்தில் பதிவிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். ஆரம்பத்தில் 03 ஆம் ஆண்டு பாடப்புத்தகத்திலும், புதிய கல்வித் திட்ட பாடப் பரப்பில் தரம் 07 இஸ்லாம் பாடப் புத்தகத்திலும் இவ்வரலாற்றைக் காணலாம்.)

இவ்வாறு இலங்கை வரலாறு நெடுகிலும் முஸ்லிம்கள் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும் தேசத்தின் நலனுக்குமாக செய்த சேவைகள் மலிந்து காணப்படுகின்றன. எமது வரலாற்றை நாம் மீளாய்வு செய்து அதை மக்கள் மயப்படுத்துவதுடன் எமது நிகழ்காலத்தையும் போற்றத்தக்கதாக மாற்றியமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.