விபச்சாரத்தைத் தூண்டும் குர்ஆன்:
இஸ்லாம் குறித்து பலதரப்பாரும் பல்வேறுபட்ட விமர்சனங்களைச் செய்து வருகின்றனர். சிலர் ஏதேனும் ஒரு மத நிலைப்பாட்டில் இருந்து கொண்டே குறைமதியுடனும் குறை காணும் நோக்குடனும் குரோத மனப்பாங்குடனும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இத்தகைய விமர்சனங்களில் சிலவற்றுக்கு அவர்களின் மத நிலைப்பாட்டுடன் சம்பந்தப்படுத்தி சில விளக்கங்களை முன்வைத்தால் களத்தில் இருப்பவர்களுக்குப் பெரிதும் உதவியாக அமையலாம் எனக் கருதுகின்றேன்.
01. விபச்சாரத்தைத் தூண்டும் குர்ஆன்(?):
லூத் நபியின் சமூகத்தினர் தன்னினச் சேர்க்கையாளர்களாக இருந்தனர். லூத் நபியின் வீட்டிற்கு வானவர்கள் மனித ரூபத்தில் வந்த போது அவர்களுடன் தவறாக நடக்க அந்த ஊர் மக்கள் வந்தனர். அவர் அப்போது, ‘இதோ எனது பெண் மக்கள் உள்ளனர். அவர்கள் உங்களுக்கு மிகத் தூய்மையானவர்கள் எனக் கூறி வந்த மக்களை விட்டு விட்டு தனது மகள்களுடன் சேரக் சொல்கின்றார். இதன் மூலம் அவர் தனது மகள்களுடன் விபச்சாரம் செய்ய அனுமதித்துள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த வகையில் இந்த நிகழ்வு விபச்சாரத்தை ஊக்குவிக்கின்றது என சில மாற்று மத, குறிப்பாக கிறிஸ்தவ அறிஞர்கள் வாதிட்டு குர்ஆன் மீது களங்கம் கற்பிக்க முற்படுகின்றனர்.
இது தொடர்பில் நாம் பல விடயங்களைப் பார்க்க வேண்டியுள்ளது.
அ)
இஸ்லாம் விபச்சாரத்தை வன்மையாகக் கண்டித்துள்ளதுடன் அதற்கு கடுமையான தண்டனைகளையும் விதித்துள்ளது. அத்துடன் விபச்சாரத்தைத் தூண்டக் கூடிய ஆபாசம், அரைகுரை ஆடை, ஆண்-பெண் கலப்பு அனைத்தையும் இஸ்லாம் தடுத்துள்ளது. அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் இப்படி வாதிடுவது இவர்களின் குரோத மனதையும் விரோதப் போக்கையும் வெளிப் படுத்துகின்றது.
‘மேலும், விபச்சாரத்தை நீங்கள் நெருங்காதீர்கள். நிச்சயமாக அது மானக்கேடானதாகவும் தீய வழியாகவும் இருக்கிறது.’ (17:32)
‘மேலும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுளை அழைக்கமாட்டார்கள். அல்லாஹ் தடுத்துள்ள எந்தவோர் உயிரையும் நியாயமின்றிக் கொலை செய்யவும்மாட்டார்கள். மேலும், விபச்சாரம் புரிய மாட்டார்கள். யார் இவற்றைச் செய்கின்றானோ அவன் வேதனையைச் சந்திப்பான்.’ (25:68)
‘(திருமணம் முடிக்காத) விபச்சாரி, விபச்சாரன் ஆகிய இருவரில் ஒவ்வொருவருக்கும் நூறு கசையடி அடியுங்கள். நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொள்வோராக இருந்தால் அல்லாஹ்வின் மார்க்கத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு கருணை ஏற்பட வேண்டாம். அவ்விருவரின் தண்டனையை நம்பிக்கையாளர்களில் ஒருசாரார் பார்த்துக் கொண்டிருக்கட்டும்.’
‘ஒரு விபச்சாரன், விபச்சாரியை அல்லது இணைவைப்பவளையேயன்றி (வேறு எவரையும்) திருமணம் முடிக்க மாட்டான். ஒரு விபச்சாரி, அவளை ஒரு விபச்சாரனோ அல்லது இணைவைப்பாளனோ தவிர (வேறு எவரும்) திருமணம் முடிக்கமாட்டான். இது நம்பிக்கையாளர்களுக்குத் தடைசெய்யப்பட்டதாகும்.’
(24:2-3)
ஆ)
கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறியலாமா?
குர்ஆனையும் இஸ்லாத்தையும் விமர்சிக்க விரையும் இவர்கள் முதலில் தமது மத நூற்களைப் படிப்பது நல்லதாகும். இந்த சம்பவம் தொடர்பில் பைபிள் இப்படிப் பேசுகின்றது.
‘சகோதரரே, இந்த அக்கிரமம் செய்ய வேண்டாம்.’
‘இதோ, புருஷரை அறியாத இரண்டு குமாரத்திகள் எனக்கு உண்டு. அவர்களை உங்களிடத்திற்கு வெளியே கொண்டுவருகிறேன், அவர்களுக்கு உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்; இந்தப்புருஷர் என் கூரையின் நிழலிலே வந்தபடியால், இவர்களுக்கு மாத்திரம் ஒன்றும் செய்யவேண்டாம் என்றான்.’
(ஆதியாகமம் 19:7-8)
இங்கே லூத் நபி, ‘எனது இரண்டு பெண் மக்களுக்கும் என்ன வேண்டுமாலும் செய்யுங்கள்’ என்று கூறியுள்ளார். குர்ஆன் விபச்சாரத்தைத் தூண்டுகின்றது என்றால் பைபிளும் அதைத்தானே செய்துள்ளது! குர்ஆன் இந்த விடயத்தை கூறிய அமைப்பில் உள்ள ஆழமான வார்த்தைப் பிரயோகம் பற்றி பின்னர் பார்க்க இருக்கிறோம். ஆனால், பைபிள் பாவிக்கும் வார்த்தைப் பிரயோகம்தான் பச்சையாக விபச்சாரத்தைச் சொல்வது போல் உள்ளது. குர்ஆனை குறைமதியோடும் குரோத மனதோடும் குறை கண்டவர்கள் பைபிள் விடயத்தில் என்ன சொல்லப் போகின்றார்கள்?
இதோ இந்த நிகழ்வுக்குப் பிறகு லூத் நபியின் இரண்டு பெண் பிள்ளைகளும் தமக்கு சந்ததி உண்டாவதற்காக தந்தைக்கு மதுவைக் கொடுத்து ஒருவர் பின் ஒருவராக தந்தையுடன் உறவு கொண்டதாக பைபிள் கூறுகின்றதே இந்த அசிங்கத்தை எங்கே போய் இவர்கள் கூறப் போகின்றனர்!
‘பின்பு லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்து, சோவாரை விட்டுப்போய், அவனும் அவனோடேகூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம்பண்ணினார்கள்; அங்கே அவனும் அவனோடேகூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் ஒரு கெபியிலே குடியிருந்தார்கள்.’
‘அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து: நம்முடைய தகப்பன் முதிர்வயதானார், பூமியெங்கும் நடக்கிற முறைமையின்படியே நம்மோடே சேரப் பூமியிலே ஒரு புருஷனும் இல்லை.’
‘நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும் படிக்கு, அவருக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்து, அவரோடே சயனிப்போம் வா என்றாள்.’
‘அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.’
‘மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன்; இன்று ராத்திரியும் மதுவைக் குடிக்கக் கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும் படி நீ போய் அவரோடே சயனி என்றாள்.’
‘அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்து போய், அவனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.’
‘இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள்.’
(ஆதியாகமம் 19:30-36)
இ)
குர்ஆனின் நடை:
இந்த வசனத்தில் அந்த ஊரைச் சேர்ந்த பலர் கெட்ட எண்ணத்துடன் வந்ததாகக் கூறப்படுகின்றது. அவர்களைப் பார்த்து லூத் நபி இதோ என் பெண் மக்கள் என்று கூறுகின்றார். அவருக்கு இரண்டு பெண் மகள்கள்தான் இருந்தனர். வந்தது பலர். இவரிடம் சொந்தப் பிள்ளைகளாக இரண்டு பெண் மக்கள்தான் இருந்தனர். அவர்கள் அத்தனை பேருக்கும் தனது இரு மகள்களை மட்டும் லூத் நபி ஆசையைத் தீர்க்க அனுமதிக்க முடியுமா? முடியாது!
ஒரு நபி தனது சமூகத்திற்குத் தந்தையின் இஸ்தானத்தில் உள்ளவராவார். எனவே. அவர் அவரது சமூகத்தைச் சேர்ந்த பெண் பிள்ளைகள் குறித்தே பேசுகின்றார். ஆண்களிடம் இச்சையைத் தீர்க்கும் இந்தத் தவறான போக்கை விட்டு விடுங்கள். பெண்களை மணம் முடித்துக் கொள்ளுங்கள் என்றுதான் அவர் கூறுகின்றார்.
அடுத்து, ‘ஹூன்ன அத்ஹரு லகும்’ அவர்கள் உங்களுக்கு பரிசுத்தமானவர்கள் என்றும் கூறுகின்றார். விபச்சாரம் என்பது அசிங்கமானது, அது பரிசுத்தமாக முடியாது. இந்த வார்த்தையும் பைபிள் கூறுவதுபோல் விரும்பியதைச் செய்யுங்கள் என்ற அர்த்தத்தைத் தராது. இந்தப் பெண் பிள்ளைகளை மணம் முடித்து உங்களுக்கு அவர்களைச் சுத்தமாக்கிக் கொள்ளுங்கள் என்றுதான் அவர் கூறுகின்றார்.
இந்த வசனமும் வார்த்தையும் விபச்சாரம் குறித்துப் பேசவில்லை. தன்னினச் சேர்க்கையை விட்டு விடுங்கள், சட்டப்படி பெண்களை மணமுடித்து சுத்தமான முறையில் உங்கள் பாலியல் உணர்வுகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள் என்றே கூறுகின்றது.
எனவே, இந்த வார்த்தைப் பிரயோகம் விபச்சாரத்தைத் தூண்டுவதாக இல்லை. அதைக் கண்டிப்பதாகவே உள்ளது என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.
(செப்டம்பர் 2018)