திருமண வயதெல்லை┇கட்டுரை.

இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான சர்ச்சையுடன் முஸ்லிம் ஒருவரின் குறிப்பாக முஸ்லிம் பெண்ணின் திருமண வயதெல்லை தொடர்பான சர்ச்சையும் எழுந்துள்ளது. இது தொடர்பான இஸ்லாத்தின் நிலைப்பாடு மற்றும் இது தொடர்பான விமர்சனங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது பொருத்தம் என எண்ணுகின்றேன்.

முஸ்லிம் ஆண்-பெண் இருவரினதும் திருமண வயதெல்லை 18 ஆக இருக்க வேண்டும் என ஒரு சாரார் கருதுகின்றனர். ஏற்கனவே இருந்த சட்டத்தின் பிரகாரம் முஸ்லிம் பெண் 14 வயதைத் தாண்டினால் மணம் முடிக்கலாம் என்ற நிலை இருந்தது. தற்போது ஒரு சாரார் 18 என்றும் மற்றொரு சாரார் ஆணின் வயதைப் 18 ஆகவும் பெண்ணின் வயதைப் 16 ஆகவும் வரையறுக்கின்றனர்.

இன்று உலகின் பல நாடுகளிலும் திருமண வயதெல்லை 18 ஆக மாறி வருகின்ற இதே வேளை பல நாடுகளில் இதை விடக் குறைந்த வயதில் திருமணம் அனுமதிக்கப்பட்டே உள்ளது. பல நாடுகளில் பெண்ணின் திருமண வயது 12 ஆக உள்ளது.

இத்தாலி போன்ற நாடுகளில் 14 என்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் 15 ஆகவும் டென்மார்க் போன்ற நாடுகளில் 16 ஆகவும் மற்றும் பல நாடுகளில் 18 ஆகவும் உள்ளன. அமெரிக்காவில் திருமண வயது 18 என்றிருந்தாலும் முஸ்லிம்களுக்கும் ஹிந்துக் களுக்கும் இதில் சலுகை உள்ளது.

மிகக் குறைந்த வயதில் திருமணம் செய்வதை நாம் ஊக்குவிக்காவிட்டாலும் இதை வைத்து இஸ்லாத்தைப் பிற்போக்கானதாகக் காட்ட முற்படுவதையும் ஏதோ தாலிபான்கள், முஸ்லிம்கள் மட்டும்தான் குறைந்த வயதுத் திருமணத்தை அனுமதிப்பது போன்றும் காட்டுவது தவறானதாகும்.
மற்றும் சில மாற்று மத நண்பர்கள் நபி(ச) அவர்கள் ஆயிஷா(ர) அவர்களை ஆறு வயதில் மணந்து ஒன்பது வயதில் இல்லறத்தில் இணைந்ததைக் குறை கூறுகின்றனர். இவர்கள் தமது தாய், பாட்டியின் திருமணத்தைக் கேட்டால் இந்த வீணான விமர்சனத்தில் இறங்கியிருக்க மாட்டார்கள்.

அனைவராலும் மதிக்கப்படும் மகாத்மா காந்தி 1883 இல் தனது 13 ஆம் வயதில் 13 வயதான கஸ்தூரி பாயை மணந்தார். 1897 இல் மகா கவி பாரதியார் தனது 14 ஆம் வயதில் 7 வயதான செல்லம்மாவை மணந்தார். 1898 இல் தனது 19 ஆம் வயதில் 13 வயது நாகம்மாவை மணந்தார் ஈ.வே.ரா. பெரியார். 1906 இல் டாக்டர் அம்பேத்கார் தனது 15 ஆம் வயதில் 09 வயது இராமா பாயை மணந்தார்.

இவ்வாறு இள வயதுத் திருமணம் செய்தவர்களை விமர்சிக்காதவர்கள் இதை விட 1000 வருடங்களுக்கு முன்னர் 09 வயது ஆயிஷா(ர) அவர்களுடன் இல்லறத்தில் இணைந்ததை விமர்சிப்பது வியப்பாகவே உள்ளது!

இஸ்லாத்தில் திருமண வயது:
இஸ்லாம் திருமணத்திற்கான வயதெல்லை யைக் கூறவில்லை. பருவம் அடைந்திருக்க வேண்டும், இல்லறத்தில் ஈடுபடும் உடல் நிலை இருக்க வேண்டும். ஒரு பெண் பிள்ளையை அவளது தந்தை காரண காரியங்களுடன் பருவ வயதை அடைய முன் திருமணம் செய்விக்கலாம். ஆனால், பெண் பெரியவளான பின்னர்தான் இல்லறத்தில் இணைய வேண்டும்.

தலாக் விடப்பட்ட பெண்களின் இத்தாக் காலம் பற்றி குர்ஆன் குறிப்பிடும் போது, மாதத்தீட்டு ஏற்படாத பெண்கள் 03 மாதம் இத்தா இருக்க வேண்டும் என்று கூறுகின்றது. (65:4)

இதன் மூலம் பருவ வயதை அடைய முன்னரும் திருமணம் செய்யலாம் என்பதை அறியலாம். ஆனால், அவர்கள் இல்லறத்தில் ஈடுபட உடல் ரீதியாக பெண் பெரியவளாக வேண்டும்.

‘திருமணப் பருவத்தை அடையும் வரை அநாதைகளைச் சோதித்துப் பாருங்கள். அவர்களிடம் (நிர்வகிக்கும்) திறமையை நீங்கள் உணர்ந்தால் அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். அவர்கள் பெரியவர்களாகிவிடுவார்கள்; என்பதற்காக வீண்விரயமாகவும், விரைவாகவும் அதனை உண்டு விடாதீர்கள்.’ (4:6)

இந்த வசனத்தைப் பார்க்கும் போது பருவ வயதை அடைந்தால்தான் ஒரு பெண் திருமண வயதை அடைவாள் என்பதை விளங்கலாம். எனவே, பருவ வயதை அடைந்தால் சட்ட ரீதியாக அவள் திருமணத் திற்குத் தகுதியானவளாகின்றாள்.

வயது நிர்ணயம்:
முஸ்லிம் தனியார் சட்டத்தில் பெண்ணின் திருமண வயதை நிர்ணயம் செய்வதில் சர்ச்சை இல்லை. வயது நிர்ணயம் செய்யக் கூடாது என்றும் யாரும் கூறவில்லை. 18 வயது என்று நிர்ணயம் செய்வதில்தான் கருத்து வேறுபாடு உள்ளது. எனவே, வயது நிர்ணயம் செய்வதற்கான ஆதாரங்களை அள்ளிப் போடுவதில் அர்த்தம் இல்லை.

பக்குவம் வர வேண்டும்:
இள வயது திருமணத்தால் பல பாதிப்புக்கள் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. பெண் உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படலாம். தனது சக்திக்கு மீறிய பொறுப்பை சுமக்கும் நிலைக்கும் அவள் ஆளாகலாம். ஆனால், பக்குவம் வர வேண்டும் எனவே, 18க்கு முன்னர் திருமணம் செய்யக் கூடாது என்றால் 17-11-29 வயதில் வராத பக்குவம் 18 ஆனதும் வருமா? பக்குவம் வர வேண்டும் என்றால் இன்று சில பேருக்கு நாற்பதிலும் வராது. சில ஆண்களுக்கு 60 இல் கூட பக்குவம் வருவதில்லை. எனவே, பக்குவத்தைக் காரணம் காட்ட முடியாது.

நிர்ப்பந்த நிலை:
இள வயதுத் திருமணங்களை நாம் ஊக்குவிக்கவில்லை. ஆனால், 18 க்குக் கீழ் திருமணம் செய்ய முடியாது எனும் போது பல பிரச்சினைகள் உள்ளன.

முஸ்லிம் குடும்பங்களில் தாயை இழந்து பாட்டியின் பராமரிப்பில் வாழும் பெண் பிள்ளைகள் பலர் உள்ளனர். பருவம் அடைந்ததும் திருமணம் செய்வித்து தனது கடமையை நிறைவு செய்ய பாட்டி விரும்புவாள். போதிய பாதுகாப்பில்லாத இது போன்ற பெண் பிள்ளைகள்தான் அடுத்தவர்களின் சீண்டுதல்களுக்கு ஆளாகுகின்றனர். இத்தகைய நிலையில் உள்ள பெண் பிள்ளைகள் அன்புத் தேடலில் காதல் வயப்படுவதும் அதிகமாகும். இத்தகைய நிலையில் உள்ள பிள்ளையை 18 வரை வைத்துப் பாதுகாப்பதே பெரும் பிரச்சினையாகும்.

திருமணத்திற்கு வயதெல்லை போடும் உலகம் காதலுக்கும், சல்லாபத்திற்கும் வயதெல்லையைப் போடவில்லை. பாடசாலை மாணவ-மாணவிகள் சீருடையுடனேயே சில்மிசங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கு ஒரு சட்டம் இல்லை. 18 வயது திருமண வயது என்றால் 18க்கு முன்னர் காதலிப்பதையும் சட்டப்படி குற்றமாக்க வேண்டும். உலக நாடுகள் இதைச் செய்யுமா?

இலங்கையில் நடந்த கற்பழிப்புக்களில் 80% ஆனது விருப்பத்துடன் நடந்ததாகும். அதாவது, 16 வயதுக்குள் உள்ள பெண்கள் விரும்பி இணங்கியத னாலேயே விருப்பத்துடன் நடந்த கற்பழிப்பு என்று கூறப்படுகின்றது. தேவை என்று உள்ளதனாலே தானே இணங்குகின்றனர். அவர்களுக்கு சட்டப்படி திருமணம் செய்ய அனுமதித்தால் குற்றமாகிவிடுமா?

முஸ்லிம் பெண்களுக்கான உரிமையைப் பெற்றுத்தரப் போகின்றோம் என களமிறங்கியி இருப்பவர்களைக் காணும் போது பயம் எடுக்கின்றது. இஸ்லாத்துடன் தொடர்பற்ற, மாற்று மத்தவர்கள் எல்லாம் முஸ்லிம் பெண்களின் உரிமை பற்றிப் பேசுகின்றனர்.

முஸ்லிம் பெண்களின் ஆடைச் சுதந்திரத்திற்கு முட்டுக் கட்டைகள் வந்ததே! அப்போது இவர்கள் எங்கே இருந்தனர்? அப்போது இவர்களின் பெண்ணுரிமை உணர்வுகளெல்லாம் எங்கே சென்றிருந்தது? எனவே, இந்தப் பெண்ணுரிமைக் கோஷத்திற்குப் பின்னால் சில வேஷங்களும் இஸ்லாத்திற்கு எதிரான சக்திகளின் சதிகளும் இருக்குமோ என்ற ஐயம் எழுகின்றது.

இள வயதுத் திருமணங்கள் ஊக்குவிக்கப்படத் தக்கதல்ல. என்றாலும், முற்றாகத் தடுப்பதென்பது சமூகத்திற்குப் பாதிப்பை உண்டு பண்ணும். எனவே, தேவையுடையவர்களைக் குறைந்த வயதிலும் திருமணம் செய்வதற்கான வாயப்புக்களை வழங்கும் விதத்தில்தான் முஸ்லிம் தனியார் சட்டம் அமைவது ஆரோக்கியமானதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.