இஸ்லாம் அழைக்கிறது – 03

குற்றங்களைக் குறைக்கும் இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள்

மனித இனம் வெட்கித் தலை குனியத் தக்க குற்றச் செயல்கள் இன்று அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. தந்தையால் கற்பழிக்கப்படும் மகள்கள், சகோதரனால் சீரழிக்கப்படும் சிறுமிகள், சிறுவர் சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் துஷ;பிரயோகங்கள், பகிரங்கமாக பலர் பார்த்துக் கொண்டிருக்க நடக்கும் பலாத்காரங்கள், கொடூரமான கொலைகள், பட்டப்பகலில் படுகொலை, கொள்ளை, திருட்டு… என குற்றச் செயல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. உலக நாடுகள் அனைத்திலும் குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படுகின்றது. குற்றவாளிகளும் மனிதர்களே! அவர்கள் திருந்தி வாழ வாய்ப்பளிக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர்.

கற்பழிப்புக் குற்றத்திற்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், கொலை செய்தவனுக்கும் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் இஸ்லாம் கூறுகின்றது. குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். இவ்வாறு கடுமையான தண்டனை அளிக்கப்பட்டால்தான் குற்றங்களைக் குறைக்கலாம் என இஸ்லாம் கூறுகின்றது.

இஸ்லாத்தின் இந்த நிலைப்பாடு தொடர்பில் உலக அறிஞர்கள் முரண்பட்ட இரட்டை நிலைப்பாட்டை எடுக்கின்றனர்.

கொடூரமான குற்றம் நடக்கும் போது மட்டும் கொதித்துப் போய் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று குமுறுகின்றனர்.

சாதாரண நிலைக்கு வந்த பின்னர் இஸ்லாமிய சட்டம் கொடூரமானது, கல் மனம் கொண்டது என்று கொக்கரிக்கின்றனர். இது அவர்களின் முரண்பட்ட மனநிலைக்கு நிதர்சனமான சான்றாகத் திகழ்கின்றது.

இஸ்லாமிய சட்டங்களை விமர்சிக்கும் போது கொலைக் குற்றவாளியைக் கொன்றால் கொல்லப்பட்டவனின் உயிர் மீண்டும் வரவா போகின்றது என வாதிடுகின்றனர்.

கொலைக் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை கொடுத்தால் மட்டும் கொல்லப்பட்டவனின் உயிர் மீண்டும் வந்துவிடுமா என்ன? குற்றங்களுக்கு தண்டனை வழங்குவதின் உண்மையான நோக்கம் என்ன என்பது பற்றி கொஞ்சமாவது சிந்தித்தால் இப்படிக் கேட்கமாட்டார்கள். குற்றங்களுக்குத் தண்டனை வழங்குவதன் மூலம் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும். அவன் மீண்டும் இது போன்ற தவறைச் செய்யும் துணிச்சலைப் பெறக் கூடாது. குற்றவாளிக்குக் கொடுக்கப்படும் தண்டனையைப் பார்த்து மக்கள் பயப்பட்டு குற்றம் செய்யக் கூடாது என்ற உணர்வைப் பெற வேண்டும். இஸ்லாமிய குற்றவியல் சட்டம் இதைத்தான் செய்கின்றன.

கற்பழிப்பு, கொலை, கொள்ளை, திருட்டு, போன்ற குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகளை இஸ்லாம் வழங்குகின்றது. இதன் மூலம் குற்றங்கள் குறைந்த ஒரு சமூக சூழல் உருவாகின்றது. குற்றவாளிகள் சிறை செல்வதால் அங்கிருந்து யாரும் திருந்தி வருவதில்லை. பல குற்றவாளிகள் ஒன்றாகக் கூடிப் பழகி மீண்டும் மீண்டும் புதுப் புது முறைகளில் குற்றம் செய்யும் உணர்வினைப் பெறுகின்றனர். சிறை என்பது பெரிய தண்டனையாக அமைவதில்லை. திரும்பத் திரும்ப சிறை செல்வது குற்றவாளிகளின் கூடுதல் தகைமையாகவே மாறியுள்ளது.

குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படாததால் சாதாரண மக்கள் குற்றம் செய்யும் சூழ்நிலைக்கும், சட்டத்தைக் கையில் எடுக்கும் மனநிலைக்கும் உள்ளாகின்றனர். கற்பழித்தவன் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டால் சிறை சென்று மீண்டு வருவான். எனவே, நாம் அவனை அடித்துக் கொன்றுவிடுவோம் என்ற மனநிலைக்கு மக்கள் வருகின்றனர். மக்களிடமிருந்து குற்றவாளிகளைப் பாதுகாக்க காவல் துறை தடியடி நடாத்த வேண்டிய நிலை ஏற்படுகின்றது. சட்டத்தின் மூலம் அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும் என்றிருந்தால் மக்களே குற்றவாளிகளைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவார்கள். சட்டம் சரியில்லை என்பதால்தான் மக்கள் சட்டத்தைக் கையில் எடுக்க முற்படுகின்றனர்.

தனது தந்தையைக் கொன்றவன் கைது செய்யப்பட்டால் அவன் சில காலம் சிறையில் தண்டச் சோறு சாப்பிட்டுவிட்டு வந்துவிடுவான். எனவே, பழிக்குப் பழி தீர்க்க நானே அவனைக் கொல்ல வேண்டும் என்ற உணர்வுக்குக் கொல்லப்பட்டவனின் மகன் வந்துவிடுகின்றான். இவ்வாறு இன்றைய சட்டங்கள் குற்றங்களைக் குறைப்பதை விட்டுவிட்டு குற்றவாளிகளை அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

இஸ்லாம் பாதிக்கப்பட்டவனின் மனநிலையில் இருந்து பிரச்சினையை அணுகுகின்றது. எனது தந்தையை ஒருவன் கொன்றுவிட்டால் அவனைக் கொன்றுவிட வேண்டும் என நான் எதிர்பார்ப்பேன்.

கற்பழிக்கப்பட்ட பெண்ணிடம் உன்னைக் கற்பழித்தவனை என்ன செய்ய வேண்டும் என்று கேட்டால் 14 வருடங்கள் சிறையில் போட்டால் போதும் என்று சொல்லப் போவதில்லை. மாறாக, நடு ரோட்டில் வைத்து சுட வேண்டும் என்றுதான் சொல்வாள்.
பாதிக்கப்பட்டவர்களின் நிலையிலிருந்து தண்டனை வழங்கப்பட்டால் அது பாதிக்கப்பட்டவர் களுக்கு மன நிம்மதியைக் கொடுக்கும். பழி தீர்க்கும் நிலைக்கு அவர்களை அது இட்டுச் செல்லாது.

இதே வேளை கொலை செய்தவனை மன்னிப்பதா அல்லது தண்டிப்பதா என்ற தீர்மானத்தை எடுக்கும் உரிமையை இஸ்லாம் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்குக் கொடுக்கின்றது. அவர்கள் நினைத்தால் மன்னிக்கலாம் என்றும் இஸ்லாம் கூறுகின்றது. நாட்டு ஜனாதிபதி கூட இதில் தலையிட முடியாது என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.

இஸ்லாமிய சட்டங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் பாதிக்கப்பட்டவன் தனக்கு நியாயமான தீர்வு கிடைத்ததாக எண்ணி நிம்மதியடைவான். பழி தீர்க்கும் எண்ணத்தில் அவன் குற்றவாளியாகும் நிலை இருக்காது.

குற்றம் செய்தவனுக்கு உரிய தண்டனை கொடுக்கப்படுவதன் மூலம் அவன் மீண்டும் மீண்டும் தவறு செய்யும் நிலை உருவாகாது.

தண்டனை கடுமையானது என்பதால் குற்றம் செய்யும் துணிவை சமூகத்தில் எவரும் பெறமாட்டார்கள். குற்றத்திற்கு ஒருவருக் கொருவர் உதவவும் மாட்டார்கள். குற்றம் செய்ய ஒருவன் முற்பட்டால் அவனது உறவுகளே அதைத் தடுக்கும். இதனால் குற்றங்கள் குறைந்து அனைவரும் அச்சமற்ற மனநிலையில் நிம்மதியாக வாழ முடியும்.

இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் மூலம் குற்றங்களைக் குறைக்கலாம். அமைதியான, நிம்மதியான ஒரு சமூக சூழலை உருவாக்க முடியும். குற்றங்கள் குறைந்த அமைதியான வாழ்வின் பக்கம் இஸ்லாம் உங்களை அழைக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.