“உஸைர் நபியும்… உயிர் பெற்ற கழுதையும்…” [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-10]

“ச்சீ-கழுதை” யாரையாவது பிடிக்காவிட்டால் இப்படித்தான் திட்டுவோம். கழுதை அதன் முட்டாள்தனத்தாலும் அதன் அசிங்கமான சப்தத்தினாலும் எல்லோராலும் வெறுக்கப்படுகின்றது. ஆனால், நான் அற்புதமான ஒரு கழுதை பற்றி குர்ஆன் கூறும் கதையை உங்களுக்குக் கூறப் போகின்றேன்.

உஸைர் என்றொரு நபி இருந்தார். அவர் ஒரு ஊருக்கு கழுதையில் பயணம் சென்றார். அந்த ஊர் சிதைந்து சின்னாபின்னமாகி இருந்தது. முற்று முழுதாக அந்த ஊர் அழிந்து போயிருந்தது. அந்த ஊரின் அழிவைப் பார்த்த அவர் ஆச்சரியப்பட்டார். அழிந்து போன இந்த ஊரை அல்லாஹ் எப்படித்தான் உயிர்ப்பிப்பானோ என்று எண்ணினார். அல்லாஹ் அவருக்கு தனது ஆற்றலை நேரடியாகக் காட்ட விரும்பினான்.

அல்லாஹ் அவரை நூறு வருடங்கள் மரணிக்கச் செய்தான். பின்னர் அல்லாஹ் அவரை உயிர்ப்பித்தான். அவர் நூறு வருடங்கள் மரணித்த நிலையில் இருந்தது அவருக்குத் தெரியாது. தூங்கி விழிப்பது போல் அவர் உணர்ந்தார்.

அவர் ஒரு மரத்தடியில் உறங்கும் நிலையில்தான் மரணித்தார். அவரது கழுதை மரத்தில் கட்டப்பட்டிருந்தது. அவரது உணவும் பானமும் கூட அந்த மரத்தில் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது.

நூறு வருடங்கள் மரணித்து உயிர் பெற்ற அவரிடம், “நீ எவ்வளவு காலம் இந்த இடத்தில் தங்கி இருந்தாய்?” என்று கேட்டான். அவர் நான் ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சில பகுதிகள் கழித்திருப்பேன் என்றார். அதற்கு அல்லாஹ்,

“இல்லை, நீ நூறு வருடங்கள் தங்கி இருந்தாய்.” இதோ உன் உணவையும் பானத்தையும் பார்! அது இன்னும் கெட்டுப் போகவில்லை என்றான். அவர் கொண்டு வந்த உணவு நூறு வருடங்கள் ஆகியும் கெட்டுப் போகாமல் இருந்தது. இது அதிசயம்தானே!

இதோ உன் கழுதையைப் பார் என்றான். அவரது கழுதை இறந்து கிடந்தது. அதன் எலும்புகள்தான் எஞ்சியிருந்தது. இதோ பார் அந்த எலும்பில் எப்படி நாம் சதையை சேர்க்கின்றோம் என்றான். இறந்து அழிந்து எலும்புகள் மட்டுமே எஞ்சியிருந்த கழுதையின் எலும்புகள் இணைந்தன. அதற்கு சதையும் தோலும் உருவானது. அது உயிர் பெற்றது. இறந்த கழுதைக்கு அல்லாஹ் உயிர் கொடுப்பதைக் கண்ணால் கண்ட அவர் அல்லாஹ் அனைத்துக்கும் ஆற்றல் உள்ளவன் என்று எனக்குத் தெரியும் என்று தனது ஈமானின் உறுதியை வெளிப்படுத்தினார்கள்.

இந்த சம்பவம் திருக்குர்ஆனில் சூறா அல் பகரா 02 ஆம் அத்தியாயம் 259 ஆம் வசனத்தில் இடம் பெற்றுள்ளது.

أَوْ كَالَّذِي مَرَّ عَلَىٰ قَرْيَةٍ وَهِيَ خَاوِيَةٌ عَلَىٰ عُرُوشِهَا قَالَ أَنَّىٰ يُحْيِي هَـٰذِهِ اللَّـهُ بَعْدَ مَوْتِهَا ۖ فَأَمَاتَهُ اللَّـهُ مِائَةَ عَامٍ ثُمَّ بَعَثَهُ ۖ قَالَ كَمْ لَبِثْتَ ۖ قَالَ لَبِثْتُ يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ ۖ قَالَ بَل لَّبِثْتَ مِائَةَ عَامٍ فَانظُرْ إِلَىٰ طَعَامِكَ وَشَرَابِكَ لَمْ يَتَسَنَّهْ ۖ وَانظُرْ إِلَىٰ حِمَارِكَ وَلِنَجْعَلَكَ آيَةً لِّلنَّاسِ ۖ وَانظُرْ إِلَى الْعِظَامِ كَيْفَ نُنشِزُهَا ثُمَّ نَكْسُوهَا لَحْمًا ۚ فَلَمَّا تَبَيَّنَ لَهُ قَالَ أَعْلَمُ أَنَّ اللَّـهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

அல்லது, ஒரு கிராமத்தின் பக்கமாகச் சென்றவரைப் போல் – (அந்த கிராமத்திலுள்ள வீடுகளின்) உச்சிகளெல்லாம் (இடிந்து, விழுந்து) பாழடைந்து கிடந்தன. (இதைப் பார்த்த அவர்) “இவ்வூர் (இவ்வாறு அழிந்து) மரித்தபின் இதனை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?” என்று (வியந்து) கூறினார். ஆகவே, அல்லாஹ் அவரை நூறாண்டுகள் வரை இறந்து போகும்படிச் செய்தான்; பின்னர் அவரை உயிர்பெற்றெழுப்படிச் செய்து, “எவ்வளவு காலம் (இந்நிலையில்) இருந்தீர்?” என்று அவரைக் கேட்டான்; அதற்கவர், “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதியில் (இவ்வாறு) இருந்தேன்” என்று கூறினார்; “இல்லை நீர் (இந்நிலையில்) நூறாண்டுகள் இருந்தீர்! இதோ பாரும் உம்முடைய உணவையும், உம்முடைய பானத்தையும்; (கெட்டுப் போகாமையினால்) அவை எந்த விதத்திலும் மாறுதலடையவில்லை, ஆனால் உம்முடைய கழுதையைப் பாரும்; உம்மை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாக்குவதற்காக (இவ்வாறு மரிக்கச் செய்து உயிர் பெறச் செய்கிறோம்) இன்னும் (அக்கழுதையின்) எலும்புகளைப் பாரும்; அவற்றை நாம் எப்படிச் சேர்க்கிறோம்; பின்னர் அவற்றின்மேல் சதையைப் போர்த்துகிறோம்” எனக்கூறி (அதனை உயிர் பெறச் செய்தான்- இதுவெல்லாம்) அவருக்குத் தெளிவான போது, அவர், “நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களின் மீதும் வல்லமையுடையவன் என்பதை நான் அறிந்து கொண்டேன்” என்று கூறினார். (அல் பகரா: 259)

நாமும் மரணித்த பின் அல்லாஹ் எங்களை உயிர் கொடுத்து எழுப்புவான்.

அதன் பின் எமது நல்லறங்களுக்குப் பரிசும் தவறுகளுக்குத் தண்டனையும் வழங்குவான். இதை மனதில் கொண்டு நாம் இந்த உலகில் வாழ வேண்டும். நம்மை படைத்த அந்த அல்லாஹ்வுக்கு நாம் மரணித்த பின்னர் மீண்டும் நம்மை உயிர் கொடுத்து எழுப்புவது இலகுவானதுதானே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.