தேவை! மூன்றாவது ஓர் அரசியல் தளம்┇கட்டுரை.

ஆசிரியர் பக்கம் – ஜூன் வெளியீடு – உண்மை உதயம் மாதஇதழ்,

தேவை! மூன்றாவது ஓர் அரசியல் தளம்

புனித ரமழானை நாம் நெருங்கிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் பூதம் வெளிப்பட்டாற் போல் மீண்டும் ஞானசார தேரர் இனவாத வெறியாட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

ஹோமாகம நீதிமன்றத்திற்குள் நீதிமன்றத்தை அவமதிக்கும் விதத்தில் நடந்து கொண்டமைக்காக ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இது குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 24 ஆம் திகதி விசாரணைக்கான அமர்வுக்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது. இவ்விசாரணையில் அவர் நீதிமன்றத்தை அவமதித்தது உறுதி செய்யப்பட்டால் அவர் கைது செய்யப்படலாம்.

தான் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக அவர் கையில் எடுத்த ஆயுதமே இந்த சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான அண்மைக் கால சட்ட விரோத நடவடிக்கையாகும்.

ரவுடித்தனம் செய்து அரசை அச்சுறுத்துவதற்காக அல்லது தான் கைது செய்யப்பட்டால் தனது தவறான நடத்தைக்காக கைது செய்யப்பட்டதாகக் காட்டிக் கொள்ளாமல் சிங்கள மக்களின் உரிமைக்காகப் போராடி கைது செய்யப்பட்டது போல் ‘சீன்’ போட இந்த அத்துமீறல்கள் துணையாக அமையலாம் அல்லது சிறுபான்மை சமூகங்களால்தான் கைது நடந்தது போன்று காட்டி சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வன்முறையைக் கட்டவிழ்த்துவிடலாம் என அவர் கணக்குப் போட்டிருக்கலாம்.

கடந்த ஆட்சியில் இவர் போட்ட ஆட்டம்தான் மகிந்த அரசு அதிகாரத்தை இழக்கக் காரணமாக அமைந்தது என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். அப்படி இருந்தும் இப்போது இவரது ஆட்டத்திற்கு ஏன் அரசு தடை விதிக்காமல் இருக்கின்றது? பகிரங்கமாக இனவாதம் பேசுகின்றார், மத நிந்தனை செய்கிறார், சட்டத்தைக் கையில் எடுக்கின்றார், சட்டத்தைக் கையில் எடுக்குமாறு தூண்டி விடுகின்றார். ஆனால், இவர் விடயத்தில் சட்டம் தன் கண்களை இறுக மூடி, கைகளைக் கட்டிக் கொண்டு மௌனம் காக்கின்றதே ஏன்? ஆம், ஏதோ ஒரு வகையில் அரசியல் வியாபாரிகளுக்கு இவரின் இருப்பு தேவையாக உள்ளது என்பதுதான் காரணம்.

தேர்தல் பிரச்சாரத்திலும் தனிப்பட்ட சந்திப்புக்களிலும் இவர்களை நாய்க் கூண்டில் அடைப்போம் என்று வீரம் பேசியவர்கள் வாலை சுருட்டிக் கொண்டிருப்பது ஏன்?

மகிந்த காலத்தில் தேரரின் அடாவடித்தனங்களைக் கண்டித்த, தற்போது அதிகாரத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் எல்லாம் இப்போது ஏன் மௌனம் காக்கின்றனர்? அதிகாரம் கையில் இல்லாத போது இருந்த வீரம், அதிகாரம் கையில் வந்த பின்னர் மறைந்து போனது எப்படி என்று சிந்தித்தால் அதிகார மட்டத்திலும் ஞானசார தேரரின் இந்த ஆட்டத்திற்கு ஏதோ ‘கிறீன் சிக்னல்’ கிடைத்திருக்க வேண்டும். அந்த ‘கிறீன் சிக்னலுக்கு’ சொந்தக்காரர் யார்? இது குறித்து நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்புக்கு உரிய உத்தரவாதம் இல்லாத நிலை தொடர்கின்றது. சிறுபான்மை சமூக அமைச்சருக்கே உரிய மரியாதை இல்லையெனும் போது மக்களின் நிலை எப்படி இருக்கும்?

கடந்த 17 ஆம் திகதி ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனின் அலுவலகம் சென்று அடாவடித்தனமாக நடந்து கொண்டுள்ளனர். அரசகருமமொழிகள் அமைச்சகத்திற்குள் சென்று சிங்கள மொழிவாதத்தைக் கக்கியதுடன் சகவாழ்வுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வந்துள்ளனர். இந்த வரம்பு மீறல்கள் கட்டுப்படுத்தப் படாத போது சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான அடாவடித்தனங்கள் எப்படி அடக்கப்படும் என நம்ப முடியும்?

மகிந்த அரசின் சிறுபான்மைக்கு எதிரான நடவடிக்கைகள் காரணமாகவே சிறுபான்மை சமூகங்கள் பெரும்பான்மை மக்களுடன் இணைந்து ஆட்சி மாற்றத்தை எற்படுத்தினர். இல்லையென்றால் மகிந்த அரசு அதிகாரத்தை இழக்கும் என்று எவரும் எண்ணிக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அதே நிலைதான் தொடர்கின்றது என்றால் மகிந்த ஆட்சிக்கும் இந்த நல்லாட்சிக்கும் இடையில் என்ன வேறுபாடு உள்ளது என்ற மக்கள் கேள்விக்கு மனசாட்சியுள்ளவர்களால் பதில் சொல்ல முடியாதுள்ளது.

பயங்கரவாதப் பிரச்சினையின் போது முஸ்லிம்கள் தமது இருப்பிடங்களை விட்டும் வெளியேறி அகதிகளாக வாழ்ந்தனர். யுத்தம் முடிந்த பின்னர் அந்தப் பகுதிகளுக்கு மீள் குடியேறியுள்ளனர். ஏற்கனவே முஸ்லிம்கள் வாழ்ந்த பகுதிகள் இராணுவத் தளங்களாக மாறியுள்ளன.

சில இடங்கள் வர்த்தமானி அறிவித்தல் மூலமாக தொல்பொருள் திணைக்களத்திற்குரிய வனப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் திருகோணமலை சேரு வர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தோப்பூர் நிலாக் கேணி பிரதே முஸ்லிம்கள் குடியிருக்கும் பிரதேசம் தொல்பொருள் திணைக்களத்திற்குரியது எனக் கூறி புத்த தேரர்கள் தலைமையில் வந்த சிங்கள இனவாதிகளால் தாக்கப்பட்டு அங்குள்ள முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர். முஸ்லிம்கள் தாக்கப்பட்டு அவர்களது வேலிகள் அகற்றப்பட்டு வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறே பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களும் வேறு சில இடங்களில் நடந்துள்ளது.

இது போன்ற பதட்டங்கள் இடம் பெறும் போது சுமூக நிலையைக் கொண்டு வர முயற்சிப்பவர்கள் இரு தரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தி சுமுகமான தீர்வு எட்டப்பட்டதாக கண்ணாம்பூச்சி விளையாடுகின்றனர்.

நமது அரசியல் தலைவர்களும் தனது முயற்சியில்தான் சுமுகமான நிலை ஏற்பட்டதாக தன் அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கான சுயநலத்திற்காக சீன் போட்டு நிலைமை சீராகிவிட்டது என அறிக்கைகள் விட்டு அகமகிழ்கின்றனர்.

அந்த நிலம் தொல்பொருள் நிலையத்திற்குரியதாக இருந்தால் அந்தப் பகுதியில் 15 வருடங்களாக மக்கள் மீள்குடியேறி வாழ்கின்றனர். வாக்காளர் அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளது. இது எப்படி நடந்தது?

சரி, அது தொல்பொருள் திணைக்களத்திற்குரியதாகவே இருக்கட்டும். அந்த இடத்தில் வாழ்பவர்களை வேறு பிரதேசத்தில் வாழும் சிங்கள இளைஞர்களை அழைத்து வந்து அடித்து அடாவடித்தனம் செய்ய இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது? சட்டத்தைக் கையில் எடுத்தவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கையில்லையா?

ஞானசார தேரர் சிங்கள இளைஞர்களிடம் நீங்கள் போய் இது எங்களது இடம் என பிடித்துக் கொள்ளுங்கள் எனப் பகிரங்கமாக இளைஞர்களைத் தூண்டி விடுகின்றார். இந்த அடிப்படையில் செயற்பட்டவர்களுக்குத் தண்டனை இல்லையா?

பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும். அந்த நஷ்டஈடு பாதிப்பை உண்டு பண்ணியுள்ளவர்களுக்கே கவலையளிப்பதாக அமைய வேண்டும் என அரசியல் தலைமைகள் கோரிக்கை வைக்க வேண்டும்.

ஞானசார தேரர் தனது உரையொன்றில் நாம் எந்த ஆட்சி வந்தாலும் வருவோம் என்றார். அவர் சொன்னதைச் செய்கின்றார். ஆனால், இனவாதத்தை ஒழிப்பதாக ஆட்சிபீடம் ஏறியவர்கள் அதைச் செய்யத் தவறிவிட்டனர். எல்லா அரசியல் கட்சிகளுக்கும் அரசியல் செய்ய ஞானசார தேரர் தேவைப்படுகின்றார். எனவே, அவர் அடக்கப்பட மாட்டார் என்றே தெரிகின்றது.

இருக்கும் ஆட்சி மீது சிறுபான்மையினரின் வெறுப்பு அதிகரிக்க ஞர்னசார தேரரின் அடாவடித்தனம் தேவை என மகிந்த அணி கருதுகின்றது. இதில் ஒரு நியாயம் உண்டு என்று கூறலாம்.

இவரை வைத்து ஜனாதிபதியும் பிரதமரும் ஏதோ அரசியல் சதுரங்க விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே இவருக்கு எதிராக குரல் கொடுத்த அரசியல் தலைமைகளின் தற்போதைய மௌனம் இதை உணர்த்துகின்றது.

சில வேளை தமது அரசியல் அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்குக் கூட இவர் தேவைப்படலாம்.

பொதுவாக எதிர்க்கட்சித் தலைமை என்பது ஆளுங்கட்சியின் நல்ல திட்டங்களைக் கூட எதிர்ப்பதாக அமைந்திருக்கும். ஆனால், எமது நாட்டில் ஒரு எதிர்க்கட்சித் தலைமை இருப்பதே தெரியாத அளவுக்கு சம்பந்தன் ஐயா உள்ளார். எதிர்க்கட்சித் தலைவராகவே அவர் நீடிக்கின்றார். சிறுபான்மை சமூகத்தின் நலன் குறித்து அவர் கவனம் செலுத்துவதாகவே தெரியவில்லை. அரசியலில் எவரும் தனது தலைக்கு ஆபத்து என்றால்தான் களத்தில் இறங்குவர். எனவே, ஞானசாரரின் நடவடிக்கை ஆளும் தரப்பின் தலைக்கு ஆபத்து என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.

ஒன்றில் முஸ்லிம் தலைமைகள் சிறுபான்மை அமைப்புக்கள் மகிந்த அணியுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி அவருடன் இணையும் நிலை வந்தால் ஜனாதிபதி, பிரதமருக்கு கொஞ்சம் உறைக்க ஆரம்பிக்கும் அல்லது மூன்றாவது ஒரு அரசியல் தளத்தை பலமாக உருவாக்க வேண்டும்.

காலா காலமாக பச்சை நீலக் கட்சிகளே நாட்டை ஆண்டு வருகின்றன. இந்த இரு கட்சி நிலையை மாற்றி மூன்றாவது நிறத்தின் பக்கம் சாய்ந்தால் என்ன?

தமிழ் அரசியல் கட்சிகள் முஸ்லிம் கட்சிகள் மற்றும் நடுநிலையான சிங்கள அமைப்புக்கள் ஒன்றிணைந்து JVP போன்ற கட்சிகளுடன் இணைந்து மூன்றாவது அணியைப் பலப்படுத்தினால் எம்மை விட்டால் வேறு நிலை இல்லை என்ற மனநிலையை இந்த இரு கட்சிகளிடமிருந்தும் களட்டலாம்.

தம்புள்ளைப் பள்ளி விவகாரம் மற்றும் சிறுபான்மை விவகாரங்களில் JVP நீதியின் பக்கம் நின்றுள்ளது. முஸ்லிம்களின் வாக்கு JVP-யிற்கு பெரிதாகக் கிடைப்பதில்லை. அப்படியிருந்தும் தம்புள்ளைப் பள்ளி விவகாரத்தில் அப்போதைய JVP தலைவர் தம்புள்ளையிலேயே நியாயமாகப் பேசினார். இது போன்ற ஒரு கட்சியின் பலத்தைக் கூட்டுவது இந்த இரு கட்சிகளின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

ஞானசார தேரரின் ஆட்டம் தமது தளத்தை தகர்க்க ஆரம்பித்ததை அவர்கள் அறிந்தால்தான் அதை அடக்க முற்படுவார்கள்.

எனவே, மூன்றாவது ஒரு அரசியல் தளத்தை இஸ்தீரப்படுத்துவது குறித்து சிறுபான்மை சமூகங்கள் தீவிர கவனம் செலுத்துவது காலத்திலன் கட்டாயமாகியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.