பிக்ஹுல் இஸ்லாம் – 28 சேர்த்துத் தொழுதல் -02-┇கட்டுரை.

சென்ற இதழில் பயணத்தில் இருக்கும் போது ழுஹர்-அஸர், மஃரிப்-இஷா ஆகிய தொழுகைகளை சேர்த்துத் தொழலாம் என்பது குறித்து விரிவாக நோக்கினோம். பயணம் அல்லாத சில சந்தர்ப்பங்களிலும் சேர்த்துத் தொழுவதற்கு அனுமதியுள்ளது.

உள்ளுரில் சேர்த்துத் தொழுதல்:

1. மழைக்காக சேர்த்துத் தொழுதல்:
மழைக்காக சேர்த்துத் தொழுவதற்கான அனுமதியுள்ளது. மழை காரணமாக மக்கள் பள்ளிக்கு வராமல் வீட்டில் தனித்தனியாகத் தொழுவதை விட, அனைவரும் ஜமாஅத்தாக பள்ளியில் சேர்த்து ஜம்உ செய்து தொழுவது நல்லதாகும்.

‘நபியவர்கள்; பயணமோ, மழையோ இல்லாமல், மதீனாவில் ழுஹரையும் அஸரையும், மஃரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள் என இப்னு அப்பாஸ்(ர) அவர்கள் கூறினார்கள். எதற்காக அப்படிச் செய்ததாக நீங்கள் கருதுகின்றீர்கள் என நான் அவரிடம் கேட்ட போது, ‘தனது உம்மத்திற்கு நெருக்கடி ஏற்படக் கூடாது” என்பதற்காக இப்படிச் செய்திருக்கலாம் என்று கூறினார்கள்.”
அறிவிப்பவர்: ஸலிஹ் மவ்லா ஸாக் (4434)
முஸன்னப் இப்னு அபீஷைபா- 8230
அஹ்மத்- 1953, 3329, முஸ்லிம்- 54-705,
அபு+தாவு+த்- 1211, திர்மிதி- 187)

பயமோ, மழையோ இல்லாமல் நபியவர்கள் சேர்த்துத் தொழுதார்கள் என்ற வார்த்தை மூலம் மழைக்காகவும் சேர்த்துத் தொழலாம் என்பது தெளிவாகின்றது.
இந்த அறிவிப்பின் அடிப்படையில் மழை வேளையில் சேர்த்துத் தொழ அனுமதி உள்ளது. ழுஹர், அஸர் தொழுகைகளுக்கிடையில் அதிக நேரம் இருப்பதால் அவற்றைச் சேர்த்துத் தொழ முடியுமா? என்பதில் அபிப்பிராய பேதம் உள்ளது.

உதாரணமாக, ழுஹருக்கு மக்கள் பள்ளியில் ஒன்று கூடியுள்ளார்கள். மழை பொழிகின்றது. அஸருக்கிடையில் பெரும்பாலும் மழை நின்றுவிட வாய்ப்புள்ளது. எனவே, அஸரை ழுஹருடன் சேர்த்துத் தொழத் தேவையில்லை என்பது இத்தரப்பாரது வாதமாகும். ஆனால், மஃரிப், இஷாத் தொழுகைகளுக்கிடையில் குறைந்த கால அவகாசமே உள்ளது என்பதால் மஃரிபையும் இஷாவையும் மழைக்காக சேர்த்துத் தொழ முடியும் என்பது அநேகரது அபிப்பிராயமாகும்.

இந்த அறிவிப்பில் பயமோ, மழையோ இல்லாமல் நபியவர்கள் சேர்த்துத் தொழுததாக உள்ளது. இதை இமாம் அல்பானி (ரஹ்) அவர்கள் ஸஹீஹானது என்று கூறியுள்ளார்கள். இருப்பினும் மற்றும் சில அறிவிப்புக்களில் பயமோ, பயணமோ இன்றி சேர்த்துத் தொழுதார்கள் என்று இடம் பெற்றுள்ளது. அபூதாவூத்: 1210 இல் மழை என்ற வார்த்தை இடம்பெறவில்லை. இதை வைத்துப் பார்க்கும் போது மழைக்காக ஜம்உ செய்ய வாய்ப்பில்லை என்ற நிலை ஏற்படலாம் என்பது சிலரது அவதானமாகும்.

நபியவர்கள் பயமோ, மழையோ இன்றி ஜம்உ செய்தார்கள் என்பது பற்றி இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறும் போது, ‘பயமோ, பயணமோ இல்லாமல் ஜம்உ செய்தார்கள் என்றால் அது மழை வேளையில் நடந்திருக்க லாம் என்று கருதுகின்றேன்” என்று கூறுகின்றார்கள். (இப்னு குஸைமா: 972)

இதே வேளை, பயமோ பயணமோ இல்லாமல் உம்மத்துக்கு சிரமம் ஏற்படும் போது செய்து கொள்வதற்காக வழிகாட்டு முகமாக நபியவர்கள் ஜம்உ செய்துள்ளார்கள் என்றால் மழைக்காகவும் அதை செய்யலாம் என்று முடிவு செய்ய வாய்ப்பு உள்ளது. ஏனெனில், மழை என்பது மக்களுக்கு சிரமத்தையும் அசௌ கரியத்தையும் அளிக்கக் கூடியதாகும். எனவே, இந்த அறிவிப்பில் பயமோ பயணமோ இல்லாமல் என்ற வார்த்தை சரியானதாக இருந்தாலும் அல்லது பயமோ மழையோ இல்லாமல் என்ற வார்த்தை சரியானதாக இருந்தாலும் இரண்டுமே மழைக்காக ஜம்உ செய்ய வாய்ப்புள்ளது என்பதைத் தெளிவுபடுத்து வதாகவே உள்ளது என்பதே சரியானதாகும்.

நபித்தோழர்களின் நடைமுறையும் இதையே உணர்த்துகின்றது. இப்னு உமர்(ர) அவர்கள், ‘மழை காலத்தில் இமாம்கள் மஃரிப், இஷா தொழுகை களைச் சேர்த்துத் தொழுதால் அவர்களுடன் சேர்த்துத் தொழுபவராக இருந்தார்கள்” என நாபிஃ (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(முஅத்தா: 05, பைஹகி: 587)

ஹிஷாம் அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘தனது தந்தை உர்வா மற்றும் ஸைத் இப்னுல் முஸையப், அபூபக்கர் இப்னு அப்துர் ரஹ்மான்;, இப்னுல் ஹாரிஸ் இப்னுல் முகீரா அல் மக்சூம் ஆகியோர் மழை கால இரவுகளில் மஃரிப், இஷாத் தொழுகைகளைச் சேர்த்துத் தொழுபவர்களாக இருந்தார்கள். இரண்டு தொழுகைகளை (மழைக்காக) சேர்த்துத் தொழுதால் அதை மறுக்காதவர்களாக இருந்தார்கள்.” (பைஹகி: 5557)

உமர் இப்னு அப்துல் அஸீஸ்(ரஹ்) அவர்கள் ஒரு கலீபாவாக இருந்தவராவார். பைஹகியில் 5558 ஆவது அறிவிப்பில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.

‘உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் மழையாக இருந்ததால் மஃரிபையும், இஷாவையும் ஜம்உ செய்தார்கள். அக்காலத்தில் வாழ்ந்த ஸைத் இப்னுல் முஸையிப், உர்வதுப்னு சுபைர், அபூபக்கர் இப்னு அப்துர் ரஹ்மான் போன்ற அறிஞர்கள் அவர்களுடன் சேர்ந்து தொழுவார்கள். அதை மறுக்கமாட்டார்கள் என்று இடம் பெற்றுள்ளது. இந்த நபித்தோழர்கள் தாபியீன்களின் நடை முறையும் மழைக்காக ஜம்உ செய்து தொழலாம் என்பதைத்தான் உணர்த்து கின்றது.
2. நிர்ப்பந்த நிலைகள்:
நிர்ப்பந்த நிலைகளின் போது உள்ளுரில் இருக்கும் போதே இரண்டு தொழுகைகளைச் சேர்த்துத் தொழ அனுமதி உள்ளது.

மழைக்காக ஜம்உ செய்யலாம் என்பதற்கு நாம் காட்டிய ஆதாரமே இதற்கும் ஆதாரமாகவும் அடிப்படையாகவும் அமைகின்றது.

எந்தக் காரணமும் இல்லாமல் நபி(ச) அவர்கள் சில தொழுகைகளைச் சேர்த்துத் தொழுதுள்ளார்கள். ஏன் அப்படிச் செய்தார்கள் என்பதற்கு இப்னு அப்பாஸ்(ரு) அவர்கள் விளக்கம் கூறும் போது, ‘நிர்ப்பந்த நிலைகள் ஏற்படும் போது இப்படிச் செய்து கொள்ளலாம் என்பதை விளக்குவதற்காகவே அப்படிச் செய்தார்கள்” எனக் கூறியுள்ளார்கள்.

நிர்ப்பந்த நிலைக்காகச் செய்யும் ஜம்உ என்பது தொழும் அமைப்பில் ‘ஜம்உ”ஆக இருந்தாலும் உண்மையில் ஜம்உ இல்லை என்பது அறிஞர்கள் பலரது அபிப்பிராயமாகும்.

உதாரணமாக, ழுஹருடைய நேரத்தில் ஊருக்குள் ஒரு பிரச்சினை வந்துவிட்டது. மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்துகின்றார்கள். 3.45 இற்கு அஸருக்கு அதான் சொல்லும் நேரம் என்று வைத்துக் கொள்வோம். இப்போது 3.35 இற்கு ழுஹருக்கு இகாமத் கூறி ழுஹரை ஜமாஅத்தாகத் தொழுதுவிட்டு 3.45 இற்கு அஸர் தொழப்படும். ஒரு தொழுகை அதன் இறுதி நேரத்திலும், அடுத்த தொழுகை அதன் ஆரம்ப நேரத்திலும் தொழப்படும்.

கஷ்டத்தில் இருக்கும் நோயாளிகள், ஒவ்வொரு தொழுகைக்கும் தனித்தனியாக வுழூச் செய்வதால் அதிக சிரமத்திற்குள்ளாகும் முதியோர் அல்லது நோயாளிகள், செய்து கொண்டிருக்கும் வேலையை இடையில் நிறுத்துவதால் ஏற்படும் இழப்புக்கள், பாதிப்புக்கள் ஏற்படும் என அஞ்சும் நிலையில் உள்ளவர்கள் போன்ற தனி நபர்களும் நிர்ப்பந்த நிலைக்காக இந்த ஜம்உவைப் பயன்படுத்தலாம். இருப்பினும் இது இறையச்சத்தின் அடிப்படையில் முடிவு செய்யப்பட வேண்டிய அம்சமாகும். இது பொடுபோக்குக் காரணமாக அமைந்துவிடக் கூடாது. வழமைப்படுத்திக் கொள்வதும் நல்லதன்று. இந்த நிர்ப்பந்த நிலையில் இருந்து நீங்க வழியுண்டா? என்றும் சிந்திக்க வேண்டும்.

தொடரும்… இன்ஷா அல்லாஹ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.