பீ.ஜே யின் கருத்துக்களை மீளாய்வு செய்யுங்கள் | தொடர் 01 | கட்டுரை.

இவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். பீ.ஜே. என சுருக்கமாக அழைக்கப்படுபவர். நல்ல நாவன்மையும் வாதத் திறமையும், எழுத்தாற்றலும் மிக்க இவர் தனது திறமைகளை இஸ்லாமிய அகீதாவுக்கு முற்றிலும் முரணாகப் பயன்படுத்தி வருகின்றார். இவரது போதனைகளும் அதை அவர் முன்வைக்கும் விதமும் முஸ்லிம்களுக்கு மத்தியிலும் மாற்று மதத்தவர்களுக்கு மத்தியிலும் குழப்பத்தையும் மன முரண்பாடுகளையும் ஏற்படுத்தி வருகின்றது. ஏனைய இஸ்லாமிய அமைப்புக்களுடன் இணங்கிப் போகாத இவரது இயல்பு இவரது இயக்கத்தவர்களிடமும் குடிகொண்டுள்ளது. இதனால் இவரது இயக்க செயற்பாடுகளால் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிளவும் குழப்பங்களும் ஏற்பட்டு வருவதுடன் இவர்களது கரடு முரடான அணுகுமுறை, இஸ்லாமிய பண்பாட்டுக்கு முறணான கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள் மற்றும் கேலி-கிண்டல்கள் கலந்த உரைகள் மூலம் சமூக உறவுகளும் உடைந்து வருவதுடன் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் மாற்று மதத்தினர் வெறுப்புடன் பார்க்கும் நிலையும் உருவாகி வருகின்றது.

இஸ்லாம் சகிப்புத்தன்மையையும்; சாந்தி யையும், சமூக நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் மற்றும் சகல மதங்களையும் கௌரவப்படுத்தலையும் ஆணையிடுகின்ற மார்க்கமாகும். பிறமதங்களை நிந்தனை செய்வதையோ, பிற சமூகங்களது சமய நடவடிக்கைகளை இழிவுபடுத்தும் விதத்தில் கருத்துக்கள் வெளியிடுவதையோ இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. தீமையை சுட்டிக் காட்டும் போது மென்மையைக் கடைப்பிடிக்குமாறு இஸ்லாம் போதிக்கின்றது. அல்குர்ஆனில் அல்லாஹ் “நன்மையும் தீமையும் சமமாகமாட்டாது” என அருளியுள்ளான்.

இஸ்லாத்தின் இப்போதனைகளுக்கு முரணாக செயற்படுபவர்கள் யாராக இருந்தாலும் இஸ்லாத்தின் பார்வையில் அவர்கள் குழப்பம் விளைவிப்பவர் களாகவே கணிக்கப்படுவார்கள். இந்த அடிப்படையிலே தான் பி. ஜைனுல் ஆபிதீன் என்பவர் நோக்கப்பட வேண்டும்.

பி.ஜைனுல் ஆபிதீன் என்பவர் வழிகெட்ட பல சிந்தனைகளைக் கொண்டவர். நம்பிக்கைக் கோட்பாட்டை விட பகுத்தறிவுக்கு முதலிடம் கொடுப்பவர். ஆதாரபூர்வமான பல நபி மொழிகளை பகுத்தறிவுக்கு முரண் எனக் கூறி ஏற்க மறுப்பவர். அல் குர்ஆனுக்கு தனது சொந்த அபிப்பிராயத்தில் வியாக்கியானம் செய்பவர். தகாத வார்த்தைகளைக் கொண்டு சஹாபாக்களைத் தூற்றுபவர். அவர்களுக்கு மத்தியில் நடந்த சில நிகழ்வுகளை ஏழனமாகக் காட்டுபவர். அரும்பாடுபட்ட அறிஞர்களின் கண்ணியத்துக்கு பங்கம் விளைவிப்பவர். மார்க்க அறிஞர்களால் மறுக்கப்பட்ட அல்லது மறுதலிக்கப்பட்ட கருத்துக்களை முதல் தரக் கருத்தெனக் கூறி பாமர மக்களைத் தவறான வழியில் நடாத்துபவர்.

அவருடன் நெருக்கமாக இருந்த பல அறிஞர்களே இன்று அவருக்கு எதிராக களமிறங்கியுள்ளனர்.

இந்தப் பின்னணியில் இவரின் வழிகெட்ட சிந்தனையை அடையாளப்படுத்துவதற்காகவும் இவரது குர்ஆன் மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கக் குறிப்பு குறித்து மக்களை விழிப்புணர்வு ஊட்டுவதற்காகவும் சில குறிப்புக்களை இங்கே முன்வைக்கின்றோம்.

இவர் வழிகெட்ட சிந்தனைப் போக்குடையவர் என்பதற்கும் இவரது அல் குர்ஆன் மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கக் குறிப்புக்கள் தவறானது என்பதற்கும் சிங்களத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட இவரது தர்ஜமா தவறானது என்பதற்கும் இவரது கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இயங்கும் அமைப்பினர் தவறான வழியில் இருக்கின்றனர் என்பதற்கும் இதுவே போதிய சான்றாக அமையும்.

இவரது தர்ஜுமாவில் காணப்படும் தவறுகள்:

  1. அல்லாஹ் கற்றுத் தந்த ஒழுக்கங்களை மீறுவது:
    அல்குர்ஆனில் பல நபிமார்களைப் பெயர் கூறி விழித்து அல்லாஹ் பேசியுள்ளான். ஆனால், நபி(ச) அவர்களை அல்லாஹ் முஹம்மதே! என விழித்துப் பேசியதில்லை. ஆதமே! (2:33,35), நூஹே! (11:46), இப்றாஹீமே! (37:104), முஸாவே! (7:144), ஈஸாவே (3:55)… இவ்வாறு பேசும் அல்லாஹ் முஹம்மதே! என எங்கும் விழித்துப் பேசவில்லை. யா அய்யுஹன் நபி! (நபியே!) (8:64,65, 70), (9:73), (33:1, 28, 45, 50, 58) என்று மிக கண்ணியமாகவே அழைக்கின்றான். இந்த அடிப்படையில் குர்ஆன் மொழிபெயர்ப்பு செய்தவர்கள் நபியை விழித்துப் பேசும் இடங்களில் அடைப்புக் குறிக்குள் (நபியே!) எனப் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், இவர் அல்லாஹ் காட்டித் தந்த இந்த ஒழுங்கையும் கண்ணியத்தையும் பேணும் வழியைப் புறக்கணித்து (முஹம்மதே!) எனப் போடுவதை வழக்கமாக்கியுள்ளார்.

உதாரணம்:

ஏனைய தர்ஜமாக்கள்:
‘அல்லாஹ் ஒருவன் என (நபியே) நீர் கூறுவீராக!” (111:01)

பீ.ஜே. தர்ஜமா:
‘அல்லாஹ் ஒருவன் என (முஹம்மதே) நீர் கூறுவீராக!”

அல்லாஹ் முஹம்மதே என குர்ஆனில் எங்குமே விழித்துப் பேசாது, நபிக்குத் தனியான ஒரு அந்தஸ்தை வழங்கியிருக்க அதைத் தகர்க்கும் விதத்தில் இவர் செயற்பட்டுள்ளதுடன் அதை நியாயப்படுத்தியும் வருகின்றார்.

  1. குர்ஆனின் போக்கை மாற்றி பக்கம் குறைப்பதற்காக சில மொழிபெயர்ப்புக்களைத் தவிர்த்தல்:
    அல்குர்ஆனில் சில விடயங்களை முக்கியத்துவப்படுத்தி அழுத்திக் கூறுவதற்காக ‘இன்ன”, ‘அன்ன” போன்ற பதங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. இவர் அவற்றை மொழியாக்கம் செய்யாமல் தவிர்த்துள்ளார். தமிழ் நடைக்கு இது அழகன்று என்பதற்காக குர்ஆனின் நடையையும் அதன் கருத்தாழத்தையும் சிதைத்துள்ளார்.

உதாரணம்:
ஏனைய தர்ஜமாக்கள்:
‘நிச்சயமாக உமது இரட்சகனின் பிடி மிகக் கடினமானது.”

பீ.ஜே. தர்ஜமா:
‘உமது இரட்சகனின் பிடி கடுமையானது.”

இதில் தமிழ் நடைக்காகவும் சுருக்கத்திற்காகவும் அவர் விட்ட இடங்கள் குர்ஆனின் அழுத்தத்தையும் கடுமையையும் சிதைப்பதைக் காணலாம்.

  1. முஃஜிஸாக்களுக்கு காரண காரியங்களைக் கற்பித்து அல்லாஹ்வின் ஆற்றலைக் குறைத்துக் காட்டுவது:
    ஈஸா(அ) அவர்கள் ஆண் தொடர்பு இல்லாமல் அற்புதமாகப் படைக்கப்பட்டவர்கள் என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும். ஆனால், இதை அவர் குளோனிங் முறையாக சித்தரிக்க முற்படுகின்றார். இது பற்றி குளோனிங் சாத்தியமே என்ற தலைப்பில் 415 ஆவது விளக்கக் குறிப்பில் அவர் கூறும் போது, ‘தந்தையில்லாமல் ஒரு குழந்தையை இறைவன் உருவாக்க நாடினால், ‘ஆகு” என்று சொல்லியே அவனால் உருவாக்க முடியும். அப்படியிருந்தும் ஒரு வானவரை மனித வடிவில் அனுப்பி, அந்த வானவர் ஈஸா நபியின் தாயாரான மர்யமிடம் ஊதினார் எனக் கூறப்படுகின்றது. இதன் மூலம் இறைவனின் ஆற்றலால் உருவாக்கப்பட்ட ஒரு மரபணுவை ஊதியிருக்கலாம் என்பதையும்….” எனக் கூறி ஜிப்ரீல்(அ) அவர்கள் ரூஹை ஊதினார் எனக் குர்ஆன் கூறும் போது மரபணுவை ஊதியதாகக் காட்ட முனைகின்றார்.
  2. அமல்கள் விடயத்திலும் குர்ஆன் சொல்லும் ஒழுங்கை மீறி தமிழுக்காக தன் இஷ்டத்திற்கு வரிசைப்படுத்திக் கூறுவது: வுழூ என்பது முக்கியமான மார்க்கக் கடமையாகும். வுழூச் செய்யும் போது,
  3. முகத்தைக் கழுவ வேண்டும்.
  4. முழங்கை வரை இரு கரங்களையும் கழுவ வேண்டும்.
  5. தலையை மஸ்ஹ் செய்ய வேண்டும்.
  6. கால்களை கரண்டை வரை கழுவ வேண்டும். இதுதான் குர்ஆன் கூறும் தொடர் ஒழுங்காகவும் முகம், கை கழுவப்பட வேண்டியது, தலை தண்ணீரால் தடவப்பட வேண்டியது, கால் கழுவப்பட வேண்டியது, கழுவப்பட வேண்டிய உறுப்புக்களுக்கு மத்தியில் தடவப்பட வேண்டிய தலையையும் அல்லாஹ் கூறுகின்றான். அல்லாஹ்வுக்கே பாடம் சொல்லுவது போல் இந்த ஒழுங்கை மாற்றுகின்றனர்.

(பீ.ஜே. தர்ஜமா) :
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும் முட்டுக்கால் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள். உங்கள் தலைகளை (ஈரக் கையால்) தடவிக் கொள்ளுங்கள்….” (5:6)
என மொழியாக்கம் செய்துள்ளார். இவரின் தர்ஜமாவைப் பார்த்து வுழூச் செய்தால் வுழூ செல்லாத நிலையை உருவாக்கியுள்ளார். கழுவக் கூடிய உறுப்புக்களை ஒரு ஒழுங்கிலும் தடவக் கூடிய உறுப்பைத் தனியாகவும் சொல்ல வேண்டும் என்று அல்லாஹ்வுக்கு சொல்லிக் கொடுப்பது போல் இயங்கியுள்ளார். இந்தக் குறைகள் பல தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்ட பின்னர் கூட தனது தவறைத் திருத்தாது அதற்கு பிடிவாதத்துடன் நியாயம் கற்பித்தும் வருகின்றார்.

  1. மொழிபெயர்ப்புப் பிழைகள்:
    பல இடங்களில் குர்ஆனின் கருத்துக்கு மாற்றமாக இவர் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். சில வேளை, அது குர்ஆனின் கருத்துக்கு மாற்றமாகவும் அமைந்துள்ளது.

(உதாரணம்:)
ஒரு கணவன் தன் மனைவியை மீட்டிக் கொள்ளக் கூடிய தலாக் கூறி இத்தாக் காலமும் முடிந்த பின்னர் அவர்களது திருமண உறவு முறிந்துவிடும். அதன் பின்னர் அவர்கள் விரும்பினால் புதிய நிகாஹ் செய்து கொள்ளலாம். இவ்வாறு பிரிந்தவர்கள் மீண்டும் மணம் செய்ய விரும்பினால் அதைத் தடுக்கக் கூடாது என குர்ஆன் கூறுகின்றது.

‘நீங்கள் (உங்கள்) மனைவியர்களை (மீளக் கூடிய) விவாகரத்து செய்து அவர்கள் தங்கள் (இத்தா) காலக் கெடுவின் எல்லையை நிறைவு செய்து (மீண்டும்) அவர்கள் தமக்குள் நல்ல முறையில் உடன்பட்டுக் கொண்டால் (அப்)பெண்கள் தங்களது கணவன்மார்களை (மறுமுறை) மணமுடிப்பதை (பொறுப்புதாரிகளாகிய) நீங்கள் தடுக்க வேண்டாம். உங்களில் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்பவர் இதைக் கொண்டு உபதேசிக்கப் படுகின்றார். இதுதான் உங்களுக்கு மிகத் தூய்மை யானதும் பரிசுத்தமானதுமாகும். அல்லாஹ்தான் நன்கறிவான்| நீங்களோ அறியமாட்டீர்கள்.” (2:232)

இதைப் பீ.ஜே. பின்வருமாறு மொழியாக்கம் செய்துள்ளார்.
‘பெண்களை விவாகரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்….” (2:232)

விவாகரத்துச் செய்த கணவன்-மனைவி இருவரும் மீண்டும் இணைந்து வாழ விரும்பினால் தடுக்காதீர்கள் என்ற குர்ஆனின் கருத்தை இவரது மொழிபெயர்ப்பு தவறும், அடைப்புக் குறியும் விவாக ரத்து செய்யப்பட்ட பெண் மறுமணம் செய்வதைத் தடுக்காதீர்கள் என மாற்றியுள்ளன.

  1. மொழிபெயர்ப்புத் தவறுகள்:
    இவரது மொழிபெயர்ப்பில் பல இடங்களில் சில வார்த்தைகளுக்கு மொழிபெயர்ப்புச் செய்யப்படாமல் விடுபட்டுள்ளது. மனிதன் என்ற அடிப்படையில் ஏற்பட்ட தவறாக இது இருப்பின் குற்றம் பிடிப்பதற்குரியதல்ல. இருப்பினும் பல பதிப்புக்களைக் கண்ட பின்னரும் பல குறைகளை பலரும் சுட்டிக் காட்டிய பின்னரும் அவற்றைத் திருத்துவதில் அவர் கரிசணை காட்டவில்லை.
  2. மொழிபெயர்ப்புத் தில்லுமுல்லுகள்:
    இவர் சூனியம் தொடர்பில் சூனியம் என்றொரு கலை உண்டு. அதனால் நினைத்ததையெல்லாம் செய்ய முடியாவிட்டாலும் சில பாதிப்புக்களை ஏற்படுத்த முடியும் என்ற நிலைப்பாட்டில் இருந்தார். அப்போது அவரது எழுத்துக்களில் 2:102 வசனத்தை மொழியாக்கம் செய்ததற்கும் சூனியம் தொடர்பில் அவரது நிலப்பாடு மறிய பின்னர் செய்த மொழிபெயர்ப்புக்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. ‘எனினும், அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது.” என்று மொழியாக்கம் செய்தவர் சூனியம் இல்லையென்ற கருத்துக்கு மாறிய பின், ‘பிஹி” என்பதற்கு மொழியாக்கம் செய்யாமல் விட்டார். அல்லாஹ்வின் விருப்பமின்றி யாருக்கும் எந்தத் தீங்கும் செய்ய முடியாது என மொழியாக்கம் செய்தார். இந்தப் பிழை சுட்டிக்காட்டப்பட்டு பல பதிப்புகள் வெளிவந்த பின்னர்தான் திருத்தம் செய்துள்ளார். அவ்வாறே இந்த வசனத்தில் வரும் ‘பயத அல்லமூன” என்ற வார்த்தையில் வரும் ‘ப” வுக்கு ஆரம்பத்தில் அப்படியிருந்தும் சூனியத்தைக் கற்றனர் என்ற கருத்தில் அர்த்தம் செய்தார். பின்னர் ‘ப”வுக்கு அர்த்தம் செய்யாமல் விட்டார். இப்போது எனவே என அர்த்தம் செய்து அவர்கள் சூனியத்தைப் படிக்கவில்லை வேறு ஒரு கலையைப் படித்தனர் என அர்த்தம் செய்கின்றார். இவரது கொள்கை மாற்றத்திற்கு ஏற்ப குர்ஆனின் மொழிபெயர்ப்பில் தில்லு முல்லுகளைச் செய்து வருகின்றார்.
    இன்ஷா அல்லாஹ்
    தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.