நபிமார்களிடம் அல்லாஹ் எடுத்த உறுதிமொழி (அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 11)

‘நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் அருளிய பின் உங்களிட மிருப்பதை உண்மைப்படுத்தும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால், ‘அவரை நீங்கள் நம்பிக்கை கொண்டு அவருக்கு நீங்கள் உதவி செய்வீர்களா?’ என அல்லாஹ் நபி மார்களிடம் உறுதிமொழி வாங்கி, நீங்கள் இதை ஏற்றுக் கொண்டு எனது பலமான உடன்படிக்கையை எடுத்துக் கொண்டீர்களா? எனக் கேட்டபோது, ‘நாம் ஏற்றுக் கொண்டோம்’ என அவர்கள் கூறினர். அ(தற்க)வன், ‘நீங்களே (இதற்கு) சாட்சியாக இருங்கள். உங்களுடன் நானும் சாட்சியாளர்களில் உள்ளவனாவேன்’ என்று கூறியதை (எண்ணிப்பாருங்கள்.)’

‘எனவே, இதன் பின்னரும் எவரேனும் புறக்கணித்தால் அவர்கள்தாம் பாவிகளாவர்.’
(3:81-82)

நபிமார்களிடம் ஒரு உறுதி மொழியை அல்லாஹ் எடுத்ததாக இந்த வசனத்தில் கூறப்படுகின்றது. உங்களுக்கு நான் வேதத்தையும் ஞானத்தையும் தந்திருந்தும் உங்களிடம் உள்ளதை உண்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதர் உங்களிடம் வந்தால் நீங்கள் அவரை ஏற்க வேண்டும். அவருக்குத் துணை புரிய வேண்டும் என்பதே அந்த உடன்படிக்கை. அதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். யார் இந்த உடன் படிக்கையை மீறுகின்றனரோ அவர்கள் பாவிகளாவர். இதுதான் அந்த உடன் படிக்கையின் சாராம்சம்.

இந்த உடன்படிக்கை எதைப் பற்றிப் பேசுகின்றது என்பதில் அறிஞர்கள் வித்தியாசமான விளக்கங்களை முன்வைத் துள்ளனர். சிலர் குர்ஆன் விளக்கம் என்ற பெயரில் விதண்டாவாதமான கருத்துக்களையும் முன்வைத்துள்ளனர்.

A.
இந்த வசனம் ‘முஹம்மத் நபியின் வருகை பற்றியும் அப்படி நீங்கள் இருக்கும் போது அவர் வந்தால் அவரை ஈமான் கொண்டு அவருக்குத் துணை நிற்பது உங்கள் கடமை’ என்றும் கூறுகின்றது என்பது பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும்.

இது குறித்து அலி(ர) மற்றும் இப்னு அப்பாஸ்(ர) அவர்கள் விளக்கும் போது ‘எந்த ஒரு நபியை அல்லாஹ் அனுப்பினாலும் அவரிடம் ஓர் உறுதிமொழி எடுக்காமல் இருப்பதில்லை. நீங்கள் உயிருடன் இருக்கும் போது முஹம்மத் நபி(ச) அவர்கள் தூதராக அனுப்பப்பட்டால் அவரை ஏற்று நீங்கள் அவருக்குத் துணையாக இருக்க வேண்டும் என்பதுதான் அந்த உறுதிமொழி.

இவ்வாறே அந்த நபி உம்மத்திடம், ‘நீங்கள் உயிருடன் இருக்கும் போது முஹம்மது நபி வந்தால் அவரை ஏற்று அவருக்குத் துணையாக நீங்கள் இருக்க வேண்டும் என்று அவரது உம்மத்துக்கு ஏவ வேண்டும். இதுவே அந்த உறுதி மொழியாகும்.

B.
மற்றும் சில மார்க்க அறிஞர்கள் இது பொதுவான உறுதிமொழி. எந்த நபி இருக்கும் போதும் வேறு ஒரு நபி வந்தால் முதல் நபி அடுத்து வந்த நபியை ஏற்று அவருக்குத் துணையாக இருக்க வேண்டும் என்பதையே இது குறிக்கின்றது என்பதாகும். இந்தக் கருத்தை இமாம்களான தாவுஸ், ஹஸன், கதாதா(ரஹ்) போன்றோர் முன்வைத்துள்ளனர். இது குறித்து இமாம் இப்னுல் கதீர்(ரஹ்) அவர்கள் விபரிக்கும் போது இந்தக் கருத்து முன்னைய கருத்துக்கு முரணானது அல்ல. இந்த பொது உறுதிமொழியில் முஹம்மத்(ச) அவர்கள் விஷேடமாக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என விபரித்துள்ளார்கள்.

C.
இந்த உடன்படிக்கை நபிமார்களிடம் எடுக்கப்பட்டிருந்தாலும் அது நபிமார்களின் உம்மத்துக்களையே குறிக்கும் என்ற கருத்தை அபுல் முஸ்லிம் அஸ்பஹானி(ரஹ்) முன்வைத் துள்ளார்கள். இதுவும் முதல் கருத்துக்குள் அடங்கியுள்ளது. எனவே, எல்லா வகையிலும் முதல் கருத்து முதன்மை பெற்றே உள்ளது. முதல் கருத்து முதன்மை பெற்றது என்பதை குர்ஆனின் வசன அமைப்பு, முன்-பின் வசனங்கள் மற்றும் அது அருளப்பட்ட நோக்கம் என்பவற்றை வைத்தே தீர்க்கமாக முடிவு செய்துவிடலாம். இனி முதல் கருத்தை மறுப்பதற்காக வைக்கப்படும் விதண்டாவாதங்கள் குறித்து சற்று கவனம் செலுத்துவோம்.

இந்த வசனம் நபி(ச) அவர்கள் பற்றிப் பேசவில்லை என்பதற்கு இப்படி ஒரு விதண்டாவாம் முன்வைக்கப்படுகின்றது. ‘நபிமார்களிடம் இறைவன் உறுதிமொழி எடுத்திருக்கின்றான். இதில் எல்லா நபிமார்களும் அடங்குவார்கள். நபிகள் நாயகம்(ச) அவர்களும் இதில் அடங்குவார்கள். நபிகள் நாயகம்(ச) அவர்கள் அடங்கமாட்டார் கள் என்று கூறுவதற்கு இந்த வசனம் இடம்தரவில்லை.

இந்த வாதத்தின் படி நபி(ச) அவர்கள் இருக்கும் போது இன்னொரு நபி வந்தால் அந்த நபியை ஏற்று முஹம்மத்(ச) அவர்கள் அந்த நபிக்குத் துணையாக இருக்க வேண்டும் என்றாகின்றது.
இது ஒரு அபத்தமான முடிவாகும். இந்த வசனத்திற்குள் நபிகள் நாயகம் அடங்க மாட்டார்கள் என்பதற்கு இந்த வசனத்திற் குள்ளேயே ஆதாரம் தேட வேண்டியதில்லை. குர்ஆனை அப்படி அணுகவும் கூடாது. வேறு வசனங்களில் ஆதாரம் இருந்தால் அதையும் ஏற்றுத்தான் முடிவு செய்ய வேண்டும்.

இறுதி நபி:
நபி(ச) அவர்கள் இறுதி நபியாவார்கள். அவருக்குப் பின் வேறு நபி இல்லை.

‘முஹம்மத், உங்களது ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. எனினும், அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களின் முத்திரையாகவும் இருக்கின்றார். அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.’ (33:40)

நபி முஹம்மத்(ச) அவர்களுக்குப் பின்னர் வேறு நபி இல்லை எனும் போது உங்களுக்குப் பின்னர் இன்னொரு நபி வந்தால் அவரை ஏற்று அவருக்குத் துணையாக நீங்கள் இருக்க வேண்டும் என்று எப்படி முஹம்மத் நபியிடம் உறுதி மொழி எடுக்க முடியும்?

நபிமார்களின் தலைவர்:
நபி(ச) அவர்கள் ஸையதுல் பஸர் செய்னுல் அன்பியா மனித குலத்தின் தலைவர், மற்றும் நபிமார்களின் தலைவர் ஆவார். நபி(ச) நபியாக இருக்கும் போது இன்னொரு நபி வந்தால் வந்தவர்தான் நபி(ச) அவர்களை ஏற்று அவருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். தலைவர் பின்னால் வந்த தூதருக்கு கட்டுப்பட்டு துணையாக இருக்க முடியாது.

இது மட்டுமல்லாது எல்லா நபிமார்களும் நபி(ச) அவர்களின் தலைமையை ஏற்றுள்ளனர். என்பதை மிஃராஜ் நிகழ்வும், நபி(ச) அவர்களுக்குப் பின்னால் இருந்து அவர்கள் தொழுததும் உறுதி செய்கின்றன.

அடுத்து மறுமையில் எல்லா நபிமார்களும் மறுக்கும் போது ஷபாஅத்துச் செய்பவர்களாக நபியவர்கள் இருப்பார்கள். அவர்தான், அவர் மட்டும்தான் மகாமுல் மஹ்மூத் எனும் புகழுக்குரிய இடத்துக்குச் சொந்தக்காரர். அவர்தான் ‘உழுல் அஸ்ம்’ – ரஹுல்மார் களுக்கும் தலைவர். இப்படி இருக்கும் போது இந்த உடன்படிக்கையில் இருந்து நபி(ச) அவர்களைத் தவிர்த்துக் காட்ட எந்த ஒரு இடம்பாடும் இந்த வசனத்தில் இல்லை என வாதிடுவது தவறானதாகும்.

அடுத்து, ஒரு நபிக்குப் பின் இன்னொரு நபி வருவதை இஸ்லாம் கூறவில்லை. ஒரு நபி வாழ்ந்து கொண்டிருக்கும் போது இன்னொரு நபி வருவதையே இவ்வசனம் குறிப்பிடுகின்றது என்றும் வாதிக்கப்படுகின்றது. அதாவது, நபி(ச) வாழும் போது ஒரு நபியும் வரவில்லை. எனவே, இது நபி(ச) அவர்களின் வருகை பற்றிப் பேசவில்லை என வாதிடுவதுதான் இந்த வாதத்தின் நோக்கம்.

ஒரு நபி இருக்கும் போது இன்னொரு நபி வந்தால் இருவரும் ஒருவரையொருவர் உண்மைப்படுத்தி உதவிக் கொள்ள வேண்டும் என்பது தனி விசயம். ஆனால், ஒரு நபி வாழ்ந்து மரணித்த பின்னர் இன்னொரு நபி வந்தால் முன்னைய நபியின் உம்மத்தினர் பின்னர் வந்த தூதரை நம்பிக்கை கொண்டு அவருக்கு உதவ வேண்டும் என்று இந்த வசனம் கூறவில்லை என வாதிடுவது அபத்தமானதாகும்.

நபி(ச) அவர்கள் இந்த வசனத்தை எதற்காக மக்களுக்குப் போதித்தார்கள் என்பதை முதலில் கவனிக்க வேண்டும். இந்த வசனத்திற்கு முன்னைய வசனங்கள் வேதம் கொடுக்கப்பட்ட மக்கள் பற்றி பேசுகின்றது. உங்களிடம் வேதம் இருந்தாலும் நான் வந்த பின் என்னை ஏற்று எனக்கு உதவி செய்வது உங்கள் கடமை என்பதை உணர்த்துவதற்காகவே இந்த வசனம் இங்கே பேசப்படுகின்றது.

நீங்கள் முஹம்மது நபியாகிய என்னை ஏற்று எனக்குத் துணையாக இல்லையென்றால் நீங்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் இல்லை. நாங்கள் மனா இப்றாஹீம், இஸ்மாயில், இஸ்ஹாக், யஃகூப், அஸ்பாத், மூஸா, ஈஸா ஆகிய அனைத்து நபிமார்களுக்கும் அருளப்பட்டதையும் ஏற்றுக் கொள்கின்றோம். இறைத் தூதர்களுக்கிடையே பாரபட்சம் பார்க்கமாட்டோம். இவர் இறைத்தூதர் என்பதை அறிந்தும் முன்னைய இறைத்தூதரை ஏற்று ஈமான் கொண்ட பின்னர் இந்த இறைத்தூதரை மறுத்து நிராகரித்துவிட்ட சமூகம் எப்படி நேர்வழி பெறும் என்றெல்லாம் அடுத்தடுத்த வசனங்கள் பேசுவது முன்னைய வேதம் கொடுக்கப்பட்ட மக்கள் பின்னால் வந்த இந்தத் தூதரை ஏற்றுப் பின்பற்ற வேண்டும் என்பதைச் சொல்வதற்காகத்தான். எனவே, ஒரு நபி இருக்கும் போது இன்னொரு நபி வருவதைப் பற்றி மட்டும்தான் இந்த வசனம் பேசுகின்றது என்பது மட்டரகமான வாதமாகும். இந்த வசனம் நபிமார்களையும் அவர்களை ஏற்ற உம்மத்துக்களையும் இணைத்தே பேசுகின்றது.

முன்னைய தூதர் சென்றுவிட்டால் பின்னால் வந்த தூதர் முன்னைய தூதரின் சட்டங்களில் சிலதை மாற்றினால் கூட அவரை ஏற்று அவருக்குத் துணை செய்வது முன்னைய தூதரின் சமூகத்தின் கடமையாகும் என்பதையும் சேர்த்தே இவ்வசனம் பேசுகின்றது.

அடுத்து, இது நபி முஹம்மத் அவர்கள் பற்றியது அல்ல என்று கூறுவதற்கு மற்றுமொரு வாதமும் முன்வைக்கப்படுகின்றது.

இது நபிகள் நாயகத்தைப் பற்றிய முன்னறிவிப்பு என்று கருதினால் நபிமார்கள் தமது உடன்படிக்கையை நிறைவேற்றவில்லை என்று ஆகிவிடும். அவரை நம்பி அவருக்கு உதவ வேண்டும் என்பதுதான் உடன் படிக்கையின் ஷரத்து. நபிகள் நாயகம் இவ்வுலகுக்கு வந்த போது எந்த நபியும் உலகில் இருக்கவில்லை. எந்த நபியும் உதவவில்லை.

இது ஒரு குருட்டுத்தனமான வாதமாகும். நீங்கள் இருக்கும் போது அவர் வந்தால் அவருக்கு உதவ வேண்டும். அவரை ஏற்க வேண்டும் என்றுதான் கூறப்படுகின்றது. நீங்கள் இல்லாத போது வந்தால் உங்களுடைய உடன்படிக்கையை உங்கள் சமூகம் செய்ய வேண்டும். செய்யாதவர்கள் பாவிகளாவார்கள்.

ஏனைய நபிமார்கள் இருக்கும் போது நபி(ச) அவர்கள் தூதராக அனுப்பப்படாததால் எந்த நபியும் உடன்படிக்கையை நிறை வேற்றவில்லை என்ற பிரச்சினையே எழ வாய்ப்பு இல்லை. அடுத்து எல்லா நபிமார்களும் நபி(ச) அவர்கள் பற்றி முன்னறிவிப்புச் செய்ததன் மூலம் அவருக்கு உதவி உள்ளனர். அவரது தலைமையை ஏற்றதன் மூலம் அவரை நம்பிக்கை கொண்டுள்ளனர். இது இவ்வளவு தெளிவாக இருக்கும் போது நபிமார்கள் உடன்படிக்கையை நிறைவேற்றவில்லை என்ற நிலை வரும் என்பது நிலைநடுமாறிய நிலைப்பாடாகும்.

தமது வாதத்தை நிரூபிக்க இப்படி ஆதாரம் முன்வைக்கப்படுகின்றது. ஒரு நபியை அனுப்பிய பின் அவருக்குப் பக்கபலமாக இருப்பதற்காக மேலும் சிலரை அல்லாஹ் அனுப்பியதாக 36:14 வசனம் கூறுகின்றது. அவ்வாறு அனுப்பப்பட்டவர்களை முதலில் அனுப்பப்பட்டவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

இங்கு கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் முதலில் அனுப்பப்பட்டவர் பின்னால் அனுப்பப்பட்டவரை ஏற்றுக் கொள்வது பற்றி மட்டும் இந்த வசனம் பேசவில்லை. முன்னால் வந்தவர் பின்னால் வந்தவரை ஏற்று உதவ வேண்டும் என்றும் கூறுகின்றது.

மூஸா நபி முன்னால் வந்த தூதர். ஹாரூன் நபி அடுத்து வந்தவர். ஆனால், மூஸா நபிக்கு ஹாரூன் நபி பக்கபலமாக இருந்தார். முன்னால் வந்தவர்தான் இங்கு முன்னிலைப் படுத்தப்படுகின்றார். மூஸா நபி காலத்தில் ஹிழ்ர் நபி இருந்துள்ளார். அவர் மூஸா நபி கஷ்டப்பட்ட போதெல்லாம் ஓடி வந்து உதவவில்லை. அவர் தனியாக இருந்தார். மூஸா நபி தான் அனுப்பப்பட்ட சமூகத்திற்கு போதனை செய்தார். இதற்கு ஹிழ்ர் நபி வந்து உதவியதாக தகவலில்லை.

இப்றாஹீம் நபியும் லுத் நபியும் ஏக காலத்தில் வௌ;வேறு பிரதேசங்களில் பிரச்சாரம் செய்துள்ளனர். ஒருவரை ஒருவர் உண்மைப் படுத்தியிருக்கலாம். கூடவே இருந்து உதவி செய்ததாக இல்லை.

யாசீன் சூறா கூறும் செய்தியிலும் முதல் இரு தூதர்களையும் பின்னால் வந்த தூதர் உறுதிப்படுத்தியதாகத்தான் உள்ளது. முன்னைய தூதர் பின்னால் வந்த தூதருக்கு விஷேடப்படுத்தப்படவில்லை. இந்த வசனத்தில் பின்னால் வருபவரை ஏற்று அவருக்கு உதவ வேண்டும் என்பதற்கு அலி(ர), இப்னு அப்பாஸ்(ச) ஆகியோரின் விளக்கமே மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.

அல் குர்ஆனில் பல இடங்களில் உங்களிடம் உள்ளதை உண்மைப்படுத்த வந்த தூதர், வந்த வேதம் என்ற வார்த்தை நபியவர்களையும் அவர்கள் கொண்டு வந்த வேதத்தையும் குறிக்கப்பயன்படுத்தப்பட்டுள்ளது. (2:89,91,101, 6:92, 3:3, 4:47, 5:48, 46:30)

ஈஸா நபி மூஸா நபியை உண்மைப் படுத்துபவராக வந்தார். மூஸா நபியின் உம்மத்து அவரை ஏற்பது கட்டாயமாகும். முஹம்மத் நபி எல்லா நபிமார்களையும் உண்மைப்படுத்துபவராக வந்தார். எனவே, எல்லா நபிமார்களின் சமூகங்களும் அவரை நம்பி அவருக்குத் துணை நிற்பது கட்டாயமானதாகும். குறிப்பாக இந்த வசனம் வேதம் கொடுக்கப்பட்டவர்களை நோக்கியே முன்வைக்கப்பட்டது. அவர்களிடமும் அவ்வந்த தூதர் மூலம் உறுதி மொழி எடுக்கப்பட்டே உள்ளது.

‘இஸ்ராஈலின் சந்ததியினரே! நான் உங்கள் மீது புரிந்துள்ள எனது அருட் கொடையை நினைவு கூருங்கள். நீங்கள் எனது உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள்ளூ நான் உங்கள் உடன்படிக்கையை நிறைவேற்றுவேன். மேலும், என்னையே நீங்கள் அஞ்சுங்கள்.’

உங்களிடமுள்ள(வேதத்)தை உண்மைப் படுத்தக்கூடியதாக நான் இறக்கிய (இவ் வேதத்)தை நம்பிக்கை கொள்ளுங்கள். இதை நிராகரிப்பவர்களில் நீங்கள் முதன்மையானவர் களாகிவிட வேண்டாம். எனது வசனங்களை அற்ப விலைக்கு விற்காதீர்கள். இன்னும் என்னையே நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக!’ (2:40-41)

இந்த உறுதிமொழியின்படி முஹம்மது நபியை ஏற்க வேண்டும் என்று மூஸா மற்றும் ஈஸா நபியின் சமூகத்திற்கு இங்கு நினைவூட்டப்படுகின்றது. இந்த வசனத்தில் நீங்கள் உயிருடன் இருக்கும் போது முஹம்மத் நபி அனுப்பப்பட்டால் அவரை ஏற்று அவருக்கு உதவ வேண்டும். இதை உங்கள் உம்மத்துக்கும் போதிக்க வேண்டும் என்பதுதான் இந்த வசனத்தில் கூறப்படும் உடன்படிக்கையாகும். ஏனெனில், முஹம்மத் நபி இறுதி நபி. அவரது வேதம் அகில உலகுக்கும் உரியது. எல்லா நபிமார்களின் உம்மத்தும் அவரை ஏற்று அவருக்கு உதவுவதுதான் ஈடேற்றமான வழி என்பதையே இந்த வசனம் கூறுகின்றது என்பதே சரியானதாகும்.

இது பொதுவாக எல்லா நபிமார்களையும் குறிக்கும் என்ற கருத்தை சில அறிஞர்கள் வைத்திருந்தாலும் முஹம்மது நபி பற்றி இது பேசவில்லை என்று வாதிடுவதற்கு இன்று சிலர் முன்வைக்கும் வாதங்கள் அபத்தமானவை என்பதாலேயே இது குறித்து விரிவாக இங்கு விபரிக்கப்பட்டது என்பதைக் கவனத்திற் கொள்ளுங்கள்.
தொடரும்… இன்ஷா அல்லாஹ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.