மகாமு இப்றாஹீம் (அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 13)

மக்காவில் இருக்கும் அத்தாட்சிகளில் ஒன்றாக மகாமு இப்றாஹீமை அல்லாஹ் குறிப்பிடுகின்றான். மகாமு இப்றாஹீமில் இருந்து நீங்கள் தொழும் இடத்தை எடுத்துக் கொள்ளுமாறு சூறா பகராவில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

‘(கஃபா எனும்) இவ்வீட்டை மக்கள் ஒன்றுகூடுமிடமாகவும், அபயமளிக்கும் இடமாகவும் நாம் ஆக்கியதை (எண்ணிப் பாருங்கள்.) நீங்கள் மகாமு இப்றாஹீமைத் தொழும் இடமாக எடுத்துக் கொள்ளுங்கள். எனது வீட்டை தவாப் செய்வோருக்காகவும், தங்கியிருப் போருக்காகவும் ருகூஃ, சுஜூது செய்பவர்களுக்காகவும் நீங்கள் இருவரும் தூய்மைப்படுத்துங்கள் என்று இப்றாஹீமுக் கும் இஸ்மாஈலுக்கும் நாம் கட்டளை யிட்டோம்.’ (2:125)

மகாமு இப்றாஹீம் என்றால் என்ன என்பதை நபித்தோழர்கள் சரியாக விபரித்துள்ளனர். காலா காலமாக மக்கள் அதை அறிந்து வந்துள்ளனர். அது ஓர் அற்புதமாகவும் அடையாளச் சின்னமாகவும் உள்ளது. இப்றாஹீம், இஸ்மாயீல் ஆகிய இறைத் தூதர்கள் கஃபாவைக் கட்டும் போது கஃபாவின் கட்டிடம் உயர்ந்தது. அப்போது இப்றாஹீம் நபி ஒரு கல்லின் மீது ஏறி நின்று கட்டினார்கள். அந்தக் கல் அற்புதமாக அவருக்கு ஏறி இறங்கி உதவியது. அதில் இப்றாஹீம் நபியின் கால் தடம் பதிந்தது. அது இன்னும் அங்கே உள்ளது. இது பற்றி இப்னு அப்பாஸ்(ர) அவர்கள் இப்படிக் கூறுகின்றார்கள்.

‘இப்ராஹீம் (அ) அவர்களைக் கண்டதும் இஸ்மாயீல்(அ) அவர்கள் அவர்களை நோக்கி எழுந்து சென்றார்கள். (நெடுநாட்கள் பிரிந்து மீண்டும் சந்திக்கும் போது) தந்தை மகனுடனும் மகன் தந்தையுடனும் எப்படி நடந்து கொள்வார்களோ அப்படி நடந்து கொண்டார்கள் (பாசத்தோடும் நெகிழ்வோடும் வரவேற்றார்கள்). பிறகு இப்ராஹீம்(அ) அவர்கள் இஸ்மாயீலே! அல்லாஹ் எனக்கு ஒரு விடயத்தை (நிறைவேற்றும்படி) உத்தரவிட்டுள்ளான் என்று சொன்னார்கள். இஸ்மாயீல்(ர) அவர்கள் உங்கள் இறைவன் உங்களுக்கு கட்டளையிட்டதை நிறை வேற்றுங்கள் என்று சொன்னார்கள். இப்ராஹீம்(அ) அவர்கள் நீ எனக்கு அந்த விடயத்தை நிறைவேற்றுவதற்கு உதவுவாயா என்று கேட்க, இஸ்மாயீல்(அ) அவர்கள் உங்களுக்கு நான் உதவுகிறேன் என்று பதிலளித்தார்கள். இப்ராஹீம் (அ) அவர்கள் அப்படியென்றால் நான் இந்த இடத்தில் ஓர் இறையில்லத்தை (புதுப்பித்து) கட்ட வேண்டும் என்று எனக்கு அல்லாஹ் கட்டளையிட் டுள்ளான் என்று சொல்லிவிட்டு சுற்றியிருந்த இடங்களை விட உயரமாக இருந்த ஒரு மேட்டைச் சைகையால் காட்டினார்கள். அப்போது இருவரும் இறையில்லம் கஃபாவின் அடித்தள்ஙகளை உயர்த்திக் கட்டினார்கள். இஸ்மாயீல்(அ) அவர்கள் கற்களைக் கொண்டு வந்து கொடுக்கலானார்கள். இப்ராஹீம்(அ) அவர்கள் கட்டலானார்கள். கட்டடம் உயர்ந்து விட்டபோது இஸ்மாயீல் (அ) அவர்கள் (மகாமு இப்ராஹீம் என்று அழைக்கப்படும்) இந்தக் கல்லைக் கொண்டுவந்து இப்ராஹீம் (அ) அவர்களுக்காக வைத்தார்கள். இப்ராஹீம்(அ) அவர்கள் அதன் மீது (ஏறி) நின்று கஅபாவை கட்டலானார்கள்.’ (புகாரி: 3364)

இப்றாஹீம்(அ) நின்று கொண்டு கஃபா கட்டிய கல்தான் ‘மகாமு இப்றாஹீம்’ என இச்செய்தி தெளிவாகக் கூறுகின்றது. ஆரம்பத்தில் அந்தக் கல்லில் இப்றாஹீம் நபியின் கால் விரல் அடையாளங்கள் கூட பதிந்திருந்தன. ஆனால், மக்கள் அதைக் கரங்களால் தடவித் தடவி வந்ததால் அந்தத் தடயம் அழிந்து விட்டது.

‘நான் ‘மகாம்’ (இப்றாஹீம்)மைக் கண்டேன். அதில் அவருடைய கால் விரல்கள் உள்ளங்கால், குதிகால் என்பன பதிந்திருந்தன. மக்கள் தங்கள் கரங்களால் அதைத் தடவி வந்ததினால் அதன் அடையாளங்கள் அழிந்து விட்டன’ என அனஸ்(ர) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: அஹ்பாரு மக்கா:986)

அத்துடன் இன்று கஃபா செல்வோர் மகாமு இப்றாஹீம் ஒரு வட்டப் பேழையில் வைத்திருப்பதைப் பார்க்க முடியும். ஆரம்பத்தில் இது கஃபாவுடன் இணைந்தே இருந்தது. தவாபுக்கு வசதியாக இன்று உள்ள இடத்திற்கு மாற்றப்பட்டது.
(முஸ்னத் அல் பாரூக் லி இப்னி கதீர்: 319)

இந்த அறிவிப்புக்களின் மூலம் அரபிகள் காலா காலமாக அறிந்திருக்கும் செய்தியின் மூலம் மகாமு இப்றாஹீம் என்றால் அவர்களது கால் தடம் பதிந்த கல்லைத்தான் குறிக்கும் என்பது தெளிவாகின்றது!

அடுத்து இந்த வசனத்தில் மகாமு இப்றாஹீமில் இருந்து தொழும் இடத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என அல்லாஹ் கூறுகின்றான். இதை வைத்து நல்லடியார்கள் மற்றும் பெரியார்களின் அடக்கஸ்தலங்களை மகிமைப்படுத்தி அங்கிருந்து இபாதத் செய்வதை சிலர் சிறப்பான செயலாகக் காட்ட முனைகின்றனர். இது தவறாகும். இது மகாமு இப்றாஹிமில் இருந்து தொழும் இடத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்பதற்கு நபியவர்களது நடத்தைதான் விளக்கமாகும்.

நபி(ச) அவர்கள் தவாப் முடிந்த பின்னர் மகாமு இப்றாஹீமுக்குப் பின்னால் நின்று இரண்டு ரக்அத்துக்கள் தொழுவார்கள்.

இதை வைத்து நல்லடியார்கள் என நம்பப்படுகின்றவர்களது கப்ருகளைக் கட்டவும் முடியாது. அதைத் தொழும் இடங்களாக எடுத்துக் கொள்ளவும் முடியாது. இதை இஸ்லாம் தடுத்துள்ளது.

‘நபி(ச) அவர்கள் எழாமல்போன அந்த நோயின்போது ‘அல்லாஹ் யூதர்களைத் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக. அவர்கள் தங்களின் இறைத்தூதர்களின் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக்கி விட்டார்கள்’ என்றார்கள். நபி(ச) அவர்களின் இந்த அறிவிப்பு இல்லையானால் அவர்களின் அடக்கத்தலம் வெளிப்படையாக அமைக்கப் பட்டிருக்கும். ‘தம் அடக்கத் தலம் எங்கே வணக்கத் தலமாக்கப்பட்டுவிடுமோ’ என்று அவர்கள் அஞ்சினார்கள்’ என ஆயிஷா(ர) அறிவித்தார்.’ (புகாரி: 4441)

நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ் தலங்களாக எடுத்த யூதர்கள் சபிக்கப்பட்டார்கள் என்றால் நல்லவர்கள், பெரியார்களின் கப்ருகளை வணக்கஸ்தலமாக எடுத்துக் கொண்டவர்களும் சபிக்கப்பட்டவர்களே! என்பதில் சந்தேகம் கிடையாது.

அல்லாஹ்வின் கயிறு:

‘நீங்கள் அனைவரும் (குர்ஆன் எனும்) அல்லாஹ்வின் கயிற்றைப் பலமாக பற்றிப் பிடியுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள். நீங்கள் பகைவர்களாக இருந்தபோது உங்களது உள்ளங்களுக்கிடையில் இணைப்பை ஏற்படுத்தி, அவனது அருளினால் நீங்கள் சகோதரர்களாக மாறியதையும், நீங்கள் நரகக் குழியின் விளிம்பில் இருந்த போது, அதைவிட்டும் உங்களை அவன் காப்பாற்றி, உங்கள் மீது அல்லாஹ் புரிந்த அருட்கொடையை நினைவு கூருங்கள். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக இவ்வாறு அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகின்றான்.’
(3:103)

இந்த வசனத்தில் அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் ஒன்றிணைந்து பலமாகப் பிடித்துக் கொள்ளுமாறு ஏவப்பட்டுள்ளோம். அல்லாஹ்வின் கயிறு என்பது அல் குர்ஆனையும், சுன்னாவையுமே குறிக்கும். நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து குர்ஆனையும் சுன்னாவையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள், புரிந்து கொள்ளுங்கள், பிரிந்து விடாதீர்கள் என்று இங்கே ஏவப்படுகின்றது.

அல்லாஹ்வின் கயிறு என்பதை ஒற்றுமை எனும் கயிறு என சிலர் தவறாகப் புரிந்து கொண்டு ஒற்றுமைதான் முக்கியம் என்று கருதுகின்றனர்,

ஒற்றுமை முக்கியம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அந்த ஒற்றுமையை அல்லாஹ்வின் கயிறாகிய இஸ்லாத்தைப் பற்றிப் பிடிப்பதில் இருக்க வேண்டும். குர்ஆன் சுன்னாவைப் பற்றிப் பிடிப்பதன் மூலம் ஒற்றுமை சாத்தியமாகும் என்பதை இந்த வசனத்தில் அடுத்த பகுதி தெளிவுபடுத்துகின்றது. எதிரிகளாக இருந்த அந்த மக்கள் இந்தப் போதனையைப் பற்றிப் பிடித்ததன் மூலம் அவர்களது உள்ளங்களுக்கு இடையில் பிணைப்பு ஏற்பட்டது. அதன் மூலம் அவர்கள் சகோதரர்களாக மாறினார்கள். எனவே, ஒற்றுமை ஏற்பட ஒரே வழி அல்லாஹ்வின் கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடிப்பதுதான் என இந்த வசனம் வழிகாட்டுகின்றது.

எம்மதமும் சம்மதமா?

‘மனிதர்களுக்காகத் தோற்றுவிக்கப் பட்ட சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக் கின்றீர்கள். (ஏனெனில்) நீங்கள் நன்மையை ஏவுகின்றீர்கள். தீமையை விட்டும் தடுக் கின்றீர்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றீர்கள். வேதத்தை யுடையோரும் நம்பிக்கை கொண்டால் அது அவர்களுக்கு நல்லதாகும். அவர்களில் நம்பிக்கை கொள்வோரும் உள்ளனர். இன்னும், அவர்களில் அதிகமானோர் பாவிகளாகவே இருக்கின்றனர்.’ (3:110)

இந்த வசனம், பிரச்சாரம் செய்யச் சொல்கின்றது. அத்துடன் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் இவ்வேதத்தை ஏற்றுக் கொள்வது அவர்களுக்கு நல்லது என்றும் கூறுகின்றது.

‘ஈற்றில் மின்ஹுமுல் முஃமினூன்’ – அவர்களில் முஃமின்களும் உள்ளனர் என்று கூறுகின்றது. அரபு மொழியில் ‘ஆமன’ என்றால் நம்பிக்கை கொண்டான் என்பது அர்த்தமாகும். ‘அல் முஃமின்’ என்றால் நம்பிக்கை கொண்டவன் என்று அர்த்தம் கொள்ளலாம். நம்பிக்கை கொள்ளக் கூடியவர் என்றும் அர்த்தம் செய்யலாம். இந்த வசனத்தில் அவர்களில் முஃமின்களும் உள்ளனர் என்று கூறப்படுகின்றது.
இந்த வார்த்தையை அவர்களில் முஃமின்களும் உள்ளனர் என இறந்த காலத்தில் எடுப்பதாக இருந்தால் இரண்டு அர்த்தம் கொள்ளலாம். யூதர்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் இருந்து இந்த நபியை ஏற்று பகிரங்கமாக முஸ்லிமானவர்களும் உள்ளனர் என்றும் எடுத்துக் கொள்ளலாம். அடுத்து, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு தாம் முஸ்லிம் என்பதை மறைத்துக் கொண்டு அந்த சமூகத்திற்குள் வாழ்வோரும் உள்ளனர். எனவேதான் அவர்களில் முஃமின்களும் -நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர் என்று கூறப்படுகின்றது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

அடுத்து நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர் என்றும் அர்த்தம் செய்யலாம். நீங்கள் அழைப்புவிடுத்தால் அவர்களில் உங்கள் அழைப்பால் நம்பிக்கை கொள்ளக் கூடியவர்களும் உள்ளனர் என்று அர்த்தம் செய்யலாம்.

இந்த அடிப்படையில் அர்த்தம் கொள்ளும் போது தப்பில்லை. ஆனால், சிலர் எம்மதமும் சம்மதம் என்ற தவறான நிலைப்பாட்டிற்கு இதை ஆதாரமாகக் கொள்கின்றனர். ஒருவர் யூதராகவும், கிறிஸ்தவராகவும் இருந்து கொண்டே முஃமினாகவும் அதாவது சுவர்க்கத்திற் குரியவராகவும் இருக்கலாம். அதாவது அல்லாஹ்வை ஏற்று நபி(ச) அவர்களின் தூதுத்துவத்தை ஏற்காவிட்டாலும் அவரும் முஃமினுடைய அந்தஸ்தைப் பெறலாம் என்று எண்ணுகின்றனர். இது தவறானதாகும்.

இவர்கள் தமது தவறான அபிப்பிராயத்திற்கு வேறு சில வசனங்களையும் சான்றாக எடுக்கின்றனர்.

‘நிச்சயமாக நம்பிக்கை கொண்டோர் மற்றும் யூதர்கள், கிறிஸ்தவர்கள், ஸாபியீன்கள் (ஆகியோரில்) யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு, நல்லறமும் புரிந்தார்களோ அவர்களுக்குரிய கூலி அவர்களது இரட்சகனிடம் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.’
(2:62)
‘நிச்சயமாக நம்பிக்கை கொண்டோரிலும் மற்றும் யூதர்கள், ஸாபிஊன்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோரிலும் எவர்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு, நல்லறமும் செய்தார்களோ அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.’ (5:69)

இந்த வசனங்களில் இந்த நபி வருவதற்கு முன்னர் வாழ்ந்தவர்கள் ஈமானுடன் இருந்ததால் அவர்களுக்கு அச்சமில்லை என்றுதான் கூறப்படுகின்றது. முஹம்மத்(ச) வந்து குர்ஆனைப் போதித்ததன் பின்னர் அதை ஏற்காமல் தாம் இயேசுவை மட்டும் ஏற்போம் என்று கூறுவோர் இந்த ஈடேற்றத்திற் குரியவர்களாக ஆக முடியாது. இதை இதற்கு முந்தைய வசனம் உணர்த்தி நிற்கின்றது.

‘வேதத்தையுடையோரே! தவ்றாத்தையும், இன்ஜீலையும், உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்கு இறக்கிவைக்கப்பட்டதையும் நீங்கள் நிலைநாட்டுகின்றவரையில் நீங்கள் எ(ச் சத்தியத்)திலும் இல்லை என்று (நபியே!) நீர் கூறுவீராக! உமது இரட்சகனிடமிருந்து உமக்கு இறக்கிவைக்கப்பட்டது அவர்களில் அதிகமானோருக்கு வரம்பு மீறலையும் நிராகரிப்பையுமே நிச்சயமாக அதிகப்படுத்தி யிருக்கின்றது. எனவே, நிராகரிப்பாளர்களான இக்கூட்டத்தார் மீது நீர் கவலை கொள்ளாதீர்.’
(5:68)

இந்த வசனம் நபி(ச) அவர்களுக்கு இறக்கப்பட்டதையும் ஏற்காத பட்சத்தில் ஈடேற்றம் இல்லை என்றே கூறுகின்றது.

எனவே, யூத கிறிஸ்தவர்களிலும், முஃமின்கள் இருக்கின்றார்கள் என்றால் அவர்கள் யூதர்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் இருந்து கொண்டே சுவர்க்கத்திற்குரிய முஃமின்கள் அவர்களில் உள்ளனர் என்று அர்த்தம் எடுக்க முடியாது. நீங்கள் பிரச்சாரம் செய்யுங்கள். ஈமான் கொள்ளக் கூடியவர்கள் அவர்களில் உள்ளனர். அவர்கள் இஸ்லாத்தின் பால் வருவார்கள் என்றே இந்த வசனம் கூறுவதாக அர்த்தம் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.