ஜமாஅத்துத் தொழுகை [பிக்ஹுல் இஸ்லாம்-31]

பிக்ஹுல் இஸ்லாம் – 31

ஜமாஅத்துத் தொழுகை

ஜமாஅத்துத் தொழுகை என்பது தனியான ஒரு தொழுகை கிடையாது. ஐவேளைத் தொழுகை மற்றும் இஸ்லாம் அங்கீகரித்த பெருநாள் மற்றும் கியாமுல் லைல் போன்ற தொழுகைகளைத் தனியாகத் தொழாமல் அணியாக – கூட்டாகத் தொழுவதையே இது குறிக்கும். ஐவேளைத் தொழுகைகளை ஒரு இமாமைப் பின்பற்றி கூட்டாகத் தொழுவதை இஸ்லாம் பெரிதும் வலியுறுத்திப் பேசியுள்ளது. ஜமாஅத்துத் தொழுகையைச் சிறப்பித்துப் பேசும் அதே வேளை அதைப் புறக்கணிப்பதைக் கடுமையாகக் கண்டித்தும் உள்ளது.

ஐவேளைத் தொழுகையைக் கூட்டாகத் தொழுவது இஸ்லாத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாகும். இதன் மூலம் முஸ்லிம்களுக்கு மத்தியில் பரஸ்பரம்-புரிந்துணர்வு, அறிமுகம் மற்றும் நட்பு, நேசம், நல்லுறவு என்பன ஏற்படுகின்றன. அத்துடன் அந்தக் காலத்தில் வேறூன்றிக் காணப்பட்ட சாதி வேறுபாட்டை சமாதி கட்டியதில் ஜமாஅத்துத் தொழுகைக்குப் பெரும் பங்குள்ளது. ஜமாஅத்துத் தொழுகைக்காக முஸ்லிம்கள் அணியணியாக நிற்பது மலக்குகளின் அணிக்கு ஒப்பாகப் போற்றப்படுகின்றது.

இஸ்லாம் முஸ்லிம் உம்மத்தின் ஒற்றுமையையும் உறவையும் பலப்படுத்தும் விதத்தில் சில ஒன்றுகூடல்களை ஏற்படுத்தியுள்ளது.

தினமும் ஐவேளை பள்ளியில் தொழுகைக்காக ஒன்றுகூடல்
வாரம் ஒரு முறை ஊரிலுள்ள மக்கள் அனைவரும் ஜும்ஆவில் ஒன்று கூடல்
வருடத்திற்கு இரு முறை பெருநாள் தொழுகைக்காக ஒன்று கூடல்
வருடத்திற்கு ஒரு முறை உலக அளவில் அரபாவில் ஒன்று கூடல்
கால, சூழல் மாற்றங்களின் போது ஊர் மக்கள் ஒன்று கூடல்
(உதாரணமாக, வரட்சியின் போது மழை வேண்டித் தொழுவதற்காகவும், சூரிய சந்தி கிரகணங்களின் போது கிரகணத் தொழுகைக்காக ஒன்று கூடுவதையும் குறிப்பிடலாம்.)
இந்த ஒன்று கூடல்களில் ஐவேளைத் தொழுகையையும் ஜமாஅத்தாக கூட்டாக நிறைவேற்றுவதற்காக ஒன்று கூடுவதும் ஜமாஅத்தாகத் தொழுவதும் இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட வழிமுறையாகும்.

ஜமாஅத்துத் தொழுகையின் சிறப்பு

தனியாகத் தொழாமல் கூட்டாகத் தொழுவதை நபி(ச) அவர்கள் பெரிதும் சிறப்பித்துப் பேசியுள்ளார்கள்.

அதிக நன்மைகளை ஈட்டித் தரும்:
இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: “தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்” என அப்துல்லாஹ் இப்னு உமர்(வ) அறிவித்தார்.
(புகாரி: 645, திர்மிதி:215, நஸாஈ: 837)

இந்த அறிவிப்பில் தனித்துத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது 27 மடங்கு அதிகம் நன்மை நல்கக் கூடியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றும் சில அறிவிப்புக்களில் 25 மடங்கு என்றும் இடம்பெற்றுள்ளது.

இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ‘தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது 25 மடங்கு சிறந்ததாகும்” என அபூ ஸயீதுல் குத்ரீ(வ) அறிவித்தார்”
(புகாரி: 646)

எனவே, தனியாகத் தொழுவதை விட அணியாகத் தொழுவது பல மடங்கு அதிக நன்மைகளை ஈட்டித் தரக் கூடியதாகும்.

பாவங்கள் மன்னிக்கப்படும்:
“யாராவது வுழூச் செய்து, அதை நிரப்பமாகச் செய்து பின்னர் பர்ழான தொழுகையைத் தொழுவதற்காக நடந்து சென்று, அதை மக்களோடு அல்லது ஜமாஅத்துடன் அல்லது மஸ்ஜிதில் தொழுதால் அவரது பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான்” என நபி(ச) அவர்கள் கூற தான் கேட்டதாக உஸ்மான் (வ) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(நூல்: முஸ்லிம் 13-232, நஸாஈ- 856)

அனஸ் இப்னு மாலிக்(வ) அறிவித்தார்: “நான் நபி(ச) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தேன். அப்போது ஒருமனிதர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றை செய்துவிட்டேன். எனவே, என் மீது தண்டனையை நிறைவேற்றுங்கள்’ என்றார். அவர் செய்த குற்றம் குறித்து அவரிடம் நபி(ச) அவர்கள் ஏதும் விசாரிக்கவில்லை. பிறகு, தொழுகை நேரம் வந்தபோது அவர் நபி(ச) அவர்களுடன் தொழுதார். நபி(ச) அவர்கள் தொழுகையை முடித்தபோது அவர்களை நோக்கி அந்த மனிதர் எழுந்து வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்துவிட்டேன். எனவே, அல்லாஹ்வின் வேதத்திலுள்ள தண்டனையி)னை எனக்கு நிறைவேற்றுங்கள்’ என்றார். நபி(ச) அவர்கள், ‘எம்முடன் சேர்ந்து நீர் தொழுதீர் அல்லவா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம் (தொழுதேன்)’ என்றார். நபி(ச) அவர்கள், ‘அவ்வாறாயின் அல்லாஹ் “உம்முடைய பாவத்தை அல்லது உமக்குரிய தண்டனையை” மன்னித்துவிட்டான்’ என்றார்கள்.”
(புகாரி: 6823, முஸ்லிம்: 42-276)

எண்ணற்ற நன்மைகள்:
ஜமாஅத்தாகத் தொழுவது, முதல் வரிசையில் தொழுவது குறிப்பாக இஷா மற்றும் சுபஹ் தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுவது போன்றவற்றுக்கு எண்ணற்ற நன்மைகள் உள்ளதாக நபி(ச) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: “பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும் முதல் வரிசையில் நின்று (தொழுவதற்குரிய) நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக் குலுக்கியெடுக்கப்படும் நிலையேற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர். தொழுகையை ஆரம்ப நேரத்தில் நிறை வேற்றுவதிலுள்ள நன்மையை அறிவார்களானால் அதற்காக விரைந்து செல்வார்கள். ஸுபஹ் தொழுகையிலும் இஷா (ஜமாஅ)த் தொழுகை யிலும் உள்ள நன்மையை அறிவார்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள்” என அபூஹுரைரா(வ) அறிவித்தார்.
(புகாரி: 615, 2689, முஸ்லிம்: 129-437)

ஜமாஅத்துத் தொழுகையின் சட்டம்

ஜமாஅத்துத் தொழுகையின் சட்டம் என்ன என்பதை ஆணுக்கு வேறாகவும் பெண்ணுக்கு வேறாகவும் நோக்க வேண்டியுள்ளது.

ஆணுக்கான சட்டம்:
ஜமாஅத்துத் தொழுகை ஆணுக்கு கட்டாயக் கடமையா இல்லையா என்பது குறித்து அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். சிலர் கட்டாயமானது என்று கூறுகின்றனர். மற்றும் சிலர் சுன்னா என்று கூறுகின்றனர். ‘பர்ழ்’ – கட்டாயம் என்றால் ‘பர்ழ் அல் ஐன்’ ஒவ்வொருவர் மீதும் கட்டாயக் கடமை என்றும், பர்ழ் அல் கிபாயா, சிலர் செய்தால் மற்றவர்கள் மீதான கடமை நீங்குகின்றது என்றும் சிலர் கூறுகின்றனர். சுன்னா எனக் கூறுவோரும் சுன்னா என்றும், சுன்னா முஅக்கதா (கட்டாயமாக வலியுறுத்தப்பட்ட சுன்னா) என்றும் கூறுகின்றனர். இவ்விரு கூற்றுக்களுக்கான ஆதாரங்களை அலசுவோம்.

கட்டாயக் கடமை:
ஜமாஅத்துத் தொழுகை கட்டாயமானது எனக் கருதும் அறிஞர்கள் பின்வரும் ஆதாரங்களை அதற்கு முன்வைக்கின்றனர்.

‘தொழுகையை நிலைநாட்டி, ஸகாத் தையும் கொடுத்து, ருகூஃ செய்வோருடன் நீங்களும் ருகூஃ செய்யுங்கள்’ (2:43)

நீங்கள் ருகூஃ செய்பவர்களுடன் ருகூஃ செய்யுங்கள் எனும் போது இங்கே கூட்டாகத் தொழுங்கள் என ஏவப்பட்டுள்ளது. ஏவல் என்பது கடமையைத்தான் குறிக்கும்.
‘(நபியே) நீர் அவர்களுடன் (போர்க் களத்தில்) இருக்கும் போது அவர்களுக்குத் தொழுகை நடத்தினால் அவர்களில் ஓர் அணியினர் உம்முடன் தமது ஆயுதங்களை ஏந்தியவர்களாக (தொழுவதற்கு) நிற்கட்டும். அவர்கள் சுஜூது செய்து விட்டால் (அணியிலிருந்து விலகி) உங்களுக்குப் பின்னால் இருக்கட்டும். தொழாத மற்ற அணியினர் வந்து உம்முடன் தொழட்டும். அவர்கள் எச்சரிக்கையாக இருப்பதுடன் தமது ஆயுதங்களையும் எடுத்துக் கொள்ளட்டும். நீங்கள் உங்கள் ஆயுதங்களிலும் உங்கள் பொருட்களிலும் கவனக்குறைவாக இருந்தால் உங்களை ஒரே தடவையில் தாக்கிவிட நிராகரிப் பாளர்கள் விரும்புகின்றனர். மழையின் காரணமாக உங்களுக்குச் சிரமம் ஏற்பட்டால், அல்லது நீங்கள் நோயாளிகளாக இருந்தால் உங்கள் ஆயுதங்களை வைத்து விடுவதில் உங்கள் மீது குற்றமில்லை. ஆனாலும், நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையைத் தயார் செய்துள்ளான்.’ (4:102)அச்ச நேரத் தொழுகை பற்றி இந்த வசனம் பேசுகின்றது. போர் போன்ற அச்ச நேரத்தில் கூட ஜமாஅத்தாகத் தொழ வேண்டும் என்றால், இது கூட்டுத் தொழுகை கட்டாயமானது என்பதைத்தான் உணர்த்துகின்றது. அத்துடன் அச்ச நேரத்தில் தொழுகையின் ரக்அத்தைக் குறைத்துக் கொள்ளலாம், கிப்லாவை முன்னோக்கத் தேவையில்லை எனும் போது கூட்டுத் தொழுகையை இஸ்லாம் அந்த நேரத்திலும் வலியுறுத்துவது கூட்டுத் தொழுகை கடமை என்பதைத்தான் எடுத்துக் காட்டுகின்றது.
இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ‘என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! விறகுகளைக் கொண்டு வந்து சுள்ளிகளாக உடைக்கும்படி நான் உத்தரவு பிறப்பித்துவிட்டு, பின்னர் தொழுகைக்காக அறிவிப்புச் செய்யும்படி ஆணையிட்டு, பின்னர் மக்களுக்குத் தொழுகை நடத்தும்படி ஒருவருக்குக் கட்டளையிட்டுவிட்டு, (கூட்டுத் தொழுகைக்கு வராமல் இருக்கும்) மனிதர்களைத் தேடிச் சென்று, அவர்களின் வீடுகளை அவர்களுடன் சேர்த்து எரித்துவிட வேண்டுமென நான் எண்ணியதுண்டு. என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவருக்கு சதைத் திரட்சியுள்ள ஓர் எலும்போ அல்லது ஆட்டின் இரண்டு குளம்புகளுக்கிடையேயுள்ள இறைச்சித் துண்டுகளோ கிடைக்கும் என்றிருந்தாலும் கூட அவர் ‘இஷா’ தொழுகையில் கலந்து கொள்வார்.’
முஹம்மத் இப்னு சுலைமான்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ‘மிர்மாத்’ என்பது ஆட்டின் குளம்புகளுக்கிடையே உள்ள இறைச்சியைக் குறிக்கும். இது (வாய்பாட்டில்) ‘மின்ஸாத்’ மற்றும் ‘மீளாத்’ போன்றதாகும். இதிலுள்ள ‘மீம்’ எனும் எழுத்துக்கு ‘இகர” அடையாளம் (‘கஸர்’) உண்டு.’ (புகாரி: 7224)

இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள கடமையான வார்த்தையைப் பார்க்கும் போது ஜமாஅத்துத் தொழுகை அனைவர் மீதும் கட்டாயக் கடமையில்லை என்றால் நபி(ச) அவர்கள் இப்படிக் கூறியிருக்கமாட்டார்கள். எனவே, ஜமாஅத்துத் தொழுகை கட்டாயக் கடமை என்று கூறுகின்றனர்.

மாற்றுக் கருத்துடைய அறிஞர்களின் ஆதாரங்களையும் இந்த ஹதீஸிற்கு அவர்கள் கூறும் விளக்கங்களையும் இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் நோக்குவோம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.