ஈஸா நபியின் அற்பதப் பிறப்பு குளோனிங் ஆகுமா? | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 06 | கட்டுரை.

ஈஸா நபியின் அற்புதப் பிறப்பு குளோனிங் ஆகுமா?

‘மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்துள்ள ஒரு வார்த்தையைக் கொண்டு உமக்கு (ஒரு குழந்தையை வழங்க) நன்மாராயம் கூறுகின்றான். அதன் பெயர் மர்யமின் மகன் ஈஸா அல்மஸீஹ் என்பதாகும். அவர் இம்மையிலும், மறுமையிலும் உயர்ந்த அந்தஸ்துடையவராகவும் (அல்லாஹ்வுக்கு) நெருக்கமானவர்களில் உள்ளவராகவும் இருப்பார்’ என வானவர்கள் கூறியதை (எண்ணிப் பாருங்கள்.)’

‘மேலும் அவர் தொட்டிற் பருவத்திலும், வாலிபப் பருவத்திலும் மக்களுடன் பேசுவார். இன்னும் (அவர்) நல்லவர்களில் உள்ளவருமாவார் (என்றும் கூறினர்.)’

‘(அதற்கு மர்யம்) ‘என் இரட்சகனே! எந்த ஆடவரும் என்னைத் தீண்டாத நிலையில் எனக்கு எவ்வாறு குழந்தை உண்டாகும்!’ என்று கேட்டார். ‘அவ்வாறே அது’ (நடக்கும்) என்று அவன் கூறினான். அல்லாஹ், தான் நாடுவதைப் படைப்பான். அவன் ஒரு விடயத்தைத் தீர்மானித்து விட்டால் அதற்கு ‘குன்’ (ஆகுக!) என்று கூறுவதுதான், உடனே அது ஆகிவிடும்.’
(3:45-47)

இந்த வசனங்கள் ஈஸா நபியின் அற்புதப் படைப்பு பற்றிப் பேசுகின்றன. ஆண் தொடர்பு இல்லாமலேயே கற்பொழுக்கம் நிறைந்த அன்னை மர்யம் அவர்களுக்கு ஈஸா(அ) அவர்கள் அற்புதமாகப் பிறந்தார்கள். அவர் பிறந்ததும் அற்புதமாகப் பேசினார். இவை பற்றி குர்ஆனில் மற்றும் பல இடங்களில் விரிவாக விபரிக்கப்பட்டுள்ளது.

குளோனிங் கண்டுபிடிப்பு:
குளோனிங் முறையில் டாலி ஆடு ஈன்றெடுக்கப்பட்டது. ஒருவரின் அல்லது ஒரு உயிரினத்தின் மரபணு மூலமாக மற்றொரு உயிரை உற்பத்தி பண்ணி ஈன்றெடுக்கச் செய்யும் முறையே குளோனிங் என்று கூறப்படுகின்றது. இந்த மரபனு மூல குளோனிங் ஆடு ஈன்றெடுக்கப்பட்ட போது விஞ்ஞானம் ஆன்மீகத்தை வென்றுவிட்டதாகவும் மனிதன் கடவுள் தன்மை பெற்றுவிட்டதாகவும் விஞ்ஞான விரும்பிகளால் பார்க்கப்பட்டது. மரபணு எனும் மூலம் அல்லாஹ்வினால் படைக்கப்பட்டது. அதன் மூலம்தான் இவர்கள் குளோனிங் செய்கின்றார்கள் என்பதை இந்த மேதாவிகள் மறந்துவிட்டனர்.

இப்படி குளோனிங் செய்யப்பட்ட உயிரினம் எதிலிருந்து மரபணு பெறப்பட்டதோ அந்த உயிரினத்தின் தோற்றத்தை அப்படியே ஒத்ததாக இருக்கும். இதே போல் அதன் முதிர்ச்சியும் அதன் மரபணு எடுக்கப்பட்ட உயிரினத்தின் முதிர்ச்சியை ஒத்ததாக இருக்கும்.

குளோனிங் பற்றி பரவலாகப் பேசப்பட்ட போது, இஸ்லாத்தை விஞ்ஞானபூர்வமாக விளங்க வைக்கும் அறிவு மேதை தான் எனும் தோரணையில் PJ அவர்கள் ஈஸா நபியின் பிறப்பை குளோனிங் ஆக சித்தரித்து எழுதியும் பேசியும் வந்தார். இது தவறான அணுகுமுறை என்பதுடன் அவர் வழங்கிய விளக்கம் குழப்பம் நிறைந்ததாகவும் உள்ளது.

இது ஒரு நோய்!:
பன்றியின் இதயம் மனித இதயத்திற்கு ஒத்ததாக இருக்கின்றது என்ற ஒரு கருத்து முன்வைக்கப்பட்ட போது, இவர் குர்ஆனில் ‘லஹ்முல் ஹின்ஸீர்’ பன்றியின் மாமிசம்தான் தடை செய்யப்பட்டுள்ளது. பன்றியின் இதயத்தை மனிதனுக்குப் பூட்ட தேவைப்பட்டால் பூட்டலாம். பன்றியின் மாமிசம்தான் தடை, ஏனைய பகுதிகளைப் பேணுதலுக் காகத் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று எழுதினார். இது தவ்ஹீத் பிரச்சாரத்தில் பெரிய பாதிப்பையே ஏற்படுத்தியது.

பன்றியின் மாமிசம் ஹராம் என்று கூறும் வசனத்திலேயே நிர்ப்பந்தத்திற்கு சலுகை உண்டு என்று கூறப்படுகின்றது. இதயம் பூட்டும் நிலை வந்தால் அது பெரிய நிர்ப்பந்தம்தான் என்றிருக்கும் போது தேவையற்ற ‘லஹ்முல் ஹின்ஸீர்’ பன்றியின் இறைச்சி என்ற பதத்தை வைத்து ஆய்வு என்ற பெயரில் அரைப்படிப்பு செய்ததால் பன்றியின் மாமிசம் அல்லாத பகுதிகளை பேணுதலுக்காகத் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று தவறான விளக்கத்தை அளிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியது.

உலக மக்களெல்லாம் பன்றியின் மொத்தப் பகுதியும் ஹராம் என்பதில் ஏகோபித்த நிலையில் இருக்க, பேணுதலுக்காகத் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்ற மௌட்டீக பத்வா விடும் நிலை ஏற்பட்டது.

மற்றவர்களைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் தான்தோன்றித்தனமாகக் கருத்துக் கூறுவது, ஏதாவது விஞ்ஞானம் என்று வந்துவிட்டால் விழுந்தடித்துக் கொண்டு இஸ்லாத்தின் நிலைப்பாட்டை விஞ்ஞானத்திற்கு எற்ப வளைக்க முற்படுவது போன்ற வழிகெட்ட போக்குகளால்தான் இந்நிலை ஏற்பட்டது.

குர்ஆனையும், சுன்னாவையும் ஸஹாபாக்களின் விளக்கத்திற்கு ஏற்ப புரிந்து கொள்ள முற்படுவதை வழிகேடு என வாய் கிழியக் கத்தும் இவர்களுக்கு விஞ்ஞானிகள் நிலைப்பாடு களுக்கு ஏற்ப குர்ஆனை விளங்கவும், விளங்க வைக்கவும் முற்படுவது வழிகேடு என்பது புரியாமல் போனதா? அல்லாஹ்வின் தூதரின் தோழர்களான ஸஹாபாக்களை விட நாஸ்திகப் பார்வை கொண்ட விஞ்ஞானிகள் இவருக்கு மேலாகிவிட்டனரோ!

குளோனிங்:
குளோனிங் பற்றி பரவலாகப் பேசப்பட்ட போது இஸ்லாமும் குளோனிங் பற்றிப் பேசியுள்ளது. அது சாத்தியம் என்று கூறியுள்ளது என்று விஞ்ஞான விளக்கமளிக்க இவர் முற்பட்டார்.

குளோனிங் என்பது அல்லாஹ்வின் படைப்பாற்றலுக்கு நிகரானதன்று என்று இவர் விளங்க வைத்திருக்கலாம். அதை விட்டு விட்டு அல்லாஹ் குளோனிங் முறையில்தான் ஈஸா(அ) அவர்களைப் படைத்தான் என விபரித்தார். அதாவது, குளோனிங் செய்தவர்கள் இறைவனின் ஆற்றலுக்கு நிகராகவில்லை என்பதை விபரிப்பதை விட்டு விட்டு அல்லாஹ்வையே குளோனிங் செய்ததாகக் கூறி விஞ்ஞானிகள் நிலைக்கு அல்லாஹ்வை இறக்க முற்பட்டுள்ளார்.

அல்லாஹ்வுக்கு இலகுவானது:
மர்யம்(அ) அவர்களிடம் மலக்குகள் வந்து உங்களுக்கு ஒரு ஆண் குழந்தை கிடைக்கும் என்று கூறிய போது எந்த ஆணும் என்னைத் தீண்டாத நிலையல் எனக்கு எப்படி குழந்தை கிடைக்கும் என அவர்கள் கேட்கின்றார்கள்.

அதற்கு வானவர்,

”அது அவ்வாறுதான். அது எனக்கு இலகுவானதாகும் என உமது இரட்சகன் கூறுகின்றான். அவரை மக்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், எம்மிடமிருந்துள்ள அருளாகவும் நாம் ஆக்குவதற்காகவுமே (இவ்வாறு செய்துள்ளோம்.) இது விதிக்கப்பட்டு விட்ட ஒரு காரியமாகிவிட்டது என்று (ஜிப்ரீல்) கூறினார்.’
(19:21)

என்று கூறுகின்றார்.

இதைக் கூறி PJ அற்புதமான ஒரு வாதத்தை முன்வைக்கின்றார்.

அது எனக்கு இலகுவானது என அல்லாஹ் கூறுகின்றான். எனக்கு இலகு என்றால் உங்களுக்கு கஷ்டமானது. ஆனால், முடியாதது அல்ல. முயற்சித்தால் முடியும் என்ற தோரணையில் ஒரு வரட்டு வாதத்தை முன்வைத்து, ‘ஆண்-பெண் துணை இல்லாமலேயே மரபணு மூலம் குழந்தையை உற்பத்தி செய்யலாம்’ என குர்ஆன் கூறுவதாக வாதிட்டார்.

மரணித்த பின்னர் மனிதனை அல்லாஹ் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவது பற்றி அல்லாஹ் கூறும் போது பின்வருமாறு கூறுகின்றான்.

‘அவனே முதன் முறையாகப் படைத்து, பின்னர் அதனை மீட்டுகின்றான். அது அவனுக்கு மிக இலகுவானது. வானங்களிலும் பூமியிலும் உயரிய பண்பு அவனுக்கே உரியதாகும். அவன் யாவற்றையும் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.’ (30:27)

முதலில் படைத்தவனும் அவனே! மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவதும் அவனே! இது அவனுக்கு மிக எளிது என்றால் உங்களுக்குக் கஷ்டமானது. முடியாதது என்று கூறு முடியாது. முயற்சித்தால் முடியும் என்று கூறி நீங்களும் முயற்சித்தால் மரணித்தவர்களை உயிர் கொடுத்து எழுப்ப முடியும் என்று சிந்தித்தால் இவரது விளக்கம் எவ்வளவு வில்லங்கமானது என்பது விளங்கும்.

சிந்திக்கத் தூண்டுவதால் மனிதனுக்குச் சாத்தியமானது:

PJ தனது குர்ஆன் தமிழாக்கம் விளக்கப் பகுதி 415 இல் குளோனிங் சாத்தியமே என்ற தலைப்பில் பின்வருமாறு கூறுகின்றார்.

‘ஈஸா நபியவர்கள் ஆணின் உயிரணுவின்றி கன்னித் தாய் மூலம் இறைவனின் தனிப்பெரும் ஆற்றலால் பிறந்தார்கள். இந்த நிகழ்ச்சியை வெறும் வரலாறாக மட்டும் திருக்குர்ஆன் கூறாமல் இது ஓர் அத்தாட்சியாக உள்ளது என்றும் கூறி இது குறித்து சிந்திக்கத் தூண்டுகின்றது. மனிதர்கள் முயற்சி செய்தால் இது சாத்தியமாகும் என்பது இதிலிருந்து தெரிகின்றது. இல்லாவிட்டால் இதைச் சிந்திக்கத் தூண்டுவதில் பொருள் இருக்காது.’

என்று தொடர்கின்றார். ஈஸா(அ) அவர்கள் மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சி என்று குர்ஆன் கூறுகின்றது. அத்தாட்சிகள் அனைத்தும் சிந்திக்கத்தக்கவை அல்ல. நம்பவேண்டியவையும் உள்ளன. இருப்பினும் குர்ஆன் சிந்திக்கத் தூண்டுகின்றது. இதிலிருந்து மனிதர்கள் முயற்சி செய்தால் இது போல் செய்ய முடியும் என்று விளங்குகிறது. இல்லையென்றால் சிந்திக்கத் தூண்டுவதில் அர்த்தம் இல்லை என்று இவரது வாதங்கள் எவ்வளவு அற்பத்தனமானவை என்பதை அவதானிக்க வேண்டும்.

‘அவர்கள் நின்ற நிலையிலும், அமர்த வர்களாகவும், தங்களின் விலாப் புறங்களின் மீது (சாய்ந்தவர்களாகவு)ம் அல்லாஹ்வை நினைவு கூருவார்கள். மேலும், வானங்கள் மற்றும் பூமியின் படைப்பு பற்றிச் சிந்தித்து ‘எங்கள் இரட்சகனே நீ இவற்றை வீணாகப் படைக்கவில்லை. நீ தூய்மையானவன். ஆகவே, நீ எங்களை நரக வேதனையிலிருந்து பாதுகாப் பாயாக!’ (என்றும் பிரார்த்திப்பார்கள்.)’ (3:191)

வானம், பூமியின் படைப்பில் அத்தாட்சி இருப்பதாக குர்ஆன் கூறுகின்றது. அது குறித்து சிந்திக்கத் தூண்டுகின்றது. மனிதன் முயற்சித்தால் வானம், பூமியைப் படைக்கலாம். இல்லாவிட்டால் இது குறித்து சிந்திக்கத் தூண்டுவதில் அர்த்தம் இல்லை என இவர் வாதிப்பாரா?

குர்ஆன், வானம்-பூமி, இரவு-பகல் மற்றும் மலைகள் போன்ற பல படைப்புக்கள் குறித்து சிந்திக்கத் தூண்டுகின்றது. இவரது வரட்டு வாதத்தின் அடிப்படையில் அந்த வசனங்களை நோக்கினால் என்ன நிலை ஏற்படும் என்று சிந்தித்துப் பாருங்கள்!

ஊதப்பட்டது மரபணுவா?:
மர்யம்(அ) அவர்களிடம் வானவர் ரூஹ் ஊதினார் என்று குர்ஆன் கூறுகின்றது. மரபணு ஊதப்பட்டதாக மடத்தனமாக வாதிக்கப்படுவதை கவனியுங்கள்.

’25 வயதுடைய ஒருவரது மரபணுவை எடுத்து குளோனிங் செய்து ஒரு குழந்தையை உருவாக்கினால் அது வடிவத்தில் குழந்தையாக இருந்தாலும் அதன் மரபணுவைப் பொருத்த வரை வயது 25 ஆகும். எனவே, 25 வயதுடையவனின் அறிவும், சிந்தனையும் அந்தக் குழந்தைக்கு இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு. இந்த விபரங்களை கவனத்தில் வைத்து ஈஸா(அ) அவர்களின் பிறப்பு பற்றி குர்ஆன் கூறுவதை சிந்தித்துப் பார்ப்போம்.’

இந்த முன்னோட்டம் அவர் கூறும் எல்லா வாதங்களுக்கும் அவசியமானது என்பதால் இதை மனதில் பதிய வைத்துக் கொண்டு அவரது அடுத்த பகுதிகளை நோக்கி நாம் நகர்வோம்.

‘தந்தையில்லாமல் ஒரு குழந்தையை இறைவன் உருவாக்க நாடினால் ‘ஆகு’ என்று சொல்லியே அவனால் உருவாக்க முடியும். அப்படியிருந்தும் ஒரு வானவரை மனித வடிவில் அனுப்பி அந்த வானவர் ஈஸா(அ) அவர்களின் தாயாரான ­மர்யமிடம் ஊதினார் எனக் கூறப்படுகின்றது. இதன் மூலம் இறைவனின் ஆற்றலால் உருவாக்கப்பட்ட மரபணுவை அந்த வானவர் மர்யம்(அ) அவர்களிடம் ஊதியிருக்கலாம்….’

ஈஸா(அ) அவர்கள் குளோனிங் முறையில் படைக்கப்பட்டார்கள் என நிரூபிக்க குர்ஆனுக்கு மாற்றமாக இப்படி யூகிக்கின்றார்.

வானவர் மர்யமிடம் ஊதினார் என மொட்டையாகக் குர்ஆன் கூறவில்லை. ரூஹ் ஊதப்பட்டது என்று தெளிவாக குர்ஆன் கூறும் போது அதை அப்படியே மறைத்துவிட்டு ஊதப்பட்டது மரபணு என மடத்தனமாக மாற்ற முயற்சிக்கின்றார்.

‘தனது கற்பைக் காத்துக் கொண்ட (மர்யம் என்ப)வரையும் (நபியே! நீர் எண்ணிப் பார்ப்பீராக!) நமது உயிரிலிருந்து அவரில் நாம் ஊதினோம். மேலும், அவரையும், அவரது மகனையும் அகிலத்தாருக்கு அத்தாட்சி யாக்கினோம்.’ (21:91)

‘இன்னும் இம்ரானின் மகள் மர்யமையும் (உதாரணமாகக் கூறுகின்றான்.) அவள் தனது கற்பைக் காத்துக் கொண்டாள். எமது ‘ரூஹி’ல் இருந்து அதில் நாம் ஊதினோம். அவள் தனது இரட்சகனின் வார்த்தைகளையும், அவனது வேதங்களையும் உண்மைப்படுத்தினாள். மேலும், அவள் வழிப்பட்டு நடப்போரில் ஒருவராகவும் இருந்தாள்.’ (66:12)

ஊதப்பட்டது ரூஹ் எனத் தெளிவாக குர்ஆன் குறிப்பிடும் போது ஏன் இதை அவர் மறைக்க முயற்சிக்கின்றார். அதை ஏன் மரபணு என மாற்ற முயற்சிக்கின்றார்?

மர்யம்(அ) அவர்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதப் படைப்பிலும் மலக்கு அனுப்பப் பட்டு ரூஹ் ஊதப்படுகின்றது. மர்யம்(அ) அவர்களிடம் மலக்கு மனித ரூபத்தில் வந்துள்ளார் அவ்வளவுதான் வித்தியாசமாகும்.

சிசு கருவறையில் இருப்பது பற்றி நபி(ச) அவர்கள் குறிப்பிடும் போது நான்காம் மாதம் ரூஹ் ஊத மலக்கு அனுப்பப்படுவதாக நபி(ச) அவர்கள் நவின்றுள்ளார்கள்.

பின்னர் வானவர் அனுப்பப்பட்டு அவர் அதில் ரூஹை ஊதுவார்….’
(ஸஹீஹ் முஸ்லிம்:2036/4)

இது எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது. ஆனால், அல்லாஹ் வானவரை அனுப்பியதை வைத்து மரபணுவை ஊதத்தான் அனுப்பப்பட்டதாகச் சித்தரிக்க முற்படுகின்றார். அத்துடன் அல்லாஹ் ஈஸா நபியை மரபணு மூலம் படைத்தான். ‘குன்’ எனும் வார்த்தை மூலமாக படைக்கவில்லை என்பது போல் சித்திரித்துள்ளார்.

தொடரும்…
இன்ஷா அல்லாஹ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.