எய்தவனை விட்டு விட்டு அம்பை நோவானேன்? | Article | Sheikh Ismail Salafi | Unmai Udayam | Oct 2019.

ஏப்ரல் 21 இல் நடைபெற்ற மிருகத்தனமாக தாக்குதல் சம்பவத்துடன் நேரடியாக முஸ்லிம்களில் சிலர் சம்பந்தப்பட்டதனால் இலங்கையில் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் எதிர்ப்பான சிந்தனை உருவானது. முஸ்லிம்கள் வெறுப்புடன் நோக்கப்பட்டனர். இனவாத, மதவாத சக்திகளும் இனவாத ஊடகங்களும் இதைச் சாட்டாகப் பயன்படுத்தி முஸ்லிம் சமூகத்தின் மீது இலங்கை மக்களுக்கு வெறுப்பையும் வெறியையும் ஊட்டும் விதத்தில் தகவல்களை வெளியிட்டு வந்தன. உண்மையில் இது தொடர்பில் நின்று நிதானமாகச் சிந்தித்தால் இந்த வெறுப்பு முஸ்லிம் சமூகத்தின் மீது ஏற்பட்டிருக்காது! நாட்டை ஆளும் சக்தி மீதே இந்த வெறுப்பு உருவாகியிருக்க வேண்டும்.

இந்தத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் பாதை மாறிச் செல்வது குறித்து ஏற்கனவே முஸ்லிம் சமூகத்தால் எச்சரிக்கை செய்யப்பட்டும் இவர்கள் கைது செய்யப்படவும் இல்லை| கட்டுப்படுத்தப்படவும் இல்லை.

தாக்குதல் சம்பவம் நடப்பதற்குப் பல தினங்களுக்கு முன்னரே இப்படியொரு தாக்குதல் நடக்கப் போவதாக உளவுத்துறை மூலம் தகவல்கள் எழுத்து மூலமாக வந்தும் கூட குறிப்பாக, தேவாலயங்கள் மீது தாக்குதல் நடக்கப் போகிறது என்பது மேல்மட்டத்தில் இருக்கும் சில அரசியல் தலைவர்களுக்குத் தெரிந்தும் கூட, தாக்குதல் நடத்தப்படுவதைத் தடுப்பதற்கான சகல வசதி வாய்ப்புகள் இருந்தும் கூட எந்த முயற்சியும் செய்யப்படவில்லை. குறைந்த பட்சம் குறித்த ஆலய நிர்வாகத்தினர் கூட விழிப்புணர்வூட்டப்படவில்லை என்பதைப் பார்க்கும் போது இப்படியொரு தாக்குதல் நடக்கட்டும் என்று ஏதோ ஒரு காரணத்திற்காக யாரோ சிலர் திட்டமிட்டு இவர்களை விட்டுவைத்துள்ளனர். அதிகார வர்க்கத்தில் இருக்கும் சிலர் கூட இதற்குத் துணை போயுள்ளனர். இப்படிப்பட்ட நாட்டுப்பற்றும், மனிதநேயமுமற்ற சுயநலவாதிகள் மீது வெறுப்பை வெளிப்படுத்தாமல் ஸஹ்ரான் என்ற பெயரைக் கூட அறிந்திராத அப்பாவி மக்கள் மீது சகல மட்டங்களிலும் மிகவும் மோசமான முறையில், நியாயமற்ற ரீதியில் வெறுப்பும் காழ்ப்புணர்வும் வெளிப்படுத்தப்பட்டமை வேதனையானதாகும்.

இந்த சந்தர்ப்பத்தை தமக்கு ஒரு நல்ல சாதகமாகப் பயன்படுத்தி அரபு மொழி, அல்குர்ஆன், குர்ஆன் மத்ரஸாக்கள், அரபு மத்ரஸாக்கள், பள்ளிவாயல்கள், அபாயா, புர்கா… என முஸ்லிம்களின் சகல உரிமைகள் மீதும் கைவைத்து வெறுப்பு வெளிப்படுத்தப்பட்டது. ஆளும் தரப்பினராலும் இன்னும் பலராலும் இவை அனைத்துக்கும் எதிரான சிந்தனைகள் கிளறிக் கட்டவிழ்த்துவிடப்பட்டது. சம்பந்தப்பட்ட குறித்த தீவிரவாதக் கூட்டத்தைக் கட்டுப்படுத்தாது, கைது செய்யாது தாக்குதல் நடக்க இருப்பது தெரிந்தும் நடக்கட்டும்.. நடக்கட்டும்… என்று இருந்த அதிகார வர்க்கம் மீது ஏன் இந்த வெறுப்பு ஏற்படவில்லை என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் கலந்த எமது கேள்விக்கணையாகும்.

வைத்தியசாலைகள் முதல் அலுவலகங்கள் வரை அனைத்திலும் முஸ்லிம்கள் விரோதக் கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட்டனர். வைத்தியசாலையில் ஒரு ஆண் குழந்தை கிடைத்தால் கூட “ஆ!… மென்ன தவத் ஸஹ்ரான் எக்கெனெக்” என அந்தத் தாய்க்கு மீண்டும் அவள் அனுபவித்த அந்தப் பிரசவ வேதனையை விடவும் மோசமான ஒரு வேதனை அளிக்கப்பட்டது.

இந்த நாட்டில் JVP யினர் தீவிரவாத செயற்பாடுகளில் ஆரம்ப கட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், ஒட்டுமொத்த சிங்கள சமூகமும் தீவிரவாதிகளாக மக்களால் பார்க்கப்படவில்லை. இவ்வாறே பல தமிழ் ஆயுதக் குழுக்கள் இயங்கி வந்தன. அந்த ஆயுதக் குழுக்களுக்குத் தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் ஆதரவு வழங்கியும் வந்தனர். ஆனால் அதற்காகத் தொடர்புபட்ட ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் ஏனைய மக்கள் தீவிரவாதிகளாகப் பார்க்கவில்லை. குறிப்பாக முஸ்லிம் சமூகம் தமிழ் சமூகத்துடன் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. ஆனால், முழு முஸ்லிம் சமூகத்தினதும் எதிர்ப்பைப் பெற்ற இந்தக் கூட்டம் யாரோ சிலரின் தூண்டுதலில் செய்த இந்தக் கொடூரத்தினால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஓரவஞ்சனையுடன் பார்க்கப்பட்டது வேதனையானதாகும்.

சரியாக சிந்தித்தால் இலங்கை முஸ்லிம் சமூகம் இது விடயத்தில் பாராட்டப்பட்டிருக்க வேண்டும். முஸ்லிம் சமூகம் பயங்கரவாதச் செயற்பாட்டுக்கு முன்னரும் பின்னரும் இவர்களுக்கு ஒத்துழைக்கவில்லை. இவர்களைக் காட்டிக் கொடுத்தனர். இவர்களின் செயற்பாடுகளை ஆரம்பத்திலேயே அஸீம் எனும் சகோதரர் காட்டிக் கொடுத்ததினால் கொலை முயற்சிக்குள்ளாக்கப்பட்டு உயிர் தப்பியுள்ளார். நாட்டுக்காக அவர் செய்த தியாகம் பாராட்டப்பட வேண்டியதே! அவர் இவர்கள் பற்றி தகவல் கொடுத்தார் என்பது அவர்களுக்குத் தெரிந்துள்ளது என்றால் அதிகார வட்டாரத்தில் தீவிரவாதிகளுடன் தொடர்புபட்ட கறுப்பாடுகள் உள்ளனவோ என்பது சிந்திக்கப்பட வேண்டியதாகும்.

இந்தத் தாக்குதலின் பின்னர் இலங்கையில் இயங்கும் தவ்ஹீத் அமைப்புக்கள் பாரிய நெருக்கடிகளை சந்தித்தன. உண்மையில் இவர்களின் கொள்கைக்குப் பெருமளவில் எதிர்ப்பை வெளியிட்டு வந்தது தவ்ஹீத் அமைப்புக்கள்தான் என்பது ஈன்று கவனிக்கத்தக்க ஒரு விடயமாகும்.

2014 இல் இஸ்லாமிய கிலாபத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்தது துவக்கம் இலங்கையில் இயங்கும் பல இஸ்லாமிய அமைப்புக்கள் இவர்கள் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள், இஸ்லாத்தின் எதிரிகளின் கூலிப்படை என்கின்ற கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக, ‘உண்மை உதயம்’ இஸ்லாமிய மாத இதழும், ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யா அமைப்பும் இவர்கள் இஸ்லாமியக் கொள்கையில் இருந்தும் தடம் புரண்டவர்கள் என்பதை அன்று தொட்டே பிரச்சாரம் செய்து வந்ததுடன் இன்றும் அதே நிலைப்பாட்டிலேயே பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றது.

2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் (இதழ் – 194) இல் ‘யார் இந்த ISIS?’ என்ற தலைப்பில் தொடங்கி இன்று வரைக்கும் பல விரிவான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன அத்துடன் எமது மார்க்க அறிஞர்களால் இவர்களின் வழிகேடுகள் தொடர்பில் ஏராளமான விளக்கவுரைகளும் நடத்தப்பட்டுள்ளன.

2017 செப்டம்பர் 03 ஆம் திகதி காத்தான்குடியிலேயே இவர்களின் சிந்தனைப் போக்கின் விபரீதம் தொடர்பான விரிவான விழிப்புணர்வு மாநாடு நடாத்தப்பட்டது. எமது மார்க்க அறிஞர்களினால் இவர்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட உரைகள் சிலவற்றின் வீடியோ இணைப்புக்களை உதாரணத்திற்காக இங்கு தருகின்றோம்.http://bayanelislam.net/Suspicion.aspx?id=03-03-0018

எனவே, முஸ்லிம் சமூகத்தில் குறிப்பாக தவ்ஹீத் வட்டாரத்தில் இவர்கள் குறித்து செயற்பட்ட விதம்தான் இவர்களின் விபரீத வலையில் பெருமளவு முஸ்லிம் இளைஞர்கள் விழுவதைத் தடுத்துள்ளது என்ற வகையில் முஸ்லிம் சமூகம் நன்றியுணர்வுடன் நோக்கப்பட்டிருக்க வேண்டும்.

அத்துடன் இந்தப் பிரச்சினையுடன் சவுதி எதிர்ப்பும் கிளறப்பட்டது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்த நாடுகளில் சவுதி முன்னிலை வகிக்கின்றது. இந்தப் பிரச்சினை நடந்து கொண்டிருக்கும் போது கூட சவுதியில் சிலர் பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக மரண தண்டனைக்கு உள்ளானார்கள்.

இந்த நாட்டில் சவுதியில் கற்ற மார்க்க அறிஞர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். அவர்களில் எவரும் இந்த தடம் மாறிய கூட்டத்திற்கு ஆதரவாக இருக்கவில்லை. இப்படியிருந்தும் முஸ்லிம்களில் சிலரும் மாற்று மதத்தினர் சிலரும் சவுதி மீதான வெறுப்பை வெளிப்படுத்தியதும், அரபு மொழி வெறுப்பை வெளியிட்டதும் வேதனையானதும் வேடிக்கையானதுமாகும்.

இலங்கை முஸ்லிம்களில் பல பிரிவுகள் இருந்தாலும் இந்த மிலேச்சத்தனமான, மிருகத்தனமான செயற்பாட்டிற்கு சகல தரப்பினரும் எதிரானவர்களாகவே இருந்தது மட்டுமன்றி யாரும் அவர்களை முஸ்லிம்களாகக் கூட ஏற்றுக் கொள்ளவில்லை என்பது இந்நாட்டில் உள்ள மக்களால் முறையாக நோக்கப்பட்டால் இந்த அரபு மொழி, ஈத்தம் மரம், பல்கலைக்கழகம், ஷரீஆ, முஸ்லிம் தனியார் சட்டம், அரபு மத்ரஸா, அபாயா, புர்கா…. என நீண்ட பட்டியலில் வெறுப்பையும், வெறியையும் வெளிப்படுத்தியது முறையற்றது என்பதை உணரலாம். இந்த உண்மையை மாற்று மதத்தவர்களுக்கு உணர்த்துவது முஸ்லிம் சமூகமாகிய எமது கடப்பாடும் காலத்தின் கட்டாயமுமாகும்.

எனவே, இதை உணர்ந்து இலங்கையர்களுக்கு மத்தியில் ஐக்கியமும், மதங்களுக்கு மத்தியில் பரஸ்பரம் – புரிந்துணர்வும் மலரவும் வளரவும் அயராது முயற்சிப்போமாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.