மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (பகுதி 3)

ஆயிஷா(ரலி) அவர்களின் கூற்று குர்ஆனில் குறையேற்படுத்துமா?
சகோதரர் பீஜே அவர்கள் தனது தர்ஜமதுல் குர்ஆன் விளக்கவுரையில் மறுத்த 2 ஹதீஸ்கள் குறித்த உண்மை நிலையை இது வரை 13 தொடர்களில் நாம் பார்த்துள்ளோம். அவர் மறுக்கும் மற்றுமொரு செய்தி குறித்த தெளிவை மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் தொடர் மூன்றினூடாக வழங்க முற்படுகின்றோம்.

இது குறித்துச் சகோதரர் பீஜே தனது தர்ஜமாவில் குறிப்பிடும் போது பின்வருமாறு கூறுகிறார்;
ஒரு குழந்தை தனது தாய் அல்லாத வேறு பெண்ணிடம் பாலருந்தினால் அந்தப் பெண், அக்குழந்தைக்குத் தாய் என்ற அந்தஸ்த்தை அடைந்து விடுவாள் என்பதை நாம் அறிவோம்.
இது பற்றி முஸ்லிம் 2634, 2635 வது ஹதீஸ்களில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
பத்து தடவை பாலருந்தினால் தான் “தாய்-பிள்ளை” எனும் உறவு ஏற்படும் என்று குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் இது ஐந்து தடவை என்று மாற்றப்பட்டது. இது திருக்குர்ஆனில் ஓதப்பட்டு வந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்.
இதை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்;
அதாவது ஐந்து தடவை பால் அருந்தினால் தாய் என்ற உறவு ஏற்பட்டு விடும் என்று ஒரு வசனம் குர்ஆனில் இருந்ததாகவும், இந்த வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை குர்ஆனில் இருந்ததாகவும் இந்த ஹதீஸில் கூறப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) மரணிக்கும் வரை குர்ஆனில் அப்படி ஒரு வசனம் இருந்திருந்தால் அந்த வசனம் இன்றும் குர்ஆனில் நிச்சயம் இருந்தாக வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்திற்குப் பின் குர்ஆனில் உள்ள எதையும் நீக்கவோ, இல்லாததைச் சேர்க்கவோ முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலேயே குர்ஆன் முழுவதும் எழுத்து வடிவில் பதிவு செய்யப்பட்டு விட்டதாலும், ஏராளமான நபித்தோழர்கள் முழுக் குர்ஆனையும் மனனம் செய்திருந்ததாலும் குர்ஆனில் இருந்த ஒரு வார்த்தை கூட விடுபடுவதற்கு வழியே இல்லை.
ஆனால் ஆயிஷா (ரலி) கூறுவது போல் ஒரு வசனம் குர்ஆனில் காணப்படவில்லை.
இந்த நிலையில் “முஸ்லிம் நூலில் இடம்பெற்ற ஹதீஸாயிற்றே? நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறதே!” என்று காரணம் கூறி இதை ஏற்றுக் கொண்டால் என்ன விபரீதம் ஏற்படும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
“குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை; நபிகள் நாயகம் காலத்திற்குப் பின் குர்ஆனில் இருந்த பல வசனங்கள் நீக்கப்பட்டன” என்ற கருத்து இதனால் ஏற்படும். குர்ஆன் இறைவனின் நேரடிப் பொறுப்பில் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதையே இந்தச் செய்தி கேள்விக்குறியாக்கி விடும்.
எனவே இந்த ஹதீஸை நாம் நிராகரித்துத் தான் ஆக வேண்டும்.
“முஸ்லிம் நூலில் நம்பகமானவர்கள் வழியாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் இதை நாங்கள் உண்மை என்று நம்புகிறோம்” என்ற முடிவுக்கு நாம் வந்தால் ஹதீஸை நாம் மறுக்கவில்லை என்ற பெயர் நமக்குக் கிடைக்கலாம்.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) மரணிக்கும் வரை குர்ஆனில் பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு வசனம் அவர்களின் மரணத்திற்குப் பின்னர் அனைத்து நபித்தோழர்களாலும் நீக்கப்பட்டு விட்டதாக இதன் விளைவு அமையுமே? இதற்கு என்ன பதில்?
“குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை; எந்த வசனத்தையும் யார் வேண்டுமானாலும் நீக்கி விடலாம்” என்ற நிலையில் தான் குர்ஆன் இருந்தது என்ற கருத்து ஏற்படுமே? இதற்கு என்ன பதில்?
இதற்கு நம்மிடம் பதில் இல்லையானால் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதில் எங்கோ தவறு நேர்ந்திருக்க வேண்டும். இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்த்து விடும் கருத்தை ஆயிஷா (ரலி) கூறியிருக்க மாட்டார்கள் என்று நல்லெண்ணம் வைப்பது தான் உண்மை விசுவாசிகளின் நிலையாக இருக்க வேண்டும். (பீஜே தமிழாக்கம், 4 ஆம் பதிப்பு, பக்கம் 1304-1305)
ஒரு பாமர மனிதன் எப்படி ஹதீஸை அணுகுவானோ, எப்படியெல்லாம் கேள்வி கேட்பானோ அதே விதத்தில் தான் சகோதரர் பீஜே அவர்களும் இந்தச் செய்தியை அணுகியுள்ளார்; கேள்விகளை அடுக்கியுள்ளார்.
இலங்கையில் ரிழ்வான் மாஸ்டர் என்பவர் தவ்ஹீத் பிரசாரம் செய்துகொண்டிருந்தார். பின்னர் அவர் கொள்கை மாறி அஹ்லுல் குர்ஆனாக மாறினார். இஸ்லாத்தின் அடிப்படைகளை ஆழமாக அறியாத அவர் திருமணம் முடித்து விபசாரம் செய்தவர்களைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்ற வசனம் குர்ஆனில் இருந்ததாக ஹதீஸ் கூறுகின்றது. அப்படி ஒரு வசனம் குர்ஆனில் இல்லை. இந்த ஹதீஸை ஏற்றால் குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை; அதன் வசனங்கள் மனிதர்களால் மாற்றப்பட்டுள்ளன என்று கூற நேரிடும் என இந்த வாதத்தை முன்வைத்து ஹதீஸ்களை மறுத்தார்.
இவ்வாறே, “விடுதலை” (வெள்ளி 05-02-2010) ஏட்டில் மதவாதிகளே! பதில் சொல்லுங்கள்! என்ற தலைப்பில் அறிவுக்கரசு(?) என்ற பெயரில் ஒரு நாஸ்தீகன் எழுதிய கட்டுரையிலும் இதே தொணியில் கேள்வி கேட்கப்படுகின்றது.
குர்ஆனிய கலைகள் பற்றிய அறிவு அற்ற நாஸ்தீகர்களும், நாஸிஹ்-மன்ஸூஹ் (மாற்றியது-மாற்றப்பட்டது) பற்றிய அடிப்படை அறிவு அற்ற ரிழ்வான் மாஸ்டரும் வாதித்தது போன்றே அறிஞர் பீஜே அவர்கள் வாதிப்பது வியப்பாக உள்ளது.
இவர் தவறாக அர்த்தம் செய்து தப்பாக வாதிக்கும் இந்தச் செய்தி குறித்த விளக்கங்களை நோக்குவோம்.
நபித்தோழர் கூற்றை மறுத்தல்:
பீஜே குறிப்பிடும் இந்தச் செய்தி ஹதீஸ் அல்ல. இது ஒரு “அதர்” அதாவது ஒரு நபித்தோழரின் கூற்றாகும். இதை ஏற்பது குறித்தோ, எதிர்ப்பது குறித்தோ நாம் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. இருப்பினும் இந்தச் செய்தியை சகோதரர் பீஜே அவர்கள் அணுகும் விதம் ஆபத்தானதாகும்.

எனவேதான் இது குறித்து விபரிக்க வேண்டியுள்ளது.
நியாயமற்ற அணுகுமுறை:
ஒரு செய்தியை விமர்சிப்பதென்றால் அந்தச் செய்தியில் கூறப்பட்ட கூற்றை வைத்துத்தான் விமர்சிக்க வேண்டும். இதுதான் நியாயமான பார்வையாகும். ஹதீஸில் இல்லாத அர்த்தத்தைத் தானாகத் திரித்து உண்டாக்கி விட்டு, தான் உண்டாக்கிய தப்பான விளக்கத்தின் அடிப்படையில் விமர்சித்துச் செல்வது நியாயமான வழிமுறை அல்ல.

சகோதரர் பீஜே அவர்கள் தஃலீம் தொகுப்பு குறித்து விமர்சிக்கும் வேளை, ஸகரிய்யா ஸாஹிப் பற்றிக் குறிப்பிடும் போது “இவர் முதலில் குர்ஆன் வசனத்தைத் தருவார். அதன் பின் ஹதீஸைத் தருவார். அதன் பின் தனது சொந்தச் சரக்குகளையும், நச்சுக்கருத்துக்களையும் விதைப்பார்” என்ற தொணியில் எழுதியுள்ளார்.
இங்கும் பீஜே அவர்கள் அதே பாணியில் ஹதீஸைப் போட்டு விட்டுப் பின்னர் சரியான அர்த்தத்தை எழுதி விட்டு பின்னர் தனது நச்சுக்கருத்தை விளக்கி, அந்த நச்சுக்கருத்தின் அடிப்படையில்தான் ஹதீஸ்களை மறுக்கின்றார்.
மேற்குறிப்பிட்ட செய்தியில் “இது மக்காவில் ஓதப்பட்டு வந்த நிலையில்தான் நபி (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்” என்ற வாசகந்தான் சர்ச்சைக்குரிய(?) வாசகமாகும்.
இதனைத் தர்ஜமாவில் பீஜே முதலில் மொழியாக்கஞ் செய்யும் போது “இது திருக்குர்ஆனில் ஓதப்பட்டு வந்த நிலையில்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்” என மொழி பெயர்த்துள்ளார்.
இதே செய்தியை ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் இலக்கணம் தொடர் மூன்றில் இன்னும் தெளிவாக பின்வருமாறு மொழியாக்கஞ் செய்துள்ளார்.
இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டு வந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
இதுதான் அந்தச் செய்தியின் அர்த்தம். இதைச் சரியாகச் செய்த பீஜே இதில் இல்லாத ஒரு விஷக் கருத்தை விளக்கப் பகுதியில் கொண்டு வருகின்றார்.
அதாவது ஐந்து தடவை பால் அருந்தினால் தாய் என்ற உறவு ஏற்பட்டு விடும் என்று ஒரு வசனம் குர்ஆனில் இருந்ததாகவும், இந்த வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை குர்ஆனில் இருந்ததாகவும் இந்த ஹதீஸில் கூறப்படுகிறது.
ஏற்கனவே நாம் ஹதீஸின் மொழிபெயர்ப்பைப் பார்த்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை குர்ஆனில் அந்த வசனம் இருந்தது என அந்தச் செய்தி கூறவில்லை. அந்த வசனங்களைச் சிலர் ஓதும் நிலையில்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள் என்றுதான் அந்தச் செய்தி கூறுகின்றது.
குர்ஆனில் இருந்தது எனும் போது இரண்டு அட்டைகளுக்குள் அச்சிடப்பட்ட குர்ஆன் தான் மக்களின் மனக் கண் முன் வரும். நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது முழுக் குர்ஆனும் எழுதப்பட்டிருந்தாலும் ஒரே ஏட்டில் ஒன்றாகத் திரட்டப்பட்டிருக்கவில்லை. குர்ஆனில் இருந்தது என்றதும் மக்கள் மனதில் திரட்டப்பட்ட குர்ஆன்தான் மனதில் வரும். திரட்டப்பட்ட குர்ஆனில் குறிப்பிட்ட ஒரு வசனம் இருந்ததாக ஆயிஷா (ரலி) கூறுகின்றார்கள். ஆனால் அப்படி ஒரு வசனம் இல்லையே? எனவே ஆயிஷா (ரலி) கூறிய செய்தி பொய்யானது என நியாயமில்லாமல் நிருவப் பார்க்கின்றார். ஆனால் அந்தச் செய்தி அப்படி ஒரு வசனத்தைச் சிலர் குர்ஆனாக ஓதி வரும் நிலையில் தான் நபி (ஸல்) அவர்கள் மரணித்தார்கள் என்று கூறுகின்றது. குர்ஆனில் அப்படியொரு வசனம் இருந்தது என்று கூறவில்லை. (இருந்ததென்று கூறினாலே இந்தக் கூற்றைக் கூறும் போது “இல்லை!” என்பதுதானே அர்த்தம்?).
இப்படிக் கூறும் போது கூட “அப்படியானால் அந்த வசனம் எங்கே?” என்ற கேள்வி பாமர மக்களுக்கு எழுவது இயல்பே! இது குறித்த தெளிவைப் பெற நாஸிஹ்-மன்ஸூஹ் பற்றிய அறிவு அவசியமாகும்.
நாஸிஹ் மன்ஸூஹ்:
“நாஸிஹ்” என்றால் மாற்றியது. “மன்ஸூஹ்” என்றால் மாற்றப்பட்டது என்பது அர்த்தமாகும்.

அல்லாஹ் இறக்கிய ஒரு வசனத்தை அல்லது சட்டத்தை அவனே மாற்றுவது தான் நாஸிஹாகும். மனிதர்கள் யாரும் இதைச் செய்ய முடியாது. திருக்குர்ஆனில் நாஸிஹ்-மன்ஸூஹ் உண்டு என்பதைப் பின்வரும் வசனம் தெளிவாக விளக்குகின்றது.
“ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதை மறக்கச் செய்தால் அதை விடச் சிறந்ததை அல்லது அதைப் போன்றதைக் கொண்டு வருவோம். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் என்பதை நீர் அறியவில்லையா?” (2:106)
“ஒரு வசனத்தின் இடத்தில் வேறு ஒரு வசனத்தை நாம் மாற்றினால், “நீர் இட்டுக் கட்டுபவரே!” எனக் கூறுகின்றனர். எ(ந்த நேரத்தில் எ)தை இறக்க வேண்டும் என்பதை அல்லாஹ் மிக அறிந்தவன். எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.” (16:101)
திருக்குர்ஆனில் நாஸிஹ்-மன்ஸூஹ் வசனங்கள் 3 விதங்களில் இருக்கும்.
1. வசனம் இருக்கும்., சட்டம் அமுலில் இருக்காது.,
இந்த வகை வசனங்கள் தான் நாஸிஹ்-மன்ஸூஹில் அதிகமாக உள்ளவையாகும்.

உதாரணமாக, “நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் கூறுவது என்னவென்று அறியாதவாறு நீங்கள் போதையுடையோர்களாக இருக்கும் நிலையில் தொழுகையை நெருங்காதீர்கள்..” (4:43) என்ற வசனத்தின் மது குறித்த சட்டம் மாற்றப்பட்டு விட்டது. பின்னர் இறங்கிய வசனத்தில் பொதுவாக மது தடுக்கப்பட்டது. தொழும் நேரம்-தொழாத நேரம் என்ற பாகுபாடு இன்றி அதை விட்டும் முற்று-முழுதாக விலகிக்கொள்ள வேண்டும் என்ற ஏவல் வந்தது. ஆயினும் அந்த வசனம் குர்ஆனில் இருந்து கொண்டே இருக்கின்றது.
2. வசனம் நீக்கப்பட்டுச் சட்டம் அமுலில் இருக்கும்.,
வசனம் – அதாவது, வார்த்தை இருக்காது. அதன் சட்டம் இருக்கும்.

உதாரணமாக, திருமணம் முடித்தவர்கள் விபசாரம் செய்தால் அவர்கள் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்ற வசனம் குர்ஆனில் இருந்தது. அந்த வசனம் அல்லாஹ்வால் நீக்கப்பட்டது. ஆயினும் சட்டம் நீக்கப்படவில்லை. இதே போன்று தான் 5 முறை பால் குடித்தால் தாய்-மகன் என்ற உறவு ஏற்படும் என்ற இந்த வசனம் அல்லாஹ்வால் நீக்கப்பட்டு விட்டது. ஆனால் அதன் சட்டம் நீக்கப்படவில்லை.
3. சட்டமும், வசனமும் நீக்கப்படுவது.,
சட்டமும் மாற்றப்பட்டு, வசனமும் நீக்கப்படுவது என்பது மற்றொரு வகையாகும்.

இதற்கு குறிப்பிட்ட 10 முறை பால் அருந்தினால் தான் உறவு முறை உண்டாகும் என்ற வசனம் உதாரணமாகும். இந்த வசனமும் நீக்கப்பட்டு விட்டது. இதன் சட்டமும் 5 முறை பாலூட்டினாலும் உறவு முறை உண்டாகும் என்று மாற்றப்பட்டு விட்டது.
எனவே 10 முறை, 5 முறை பாலூட்டினால் தாய்-மகன் உறவு உண்டாகும் என்ற வசனம் அல்லாஹ்வால் நீக்கப்பட்டிருக்க, மனிதர்கள் நீக்கினார்கள் என்ற கருத்தைத் தரும் விதத்தில் விளக்கமளிக்க முற்படுவது அறிவீனமாகும்.
நபியவர்கள் மரணிக்கும் வரை நீக்கப்பட்ட வசனத்தை மக்கள் ஓதினார்களா?
ஒரு சட்டம் அல்லது வசனம் மாற்றப்பட்டால் அது உடனுக்குடன் அனைவருக்கும் தெரிந்து விடக் கூடிய ஊடக வசதிகள் அன்று இருக்கவில்லை. உதாரணமாக, சகோதரர் பீஜே அவர்கள் சூனியம் குறித்து ஆரம்பத்தில் வைத்த கருத்துக்களும், பின்னர் வைத்த கருத்துக்களும் முரண்பட்டவையாகும். அவர் பின்னர் வைத்த கருத்தை விமர்சனம் செய்த போது, அவரது முன்னைய கருத்தை மட்டும் அறிந்த சகோதரர்கள் “நீங்கள் சொல்லக் கூடிய அதே கருத்தைத் தானே அவரும் கூறியுள்ளார்?” என்று கேட்கின்றனர். இந்த நிலை ஊடக வசதிகள் பெருகிய இன்றைய காலத்திலேயே இருக்கும் போது ஒரு வசனம் அல்லது சட்டம் மாற்றப்பட்டால் அது உடனுக்குடன் அன்றிருந்த சகல முஸ்லிம்களுக்கும் தெரிந்து விடுவதற்கான வாய்ப்பு இல்லை.

இதற்கு மற்றுமொரு உதாரணத்தைக் கூறலாம். உடலுறவில் ஈடுபட்டு விந்து வெளிப்பட்டால் தான் குளிக்க வேண்டும் என்பது ஆரம்பச் சட்டமாகும். பின்னர் ஆண்-பெண் உறுப்புகள் சந்தித்து விட்டால் விந்து வெளிப்படாவிட்டாலும் குளிக்க வேண்டும் என்று சட்டம் மாற்றப்பட்டது. இந்தச் செய்தியை அறியாத பலரும் முன்னைய சட்டத்தின் படி செயற்பட்டுள்ளனர். உஸ்மான் (ரலி) அவர்களது ஆட்சி வரை இது அனைவரும் அறியாத சட்டமாக இருந்துள்ளது.
இதே போன்று 5 முறை பாலூட்டினால் தாய்-மகன் உறவு ஏற்படும் என்ற வசனம் இருந்தது. பின்னர் நபி (ஸல்) அவர்களது மரணம் நெருங்கிய சந்தர்ப்பத்தில் அந்த வசனம் நீக்கப்பட்டது. சில அறிஞர்கள் நபி (ஸல்) அவர்களது இறுதி றமழானில் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் இரண்டு முறை குர்ஆனை ஒப்புவித்த காலப் பகுதியில் இது நடந்திருக்கலாம் என்று கூறுகின்றார்கள். இந்தக் கருத்தை நாம் உறுதிப்படுத்த முடியாவிட்டாலும் நபி (ஸல்) அவர்களது அந்திப காலத்தில் இது நடந்திருக்கின்றது என நம்பலாம்.
இந்த வசனம் மாற்றப்பட்ட பின்னரும் மாற்றப்பட்ட செய்தியை அறியாது மக்களில் சிலர் இதை ஓதி வந்துள்ளனர். இதைப் பீஜே அவர்களின் மொழியாக்கம் உறுதி செய்கின்றது.
இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டு வந்த காலத்தில் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறந்தார்கள். (ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் இலட்சணம் தொடர் 03)
ஏற்கனவே அல்லாஹ்வால் நீக்கப்பட்ட வசனத்தை அது நீக்கப்பட்டது என்பதை அறியாத சில மக்கள் ஓதி வந்துள்ளனர் என்ற தகவலைத் தான் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.
குர்ஆனில் இப்படி ஒரு வசனம் நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை இருந்தது என்ற கருத்தில் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறவில்லை. அப்படிக் கூறுவதென்றால் ஒரு வசனத்தை மக்களில் சிலர் ஓதி வந்தார்கள் என்று கூற வேண்டிய தேவை என்ன?
குர்ஆனில் இந்த வசனம் நபியவர்கள் மரணிக்கும் வரை இருந்தது என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று இந்தச் செய்தி கூறுகின்றது என்ற அடிப்படையில் தான் பீஜே அடுத்த வாதங்களைச் செய்கின்றார். அவரது அர்த்தமே பிழை என்னும் போது அடுத்த கட்ட வாதங்கள் அனைத்தும் அடியற்ற மரம் போல் சாய்ந்து விடுகின்றன.
நபி (ஸல்) அவர்கள் மரணித்த போது குர்ஆனில் இந்த வசனம் இருந்தது என ஆயிஷா (ரலி) கூறாததால் இந்தக் கூற்றை ஏற்றால் குர்ஆனின் நம்பகத் தன்மைக்குப் பங்கம் ஏற்படப் போவதில்லை. அந்தச் செய்தியின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொண்டால் அந்தச் செய்தியையும் நம்பலாம் ஒன்றை ஏற்று மற்றதை நிராகரிக்கும் நிலை ஏற்படாது.
ஆணவமா? அறிவு மமதையா?
ஹதீஸ்களை ஆய்வு செய்தவர்கள் அறிவிப்பாளர் வரிசையை மட்டுந்தான் ஆய்வு செய்தார்கள். கருத்தை ஆய்வு செய்யவில்லை எனக் கூறிக் கடந்த கால ஹதீஸ் கலை அறிஞர்களையெல்லாம் முட்டாள்களாகவும், அறிவிலிகளாகவும், குர்ஆன் பற்றிய அறிவு அற்றவர்களாகவும் சித்தரிக்க முற்படுகின்றார். அத்துடன் நான்தான் அனைத்தையும் எல்லாக் கோணங்களிலும் அணுவணுவாக ஆய்வு செய்பவன் என்ற மாயத் தோற்றத்தையும் ஏற்படுத்த முற்படுகிறார் போல் தென்படுகிறது.

சகோதரர்களே!
சகோதரர் பீஜே கூறுவது போல் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய கூற்று நபி (ஸல்) அவர்களது மரணம் வரை குர்ஆனில் ஒரு வசனம் இருந்தது; ஆனால் அது தற்போது குர்ஆனில் இல்லை என்ற கருத்தைத் தான் தருகின்றது என்றால், இந்தச் செய்தியைச் “சரி!” என்று கூறியவர்களும், இதைப் பதிவு செய்த இமாம் முஸ்லிமும், இதற்கு விளக்கமளித்த அறிஞர்களும் இஸ்லாத்தின் அடிப்படைகளை அறியாதவர்களா? ஹதீஸ் பற்றிப் பேசும் செய்தி என்றால் கூட ஹதீஸ்கள் முழுமையாகத் திரட்டப்படாததால் அனைத்து ஹதீஸ்களையும் தெரிந்த ஒரு மனிதரையும் தேடிப் பிடிக்க முடியாது. எனவே தவறு நடந்திருக்கலாம் என்று கூறலாம். ஆனால் இது குர்ஆன் பற்றிப் பேசுகின்றது. அன்றிருந்த அதிகமான அறிஞர்கள் குர்ஆனை மனனம் செய்திருந்தார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு வசனம் குர்ஆனில் இருந்ததாகக் கூறுகின்றார்களே! அப்படி ஒரு வசனம் இல்லையே! என்று சிந்தித்திருக்க மாட்டார்களா? கடந்த காலத்தில் வாழ்ந்த அறிஞர்கள் அவைரும் முட்டாள்கள்; இவர் ஒருவர் தான் அறிஞரா?

இப்படி நாம் கேட்பது தக்லீதின் அடிப்படையில் அல்ல. இவர் கூறுவதைத் தான் அந்தச் செய்தி கூறுகின்றது என்றால் என்ன விளைவு ஏற்பட்டிருக்க வேண்டுமோ அந்த விளைவு ஏற்படவில்லை.
எனவே, கடந்த காலத்தில் வாழ்ந்த அறிஞர்கள் அந்தச் செய்தியைச் சரியாகப் புரிந்து கொண்டார்கள். எனவே, பிழை செய்தியில் இல்லை. மாறாக, தவறாகப் புரிந்து கொண்ட சகோதரர் பீஜே அவர்களின் விளக்கத்தில் தான் உள்ளது.
ஆனால், எப்போதும் அடுத்தவர்களில் தவறைத் தேடுபவர்களுக்குத் தமது தவறு தெளிவாகத் தெரியாது.
இதற்கு நம்மிடம் பதில் இல்லையானால் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதில் ஏதோ தவறு நேர்ந்திருக்க வேண்டும் என்று கூறுகின்றார். அல்குர்ஆனில் இந்த ஒரு வசனம் இப்போது இல்லை என்ற கருத்தை ஆயிஷா(ரழி) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள். இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கும் செய்தியை ஆயிஷா(ரழி) அவர்கள் கூறியிருந்தால், நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறிய முதல் மூன்று நூற்றாண்டுகளிலும் வாழ்ந்த அறிஞர்கள் அதைச் சரி கண்டிருக்கவும் மாட்டார்கள். எனவே நான் விளங்கிக் கொண்டதில் தான் ஏதோ தவறு நேர்ந்திருக்க வேண்டும் எனச் சிந்தித்திருந்தால் இப்படியெல்லாம் வாதித்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
முடிவாக:
ஆயிஷா (ரலி) அவர்களது கூற்று, குர்ஆனில் நபியவர்களது மரணம் வரை இருந்த வசனம் பின்னர் நீக்கப்பட்டது என்ற கருத்தைத் தரவில்லை; 5 முறை பாலூட்டினால் தாய்-மகன் உறவு ஏற்படும் என்ற வசனத்தை மக்கள் ஓதிக்கொண்டிருக்கும் நிலையில் தான் நபியவர்கள் மரணித்தார்கள் என்று தான் கூறுகின்றார்கள்.

இந்த வசனம் அல்லாஹ்வால் நீக்கப்பட்டது. அதுவும் நபி(ஸல்) அவர்களது இறுதிக்காலத்தில் நீக்கப்பட்டது. இதை அறியாத மக்கள் நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் காலப்பகுதியில்கூட அது குர்ஆன் என நம்பி ஓதி வந்துள்ளனர்.
இதைத்தான் இந்தச் செய்தி கூறுகின்றது. நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை அல்குர்ஆனில் இந்த வசனம் இருந்தது என அர்த்தம் கொடுப்பது தவறு. நபி(ஸல்) அவர்களது மரணத்திற்குப் பின் இந்த வசனம் நீக்கப்பட்டது என்ற கருத்தை இது தருவதாகக் கூறுவதும் தவறு. குர்ஆனில் சந்தேகத்தை உண்டுபண்னுகிறது; குர்ஆனில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் நீக்கலாம் சேர்க்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடும் என்பதெல்லாம் தேவையற்ற ஒப்பாரிகளாகும்.
குர்ஆனையும், ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்களையும் ஒருசேர ஏற்று ஒன்றை ஏற்று மற்றையதை நிராகரிக்கும் வழிகேட்டிலிருந்து விலகியிருக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.