فَاِذَاۤ اُحْصِنَّ فَاِنْ ا تَيْن بِفَاحِشَة فَعَلَيْهِن نِصْف مَا عَلَى الْمُحْصَنٰتِ مِنَ الْعَذَابِ ؕ
“அவர்கள் திருமணம் முடித்த பின்னர் மானக்கேடான செயலைச் செய்து விட்டால், சுதந்திரமான கன்னிப் பெண்களுக்கு வழங்கும் தண்டனையில் அரைவாசியே அவர்களுக்குரிய தண்டனையாகும்.”
(4:25)
மேற்படி வசனத்தை மொழிபெயர்ப்புச் செய்வதில் ஏற்பட்ட குளறுபடியில் இலங்கையில் பெரிய கொள்கைக் குழப்பமே ஏற்பட்டது எனலாம்.
இந்த அத்தியாயத்தின் 24, 25 ஆம் வசனங்களில் அல் முஹ்ஸனாத் என்ற பதம் நான்கு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. அல் முஹ்ஸனாத் என்பதற்கு திருமணம் முடித்த கணவன் உள்ள பெண் என்றும் அர்த்தம் இருக்கின்றது. இந்த அடிப்படையில் அடிமைப் பெண்கள் விபச்சாரம் செய்தால் திருமணம் முடித்த பெண்ணுக்கு வழங்கும் தண்டனையில் பாதியை வழங்க வேண்டும் என்று ஆரம்பத்தில் அர்த்தம் செய்துவிட்டனர்.
இலங்கையில் குர்ஆன் மட்டும் போதும் என்ற கொள்கையில் இருந்தவர்கள் விபச்சாரம் செய்தவர்களுக்கு 100 கசையடி கொடுக்குமாறு அல்லாஹ் கூறுகின்றான். (24:2) அதில் திருமணம் முடித்தவர்கள், முடிக்காதவர்கள் என்று எந்தப் பாகுபாடும் காட்டப்படவில்லை. ஆனால், ஹதீஸில் திருமணம் முடித்தவர்கள் விபச்சாரம் செய்தால் கல் எறிந்து கொல்ல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. குர்ஆனுக்கு மாற்றமான இந்த ஹதீஸ்கள் உண்மையாக இருக்க முடியாது.
அத்துடன் குர்ஆனில் அடிமைப் பெண்கள் விபச்சாரம் செய்தால் திருமணம் முடித்த பெண்களுக்கு கொடுக்கப்படும் தண்டனையில் பாதியைக் கொடுக்க வேண்டும் என்று வந்துள்ளது. ஒருவருக்கு பாதி மரண தண்டனை கொடுக்க முடியுமா? 100 கசையடி என்றால் அதில் பாதியாக 50 கசையடிகளைக் கொடுக்கலாம் என வாதிட்டு மரண தண்டனை சம்பந்தப்பட்ட ஹதீஸ்களை மறுத்ததுடன் ஒட்டுமொத்த ஹதீஸ்கள் விடயத்திலும் சந்தேகத்தை ஏற்படுத்தினர். இந்தத் தவறான வாதம் வலுப்பெற தப்பான மொழிபெயர்ப்புதான் காரணமாக அமைந்தது.
அல் முஹ்ஸனாத் என்ற வார்த்தைக்குப் பல அர்த்தங்கள் உள்ளன.
1. கணவன் உள்ள பெண்:
திருமணம் செய்ய தடுக்கப்பட்டவர்கள் பற்றி அல்லாஹ் கூறும் போது,
“மேலும், உங்களின் அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க விலக்கப்பட்டுள்ளனர். இவை) அல்லாஹ் உங்கள் மீது விதித்த கடமை யாகும்… ” (4:24)
பெண்களில் கணவர் உள்ளவர்களையும் (திருமணம் செய்யலாகாது) என்று குறிப்பிடுகின்றான்.
இங்கே கணவன் உள்ள பெண்கள் என்பதற்கு ‘அல் முஹ்ஸனாத்’ என்ற பதம் பயன்படுத்தப் பட்டுள்ளது.
2. கணவன் இல்லாத ஒழுக்கமான பெண்:
இதே போன்று இந்த வார்த்தை கணவன் இல்லாத ஒழுக்கமான பெண் என்ற அர்த்தத்திலும் கன்னிப் பெண் என்ற அர்த்தத்திலும், சுதந்திரமான பெண் என்ற அர்த்தத்திலும் பயன்படுத்தப்படுவதுண்டு.
وَمَنْ لَّمْ يَسْتَطِعْ مِنْكُمْ طَوْلًا اَنْ يَّنْكِحَ الْمُحْصَنٰتِ الْمُؤْمِنٰتِ فَمِنْ مَّا مَلَـكَتْ اَيْمَانُكُمْ مِّنْ فَتَيٰـتِكُمُ الْمُؤْمِنٰت.ِ
‘நம்பிக்கை கொண்ட, சுதந்திரமான பெண்களை மஹர் கொடுத்து, திருமணம் செய்ய உங்களில் யார் சக்திபெறவில்லையோ அவர் உங்கள் அடிமைப் பெண்களில் நம்பிக்கையாளர்களைத் (திருமணம் செய்து கொள்ளட்டும்.)” (4:25)
இந்த வசனத்தில் ஈமான் கொண்ட ‘முஹ்ஸனாத்” பெண்களை மணமுடிக்க முடியாதவர்கள் ஈமான் கொண்ட அடிமைப் பெண்களை மணமுடியுங்கள் என்று கூறப்படுகின்றது. ஈமான் கொண்ட சுதந்திரமான பெண்களை மணமுடிக்க வாய்ப்பு வசதி இல்லாதவர்கள் ஈமான் கொண்ட அடிமைப் பெண்களை மணம் முடிக்கலாம் என்றும் இதற்கு அர்த்தம் எடுக்கலாம்.ஈமான் கொண்ட, கற்பொழுக்கமுள்ள பெண்களை மணமுடிக்க வாய்ப்பற்றவர்கள் ஈமான் கொண்ட அடிமைப் பெண்களை மணமுடியுங்கள் என்றும் அர்த்தம் செய்யலாம். ஆனால், முதலாவது கூறிய அர்த்தத்தை இங்கே சொல்ல முடியாது. அதாவது, கணவனுடன் வாழும் பெண்களுக்கும் அல் முஹ்ஸனாத் என்று கூறப்படும். அந்த அர்த்தத்ததை இங்கு பயன்படுத்த முடியாது. ஈமான் கொண்ட கணவன் உள்ள பெண்களை மணம் முடிக்க வசதி இல்லாவிட்டால் ஈமான் கொண்ட அடிமைப் பெண்களை மணம் முடியுங்கள் என்று இங்கே அர்த்தம் செய்தால் அர்த்தம் அனர்த்தமாகிவிடும். ஹராம் ஹலாலாகிவிடும்.
3. ஒழுக்கமுள்ள பெண்கள்:
இந்த அர்த்தத்திலும் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுவதுண்டு. இந்த அத்தியாயத்தில் இதே வசனத்தில் அடிமைப் பெண்களை மணக்கும் போது ‘முஹ்ஸனாதின்” அவர்களை வைப்பாட்டிகளாக இல்லாமல் ஒழுக்கமுள்ளவர்களாக கரம் பிடிக்க வேண்டும் என்ற கருத்து பதிவு செய்யப்படுகின்றது.
அல்குர்ஆனின் 5:5, 24:4, 24:23 ஆகிய வசனங்களிலும் இந்த வார்த்தை இதே அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த விளக்கத்தோடு குறித்த வசனத்தின் பகுதியை எப்படி மொழியாக்கம் செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டால் முரண்பாடு முடிவுக்கு வந்துவிடும்.
அல் முஹ்ஸனாத் என்பதற்கு சுதந்திரமான கன்னிப்பெண் என்ற அர்த்தமும் உள்ளது. அடிமைப் பெண்கள் திருமணம் முடித்த பின் விபச்சாரம் செய்தால் சுதந்திரமான கன்னிப் பெண் விபச்சாரம் செய்தால் கொடுக்கும் தண்டனையில் பாதியை வழங்க வேண்டும் என்பதுதான் இந்த இடத்திற்கு சரியான மொழியாக்க மாகும். சுதந்திரமான கன்னிப் பெண் விபச்சாரம் செய்தால் 100 கசையடி கொடுக்கப்படும். அதில் பாதி 50 கசையடிகள் கொடுக்கப்படும். இதில் எந்த முரண்பாடும் கிடையாது.
இந்த வசனத்தில் கன்னிப் பெண் விபச்சாரம் செய்தால் கொடுக்கப்படும் தண்டனையில் பாதி என்று கூறப்படுவதால் திருமணம் செய்தவர்கள் விபச்சாரம் செய்தால் கொடுக்கப்படும் தண்டனை வேறு, திருமணம் முடிக்காதவர்கள் விபச்சாரம் செய்தால் கொடுக்கப்படும் தண்டனை வேறு என்பதையும் விளங்கலாம்.
திருமணம் முடிக்காதவர்கள் விபச்சாரம் செய்தால் 100 கசையடி என குர்ஆன் கூறுகின்றது (24:2). திருமணம் முடித்தவர்கள் செய்தால் கல்லெறிந்து கொல்லுதல் என ஹதீஸ்கள் கூறுகின்றன. இரண்டுக்கும் இடையில் எந்த முரண்பாடும் இல்லை.
மனிதனின் பலவீனம்:
يُرِيْدُ اللّٰهُ اَنْ يُّخَفِّفَ عَنْكُمْۚ وَخُلِقَ الْاِنْسَانُ ضَعِيْفًا.
‘அல்லாஹ் உங்களுக்கு (சட்டங்களை) இலகுபடுத்தவே விரும்புகின்றான். மனிதன் பலவீனனாகப் படைக்கப்பட்டுள்ளான்.” (4:28)
அடிமைப் பெண்களைத் திருணம் செய்ய அனுமதித்த பின்னர் அல்லாஹ் இலகுபடுத்த விரும்புகின்றான் என்பது கூறப்படுகின்றது. அத்துடன் மனிதன் பலவீனமானவனாகவும் படைக்கப் பட்டுள்ளான் என்றும் கூறப்படுகின்றது. இங்கே மனித பலவீனமாகக் கூறப்படுவது எது என்பது குறித்து அறிஞர்கள் விபரிக்கின்ற போது, பெண்கள் விடயத்தில் ஆண்களும் ஆண்கள் விடயத்தில் பெண்களும் பலவீனமாகப் படைக்கப்பட்டுள்ளனர். மனிதனின் இந்த இயல்பான பலவீனத்தின் காரணமாகவே இஸ்லாம் திருமணத்தைக் கடமையாக்கியுள்ளது. இல்லறம் இல்லாமல் துறவரம் பூணுவது என்பது சாத்தியமானது அல்ல. துறவிகளில் அதிகமானவர்கள் தமது துறவரக் கொள்கைக்கு துரோகம் செய்து வருகின்றனர் என்கின்றது.
மேலும், அடிமைப் பெண்கள் தமது எஜமானையே சார்ந்திருப்பவர்கள். அவர்களை அனுபவிக்க அனுமதிக்காவிட்டாலும் தப்பு நடக்கவே வாய்ப்புள்ளது. எனவே, அடிமைப் பெண்களை அவர்களது எஜமான்கள் மட்டும் பாலியல் ரீதியில் தொடர்பு கொள்ளலாம். குழந்தை பிறந்தால் அவள் அடிமைத்துவத்திலிருந்து விடுபட்டு ‘உம்முல் வலத்” – குழந்தையின் தாய் எனும் அந்தஸ்தைப் பெறுவாள் என குர்ஆன் கூறியது.
பொதுவாக ஆணும் பெண்ணும் தனித்திருக்கும் போது அவர்கள் தப்புச் செய்யும் எண்ணம் இல்லாவிட்டாலும் கூட அவர்கள் மிக நல்லவர்களாகவும், பண்பாளர்களாகவும், பக்குவமானவர்களாகவும், நெருக்கமானவர்களாகவும், நேசமானவர்களாகவும் இருந்தால் கூட ஒரு நேரம் இல்லையென்றாலும் மற்றொரு நேரம் தப்பான எண்ணம் ஏற்படவும், தவறான தூண்டுதல் உண்டாகவும், தப்பு நடக்கவும் வாய்ப்புள்ளது. ஏனெனில், இயல்பிலேயே பெண்கள் விடயத்தில் ஆண்கள் பலவீனமாகவே படைக்கப்பட்டுள்ளனர் என இந்த வசனம் கூறுகின்றது.
எவ்வளவுதான் சோஷியல் (சமூகவியல்) பற்றிப் பேசினாலும் எல்லோரும் ஏதோ முன்னேற்றம் அடைந்து விட்டதாகவும் தம்பட்டம் அடித்தாலும் ஆண்| பெண் விடயத்தில் பலவீனமானவன் என்பதை அன்றாட செய்திகள் உறுதி செய்கின்றன. வயது வேறுபாடு இல்லாமல், அந்தஸ்த்து வேறுபாடு இல்லாமல், உறவு வேறுபாடில்லாமல் நாட்டில் நடக்கும் பாலியல் ரீதியான குற்றங்கள் இதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.
எனவே, போலிக் காரணங்கள் கூறி நம்மை நாமே அழித்துக் கொள்ளாமல் இந்த இயல்பான மனித பலவீனத்தைப் புரிந்து அதற்கு எற்ப செயற்பட வேண்டும். இஸ்லாம் கூறும் மஹ்ரமான உறவு அல்லாதவர்களுடன் தனித்திருப்பது, தனித்துப் பயணிப்பது அனைத்தையும் தவிர்ப்பதுதான் பாதுகாப்பானதும், ஆரோக்கியமானதுமாகும்.
5. தற்கொலை தீர்வாகாது!:
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَاْكُلُوْۤا اَمْوَالَـكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ اِلَّاۤ اَنْ تَكُوْنَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِّنْكُمْ وَلَا تَقْتُلُوْۤا اَنْـفُسَكُمْؕ اِنَّ اللّٰهَ كَانَ بِكُمْ رَحِيْمًا
‘நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு மத்தியில் பொருத்தத்தின் அடிப்படையில் நடைபெறும் வியாபாரத்தைத் தவிர, உங்கள் சொத்துக்களை உங்களுக்கிடையில் தவறான முறையில் உண்ணாதீர்கள். மேலும், உங்களை நீங்களே கொன்று விடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களுடன் நிகரற்ற அன்புடையவனாக இருக்கின்றான்.” (4:29)
இந்த வசனத்தில் உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள் என்று கூறப்படுகின்றது. ஒருவரின் சொத்தை அடுத்தவர் அநியாயமாக அபகரிப்பது சமூகத் தற்கொலையாகும்| அழிவுக்கு வழிவகுக்கும். அதே நேரத்தில் விற்பவர் -வாங்குபவர் இருவரும் திருப்தியுடன் செய்யும் வியாபாரத்தையே இஸ்லாம் வரவேற்கின்றது. நிர்ப்பந்த வியாபாரம் தடுக்கப்படுகின்றது.
இந்த வசனத்தின் இறுதியில் உங்களை நீங்களே கொன்று கொள்ளாதீர்கள்! என தற்கொலை தடுக்கப்படுகின்றது. இன்று உலகில் சர்வ சாதாரணமான விடயங்களுக்கெல்லாம் தற்கொலை நடைபெறுகின்றது. இஸ்லாம் கழாகத்ர் (விதி) பற்றிய நம்பிக்கையை வலியுறுத்துகின்றது. வாழ்வில் ஏற்படும் இழப்புக்கள், சோதனைகளுக்கு தற்கொலை என்றும் ஒரு தீர்வாக அமையாது. செத்தவன் பிரச்சினையிலிருந்து விடுபட்டாலும் அவனைச் சார்ந்தவர்கள் பிரச்சினையில் மாட்டிக் கொள்வார்கள். உண்மையில் தற்கொலை செய்பவன் சுயநலவாதி! தான் பிரச்சினையில் இருந்து விடுபட வேண்டும் என்று தன்னை அழித்துக் கொள்கின்றான். ஆனால் அவனது மனைவி-மக்கள், குடும்ப உறவுகள் அதன் பின்னர் அடையும் சோகம், கஷ்டம் பற்றி அவனுக்கு அக்கறையில்லை.
தற்கொலை செய்பவன் கோழையாவான். பிரச்சினைகளை எதிர் கொள்ளும் துணிச்சல் இல்லாததால் அவன் தன்னைத் தானே அழித்துக் கொள்கின்றான். மரணத்தைச் சந்திக்கத் துணிந்தவன் ஏன் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கத் துணியக் கூடாது? இஸ்லாம், தற்கொலை செய்பவன் தனது இம்மையை மாத்திரமன்றி தனது மறுமை வாழ்வையும் அழித்துக் கொள்வதாகக் கூறுகின்றது. அவன் மறுமையில் நரகம் செல்வான் என்பதை இஸ்லாம் உறுதியாகக் கூறுகின்றது.
தற்கொலை செய்யும் பலரும் எனக்கென இந்த உலகில் யாரும் இல்லை என்ற மனநிலைக்குச் சென்று தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலையைக் கண்டித்துவிட்டு, அல்லாஹ் உங்களுடன் அன்பாக இருக்கின்றான் எனக் கூறி உங்களுக்கு யார் இல்லாவிட்டாலும் அல்லாஹ் இருக்கின்றான்| அவன் உங்களுடன் அன்பாக இருக்கின்றான் எனக் கூறி ஆற்றுப்படுத்துகின்றான், ஆறுதல் கூறுகின்றான்.
தொடரும்… இன்ஷா அல்லாஹ்.