ஷிர்க்கும் சிலந்தி வீடும் | Article

அல் குர்ஆன் அடிப்படையான சில விடயங்களைக் கூட உதாரணங்கள் கூறி விளங்க வைக்கும். அவ்வாறு அது கூறும் உதாரணங்களை ஆழமாக நோக்கினால் அல்லாஹ்வின் இறைமையையும் அல்குர்ஆன் இறைவேதம் என்பதையும் உறுதி செய்வதாக அமைந்திருக்கும்.

இந்த வகையில் இணைவைத்தலுக்கு அல்லாஹ் உதாரணம் கூறும் போது சிலந்தி வீட்டை உதாரணமாகவும் உவமையாவும் கூறுகின்றான்.

‘அல்லாஹ்வையன்றி (வேறு) பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டோரின் உதாரணம், சிலந்தியின் உதாரணத்தைப் போன்றதாகும். அது ஒரு வீட்டை அமைத்துக் கொண்டது. நிச்சயமாக வீடுகளில் மிகப் பலவீனமானது சிலந்தியின் வீடாகும். அவர்கள் அறிபவர்களாக இருந்தால் (இவர்களை எடுத்திருக்க மாட்டார்கள்.)” (29:41)

அல்லாஹ்வுக்கு நிகராக அவனல்லாதவர்களை எடுத்துக் கொண்டவர்களது உதாரணம் சிலந்தி வீட்டைப் போன்றது என்று அல்லாஹ் கூறுகின்றான். இஸ்லாம் ஓரிறைக் கோட்பாட்டை வலியுறுத்தும் மார்க்கமாகும். அல்லாஹ் அல்லாதவர்களிடம் பிரார்த்திப்பதை அது வன்மையாகக் கண்டிக்கின்றது. முஸ்லிம்களில் சிலரும் இந்த உண்மையை உணராமல் இறந்து போன நல்லடியார்களிடம் பிரார்த்தனை செய்து தமது ஈமானையும் தாம் செய்த நல்லமல்களையும் அழித்து வருகின்றனர். அல்குர்ஆன் இதை வன்மையாகக் கண்டிக்கின்றது.

‘யார் அல்லாஹ்வுடன் வேறு கடவுளை அழைக்கின்றானோ, அதற்கு அவனுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. அவனது விசாரணை அவனது இரட்சகனிடமே இருக்கின்றது. நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.”

(23:117)

وَمَنْ اَضَلُّ مِمَّنْ يَّدْعُوْا مِنْ دُوْنِ اللّٰهِ مَنْ لَّا يَسْتَجِيْبُ لَهۤ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ وَهُمْ عَنْ دُعَآٮِٕهِمْ غٰفِلُوْنَ‏

‘அல்லாஹ்வையன்றி மறுமை நாள் வரை தனக்கு எந்தப் பதிலையும் அளித்திடாதோரை அழைப்பவனை விட மிகவும் வழிகெட்டவன் யார்? அவர்களோ இவர்களின் அழைப்பை உணராதவர்களாக இருக்கின்றனர்.” (46:05)

ذٰ لِكُمُ اللّٰهُ رَبُّكُمْ لَـهُ الْمُلْكُ ؕ وَالَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ مَا يَمْلِكُوْنَ مِنْ قِطْمِيْر
‘அல்லாஹ்தான் உங்களது இரட்சகன். அதிகாரம் அவனுக்கே உரியது. அவனையன்றி நீங்கள் அழைப்போர் (படைப்பதற்கு) அணுவளவும் ஆற்றல் பெறமாட்டார்கள்.”

اِنْ تَدْعُوْهُمْ لَا يَسْمَعُوْا دُعَآءَكُمْ‌ ۚ وَلَوْ سَمِعُوْا مَا اسْتَجَابُوْا لَـكُمْ ؕ وَيَوْمَ الْقِيٰمَةِ يَكْفُرُوْنَ بِشِرْكِكُمْ ؕ وَلَا يُـنَـبِّـئُكَ مِثْلُ خَبِيْرٍ

‘நீங்கள் அவர்களை அழைத்தாலும் உங்கள் அழைப்பை அவர்கள் செவியேற்க மாட்டார்கள். அவர்கள் செவியேற்றாலும் உங்களுக்கு பதிலளிக்கமாட்டார்கள். மறுமை நாளில் உங்களின் இணைவைப்பை அவர்கள் நிராகரித்தும் விடுவார்கள். யாவற்றையும் அறிந்தவனைப் போன்று எவரும் உமக்கு அறிவிக்க மாட்டார்கள்.” (35:13-14)

இவ்வாறு பல வசனங்கள் அல்லாஹ் அல்லாதவர்களிடம் பிரார்த்திப்பது ஷிர்க் என்றும் அர்த்தமற்ற செயல் என்றும் விபரிக்கின்றது. இவ்வாறு செய்பவர்கள் சிலந்தியைப் போன்றவர்கள் என்று உவமித்துக் கூறுகின்றது.

குர்ஆன் கூறும் உதாரணங்கள்:
குர்ஆன் கூறும் உதாரணங்கள் பற்றி குர்ஆன் கூறும் போது இவ்வாறு விபரிக்கின்றது.

‘மனிதர்கள் நல்லுபதேசம் பெறும் பொருட்டு இந்தக் குர்ஆனில் ஒவ்வொரு உதாரணத்தையும் நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கூறியிருக்கின்றோம்.”

39:27)

சிலந்தி:
அல்லாஹ் எந்தப் படைப்பையும் வீணுக்காகப் படைக்கவில்லை. எல்லா படைப்புக்களும் மனிதனின் நலனுக்காகவும் உலக இயக்கத்தின் தேவைக்காகவுமே படைக்கப்பட்டுள்ளன.

‘வானம், பூமி மற்றும் அவையிரண்டுக்கு மிடைப்பட்டவற்றை நாம் வீணாகப் படைக்கவில்லை. இது நிராகரித்தோரின் எண்ணமாகும். நிராகரித்தோருக்கு நரகத்தின் கேடுதான் உண்டு.”

(38:27)

சிந்திப்பதற்காகவே உதாரணங்கள் கூறப்படுவதாக இந்த வசனம் கூறுகின்றது. இவ்வாறு 17:89, 18:54, 30:58 ஆகிய வசனங்களிலும் கூறப்படுகின்றது.

சிலந்தியை உதாரணமாகக் கூறிவிட்டு சிந்திப்பவர்கள்தான் இந்த உதாரணங்களின் உண்மையை அறிய முடியும் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

‘இவை உதாரணங்களாகும். இவற்றை மனிதர்களுக்காகவே நாம் கூறுகின்றோம். அறிவுடையோரைத் தவிர வேறு யாரும் இதனை விளங்கிக்கொள்ள மாட்டார்கள்.” (29:43)

உண்மையான ஈமான் உடையவர்களுக்கு உதாரணங்கள் உறுதியைக் கொடுப்பதாகவும் இறை நிராகரிப்பாளர்களுக்கு அது வழிகேட்டையே அதிகரிக்கும் என்றும் அல்லாஹ் கூறுகின்றான்.

‘நிச்சயமாக அல்லாஹ், கொசுவையோ (அற்பத்தில்) அதை விட மேலானதையோ உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான். நம்பிக்கை கொண்டோர், அது தம்முடைய இரட்சகனிடமிருந்து வந்த உண்மை என்பதை அறிந்து கொள்வார்கள். (ஆனால்) நிராகரித்தோரோ, ‘இதன் மூலம் அல்லாஹ் என்ன உதாரணத்தை நாடுகின்றான்?” என்று கேட்கின்றனர். (உதாரணமாகக் கூறப்பட்ட) இதன் மூலம்; (அல்லாஹ்) பலரை வழிகேட்டில் விட்டு விடுகிறான். இதன்மூலம் அதிகமானோரை நேர்வழியில் நடத்துகின்றான். இதன் மூலம் பாவிகளைத் தவிர வேறு எவரையும் அவன் வழிகேட்டில் விடுவதில்லை.” (2:26)

சிலந்திகளும் அல்லாஹ்வின் அற்புதப் படைப்பாகும். சிலந்தியில் ஓரிரு வகைதான் நாம் அறிந்ததாகும். சிலந்திகளில் பல்லாயிரம் (சுமார் 46000) வகைகள் உள்ளன. உலகில் உள்ள மொத்த சிலந்திகளும் 400-800 டொண் உணவுகளை உட்கொள்வதாக கணிப்பிட்டுள்ளனர். 1985 இல் பிரிட்டனைச் சேர்ந்த வில்லியம், ‘பிரிஸ்டைவ் தே வேல்ட் ஒப் ஸ்பைடர்” என்ற ஆய்வு நூலை வெளியிட்டார். அதில் அவர் சிலந்திகளால் கொல்லப்படும் பூச்சிகளின் எடை பிரிட்டனில் வாழும் மக்கள் தொகையின் எடையை விட அதிகமானதாக இருக்கும் என்ற கணிப்பை வெளியிட்டார். இந்தத் தகவல் பயிர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் பல்லாயிரம் பூச்சி இனங்களைக் கொன்று சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் சிலந்திகளுக்கு இருக்கும் பங்கை வெளிப்படுத்துகின்றது.

சிலந்தி வீடும் இந்த உதாரணமும்:
இந்த உதாரணத்தை அல்லாஹ் கூறிவிட்டு சிலந்தியின் வீடு பலவீனமானது, இவர்கள் அறியக் கூடியவர்களாக இருந்தால்.. என்று கூறுகின்றான். இதன் மூலம் இந்த வசனத்தில் ஆய்ந்து அறிய வேண்டிய மனித இனம் கண்டுபிடிக்க வேண்டிய விடயமும் இருக்கின்றது என்று கூறப்படுகின்றது.

பெண் சிலந்தி:
சிலந்திகளில் பெண் சிலந்திதான் வலை பின்னி கூடு கட்டும். ஆண் சிலந்தி கூடு கட்டுவதில்லை. இது ஆரம்ப காலத்தில் அறியப்படாத செய்தியாக இருந்தது. அண்மைக்கால ஆய்வுகளில்தான் இந்த உண்மை கண்டறியப்பட்டது. இந்த வசனத்திலும், ‘இத்தஹதத் பைத்தன்” – வீட்டை எடுத்துக் கொண்ட சிலந்தி என்று கூறப்பட்டுள்ளது. இதில் பயன் படுத்தப்பட்டுள்ளது பெண்பால் வினைச் சொல்லாகும். இது ஒரு வகையில் அற்புதமான அம்சமாகும்.

சிலந்தியின் வீடு:
இந்த வசனத்தில் சிலந்தியின் வீடு பலவீனமானது என்று கூறப்படுகின்றது. சிலந்தி பற்றி ஆய்வு செய்த சிலர் சிலந்தியின் நூல் பலமானது என்ற உண்மையைக் கண்டறிந்து குர்ஆன் அறிவியலுக்கு முரணானது என வாதிட்டனர். சிலந்தியின் நூலின் அளவுக்கு மெல்லியதாகவும் அதன் பாரத்திற்கு ஏற்பவும் இரும்பை அறுத்தால் அந்த இரும்பை விட சிலந்தியின் நூல் பலமானது என்பது அண்மைக் கால ஆய்வுகளின் முடிவாகும். அப்படியானால் குர்ஆன் கூறியது உண்மைக்கு முரணானதுதானே என்பது அவர்களின் வாதமாகும்.

இங்கே குர்ஆன் சிலந்தியின் நூல் பலவீனமானது என்று கூறவில்லை. வீடுகளில் பலவீனமானது சிலந்தியின் வீடுதான் என்றுதான் கூறுகின்றது. சிலந்தியின் நூல் பலவீனமானது என அறிவியலுக்கு முரணாகக் கூறவில்லை.

பலவீனமான வீடு:
ஒரு மொழியில் ஒரே வார்த்தை பல அர்த்தங்களில் பயன்படுத்தப்படலாம். பலவீனம் என்பது யதார்த்தத்திலும் இருக்கலாம். உவமையாகவும் இருக்கலாம். ஒருவர் பலவீனமாக இருக்கின்றார் என்றால் அது அவரின் உண்மையான பலவீனத்தைக் குறிக்கும். ஒரு கட்சி பலவீனமாக உள்ளது என்றால் அந்தக் கட்சியின் செல்வாக்கு சரிந்திருக்கும். சிலந்தியின் வீடு பலவீனமானது என்றால் அது அந்த நூலைக் குறிப்பது அல்ல. ஒரு குருவியின் கூடும் பலவீனமானதாகத்தான் இருக்கும். இங்குதான் அறிவுள்ளவர்களாக இருந்தால் சிலந்தியின் வீடு பலவீனமானது என்று கூறப்படுவதன் காரணத்தை ஆராய வேண்டிய தேவை ஏற்படுகின்றது.

வீடு:
வீடு என்பது ஒதுங்கும் இடமாகும். அதில் உள்ளவர்களுக்கு அமைதியையும் நிம்மதியையும் பாதுகாப்பையும் அது அளிக்க வேண்டும். ஆனால், சிலந்தியின் வீடு வெயிலில் இருந்தோ, மழையில் இருந்தோ பாதுகாப்பளிக்காது. அனைத்துக்கும் மேலாக பெண் சிலந்தி இனப்பெருக்கத்திற்குத் தயாரானதும் ஆண் சிலந்தியைத் தின்றுவிடும்.

இவ்வாறே MICARIA SOCIABILIS எனும் இன ஆண் சிலந்தி பெண் சிலந்தியைக் கொன்று தின்றுவிடும். பெண் சிலந்தியின் பசியை மோப்பம் மூலம் உணர்ந்த ஆண் சிலந்தி தப்பித்துக் கொள்வதும் உண்டு. இவ்வாறே சிலந்திகள் சகோதர சிலந்திகளையும் வேட்டையாடி தின்றுவிடும். பெண் சிலந்தி கூடு கட்டும் போதே கண்ணிகளை (பொறி) வைத்திருக்கும். அந்த இடம் அதற்கு மட்டும்தான் தெரியும். சில போது ஆண் சிலந்தி அதில் மாட்டிக் கொள்ளும். சிலந்திக் கூட்டுக்குள் நடக்கும் இந்த உறவுக் கொலை மூலம் அது பலவீனமான வீடாக இருக்கின்றது.

குர்ஆன் சொல்லும் பலவீனம் வீட்டின் ஸ்தீரத் தன்மையில் உள்ள பலவீனம் அல்ல. அங்கே யாரும் யாரையும் நம்ப முடியாது. உறவுகளே அழிவுகளுக்கு வழியாகும். சிலந்தியின் இந்த இயல்புகள் சிலந்திகள் பற்றிய நீண்ட கால ஆய்வுகள் மூலம் கண்டு பிடிக்கப் பட்டதாகும். இதைக் குர்ஆன் கூறியுள்ளது என்றால் சிலந்தியையும் இந்த உலகையும் படைத்த படைப்பாளன் அவன். அவன் ஒருவனே இறைவன் என்பதற்கான அத்தாட்சியாகவும் ஆதாரமாகவும் அமைகின்றது.

ஷிர்க்கும் சிலந்தி வலையும்:
பிற வீட்டுக்குச் சென்றால் விருந்தாளியாகலாம் சிலந்தி வீட்டுக்குச் செல்பவர்கள் அதற்கு விருந்தாவார்கள். அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்கள் தம்மைத் தாமே அழித்துக் கொள்ளும் வழியைச் செய்கின்றார்கள். ஷிர்க் எனும் சிலந்தி வலையில் சிக்குபவர்கள் நரகில் விழுவார்கள்.

ஷிர்க் செய்பவர்களுக்கும், செய்யப்படுபவர் களுக்கும் இடையில் உள்ள உறவு முறிந்துவிடும். இங்கு நீங்கள் யாரை அழைக்கின்றீர்களோ அவர்கள் மறுமையில் உங்கள் எதிரியாவார்கள். என்னைத் தானே அழைத்தார்கள் என உங்கள் மீது அன்பு காட்டப் போவதில்லை.

இங்கே நீங்கள் யா முஹியத்தீன் என அவரை அழைக்கலாம். மறுமையில் அவர் அழைத்தவர்களுக்கே எதிராகத்தான் இருப்பார்.

‘நீங்கள் அவர்களை அழைத்தாலும் உங்கள் அழைப்பை அவர்கள் செவியேற்க மாட்டார்கள். அவர்கள் செவியேற்றாலும் உங்களுக்கு பதிலளிக்கமாட்டார்கள். மறுமை நாளில் உங்களின் இணைவைப்பை அவர்கள் நிராகரித்தும் விடுவார்கள். யாவற்றையும் அறிந்தவனைப் போன்று எவரும் உமக்கு அறிவிக்க மாட்டார்கள்.” (35:14)

நல்லடியார்களை நாம் அழைத்திருந்தால் அவர்கள் மறுமையில் அதை மறுத்து விடுவார்கள். என்னை அழையுங்கள் எனக் கூறி இவர்கள் அவர்களை அழைத்திருந்தால் இருவரும் நரகத்தில் காலங் கழிக்க வேண்டியதுதான்.

‘அவர்களின் முகங்கள் நரகத்தில் புரட்டப்படும் நாளில், ‘நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? மேலும், இத்தூதருக்கும் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?” என்று கூறுவார்கள்.”

“மேலும், ‘எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நாம் எங்கள் தலைவர்களுக்கும் எங்கள் பெரியார்களுக்கும் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர்” என்று கூறுவர்.”

‘எங்கள் இரட்சகனே! நீ அவர்களுக்கு வேதனையில் இருமடங்கு வழங்குவாயாக! இன்னும் அவர்களை நீ பெருமளவில் சபிப்பாயாக” (என்றும் கூறுவர்.)” (33:66-68)

நல்லவர்கள் தங்களை அழைக்குமாறு கூறாமல் அழைக்கப்பட்டிருந்தால் அழைத்தவர்கள் மாட்டிக் கொள்வார்கள்| அவர்கள் தப்பி விடுவார்கள். தங்களை மக்கள் அழைப்பதை அனுமதித்தவர்களை அழைத்திருந்தால் இரு சாராருக்கும் அழிவுதான். இங்கே அவ்லியாக்களை மரியாதையுடன் அழைத்தவர்கள் மறுமையில் மறு பக்கம் மாறி விடுவார்கள்.

‘எங்கள் இரட்சகனே! ஜின்களிலும் மனிதர்களிலும் எம்மை வழிகெடுத்தோரை எமக்குக் காட்டுவாயாக! அவ்விரு சாராரும் தாழ்ந்தோரில் ஆகுவதற்காக எமது பாதங்களின் கீழ் அவர்களை நாம் ஆக்குவோம்” என நிராகரித்தோர் கூறுவர்.” (41:29)

இந்த உதாரணத்தை நல்ல முறையில் சிந்தித்தால் முஃமின்களுக்கு அது மேலும் ஈமானை அதிகரிக்கும் என்பதை இதனூடாக நாம் புரிந்து கொள்ளலாம். ஷிர்க் எனும் சிலந்தி வலையில் மாட்டிக் கொள்ளாமல் எமது ஈமானைப் பாதுகாத்துக் கொள்வோமாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.