விளக்கை நோக்கி வரும் ‘விட்டில் பூச்சிகள்’ போல

எனக்கும் உங்களுக்குமுள்ள உதாரணம் ஒரு மனிதனைப் போன்றதாகும். அவர் தீ மூட்டினால் அவரைச் சூழ அதிலிருந்து ஒளி வீசியபோது விட்டில் பூச்சிகளும் தீயில் விழும். இதர பூச்சிகளும் அதில் விழலாயின. அந்த மனிதரோ அவற்றைத் தீயில் விழாமல் தடுத்துக் கொண்டிருந்தார். எனினும், அவை அவரையும் மீறி நெருப்பில் விழுகின்றன.

‘இதனைப் போன்று (பாவங்களைப் புரிந்து) நரக நெருப்பில் நீங்கள் விழாமல் தடுக்க உங்கள் இடுப்புக்களைப் பிடித்து நான் இழுத்துக் கொண்டிருக்கிறேன். நரகைவிட்டும் வாருங்ககள்! நரகைவிட்டும் வாருங்கள்! எனக் கெஞ்சிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நீங்களோ என்னையும் மீறி அந்த நரகப் படுகுழியில் விழுந்து கொண்டிருக்கிறீர்கள். என நபி(ச) அவர்கள் கூறினார்கள்’
(அறி: அபூ ஹுரைரா(ரழி) – ஆதா: முஸ்லிம்)

அழகிய உவமைகளையும், உதாரணங்களையும் கூறி கருத்துக்களைத் தெளிவுபடுத்தும் நபி(ச) அவர்கள் இங்கே தனக்கென ஒரு உதாரணத்தைக் கூறுகின்றார்கள்.
தன்னை தீ மூட்டிய ஒரு மனிதனாகச் சித்தரிக்கின்றார்கள். அவர் மூட்டிய தீ பற்றியெரியும் போது விட்டில் பூச்சிகள் அந்த நெருப்பில் போய் விழுகின்றன. இங்கே மக்கள் விட்டில் பூச்சிகளுக்கு ஒப்பிடப்படுகின்றனர். நெருப்பு நரக நெருப்புக்கும், தீமைக்கும் உவமானமாகக் கூறப்படுகின்றது. இந்த நல்ல மனிதரோ நெருப்பில் விழும் விட்டில் பூச்சிகளைத் தடுக்கின்றார். அந்த மனிதர் நெருப்பில் விழும் பூச்சிகள் மீது அன்பு கொள்கிறார். அவை நெருப்பின் கவர்ச்சியால் அதை நல்லது என எண்ணி ஏமாந்து அதில் விழுந்து வெந்து கருகுவதை வெறுக்கிறார். அவற்றை அந்த ஆபத்திலிருந்து காக்க அபார முயற்சி எடுக்கின்றார். அந்தத் தீ மூட்டிய மனிதனின் இந்த முயற்சியைத்தான் தனது பணியாக நபி(ச) அவர்கள் அறிவிக்கிறார்கள். பாவத்தில் இருக்கும் அற்ப இன்பத்திற்காகவும், நரகத்திற்கு இட்டுச் செல்லும் பாவ காரியங்களில் காணப்படும் வெளிப்படையான சுகத்தையும் கண்டு ஏமாந்து போய் நரகை நோக்கி விரையும் மக்கள் அந்த மனிதரின் முயற்சியையும் முறியடித்துவிட்டு நரகத்தில் விழும் விட்டில் பூச்சிகளுக்கு உவமிக்கப் படுகின்றார்கள்.
இந்த உதாரணத்தில் மனிதனின் இயல்பு, தீமையின் இயல்பு, நபியின் பணி என்பன அழகாகச் சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளன.
மனிதன் பலவீனமானவன், வெளிக்கவர்ச்சியில் ஏமாறும் இயல்பு கொண்டவன். நெருப்பு கொழுந்து விட்டு எரியும் போது பார்ப்பதற்குத் தங்கம் போல ஜொலிக்கலாம். அழகாகத் தான் காட்சியளிக்கும். இதைக் கண்டு ஏமாறும் விட்டில் பூச்சிகளின் பலவீனம் மனிதனுக்கு இருக்கின்றது.
எனவே, பாவங்களின் பக்கம் மனிதன் இயல்பாக சாய்ந்து விடுகின்றான். அதில் விழுந்து தன் வாழ்வை இழந்த பின்னர்தான் அவனுக்கு அதன் தீமை விளங்குகின்றது. ஆனால், அதன் பின் அவனே விரும்பினாலும் விழுந்த பாவக் கிடங்கிலிருந்து அவனால் மீண்டு வர முடியாமல் போய்விடுகின்றது. பாவத்திற்கு அடிமையாகிவிடுகின்றான். அதன் பின் அவனுக்கு எவ்வளவு போதனை செய்யப்பட்டாலும் தவறுகிறான், விடத்தான் வேண்டும் என்னால் விட முடியாமல் இருக்கின்றது என்று கூறும் நிலைக்கு ஆளாகிவிடுகின்றான்.
இந்த மனிதன் பலவீனமானவனாகப் படைக்கப்பட்டிருந்தாலும் அவனுக்குப் பகுத்தறிவை வழங்கி அவனை அல்லாஹ் பலப்படுத்தி இருக்கின்றான். அவனுக்கு மனச்சாட்சியை வழங்கி தீமை செய்யும் போது குறுகுறுக்கும் மனநிலையை வழங்கி பாதுகாப்புக்கான ஏற்பாட்டைச் செய்துள்ளான். நபிமார்கள், ரஸுல்மார்களை அனுப்பி அவர்கள் மூலமாக இது நன்மை, இது தீமை, இதைச் செய்யுங்கள், அதைச் செய்யாதீர்கள் என போதனை செய்துள்ளான். எனினும் மனிதன் இத்தனை தடைகளையும் தாண்டி தவறில் போய் விழுகின்றான்.
பாவத்தின் இயல்பு!
பாவங்களும், தீய காரியங்களும் மனிதனைக் கவரும் தன்மை கொண்டவை. விபச்சாரம், போதைப் பழக்கம், ஆபாசம், ஆடல், பாடல், இசை இவை எல்லாம் பார்ப்பதற்கு இன்பமாய்; இருக்கும். மனிதனை மயக்கும் தன்மை கொண்டதாய் இருக்கும். ஆனால், இவற்றில் விழுபவர்கள் உலகத்தில் சில வினாடிகள் இன்பத்தில் திழைத்துப் போனாலும் போகப் போக இதன் கொடூரத்தை உணர ஆரம்பிக்கின்றனர்.

ஆனால், நல்ல மனிதனோ தனக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் பகுத்தறிவைப் பயன் படுத்தி பாவத்தின் கவர்ச்சியில் மயங்காமல் இது தவறு என்பதை உணர்ந்து கொள்கின்றான். அல்லாஹ் வழங்கிய வஹி எனும் வழிகாட்டல் மூலம் ‘இது தவறு இதிலிருந்து நான் என்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும்’ என்ற உணர்வைப் பெறுகின்றான். எனவே தவறை விட்டும் ஒதுங்கிவிடுகின்றான்.
பாவங்கள் கவர்ச்சியானவைதான். ஆனால் ஆபத்தானவை. ‘மின்னுவதெல்லாம் பொன்னல்லவே!’ தீமையின் கவர்ச்சியால் கட்டுண்டு ஏமாந்து அதில் போய் விழுபவர்கள் நெருப்பில் விழும் விட்டில் பூச்சிகளுக்கு ஒப்பிடப்படுகின்றனர்.
இந்த உவமையில் நபி(ச) அவர்கள் நெருப்பில் விழும் விட்டில் பூச்சிகளைத் தடுக்கும் மனிதனைப் போல் பாவங்களில் நீங்கள் விழுந்து அழிந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் உங்களது இடுப்பைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கின்றேன் என்று கூறுகின்றார்கள்.
நபி(ச) அவர்கள் இந்த மக்கள் மீது கொண்டிருக்கும் அன்பையும், அவர்களின் பாதுகாப்பு விடயத்தில் அவர்கள் எடுத்திருக்கும் அக்கறையையும் இந்த உதாரணம் எடுத்துக் காட்டுகின்றது.
நீங்கள் ஒரு தவறைச் செய்யும் போது இந்த உதாரணத்தை சற்று எண்ணிப் பாருங்கள்.
நீங்கள் வட்டி வாங்குவதற்காக ஒரு வங்கிப் படியில் ஏறப்போகின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த வங்கியை நெருப்புக் கிடங்காக எண்ணிக் கொள்ளுங்கள். நீங்கள் அதை நோக்கிப் போகின்ற போது நபி(ச) அவர்கள் உங்களது இடுப்பைப் பிடித்துக் கொண்டு ‘போக வேண்டாம்’ ‘போக வேண்டாம்’ என்று தடுக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்போது நபி(ச) அவர்களின் கரங்களைத் தட்டிவிட்டு உள்ளே போகப் போகின்றீர்களா? அல்லது நபியின் அன்பான உபதேசத்தைக் கேட்டுப் பாவத்தைக் கைவிடப் போகின்றீர்களா? சற்று எண்ணிப் பாருங்கள்.
நபியவர்கள் தடுத்தவை எதுவாக இருந்தாலும் அது எம்மை நரகத்திற்குத் தான் இட்டுச் செல்லும். எனவே தான் உங்களுக்கு ஏவப்பட்டதை முடிந்தவரை எடுத்து நடவுங்கள். நான் தடுத்தவற்றை விட்டும் முற்று முழுதாகத் தவிர்ந்து நடந்து கொள்ளுங்கள் என நபி(ச) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நபி(ச) அவர்கள் இன்று எம்மத்தியில் இல்லையென்றாலும் அவர்களது போதனை மறுமை வரையிலும் எம்முடன் இருந்து அவர்களது பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அவர்களது போதனைகள் எமது இடுப்புக்களைப் பிடித்து இழுத்துக்; கொண்டிருக்கின்றன.
பணியின் அவசியம்
பாவம் கவரும் ஆற்றல் கொண்டது. மனிதன் மயங்கும் பலகீனம் கொண்டவன். எனவே, பாவத்தைப் பற்றி எச்சரிக்கை தொடர்ச்சியாகச் செய்யப்பட வேண்டும். மயங்கும் தன்மை கொண்ட மனிதனின் மயக்கம் தெளியும் அளவுக்கு அவனுக்கு தீமையின் கொடூரமும், போலித் தன்மையும் எடுத்துச் சொல்லப்பட வேண்டும். நபி(ச) அவர்களது போதனை அவர்களது வாரிசுகளாகிய உலமாக்களாலும், நபியின் வழிமுறையைப் பின்பற்றுகின்ற முஸ்லிம்களாலும்; எடுத்துச் சொல்லப்பட வேண்டும். விளக்கில் விழும் விட்டில் பூச்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கான பணியைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதையும் இந்த உதாரணம் உணர்த்துகின்றது.

நீங்கள் விட்டில் பூச்சிகளா? அல்லது தீயில் விழும் பூச்சிகளைத் தடுக்கும் பணிகளைச் செய்பவர்களா? என்பதைச் சிந்தித்து முடிவு செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.