விபச்சாரக் குற்றமும் நான்கு சாட்சியமும்.

அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் :

விபச்சாரக் குற்றமும் நான்கு சாட்சியமும்.

“உங்கள் பெண்களில் எவரேனும் மானக் கேடான செயலைச் செய்துவிட்டால் அவர்களின் மீது (அதை நிரூபிக்க) உங்களில் நான்கு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவர்கள் சாட்சி கூறினால் அப்பெண்கள் மரணிக்கும் வரை, அல்லது அல்லாஹ் அவர்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்தும் வரை அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்.” (4:15)

இந்த வசனத்தின் முதல் பகுதி விபச்சாரக் குற்றத்தை நிரூபிப்பதற்கு நான்கு சாட்சிகள் தேவை என்கின்றது. அந்நான்கு சாட்சிகளும் தவறை நேரடியாகக் கண்டவர்களாகவும் இருக்க வேண்டும். நான்கு சாட்சிகள் மூலம் உறுதிப்படுத்த முடியாவிட்டால் தனி நபரது கற்பு விடயத்தில் அவர் தவறு செய்வதைத் தனிமையாகக் கண்களால் கண்டிருந்தால் கூட பேசக் கூடாது. அப்படிப் பேசி அவர் அதை ஒத்துக் கொண்டால் பிரச்சினை இல்லை. மறுத்துவிட்டால் சாட்சி கூறியவருக்கு 80 கசையடிகள் கொடுக்கப்பட வேண்டும் என இஸ்லாம் கூறுகின்றது.

“எவர்கள் கற்பொழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறி, பின்னர் நான்கு சாட்சி களைக் கொண்டு வரவில்லையோ அவர்களுக்கு எண்பது கசையடி அடியுங்கள். மேலும், ஒருபோதும் அவர்களது சாட்சியத்தை ஏற்றுக் கொள்ளாதீர்கள். இன்னும் அவர்கள்தாம் பாவிகள்.”

“எனினும், இதன்பின் யார் பாவமன்னிப்புக் கோரி, (தம்மை) சீர்திருத்திக் கொண்டார்களோ, நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்| நிகரற்ற அன்புடையவன்.”
(24:4-5)

இவ்வாறே ஒரு ஆண்| குறித்த ஒரு பெண்ணுடன்: தான் விபச்சாரம் செய்ததாகச் சொல்லி அந்தப் பெண் அதை மறுத்துவிட்டாலும் அந்த ஆண் தனது குற்றத்தை ஒத்துக் கொண்டதற்கான தண்டனை வழங்கப்படுவதுடன் ஒரு பெண் மீது அபாண்டம் சுமத்தியதற்கான தண்டனையையும் பெறுவான். அந்தப் பெண் சட்டப்படி நிரபராதியாகக் கருதப்படுவாள்.

இந்தச் சட்டத்தை இஸ்லாம் பெண்ணின் கற்பையும் மானத்தையும் காப்பதற்காக இட்டது. சில வேளை ஒரு ஆண் ஒரு பெண்ணைக் காதலிக்கலாம். அந்தப் பெண் அவனை நிராகரிக்கலாம். அப்போது அந்தப் பெண் மீது களங்கத்தைக் கற்பித்து அவளை அவன் பழிவாங்க முற்படலாம் அல்லது அவளை வேறு யாராவது திருமணம் முடிக்க முடியாத நிலையை உண்டுபண்ணுவதற்காக இவளுடன் நான் விபச்சாரம் செய்திருக்கின்றேன் என்றும் கூறலாம். எனவேதான் இஸ்லாம் இவ்வாறான கடுமையான சட்டங்களைப் போட்டது. இஸ்லாத்தின் இந்தச் சட்டம் மனித மானம் புனிதமானது என்பதாலும் குறிப்பாக பெண் களங்கப்பட்டு விடக் கூடாது என்பதில் அது காட்டும் அக்கறையினாலும் இடப்பட்டதாகும்.

மாற்றப்பட்ட சட்டம்:
“உங்கள் பெண்களில் எவரேனும் மானக் கேடான செயலைச் செய்துவிட்டால் அவர்களின் மீது (அதை நிரூபிக்க) உங்களில் நான்கு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவர்கள் சாட்சி கூறினால் அப்பெண்கள் மரணிக்கும் வரை, அல்லது அல்லாஹ் அவர்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்தும் வரை அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்.”

“உங்களில் இருவர் இ(ம்மானக் கேடான)தைச் செய்தால் அவ்விருவருக் கும் நோவினை செய்யுங்கள். அவ்விருவரும் பாவ மன்னிப்புத் தேடி, தம்மைத் திருத்திக் கொண்டால் அவ்விருவரையும் விட்டு விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.” (4:15-16)

இந்த வசனத்தில் விபச்சாரத்திற்கான தண்டனை பற்றிப் பேசப்படுகின்றது. ஆண்கள் விபச்சாரம் செய்தால் நோவினை செய்யப்பட வேண்டும் என்றும் பெண்கள் விபச்சாரம் செய்தால் அவர்கள் மரணிக்கும் வரை அல்லது அவர்கள் விடயத்தில் வேறு சட்டம் வரும் வரை அவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட வேண்டும் என்றும் இந்த வசனங்கள் கூறுகின்றன. ஆண் வீட்டுக் காவலில் இருந்தால் அவனது பராமரிப்புச் செலவை ஏற்க வேண்டி வரும். அவன் உழைக்க வேண்டியவன். எனவே, அவனுக்கு தண்டனை வழங்கி அவனை வெளியில் விடலாம் என்று இந்த வசனங்கள் கூறுகின்றன.

15 ஆம் வசனத்தின் இறுதியில் இது குறித்து வேறு சட்டம் வரும் என்ற செய்தியும் கூறப்படுகின்றது. இதன் பின்னர் ஆண்-பெண் இருவருக்கும் விபச்சாரத்திற்கான தண்டனை ஒன்றாக மாற்றப்பட்டது.

விபச்சாரம் செய்த ஆண், பெண் இருவரும் திருமணம் முடிக்காதவர்களாக இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் நூறு நூறு கசையடிகள் கொடுக்கப்பட வேண்டும்.

‘(திருமணம் முடிக்காத) விபச்சாரி, விபச்சாரன் ஆகிய இருவரில் ஒவ்வொருவருக்கும் நூறு கசையடி அடியுங்கள். நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொள்வோராக இருந்தால் அல்லாஹ்வின் மார்க்கத்தில் அவ்விருவர் மீதும் உங்க ளுக்கு கருணை ஏற்படவேண்டாம். அவ்விருவரின் தண்டனையை நம்பிக்கையாளர்களில் ஒருசாரார் பார்த்துக் கொண்டிருக்கட்டும்.” (24:2)

திருமணம் முடித்தவர்கள் விபச்சாரம் செய்தால் மரண தண்டனை என்று சட்டம் மாற்றப்பட்டது. இது குறித்து நபி(ச) அவர்கள் கூறும் போது,

‘என்னிடமிருந்து நீங்கள் எடுங்கள்! என்னிடமிருந்து நீங்கள் எடுங்கள்! திருமணம் முடிக்காதவர்களுக்கு 100 கசையடியும் ஒரு வருட ஒதுக்கி வைப்பும், திருமணம் முடித்தவர்களுக்கு 100 கசையடியும் கல்லெறிந்து கொல்லுதலும் தண்டனையாகும். அவர்கள் விடயத்தில் அல்லாஹ் ஒரு வழியை ஏற்படுத்திவிட்டான்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உப்பாததிப்னுஸ் ஸாமித்(ர)
நூல்: முஸ்லிம் 1690-12, இப்னுமாஜா: 2550, அபூதாவூத்- 4415

பொதுவாக ஆண் தவறு செய்தால் அதை சம்பவமாகவும் பெண் தவறு செய்தால் அதை சரித்திரமாகவும் பார்க்கும் மனநிலைதான் நிலவுகின்றது. ‘ஆண் சேற்றைக் கண்டால் மிதிப்பான்| தண்ணீரைக் கண்டால் கழுவுவான்” என்று கூறுவார்கள். இஸ்லாம் ஆணுக்கும் கற்பு உண்டு என்று கூறுகின்றது. ஒழுக்கம் ஆண், பெண் இருபாலாருக்கும் சமமானது என்கின்றது.

பலவந்த திருமணம்:
‘நம்பிக்கை கொண்டோரே! பெண்களை பலவந்தமாக நீங்கள் உரித்தாக்கிக் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல. அவர்கள் பகிரங்கமான ஏதேனும் மானக் கேடான செயலைச் செய்தாலேயன்றி அவர்களுக்கு நீங்கள் வழங்கியவற்றில் சிலதைப் பறித்துக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள். அவர்களுடன் நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள். நீங்கள் அவர்களை வெறுத்தாலும் (பொறுத்துக் கொள்ளுங்கள்.) ஏனெனில், நீங்கள் ஒன்றை வெறுக்க, அல்லாஹ் அதில் அதிகமான நன்மைகளை வைத்திருக்கக் கூடும்.” (4:19)

ஆரம்ப காலத்தில் திருமணத்தில் பெண்ணின் சம்மதம் எதிர்பார்க்கப்படவில்லை. அவளுக்கு அந்த உரிமையும் இருக்கவில்லை. இந்த வசனம் பெண்களை பலவந்தமாக அடைவதைத் தடை செய்கின்றது. கன்னிப் பெண்ணாயினும் விதவைப் பெண்ணாயினும் அவர்களின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்விக்கக் கூடாது என இஸ்லாம் தடுக்கின்றது.

அபூ ஹுரைரா(ர) அறிவித்தார்: நபி(ச) அவர்கள், “கன்னி கழிந்த பெண்ணை, அவளுடைய (வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம் கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம் என்று கூறினார்கள். மக்கள், இறைத்தூதர் அவர்களே! எப்படி கன்னியின் அனுமதி (யைத் தெரிந்து கொள்வது) என்று கேட்டார்கள். நபி(ச) அவர்கள், ‘அவள் மௌனம் சாதிப்பதே (அவளுடைய சம்மதம்) என்று கூறினார்கள்.” (புகாரி: 5136)

அடுத்து இந்த வசனத்தின் இறுதிப் பகுதி திருமணம் செய்த பெண்ணுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று கட்டளையிடுகின்றது. பெண்களை அடிமைகளாக நடத்திய சமூகத்தில் பெண்களின் உரிமைகளைக் காத்து அவர்களுக்கு உயர்வை அளித்தது இது போன்ற இஸ்லாமிய சட்டங்களேயாகும்.

கேவலமான திருமண முறை:
‘முன்னர் நடந்துமுடிந்ததைத் தவிர (இதன் பின்னர்) உங்கள் தந்தையர்கள் மணமுடித்த பெண்களை நீங்கள் மணமுடிக்காதீர்கள். நிச்சயமாக அது மானக்கேடானதும், வெறுக்கத்தக்க செயலுமாகவும் இருக்கின்றது. வழிமுறையில் அது மிகக் கெட்டதாகும்.” (4:22)

அன்றைய அரேபியாவில் காணப்பட்ட மோசமான திருமண முறைதான் இது. ஒருவர் மரணித்து அவருக்கு பல மனைவியர் இருந்தால் அவரின் மூத்த மகன் தனது தாய் அல்லாத தந்தையின் ஏனைய மனைவியரைத் தனக்கு உரித்தாக்கிக் கொள்வார். ஒரு பெண் தந்தைக்கு வாழ்க்கைப்பட்டு அதன் பின் மகனுக்கும் வாழ்க்கைப்படும் நிலை இருந்தது. இந்த வசனத்தின் மூலம் இஸ்லாம் இந்தக் கேவலமான நடைமுறையைத் தடை செய்து பெண்களின் மானத்தைக் காத்தது.

திருமணம் செய்ய தடுக்கப்பட்ட உறவுகள்:
‘உங்கள் தாய்மார்கள், உங்கள் பெண் மக்கள், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையின் சகோதரிகள், உங்கள் தாயின் சகோதரிகள், சகோதரரின் புதல்வியர், சகோதரியின் புதல்வியர், உங்களுக்குப் பாலூட்டிய உங்கள் தாய்மார்கள், உங்கள் பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் தாய்மார்கள், நீங்கள் உறவு கொண்ட உங்கள் மனைவியரிலிருந்து உங்கள் மடிகளில் வளர்ந்த உங்கள் வளர்ப்புப் புதல்வியர் ஆகியோர் (மணம் முடிக்க) உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளனர். (இவர்களின் தாய்மார்களான) அவர்களுடன் நீங்கள் உறவு கொள்ளாதவர்களாக இருந்தால் (அப்புதல்வியர்களை மணமுடிப்பதில்) உங்கள் மீது குற்றமில்லை. மேலும், உங்களுக்குப் பிறந்த உங்கள் ஆண் மக்களின் மனைவியரும், முன்னர் நடந்து முடிந்ததைத் தவிர (இதன் பின்னர்) இரண்டு சகோதரி களை (ஏக காலத்தில் மனைவியராக) வைத்திருப்பதும் (உங்கள் மீது தடுக்கப்பட்டுள்ளது). நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.” (4:23)

இஸ்லாம் சில உறவுகளைத் திருமணம் செய்வதைத் தடுத்துள்ளது. இஸ்லாம் தடுத்துள்ள உறவுகளை பின்வருமாறு பிரித்து நோக்கலாம்.

1. இரத்த உறவின் அடிப்படையில் தடுக்கப்பட்ட உறவுகள்.
2. பால்குடி மூலம் தடுக்கப்பட்ட உறவுகள்.
3. திருமணத்தின் மூலம் தடுக்கப்படும் உறவுகள்.

1. இரத்த உறவின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட உறவுகள்:

1. தாய், தாயின் தாய் என மேல் நோக்கிச் செல்லும் தாய்மார்.
2. மகள், மகளின் மகள் என கீழிறங்கி வரும் மகள்மார்
3. உடன் பிறந்த சகோதரி.
4. தந்தையின் சகோதரி (மாமி).
5. தாயின் சகோதரி (சாச்சி, பெரியம்மா).
6. சகோதரனின் புதல்வி (மகள்).
7. சகோதரியின் புதல்வி (மருமகள்).

2. பால்குடி மூலம் ஏற்படும் திருமணத் தடை:
ஒரு பெண் ஒரு குழந்தைக்கு பால் ஊட்டினால் அந்தக் குழந்தைக்கு அவள் தாயாவாள். இரத்த உறவின் அடிப்படையில் யாரெல்லாம் திருமணம் முடிக்கத் தடை செய்யப்பட்டுள்ளனரோ அவர்களெல்லாம் பால் குடி உறவு மூலம் திருமணம் முடிக்கத் தடை செய்யப்பட்ட வர்களாவர்.

ஒரு ஆணும் பெண்ணும் சிறு பருவத்தில் ஒரே பெண்ணிடம் பால் குடித்திருந்தால் அவ்விருவரும் சகோதர சகோதரிகள் ஆவர். அவர்களிடையே திருமண உறவு இருக்க முடியாது.

03. திருமண உறவின் மூலம் திருமணம் முடிப்பதற்கு தடுக்கப்பட்டோர்:
திருமண உறவின் மூலம் திருமணம் முடிக்கத் தடைப்பட்டோரை இரண்டு விதமாகப் பிரிக்கலாம்.

1. தற்காலிகமாகத் தடுக்கப்பட்டவர்கள்.
2. நிரந்தரமாகத் தடுக்கப்பட்டவர்கள்.
தற்காலிகமாகத் தடுக்கப்பட்டவர்கள்.
ஒரு ஆண் நான்கு திருமணம் முடித்து நால்வருடனும் வாழ்ந்து கொண்டிருந்தால் வேறு எந்தப் பெண்ணையும் அவன் மணமுடிக்க முடியாது. நால்வரில் ஒருவரைத் தலாக் கூறி பிரிந்துவிட்டால் வேறு ஒரு பெண்ணை மணக்கலாம்.

இவ்வாறே மணமுடித்து கணவரோடு இருக்கும் பெண்கள் ஏனைய ஆண்களுக்கு திருமணம் முடிக்க தடுக்கப்பட்டோராவர். அந்தக் கணவரிடமிருந்து விவாகரத்துப் பெற்று அல்லது கணவன் மரணித்து இத்தா முடியும் வரை அவளை யாரும் திருமணம் முடிக்க முடியாது.

ஒரு ஆண் ஒரு பெண்ணை மணமுடித்து விட்டால் அந்தப் பெண்ணின் உடன் பிறந்த சகோதரி, தாயின் சகோதரி, தந்தையின் சகோதரி என்பவர்களை மணமுடிக்க முடியாது. அந்தப் பெண்ணை விவாகரத்து செய்துவிட்டால் அல்லது அவள் மரணித்துவிட்டால் அவர்களை மணப்பது ஆகுமானதாகும்.

இவ்வாறு தற்காலிகமாக திருமணம் முடிக்கத் தடைசெய்யப்பட்டவர்கள் திருமணம் முடிக்க தடுக்கப்பட்ட உறவுடையவர்களாக இருந்தாலும் அவர்களுடன் தனித்திருக்கவோ தனித்துப் பயணம் செய்யவோ முடியாது. ‘அஜ்னபி” அடிப்படையில்தான் இத்தகைய உறவுடையவர்கள் முன்னிலையில் ஆடை அணிந்திருக்கவும் வேண்டும் உறவு முறையும் இருக்க வேண்டும்.

நிரந்தரமாக தடுக்கப்பட்டோர்:

1. தந்தையின் மனைவியர்.
2. மனைவியின் தாய், பெண்ணாயின் கணவனின் தந்தை.
3. மகனின் மனைவி (மருமகள்)
4. திருமணம் முடித்து ஒரு பெண்ணுடன் உறவு கொண்டுவிட்டால் அவளது பெண் பிள்ளைகளைத் திருமணம் முடிப்பது தடுக்கப்பட்டதாகும். உறவுகொள்ளும் முன்னர் பிரிந்துவிட்டால் அவளது மகளை மணப்பது ஆகுமானதாகும்.

இந்த உறவுடையவர்கள் நிரந்தர மஹ்ரம் என்பதால் அவர்களுடன் பிறப்பின் அடிப்படையிலான மஹ்ரம்களுடன் பேணுவது போன்ற உறவைப் பேண முடியும். இந்த வசனம் இதைத்தான் சுருக்கமாகத் தெளிவுபடுத்துகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.