வரண்ட மற்றும் உலர் வெப்ப வலய நாடுகளை டெங்கு அபாயம் அச்சுறுத்தி வருகின்றது. டெங்குக் காய்ச்சல் (Dengue Fever) எலும்பை முறிக்கும் காய்ச்சல் (Break Born Fever) என்றெல்லாம் இதுஅழைக்கப்படும். இந்நோய் ஆரம்பத்தில் உயிர் கொல்லி நோயாக இலங்கையில் பார்க்கப்பட்டது. பின்னர் நோயை ஆரம்பத்திலேயே அறிந்து கொண்டால் மலேரியாக் காய்ச்சல் போல் இலகுவாக மருத்துவம் செய்யும் நிலை இருந்தது.
அண்மையில் டெங்குக் காய்ச்சல் பல உயிர்களை இலங்கையில் காவு கொண்டுள்ளது. குறிப்பாக இலங்கையில் கிண்ணியா பகுதியில் பல உயிர்கள் பலியாகி பல்லாயிரம் மக்கள் பாதிப்புற்றுள்ளனர்.
இன்று உலக நாடுகள் குறிப்பாக வறிய நாடுகளில் வாழும் மக்கள் நுளம்புகளிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக தினமும் பலகோடி ரூபாய்களைச் செலவு செய்து வருகின்றனர். ஆனால், நுளம்புத் தொல்லை தீர்ந்தபாடில்லை. அது தொடர்வதுடன் வளர்ந்தும் வருகின்றது.
முன்பெல்லாம் மூட்டைப் பூச்சித் தொல்லை பெரும்பாடு படுத்தியது. அதிலிருந்து தம்மைப் பாதுகாக்க மக்கள் எந்தப் பணத்தையும் செலவு செய்யவில்லை. அதில் வர்த்தக வழி எதுவும் இருக்கவில்லை. அரசாங்கமே DTT மருந்துகளை வீடு வீடாக வந்து விசிறி இன்று இலங்கை முற்று முழுதாக மூட்டைப்பூச்சித் தொல்லையில் இருந்து விடுபட்டுவிட்டது. ஆனால், நுளம்பை ஒழிக்க இத்தகைய பெரிய திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படுவதில்லை. நுளம்புகள் முழுமையாக ஒழிக்கப்பட்டால் கோடான கோடி பணம் திரட்டும் வர்த்தக சாம்ராஜ்யங்கள் சில சரிந்துவிடும் நிலை இருக்கின்றது.
நுளம்புகளால் டெங்கு, சிக்கன் குன்னியா, மலேரியா, யானைக்கால் போன்ற பல நோய்கள் பரவுகின்றன. நுளம்புகளிலிருந்து பாகாப்புப் பெற மக்கள் நுளம்புச் சுருள், நுளம்பு வலை போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், டெங்கு நுளம்பு, நாம் நுளம்பு வலைக்குள் இருக்கும் இரவு நேரத்தில் கடிப்பதில்லை. நாம் விழித்துப் பணி செய்யும் நேரத்தில் கடிக்கின்றன. எனவே, இதற்குத் தற்காப்பு நடவடிக்கைகள் நன்மை பயக்கப் போவதில்லை. நுளம்புகளின் உற்பத்திகளைத் தடுப்பதே இதற்கான ஒரேயொரு தீர்வாகும்.
நுளம்புகளின் உருவாக்கத்தைத் தடுப்பதைப் பொறுத்தவரையில் பொதுமக்கள்தான் அதில் அதிக அக்கரை செலுத்த வேண்டும்.
நுளம்புகள் உற்பத்தியாவதைத் தவிர்க்கும் விதத்தில் நீர் தேங்கி நிற்பதைத் தவிர்க்க வேண்டும். சுற்றுப்புறச் சூழலை சுத்தம் செய்து எப்போதும் சுத்தமாகப் பேணிக் கொள்ள வேண்டும். இன்று எமது நாட்டில் பொலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் போன்றவற்றின் பாவனை அதிகரித்துள்ளது. பொலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் உபகரணங்கள் வீசப்படுவதால் அதில் நீர் தேங்கி நுளம்புகளின் உற்பத்திக்கு பெரிதும் உரமூட்டுகின்றது.
தண்ணீர் தேங்கி நிற்கும் பூந்தொட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகளின் கழிவு நீர் தேங்கும் இடம், டயர்கள், வீட்டின் கூரையில் அமைக்கப்பட்டிருக்கும் வடிகாண், டின் மற்றும் போத்தல்கள், இளநீர் கோதுகள், பராமரிக்கப்படாத நீர்த்தொட்டிகள்… என அனைத்திலும் நீர் தேங்கி நிற்கும் போது அதில் நுளம்பு தனது இனத்தைப் பெருக்கிக் கொள்ள வசதியாக அமைகின்றது. ஆதலால் நாம் மேற்கூறப்பட்டவற்றில் நீர் தேங்கி நிற்பதிலிருந்து முழுமையான கவனமெடுத்து அவற்றையும் அதில் தேங்கியிருக்கும் நீரையும் அகற்றுதல் வேண்டும். இது தொடர்பான விடயத்தில் பொதுமக்கள்தான் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
அத்துடன், பெரும்பாலான இடங்களில் குறிப்பாக, முஸ்லிம் பிரதேசங்களில் பாதையோர வடிகாண்கள் கபளீகரம் செய்யப்பட்டு கட்டிடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. வடிகான்கள் சுயநலத்திற்காக மூடப்பட்டுள்ளன. இதனால் தண்ணீர் தேங்கி நிற்கின்றது. இது நுளம்புகளுக்கு செங்கம்பளம் விரிப்பது போன்றதர்கும். இது குறித்தும் சமூக விழிப்புணர்வு பெறுவது அவசியமாகும்.
மக்களின் சுயநலப் போக்கு மட்டுமன்றி பல இடங்களில் சரியான வடிகால் அமைப்புக்கள் கிடையாது. குறிப்பாக முஸ்லிம்கள் அதிகமாக வாழும் சில பிரதேசங்களில் காண்கள் இருந்தும் நீர் வடிந்து செல்வதில்லை. அப்படியே தேங்கி நின்று அருவறுப்பாக துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கும். மக்களும் இது குறித்து அக்கறையில்லாமல் சகித்தும் சலித்தும் வாழ்கின்றனர். அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கூட இது விடயத்தில் கவனம் செலுத்தாதுள்ளனர்.
எனவே, மக்கள் இது விடயத்தில் விழிப்புணர்வு கொண்டு செயற்படுவதுடன் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் அழுத்தம் கொடுத்துக் கொண்டேயிருக்கக் கடமைப் பட்டுள்ளனர்.
டெங்கு அபாயம் வந்து பல உயிர்கள் பலியானதன் பின்னர் கிண்ணியா பகுதியில் மக்கள் விழிப்புணர்வு பெற்றுள்ளனர். அத்துடன் அரச இயந்திரங்களும் இயங்கத் துவங்கியுள்ளன. பலி கொடுத்த பின்னர்தான் படிப்பினை பெறுவோம் என்பது முட்டிய பின் குனியும் முட்டாள்தனமான நடவடிக்கையாகும்.
பல உயிர்கள் பலியாகி பல்லாயிரம் மக்கள் பாதிப்படைந்த இந்த நிலையில் கூட எமது சமூகத்தில் சில இயக்கங்கள் மற்றும் ஜமாஅத்துக்களும் அரசியல் தலைவர்களும் மக்களின் இந்த அவலங்களைப் பயன்படுத்தி ஆதாயமடையும் நோக்கோடு காய்நகர்த்தல்களில் ஈடுபடுவது வேதனை தரும் விடயமாக இருப்பதுடன் மனித குலத்திற்கே இழிவு சேர்ப்பதாகவும் உள்ளது. நல்லது செய்யலாம். ஆனால், நாம்தான் அனைத்தையும் செய்தோம் என்ற மனநிலையில் அடுத்தவர்களைக்; குறைத்து மதிப்பிடும் குறைமதியுடன் விளம்பர மோகத்தில் பணி செய்வது வேடிக்கையானதும், வேதனையானதும், கேவலமானதுமாகும்.
இஸ்லாம் கூறும் இஹ்லாஸ் எனும் உயர் குணம் குன்றிக் குறைந்து செல்வது குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
அடுத்து, முஸ்லிம் மற்றும் சிறுபான்மைச் சமூகங்கள் செறிந்து வாழும் பகுதிகள் மட்டும் அதிக பாதிப்புக்குள்ளாகி வருவது ஏன் என்பது குறித்தும் நாம் கவலையுடன் கவனம் செலுத்தவும் கடமைப்பட்டுள்ளோம். மக்களது நடத்தைதான் காரணமா? அரசியல் புறக்கணிப்புக்கள்தான் காரணமா? அல்லது இதன் பின்னால் வேறு ஏதாவது சதிநடவடிக்கைகள் உள்ளனவா? என்பன குறித்தும் ஆராய்ந்து பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். இதற்காக நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. அதற்கான காலமும் எம்மை நோக்கி வந்துவிட்டது என்பதை மனதில் உறுதியாக நிலைநிறுத்த வேண்டும்.
பிர்அவ்னின் சமூகம் வரம்பு மீறி தப்புத் தவறு செய்த போது தவளை, வெட்டுக்கிளி போன்றவற்றின் மூலமாக அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.
‘வெள்ளப்பெருக்கு, வெட்டுக்கிளி, பேன் (போன்ற) பூச்சிகள், தவளைகள், இரத்தம் என்பனவற்றைத் தெளிவான அத்தாட்சிகளாக அவர்கள் மீது நாம் அனுப்பினோம். பின்னரும் அவர்கள் பெருமையடித்து குற்றம் புரியும் கூட்டத்தினராக இருந்தனர். ” (7:133)
கோடிக்கணக்கில் வெட்டுக்கிளிகள் வந்து அவர்களின் விவசாயங்களை அழித்தன. தவளைகள் வந்து அவர்களின் உணவு, படுக்கை அனைத்திலும் செறிந்து தொல்லை கொடுத்தன. இதை அல்குர்ஆன் அவர்கள் மீது தொடுக்கப்பட்ட தண்டனையாகக் கூறுகின்றது.
அந்த மக்கள் பிரச்சினை வரும் போது மூஸா நபியிடம் பிரார்த்திக்கச் சொல்லுவார்கள். பிரச்சினை முடிந்துவிட்டால் பழைய நிலைக்கே போய்விடுவார்கள். நாமும் பிரச்சினை வரும் போது திருந்தி, முடிந்த பின்னர் மீண்டும் ‘பழைய குருடி கதவைத் திறவடி” என மாறுவதாக இருந்ததால் பிர்அவ்னின் சமூகத்திற்கும் எமக்கும் இடையில் என்ன வேறுபாடு உள்ளது என்று நாம் சிந்திக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கின்றோம்.
அடுத்து, தவளை பற்றிப் பேசப்பட்டதால் இதை இங்கு நினைவூட்டுவது பொருத்தம் என்று கருதுகின்றேன். அல்லாஹ் அனைத்தையும் ஒரு காரண காரியத்துடன்தான் படைத்துள்ளான்.
முன்பெல்லாம் மழை பொழிந்தாலே தவளைகளின் சப்தம் காதுகளைக் கிழிக்கும். இப்போது தவளைகள் அருகி அழிந்து வருகின்றன. நீர் நிலைகளில் தவளைகள் இருந்தால் நுளம்புகளை அதுவே அழித்துவிடுவதுடன் நுளம்பு முட்டைகளையும் உண்டுவிடும். இதனால் நுளம்புகளின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. தவளை இனம் அழிய அழிய நுளம்புகளின் வளர;ச்சி மெல்ல மெல்ல அதிகரித்துவிட்டது என ஆய்வுகள் கூறுகின்றன. இயற்கைச் சூழலை மாற்றுவது மனித இனத்திற்கு நெருக்கடிகளைத்தான் அதிகப்படுத்தும் என்பதையே இது எமக்குணர்த்துகின்றது.
‘நீங்கள் தவளைகளைக் கொல்லாதீர்கள்…,!” என நபி(ச) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல்: பைஹகி 3059, 19382, இப்னு அபீ ஷைபா 23710
‘தவளைகளைப் பாதுகாருங்கள்” என நபி(ச) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அனஸ்(வ)
நூல்: முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக்- 8393
இதிலிருந்து இயற்கைச் சூழலைப் பாதுகாப்பது எமது கடமை என்பதை உணரலாம்.
எனவே, நுளம்புகள் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பதுடன் எமது சுற்றுப் புறச் சூழலை சுத்தமாக வைத்திருப்பதுடன் அவற்றைப் பாதுகாக்கவும் முனைவோமாக!
யா அல்லாஹ்! கொடிய நோய்களிலிருந்தும் ஆபத்துக்களிலிருந்தும் எம் அனைவரையும் பாதுகாத்து அருள் புரிவாயாக!