ரமழான் வெற்றியின் மாதம். | கட்டுரை.

புனிதம் பூத்துக் குலுங்கும் ரமழான் மாதம் பல்வேறுபட்ட வெற்றிகளைத் தந்த மாதமாகத் திகழ்கின்றது. பொதுவாக எமது பார்வையில் ரமழான் என்பது சோம்பலுக்குரிய, ஓய்வுக்குரிய மாதமாக மாறிவிட்டாலும் இஸ்லாமிய உலகு ரமழான் மாதத்தில் பல போர்க்களங்களைக் கண்டுள்ளதோடு அதில் வெற்றிவாகையும் சூடியுள்ளது. ரமழான் கண்ட வெற்றிக்களிப்புக்கள் சிலவற்றை இங்கு நினைவூட்டுவது பொருத்தமாக அமையும் என நினைக்கின்றேன்.

பத்ர் போர்:

இஸ்லாமிய வரலாறு கண்ட முதல் போர் பத்ர் யுத்தமாகும். இது ஹிஜ்ரி 02 ரமழான் மாதத்தில்தான் நடந்தது. ஆயிரம் பேர் கொண்ட படையை சுமார் 313 பேர் கொண்ட குழுவினர் எதிர்கொண்டு தியாகத்துடனும் வீரத்துடனும் போராடி வெற்றிவாகை சூடினர். இந்தப் போரில் நபித்தோழர்களின் ஈமானிய உறுதி, கொள்கைப் பற்று, ஒற்றுமை, தியாக உணர்வு என்பன வெளிப்பட்டன. இந்தப் போர் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் ஏளனமாகவும் இழிவாகவும் பார்த்தவர்களை, ஒரு முறை முஸ்லிம்கள் பற்றி கண்ணியத்துடனும், பயத்துடனும் பார்க்கச் செய்தது எனலாம்.

கந்தக் போருக்கான ஏற்பாடு:

முஸ்லிம்களைப் பூண்டோடு அழித்துவிடும் எண்ணத்தில் 10,000 பேர் கொண்ட படையொன்று மதீனா வந்தது. அவர்களிடமிருந்து தற்காப்புப் போர் செய்யும் தந்திரம் ஒன்றை முஸ்லிம்கள் தீட்டினர். 5000 முழம் நீளம் கொண்ட ஒரு அகழியைத் தோண்டி எதிரிகள் உள்ளே வர முடியாமல் தற்காப்புப் போர் செய்தனர் முஸ்லிம்கள். ஈற்றில் கூட்டுப் படையினர் தோல்வியுடன் திரும்பினர். இந்தப் போர் அகழி யுத்தம், ‘அஹ்ஸாப்” – கூட்டுப்படைப் போர் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது.

இந்த அகழிப் போர் ஹிஜ்ரி 05 இல் ஷவ்வால் மாதத்தில் நடந்தது. அகழி தோண்டும் பணியில் சுமார் ஒரு மாதம் முஸ்லிம்கள் ஈடுபட்டனர். இப்படிப் பார்க்கும் போது ஹிஜ்ரி 05 ரமழானில் அகழிப் போருக்கான கடின உழைப்பில் நபித்தோழர்கள் ஈடுபட்டு மகத்தான வெற்றியை ஈட்டியுள்ளனர் எனலாம்.

மக்கா வெற்றி:

இஸ்லாமிய வரலாறு கண்ட மகத்தான வெற்றிகளில் மக்கா வெற்றி முக்கியமானது. மக்காவிலிருந்து விரட்டப்பட்டவர்கள் மக்காவைக் கைப்பற்றினர்.

குறைஷிக் காபிர்கள் நபியவர்களுடன் பத்து வருட யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒன்றைச் செய்திருந்தனர். பின்னர் இரு வருடங்களுக்குள் ஒப்பந்தத்தை மீறினர். இதனால் மக்காவாசிகளுக்கு எதிராக நபி(ச) அவர்கள் படை திரட்டினார்கள். 10000 பேர் கொண்ட படையுடன் ஹிஜ்ரி 08 ரமழான் மாதம் 20 ஆம் நாள் மக்கா கைப்பற்றப்பட்டு கஃபாவில் உள்ள சிலைகள் அகற்றப்பட்டன.

தன்னையும் தனது தோழர்களையும் வஞ்சித்தவர்களை நபி(ச) அவர்கள் மன்னித்து அவர்களின் மனங்களைக் கவர்ந்தார்கள். இதனால் இஸ்லாம் வெகு வேகமாகப் பரவியது. பின்வரும் ‘அல் பத்ஹ் – வெற்றி” அத்தியாயமும் அதைத்தான் கூறுகின்றது.

‘அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது,”

‘இன்னும் மனிதர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் கூட்டம் கூட்டமாக நுழைவதை (நபியே!) நீர் காணும் போது,”

‘உமது இரட்சகனின் புகழைக் கொண்டு துதித்து, அவனிடம் நீர் பாவமன்னிப்பும் கோருவீராக! நிச்சயமாக அவன் மன்னிப்புக் கோருவதை அதிகம் ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான். ” (110:1-3)

தபூக்கிலிருந்து மீண்டு வருதல்:

இஸ்லாமிய வரலாறு கண்ட கஷ்டமான போர்களில் தபூக் போர் பிரதானமானதாகும். ஹிஜ்ரி 09 ரமழானில்தான் நபி(ச) அவர்கள் தபூக் போரில் இருந்து வெற்றி பெற்று திரும்பி வந்தார்கள்.

அல் புவையிப் போர்:

ஹிஜ்ரி 13 ரமழானில் இந்தப் போர் நடைபெற்றது. தளபதி அல் முதன்னா இப்னு ஹாரிதா(ர) அவர்களின் தலைமையில் கூபாவுக்கு அருகில் உள்ள ‘அல் புவையிப்” எனும் இடத்தில் இந்தப் போர் நடந்ததால் இப்பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது.

பெருந்தொகையான எதிரிகளை அழித்து இந்தப் போரில் முஸ்லிம்கள் வெற்றியீட்டினர்.

நூபா(டீ) வெற்றி:

இது எகிப்துக்கு அருகில் உள்ள பகுதியாகும். இந்த வெற்றி இஸ்லாத்தின் பரம்பலுக்கு முக்கிய காரணமாக விளங்கியது எனலாம். அப்துல்லாஹ் இப்னு ஸஃத் இப்னு அபூ ஸரீஹ்(ர) எனும் ஸஹாபியின் தலைமையில் இந்த வெற்றி பெறப்பட்டது. எகிப்து வெற்றிக்குப் பின்னர் ஹிஜ்ரி 31 இல் இந்த வெற்றி கிட்டியது. இதனைத் தொடர்ந்து நூபா வாசிகளுடன் ஒப்பந்தமும் செய்யப்பட்டது. இது கிழக்காபிரிக்காவில் இஸ்லாம் வேகமாகப் பரவக் காரணமாக அமைந்தது.

ருதுஸ் தீவு வெற்றி:

ஹிஜ்ரி 53 இல் ரமழானில் ஜுனாதா பின் அபூ உமைமா(ர) அவர்களின் தலைமையில் இந்தத் தீவு வெற்றி கொள்ளப்பட்டது. கடல் கொள்ளையர்களின் தீங்கிலிருந்து மக்கள் ஈடேற்றம் பெற்றனர்.

தரீப் வெற்றி:

தளபதி மூஸா பின் நுஸைர்(ரு) அவர்களால் தரீப் என்பவரின் தலைமையில் அந்தலூஸ் பகுதிக்கு ஒரு படை அனுப்பப்பட்டது. அவர் அந்தலூஸ் கரைப் பகுதியில் தரையிறங்கினார். அந்த இடம் ‘ஜஸீரது தரீப்” என அழைக்கப் படுகின்றது. இது ஹிஜ்ரி 91 ரமழானில் நடந்தது. இந்த வெற்றி மூலம் ஏராளமான கனீமத் பொருட்களை முஸ்லிம் படை பெற்றது.

அந்தலூஸ் வெற்றி:

ஹிஜ்ரி 91 ரமழானில் தளபதி மூஸா பின் நுஸைரின் பணியாளாக இருந்த தளபதி தாரிக் பின் ஸியாத்(ர) அவர்களின் தலைமையில் அந்தலூஸ் வெற்றி கொள்ளப்பட்டது. இஸ்லாமிய உலகு கண்ட மகத்தான வெற்றிகளில் ஒன்றாக இது கருதப்படுகின்றது.

பிரான்ஸ் வெற்றி:

ஹிஜ்ரி 102 ரமழானில் முஸ்லிம்கள் பிரான்ஸை வெற்றி கொண்டார்கள். இவ்வாறே இஸ்லாமிய உலகு ரமழான் மாதத்தில் ‘ஐன்ஜாலூத், அன்த்தாகிய்யா, அர்மீனிய்யா (அஸ்ஸுஹ்ரா), குப்ருஸ் தீவு, போஸ்னா… என பல வெற்றிகளைக் கண்டுள்ளது.

ரமழான் என்பது உறக்கத்திற்கும் ஓய்வுக்குமான மாதமாக அவர்களிடம் இருந்ததில்லை. பட்டினி என்பது அவர்களுக்கு ரமழானில் மட்டும் அனுபவிக்கும் கஷ்டமாகவும் இருக்க வில்லை.

எனவே, ரமழானின் நோன்பு அவர்களுக்கு எந்தச் சோர்வையும், சோம்பலையும், சிரமத்தையும் கொடுக்கவில்லை.

ரமழான், வெற்றியின் மாதமாக மலர வேண்டும் என்றால் ரமழான் உற்சாகமான, உழைப்பின் மாதமாக, முயற்சியின் மாதமாக மலர வேண்டும்; மாற வேண்டும். ரமழானில் வெற்றிக்காக நாம் முயற்சித்தால் அல்லாஹ்வின் அருளையும் அபிவிருத்தியையும் அபரிமிதமாகவே நாம் அனுபவிக்கலாம். அதற்காக முயற்சிக்க முனைவோமாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.