மூஸா நபியும் மலக்குல் மௌத்தும் (தொடர்-5)

மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (பகுதி 2, தொடர் 5)
‘மூஸா நபியும், மலக்குல் மவ்த்தும்’ சம்பந்தப்பட்ட ஹதீஸைப் பல வழிகெட்ட பிரிவினரும் தப்பும், தவறுமான தர்க்க ரீதியான வாதங்களை முன்வைத்து மறுத்துள்ளனர். இந்த ஹதீஸைச் சகோதரர் பிஜே அவர்களும் பல தவறான வாதங்களின் அடிப்படையில் மறுக்கின்றார். அவரது வாதங்களை ஏற்றுக்கொண்டால் இந்த ஹதீஸை மட்டுமன்றி குர்ஆன் கூறும் பல சம்பவங்களையும் நிராகரிக்க நேரிடும் என்பதைப் பலமான ஆதாரங்களில் அடிப்படையில் நிரூபித்து வருகின்றோம். அவரது வாதமும், ஸுன்னாவை அவர் அணுகும் முறையும் தவறானது என்பதற்கு இது தக்க சான்றாக அமைகின்றது. இந்த ஹதீஸ் குறித்து அவர் முன்வைக்கும் இன்னும் சில வாதங்களுக்கான பதில்களை இங்கே நோக்குவோம்.

‘மலக்குல் மவ்த்’ தோல்வியுடன் திரும்பிச் சென்றாரா?
ஒரு வானவர் இறைக் கட்டளையை நிறைவேற்றாமல் தோல்வியுடன் திரும்பிச் சென்றார் என்று இதில் கூறப்படுகின்றது’ என்று பீஜே தனது வாதத்தை ஆரம்பிக்கின்றார்.
அடுத்ததாக வானவர்களின் பண்புகள் குறித்தும் பேசுகின்றார்.
வானவர்களைப் பொறுத்தவரையில்;
– அவர்கள் தமக்குக் கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள்.
அவர்கள் தமக்கு மேலேயுள்ள தமது இரட்சகனை அஞ்சி, தமக்கு ஏவப்படுவதைச் செய்வார்கள். (16:50)
– அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள்.
பேச்சால் அவனை அவர்கள் முந்த மாட்டார்கள். அவனது கட்டளைக்கேற்பவே அவர்கள் செயற்படுவார்கள். (21:27)
– தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகத்தை விட்டும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். மனிதர்களும் கற்களுமே அதன் எரிபொருட் களாகும். அதன்மீது கடின சித்தம் கொண்ட பலசாலிகளான வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ் தமக்கு ஏவியதற்கு மாறு செய்ய மாட்டார்கள். மேலும், அவர்கள் தமக்கு ஏவப்பட்டதைச் செய்வார்கள். (66:6)
இது போன்ற குர்ஆன் வசனங்களைக் குறிப்பிட்ட பின்னர் சகோதரர் பீஜே தனது வாதத்தைப் பின்வருமாறு முடிக்கின்றார்.
இறைவன் எந்தப் பணிக்காக அனுப்பினானோ அதைச் செய்து முடிப்பதுதான் வானவர்களின் இலக்கணம். மூஸா நபியின் உயிரைக் கைப்பற்ற ஒரு வானவரை இறைவன் அனுப்பினால் அவர் அந்த வேலையைச் செய்யாமல் திரும்ப மாட்டார். இந்த இலக்கணத்திற்கு எதிரான கருத்தை அந்த ஹதீஸ் கூறுகின்றது. (பார்க்க: ‘பீஜே தர்ஜமா’ பதிப்பு:04, பக்கம்:1308)
அல்லாஹ் ஒரு வானவருக்குக் கட்டளை பிறப்பித்தால், ‘அந்தக் கட்டளை என்ன?’ என்பதை நானோ, நீங்களோ, பீஜே அவர்களோ அறிய முடியாது. அதை அறிய வேண்டுமானால் அல்லாஹ் இட்ட கட்டளையை அல்லாஹ் கூற வேண்டும் அல்லது அல்லாஹ்வின் தூதர் கூற வேண்டும் அல்லது அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறிய செய்தி ஒன்றை வைத்து ‘இதுதான் ஏவப்பட்டுள்ளது’ என நாம் முடிவு செய்யலாம். இதை விட்டு விட்டு நாமாக ஒரு முடிவு செய்து ஹதீஸை மறுக்க முடியாது.
அல்லாஹ் மூஸா நபியின் உயிரைக் கைப்பற்ற வேண்டும் என மலக்குக்குக் கட்டளையிட்டிருந்தால் நிச்சயமாக அவர் உயிரைக் கைப்பற்றியிருப்பார். ஏனெனில், மலக்குகள் இட்ட பணியை ஆற்றுவர். அதற்கு மாற்றம் செய்ய மாட்டார்கள். இந்த ஹதீஸில் மலக்கு அடிபட்டதும் மீண்டும் அல்லாஹ்விடம் திரும்பிச் செல்கிறார் என்றால் அந்த மலக்கு மூஸா நபியின் உயிரை உடனே கைப்பற்ற வேண்டும் என்று அல்லாஹ்வால் ஏவப்படவில்லை என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும். இதை விட்டு விட்டு அல்லாஹ் ஏவியதை மலக்கு செய்யவில்லை என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது என்று நாமாக முடிவு செய்து ஹதீஸை மறுக்க முடியாது.
இதே வேளை நபிமார்கள் அவர்களது விருப்பத்துடன்தான் மரணத்தைத் தழுவுவர் என்பதற்கான ஆதாரங்களை நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். நபிமார்கள் மரணத்தைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்திற்குரியவர்கள் என்பது நிச்சயமாக மலக்குல் மவ்த்துக்குத் தெரிந்தே இருக்கும். எனவே மலக்கு அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற முடியாமல் மூஸா நபியிடம் தோற்றுப் போனதாக இந்த ஹதீஸ் கூறுகின்றது என்பது அப்பட்டமான, அபத்தமான குற்றச்சாட்டாகும்.
வானவர் சுயமாகச் செயல்பட மாட்டார்:
ஒரு வானவர் சுயமாகச் செயல்பட மாட்டார். அல்லாஹ் ஏவியதைத்தான் செய்வார். மூஸா நபியின் உயிரைக் கைப்பற்ற வானவர் வருகிறார் என்றால் அவர் அல்லாஹ்வின் கட்டளைப்படித்தான் வந்துள்ளார் என்பது மூஸா நபிக்குத் தெரிந்திருக்க வேண்டும். இந்த அற்ப உண்மையைக் கூட அறியாதவராக மூஸா நபி இருந்துள்ளார் என இந்தச் சம்பவம் கூறுகின்றது என்ற அடிப்படையில் வாதிட்டும் இந்த ஹதீஸ் மறுக்கப்படுகின்றது. இதுவும் தவறான வாதம்தான். இதே அடிப்படையில் கேள்வி கேட்பதாக இருந்தால் குர்ஆன் கூறும் பல சம்பவங்களிலும் சந்தேகம் எழ ஆரம்பித்து விடும்.
மர்யம்(அலை) அவர்கள் குர்ஆன் சிறப்பித்துக் கூறும் ஒரு பெண்ணாவார்கள். முஃமின்களுக்கு உதாரணமாகக் கூறப்பட்ட இரு பெண்களில் இவரும் ஒருவர். அல்லாஹ்விடம் உயர்ந்த அந்தஸ்த்தைப் பெற்றவர். இவரின் பெயரில் அல்குர்ஆனின் 19 ஆம் அத்தியாயம் அழைக்கப்படுகின்றது.
மர்யம்(அலை) அவர்கள் தனிமையில் இருக்கும் போது ஜிப்ரீல்(அலை) அவர்கள் மனித ரூபத்தில் வருகின்றார்கள். அந்நிய ஆணைக் கண்ட மர்யம்(அலை) அவர்கள் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றார்கள். அப்போது அவர் தான் ஒரு மலக்கு என்றும், மர்யம்(அலை) அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை கிடைக்கப் போகிறது என்றும் குறிப்பிடுகின்றார்கள். அத்துடன் அவர் நபியாக இருப்பார். அவரது பெயர் ஈஸா இப்னு மர்யம். அவர் தொட்டில் பருவத்தில் பேசுவார் என்று பல செய்திகளையும் கூறுகின்றார்கள். வந்தவர் வானவர் என்றால் மர்யம்(அலை) அவர்கள் இவர் அல்லாஹ்வின் கட்டளைப்படிதான் வந்துள்ளார். இவர் சொல்வது நிச்சயம் நடக்கும் என்று நம்பியிருக்க வேண்டும். ஆனால், மர்யம்(அலை) அவர்கள் ‘என்னை எந்த ஆணும் தீண்டியதில்லை. நான் கெட்ட நடத்தை உள்ளவளுமல்ல. இப்படி இருக்க எனக்கு எப்படி குழந்தை பிறக்க முடியும்?’ எனக் கேள்வி கேட்கின்றார்கள். அதற்கு ‘அது எனக்கு இலகுவானது என உமது இரட்சகன் கூறுகின்றான்’ என வானவர் பதிலளித்தார். (பார்க்க 19:17-21, 3:45-49)
மர்யம்(அலை) அவர்கள் ஒரு ஸாலிஹான பெண்; முஃமின்களுக்கு முன் உதாரணமாக அல்லாஹ் கூறிய பெண். அவர்கள் மலக்குகளின் பண்புகளை அறியாமல் இருந்தார்களா? அல்லது அல்லாஹ் அனைத்துக்கும் ஆற்றல் உடையவன் என்பதை நம்பாததால்தான் ‘ஒரு ஆணும் என்னைத் தீண்டாமல் எனக்கு எப்படிக் குழந்தை கிடைக்க முடியும்?’ என்று கேட்டார்களா? இப்படிச் சிந்திக்க முடியுமா?
இப்படிச் சிந்தித்தால் ஒன்றில் இந்தச் சம்பவத்தை மறுக்க வேண்டும் அல்லது மர்யம்(அலை) அவர்கள் அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாதவர்களாக இருந்தார்கள் என்று கூற வேண்டும். இரண்டுமே தவறானவை என்பதால் சம்பவத்தையும் நம்பி, மர்யம்(அலை) அவர்களது மார்க்க அறிவிலும் குறை காணாமல் இருப்பதென்றால் மூஸா நபியும், மலக்குல் மவ்த்தும் சம்பந்தப்பட்ட ஹதீஸையும் ஏற்று, அது மூஸா நபியின் மார்க்க அறிவைக் குறைத்துக் காட்டாது என்றும் நம்ப முடியும்.
அன்னை சாரா அவர்களும், மலக்குகளும்:
அன்னை சாரா(அலை) அவர்கள் இப்றாஹீம் நபியின் மனைவியாவார்கள். 60:4 என்ற வசனத்தின் மூலம் அவர்களிடம் அழகிய முன்மாதிரி இருப்பதாக அல்லாஹ் கூறியுள்ளான். இவர்களும், மலக்குகளும் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவம் குர்ஆனில் கூறப்படுகின்றது.
(பார்க்க: 51:24-30, 15:51-60, 11:69-76, 29:31-32)

இந்தச் சம்பவத்தில் மனித ரூபத்தில் இப்றாஹீம் நபியிடம் மலக்குகள் வருகின்றனர். வந்தவர்கள் வானவர்கள் என்பதை அறியாமல் அவர் மலக்குகளுக்கு விருந்தளிக்கின்றார். அவர்கள் உண்ணாத போது ஆச்சரியப்பட்டு வினவிய போதுதான் வந்தவர்கள் வானவர்கள் என்பது அவருக்குத் தெரிகின்றது. வந்தவர்கள் தாம் இரண்டு நோக்கங்களுக்காக வந்ததாகக் கூறுகின்றனர்.
(1) இப்றாஹீம்-சாரா தம்பதியினருக்கு இஸ்ஹாக் என்ற அறிவுஞானம் மிக்க ஒரு குழந்தையைக் கொண்டு நன்மாராயம் கூறுவது. அந்தக் குழந்தைக்கு யஃகூப் என்ற ஆண் குழந்தை கிடைக்கும். அவர்கள் நபியாக இருப்பார்கள் என்ற நற்செய்தி சொல்வது.
(2) தன்னினச் சேர்க்கையாளர்களான லூத் நபியின் கூட்டத்தினரை அழிப்பது.
இந்தச் செய்திகளைக் கூறியதும் அன்னை சாரா(அலை) அவர்கள் சப்தமிட்டவராக வந்து முகத்தில் அடித்துக்கொண்டு ‘நான் மலட்டுக் கிழவியாயிற்றே!’ என்றார்கள். அதற்கவர்கள் ‘அப்படித்தான் உமது இறைவன் கூறினான். அவன் ஞானமிக்கவன்; அறிந்தவன்’ என்றனர்.
(பார்க்க: அல்குர்ஆன் 51:24-30)

மலக்குகள் வந்து ஒரு செய்தியைக் கூறினால் சும்ம தாமாக வந்து கூற மாட்டார்கள். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையின்றிச் செயல்பட மாட்டார்கள். இப்படி இருக்க வானவர்கள் வந்து கூறியதும் ஒரு நபியின் மனைவி, அதுவும் அழகிய முன் உதாரணம் உண்டு என அல்லாஹ் கூறிய புகழுக்குரிய பெண் உடனே அதை நம்பி ஏற்றிருக்க வேண்டும். அதற்கு மாற்றமாக ‘நான் மலடி! கிழவி! எனக்கு எப்படிக் குழந்தை பிறக்கும்!?’ என்ற தோரணையில் பேசுகின்றார்கள். அதற்கு வந்த வானவர்கள் ‘இப்படித்தான் உமது இரட்சகன் கூறினான்!’ எனக் கூற வேண்டி ஏற்படுகின்றது. வந்தவர்கள் இப்படிக் கூறாமலேயே அன்னை சாரா அவர்கள் அதை உணர்ந்து நடந்திருக்க வேண்டும். இந்தச் சம்பவம் அதற்கு மாற்றமாகக் கூறுகின்றது. எனவே ஒன்றில், இந்தச் சம்பவம் பொய்யாக இருக்க வேண்டும் அல்லது அன்னை சாரா அவர்கள் மலக்குகள் ஒரு செய்தியைச் சொன்னால் அல்லாஹ்வின் கட்டளைப்படிதான் சொல்வார்கள். பொய் சொல்ல மாட்டார்கள் என்பதை அறியாமல் இருந்தார்கள் என்று கூற வேண்டும். பீஜே அவர்கள் ஹதீஸை அணுகும் முறையில் இந்தச் சம்பவத்தை அணுகினால் இந்த இரண்டில் ஒரு முடிவைத்தான் எடுக்க நேரிடும். ஆனால் இந்த இரண்டுமே தவறான முடிவுகளாகும். பீஜே அவர்களின் ஹதீஸ் தொடர்பான அணுகுமுறை ஆபத்தானது என்பதை இதன் மூலம் அறியலாம்.
இப்றாஹீம் நபி அறியாது இருந்தாரா?
மேற்சொன்ன செய்தி ஒரு சாதாரணப் பெண் சம்பந்தப்பட்டது. இந்தச் சம்பவத்தை மற்றோரிடத்தில் குர்ஆன் குறிப்பிடும் போது இப்றாஹீம் நபி பேசிய விதமும் இவ்வாறே அமைந்துள்ளது.
மலக்குகள் நற்செய்தி கூறியதும், எனக்கு முதுமை ஏற்பட்ட நிலையில் நீங்கள் நற்செய்தி கூறுகின்றீர்களா? எதனடிப்படையில் நீங்கள் நற்செய்தி கூறுகின்றீர்கள்? எனக் கேட்டுள்ளார்கள்.
அ(தற்க)வர் ”எனக்கு முதுமை ஏற்பட்டிருக்கும் போது நீங்கள் எனக்கு நன்மாராயம் கூறுகின்றீர்களா? எந்த அடிப்படையில் நன்மாராயம் கூறுகின்றீர்கள்?” என்று (ஆச்சரியத்துடன்) கேட்டார். (15:54)
வந்தவர்கள் மலக்குகள் என்று தெரிந்து விட்டது. அவர்கள் குழந்தை கிடைக்கும்; ஆண் குழந்தை; அறிவுள்ள குழந்தை என்றெல்லாம் கூறுகின்றார்கள். வானவர்கள் அல்லாஹ்வின் கட்டளை இல்லாமல் வர மாட்டார்கள். இரட்சகன் சொல்லாததைச் சொல்ல மாட்டார்கள் என்ற அடிப்படை அறிவு ஒரு நபிக்கு இருந்திருக்க வேண்டும். எனவே மலக்குகள் கூறியதும் உடனே மறு பேச்சின்றி ஒரு நபி ஏற்றிருக்க வேண்டும். ஆனால் இப்றாஹீம் நபி எனக்கு முதுமை ஏற்பட்டு விட்டது. இதன் பின்னர் குழந்தை கிடைக்கும் என்று கூறுகின்றீர்களா? எந்த அடிப்படையில் கூறுகின்றீர்கள்? எனக் கேள்வி கேட்கின்றார்கள். மலக்குகள் அல்லாஹ் கூறியதின் அடிப்படையில்தான் நற்செய்தி கூறுவார்கள் என்ற சாதாரண அறிவு கூட இப்றாஹீம் நபிக்கு இருக்கவில்லை என இந்தச் சம்பவம் கூறுகின்றது எனக் கூறிக் குர்ஆனை நிராகரிக்க முடியுமா? பீஜே அவர்கள் ஹதீஸ்களை அணுகும் இந்தத் தவறான வழிமுறை பிற்காலத்தில் குர்ஆனை மறுக்கும் ஒரு கூட்டத்தை உருவாக்கும் ஆபத்துள்ளது என்பதை இது உணர்த்துகின்றதல்லவா?
வானவரிடம் வாதாட்டமா?
மலக்குகள் வந்து சொன்ன ஒரு விடயத்தில் கணவன்-மனைவி இருவரும் இப்படி நடந்து கொண்டனர். அடுத்த செய்தி லூத் நபியின் கூட்டத்தினரை வந்த மலக்குகள் அழிக்கப்போகின்றனர் என்பதாகும். இதை மலக்குகள் கூறிய பின்னர் இப்றாஹீம் நபி மலக்குகளுடன் வாதாட்டம் செய்யலானார்கள் எனக் குர்ஆன் கூறுகின்றது. அப்போது வானவர்கள் ‘இப்றாஹீமே! இந்தப் பேச்சை விட்டு விடுங்கள்! அவர்களுக்கு அழிவு என்பது முடிவு செய்யப்பட்டது!’ என்று கூறுகின்றனர்.
இது குறித்துக் குர்ஆன் கூறும் போது பின்வருமாறு கூறுகின்றது;
இப்றாஹீமை விட்டும் திடுக்கம் நீங்கி, நன்மாராயம் அவரிடம் வந்த போது, லூத்துடைய சமூகத்தார் பற்றி எம்முடன் அவர் தர்க்கிக்கலானார். நிச்சயமாக இப்றாஹீம் சகிப்புத்தன்மையுடையவரும், இளகிய மனமுடையவரும், (இரட்சகன் பால்) மீள்பவருமாவார். இப்றாஹீமே! (இதை நீர்) விட்டு விடுவீராக! நிச்சயமாக உமது இரட்சகனின் கட்டளை வந்து விட்டது. தடுக்கப்பட முடியாத வேதனை நிச்சயமாக அவர்களுக்கு வந்தே தீரும். (11:74-76)
மலக்குகள் அல்லாஹ்வின் கட்டளைப்படிதான் இயங்குவார்கள். அவன் என்ன சொன்னாலும் அதைச் செய்வார்கள். லூத்(அலை) அவர்களின் கூட்டத்தை அழிக்க வந்ததாக அவர்கள் சொன்னால் அது பற்றி அவர்களிடம் தர்க்கிப்பது அர்த்தமற்ற வேலையாகும். யார் என்ன சொன்னாலும் அவர்கள் கேட்க மாட்டார்கள். இப்படி இருக்க லூத் நபியின் சமுகம் குறித்து இப்றாஹீம் நபி மலக்குகளுடன் தர்க்கம் செய்தார்கள் என்று இந்தச் சம்பவம் கூறுகின்றது. எனவே இந்தச் சம்பவத்தை ஏற்க முடியாது என்று கூறப்போகின்றனரா? மலக்குகள் அல்லாஹ்வின் கட்டளைப்படிதான் இயங்குவார்கள் என்ற சாதாரண உண்மையைக் கூட இப்றாஹீம் நபி அறியாதிருந்தார்கள் என இந்தச் சம்பவம் கூறுவதாகக் கூறப்போகின்றனரா?
மற்றுமொரு இடத்தில் இது பற்றி குர்ஆன் கூறும் போது;
(வானவர்களான) எமது தூதர்கள் நற்செய்தியுடன் இப்றாஹீமிடம் வந்த போது, ”இக்கிராமத்தினரை நிச்சயமாக நாம் அழிக்கப் போகிறோம். ஏனெனில் அதிலுள்ளோர் அநியாயக்காரர்களாக இருக்கின்றனர்” என்று கூறினர். அ(தற்க)வர், ”நிச்சயமாக அதில் லூத் இருக்கிறாரே! என்று கூறினார். அ(தற்க)வர்கள், அதில் இருப்போர் பற்றி நாம் நன்கறிவோம். நிச்சயமாக அவரையும், அவரது மனைவியைத் தவிர அவரது குடும்பத்தினரையும் பாதுகாப்போம். அவள் தங்கி (அழிந்து) விடுவோரில் ஆகி விட்டாள்’ என்று கூறினர். (29:31-32)
எனக் குறிப்பிடுகின்றது.
அல்லாஹ்வின் கட்டளைப்படி அநியாயக்கார ஊரை அழிக்க வந்த மலக்குகளுக்கு அங்கே லூத் என்ற நபி இருப்பது தெரியாது என்று இப்றாஹீம் நபி நம்பியதாக இந்த வசனம் கூறுகின்றது. இவர் அங்கே லூத் நபி இருக்கின்றார் என்று சொல்லிக் கொடுத்ததாக இந்த வசனம் கூறுகின்றது. இதை பீஜேயின் பாணியில் அணுகினால் மலக்குகளை விபரமற்றவர்களாக இப்றாஹீம் நபி நம்பியதாக இந்த இந்தச் சம்பவம் கூறுகின்றது. அத்துடன் ஒரு பணிக்காக அல்லாஹ் மலக்குகளை அனுப்பும் போது அது குறித்த முழு விளக்கத்தையும் மலக்குகளிடம் சரியாகச் சொல்லாமல் அனுப்பியுள்ளானோ தெரியாது. இவர்கள் அழிக்கும் ஊரில் ஒரு நபி இருப்பது தெரியாமல் அவரையும் அழித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் இப்றாஹீம் நபி பேசியதாக இந்த வசனம் கூறுகின்றது. எனவே ஆயிரம் நபித்தோழர்கள் ஏகோபித்து ஏற்றிருந்தாலும் ஒரு நபியின் அடிப்படை மார்க்க அறிவில் சந்தேகத்தை உண்டுபண்ணும் இந்த வசனங்களை ஏற்க முடியாது என்று கூற நேரிடும்.
எனவே மலக்குல் மவ்த் அல்லாஹ்வின் கட்டளைப்படிதான் வந்திருப்பார் என்ற அடிப்படை அறிவு கூட மூஸா நபிக்கு இருக்கவில்லை என இந்த ஹதீஸ் கூறுவதால் இதை மறுக்க வேண்டும் என வாதிடுவது அபத்தமானது. அப்படி வாதிட்டால் எண்ணற்ற குர்ஆன் வசனங்களை மறுக்க நேரிடும்.
எனவே மூஸா நபியும், மலக்குல் மவ்த்தும் சம்பந்தப்பட்ட ஹதீஸ் ஆதாரபூர்வமானது. அதைப் பீஜே மறுக்கும் விதம் ஆபத்தானது. இந்த வாதங்களை ஏற்றால் குர்ஆனைக் கூட மறுக்க நேரிடும். ஹதீஸ்களை மறுப்பதற்கு முன்வைக்கப்படும் அதே வாதங்களைக் குர்ஆன் விடயத்திலும் முன்வைக்க முடியும் என அவரே திர்மிதி முன்னுரையில் இந்த ஆபத்துக் குறித்து எச்சரித்துள்ளார். எனவே தவறான வாதங்களின் அடிப்படையில் ஹதீஸை மறுத்து, தொடர்ந்து குர்ஆனையும் மறுக்கும் மனநிலைக்குச் சென்று விடாமல் குர்ஆனையும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் நிதானமாக, நடுநிலையாக அணுகி விளங்க வேண்டும். இரண்டையும் மோத விட்டு, இரண்டையும் மறுத்து விடாமல் இரண்டையும் இணைத்து விளங்கிச் செயல்பட அனைவரும் முன்வர வேண்டும்.
– மறுக்கப்படும் ஹதீஸ்கள் தொடர்பான விளக்கம் இன்னும் வரும். இன்ஷா அல்லாஹ் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.