முஸ்லிம் பெண்களின் ஆடை அடிப்படை வாதத்தின் அடையாளமா?

முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயா, பர்தா போன்ற ஆடை அமைப்பு அடிப்படைவாதத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றது. முப்பது வருடங்களுக்கு முன்பு இந்த ஆடை முஸ்லிம்களிடம் இருக்கவில்லை. இப்போது ஏன் இப்படி அணிகின்றனர் என்று கேட்கின்றனர்.

ஒருவர் அணியும் ஆடையை வைத்து அடிப்படை வாதத்தைத் தீர்மானிக்க முடியுமா? முப்பது வருடங்களுக்கு முன் நாம் இப்படி ஆடை அணியாவிட்டால் இப்போது அணியக் கூடாதா? இந்த நாட்டில் உள்ள சிங்கள, தமிழ் பெண்கள் இப்போது அணியும் ஆடையைத்தான் முப்பது வருடங்களுக்கு முன்னரும் அணிந்தார்களா?

குறிப்பிட்ட சில காலங்களுக்கு முன்னர் தாழ்த்தப்பட்ட பெண்கள் மேலாடை அணியக் கூடாது என்ற நிலை இந்த சமுதாயத்தில் இருந்துள்ளது. அவர்கள் மேலாடை போடும் போது நீங்கள் இதற்கு முன் போடவில்லை, இப்போது ஏன் போடுகின்றீர்கள்? எனக் கேட்டால் அது நியாயமாகுமா?

அபாயா அந்நிய நாட்டு ஆடை என்கின்றனர். அரபுக் கலாசாரம் என்றும் விமர்சிக்கின்றனர்;. அபாயா அந்நிய கலாசாரம் என்றால் இன்றைய எமது இலங்கை மக்கள் அணியும் ஆடையமைப்பு இலங்கைக் கலாசாரமா?

ஐரோப்பிய கலாசார ஆடையை அணிந்து கொண்டு முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடையை அந்நிய அரபு கலாசார ஆடை என்று கூறுவது அறியாமை அல்லவா?

இந்த ஆடையமைப்பு அரேபிய கலாசாரம் என்பதையும் தாண்டி உலகளாவிய அமைப்பில் முஸ்லிம்; பெண்கள் அணியும் ஆடையாக மாறிவிட்ட பின்னரும் இப்படிப்பேசுவது அறியாமையையும், காழ்ப்புணர்வையும்தான் வெளிப்படுத்துகின்றது.

வரலாற்று ஓட்டத்தில் ஹிஜாப்:
ஹிஜாப் என்றால் மறைப்பு என்பது அர்த்தமாகும். ஒரு பெண் தனது உடலை முழுமையாக மறைத்து ஆடை அணியும் முறைக்கே இப்படிக் கூறப்படும். நபி(ச) அவர்கள் மக்காவில் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்வதற்கு முன்னரே, மோஸஸ் காலத்துக்கு முதல் கொண்டே முகம் மூடி, முக்காடிட்டு ஆடை அணியும் வழமை இருந்துள்ளது. முக்காட்டை நீக்குவது பெண்ணை இழிவுபடுத்துவதின் அடையாளமாக உள்ளது.

பழைய ஏற்பாட்டில் ஹிஜாப்:
இதே வேளை, முக்காடிட்டு மறைத்துக் கொள்வது நல்ல பெண்களின் அடையாளமாக பைபிள் பேசுகின்றது.

‘ஊழியக்காரனை நோக்கி: அங்கே வெளியிலே நமக்கு எதிராக நடந்து வருகிற அந்த மனிதன் யார் என்று கேட்டாள். அவர்தான் என் எஜமான் என்று ஊழியக்காரன் சொன்னான். அப்பொழுது அவள் ஒட்டகத்தை விட்டிறங்கி முக்காடிட்டுக் கொண்டாள்.’ (ஆதியாகாமம்: 24:65)

இந்த வசனம் அரபு பைபிளில்:
‘பஅகததில் புர்கா வத கத்தத்’ – புர்காவை எடுத்து தன்னை மறைத்துக் கொண்டாள் என்று எழுதப்பட்டுள்ளது.

(The Universal Jewish Encyclopaedia) இந்த வார்த்தை முகத்தை மூடும் துணியைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் என்ற விளக்கத்தைத் தருகின்றது. The International Standard BIBLE Encyclopaedia – 1915/5/3047.

அந்தக் காலத்தில் உயர்ந்த நிலையில் உள்ள பெண்கள் முகத்தை மூடப் பயன்படுத்தும் துணியை இது குறிக்கும் என்று குறிப்பிடுகின்றது. இதிலிருந்து சுதந்திரமான நல்ல பெண்கள் முகத்தை மூடுவதை வழமையாகக் கொண்டிருந்தனர் என்பதை அறியலாம்.

முக்காட்டை நீக்குவது அவமானத்தின் சின்னமாகப் பார்க்கப்பட்டுள்ளது

‘ஸ்திரீயைக் கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி, அவள் முக்காட்டை நீக்கி, எரிச்சலின் காணிக்கையாகிய நினைப்பூட்டுதலின் காணிக்கையை அவள் உள்ளங்கையிலே வைப்பானாக சாபகாரணமான கசப்பான ஜலம் ஆசாரியன் கையிலிருக்கவேண்டும்,’
(எண்ணாகமம்: 5:18)

விபச்சாரம் செய்த பெண்களின் முக்காட்டை நீக்குவது அவளைக் கேவலப்படுத்துவதாக அமைகின்றது.

பழைய ஏற்பாட்டின் மற்றும் பல வசனங்கள் ஆடைக் குறைப்பு என்பது இழிவின் அடையாளமாகப் பேசப்பட்டுள்ளது.

புதிய ஏற்பாட்டில் ஹிஜாப்:
புதிய ஏற்பாடு ஹிஜாபை இஸ்லாத்தை விட வலியுறுத்தி ஒரு பெண் தனது தலையை மறைக்க வேண்டும் என்று கூறுகின்றது.

‘ஸ்திரீயானவள் முக்காடிட்டுக் கொள்ளா விட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்; தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக் கொண்டிருக்கக் கடவள்.’ (1 கொரிந்தியர்: 11:6)

முக்காடு போடாவிட்டால் மொட்டை அடிக்கச் சொல்கின்றது. பைபிளின் படி மொட்டை அடிப்பது கேவலமானதாகும். அதே போல் ஒரு பெண் தலையைத் திறந்திருப்பதும் கேவலமானதாகும்.

இந்து, பௌத்த மதங்களில் ஹிஜாப்:
இந்து மதமும் பெண் தன் உடல் அழகைக் காட்டக் கூடாது. குனிந்த பார்வையுடன் இருக்க வேண்டும் என்று போதிக்கின்றது. உனக்ககாகப் படைத்த உன் சீமாட்டிக்குக் கூறு. உன்னுடைய கண்களைத் தாழ்வாக்கிக் கொள். பார்வையை மேல் நோக்காதே! அது உன் பாதத்தை நோக்கியதாக இருக்கட்டும். பிறர் எவரும் உன் வெளித் தோற்றத்தைப் பார்க்கா வண்ணம் திரையிட்டுக் கொள்! (ரிக் வேதம், நூல் 08, வேத வரி 33, மந்திரம் 19, – நன்றி சமூக வலைத்தள கட்டுரை)

பௌத்தத்தின் அடிப்படையில் ஒரு பெண் தனது கரண்டைக் காலுக்கு மேல் உயரும் விதத்தில் ஆடை அணியக் கூடாது. அதே வேளை, முகத்துக்குக் கீழே கழுத்துப் பகுதிகள் மறைக்கப்பட்டிருக்க வேண்டும். பெண் தன்னை மறைத்துக் கொள்வதைத்தான் ஹிஜாப் என இஸ்லாம் கூறுகின்றது.

முஸ்லிம் பெண்களின் ஆடை:
ஒரு முஸ்லிம் பெண் இன்று அவள் அணியும் அபாயா என்கின்ற இந்த ஆடையைத்தான் அணிய வேண்டும் என்பது கட்டாயமன்று. ஒரு பெண் அணியும் ஆடை,

  • மெல்லியதாகவோ,
  • இறுக்கமானதாகவோ,
  • ஆணின் ஆடை போன்றோ,
  • அதிக வாசனை பூசியதாகவோ,
  • அரை குறையானதாகவோ இருக்கக் கூடாது.

இந்த ஒழுங்கு முறைக்கு அபாயா என்ற இந்த வடிவமைப்புதான் வசதியானதாக உள்ளது. அதை அணிய வேண்டாம் என்று கூறுவதற்கு யாருக்கும் அதிகாரமில்லை. அத்துடன் இந்த ஆடை அமைப்பு ஒன்றும் புதியதும் கிடையாது. முஸ்லிம் நாடுகளில் காலாகாலமாக அணியப்பட்டு வருவதுதான். இலங்கைக்கு சற்று தாமதித்து அறிமுகமாகியுள்ளது. இலங்கையிலும் கன்னியாஸ்திரிகள் இதற்கு ஒப்பான ஆடையைத்தான் அணிகின்றனர். எனவே, இந்த ஆடை முறையை எதிர்ப்பது இஸ்லாத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்வும், போதிய புரிதல் இல்லாத செயலுமாகும்.

பொதுவான பார்வை:
இலங்கை முஸ்லிம்கள் தமது தனித்துவத்தைப் பேணும் அடிப்படையில்தான் ஆடை அணிந்து வந்துள்ளனர். ஒரு சமூகம் தனது தனித்துவத்தை வெளிப்படுத்தினால் அடுத்த சமூகம் அதற்காக வெறுப்படைய வேண்டியதில்லை. தமது தனித்துவத்தைப் பேணத் தெரியாதவர்கள் அடுத்தவர்களின் தனித்துவ அடையாளங்களை அழிக்க முயலக் கூடாது.

ஒரு பௌத்த மதகுரு அணியும் ஆடை அமைப்பும் அதன் நிறமும் ஒருவருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். எனவே, அவர் அதை அணியாமல் இருக்கலாம். ஆனால், அதை அவர் எதிர்க்க முடியாது. அந்த ஆடை பிடிக்காவிட்டாலும் அந்த ஆடையை அணிந்தவரை அவசியம் மதித்து கண்ணியப் படுத்தத்தான் வேண்டும்.

ஒரு பூசாரி மேல் சட்டை போடாமல் இருப்பது பார்ப்பதற்கு நாகரிகமற்ற போக்காக ஒருவருக்குப் படலாம். ஆனால், அந்த அடையாளத் துடன் ஒருவரைக் கண்டால் அவர் ஒரு கொள்கை அடிப்படையில் அப்படி ஆடை அணிவதால் அவரை மதிப்பது மற்றவர்கள் மீது கடமையாகின்றது.

இவ்வாறே கிறிஸ்தவ மத போதகர்கள், கன்னியாஸ்திரிகள் அணியும் ஆடை ஒருவருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அதற்காக அவர்களை அகௌரவப்படுத்த முடியாது. அவர்கள் தமது மதத்தின் மீது கொண்ட பற்றுதலை மதித்து அவர்களை கண்ணியப்படுத்துவது அனைவரின் மீதும் கடமையாகின்றது.

இவ்வாறே இலங்கையில் உள்ள ‘வெத்தா’ எனப்படும் வேடுவ இன மக்கள் கச்சை மட்டும் அணிந்து கையில் கோடரி வைத்திருப்பர். நாம் யாரும் இப்படி இருக்க விரும்ப மாட்டோம். என்றாலும் இவ்வாறு ஒரு வேடுவ இன மக்களைக் கண்டால் அவர்களுக்குரிய கண்ணியத்தை வழங்குவது நமது கடமையல்லவா?

இவ்வாறே ஒரு முஸ்லிம் பெண் அணியும் அபாயாவோ அதன் நிறமோ உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஒருவர் தான் அணியும் ஆடை அனைவருக்கும் பிடித்த முறையில் அணிய முடியாது. இருந்தாலும் ஒழுக்கத்தையும் தனது மார்க்கத்தின் மீது கொண்ட பற்றுதலின் அடிப்படையிலும் இவ்வாறு ஆடை அணிபவர்களை மதித்து நடக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. இதை அனைவரும் உணர்ந்து நடந்து கொண்டால் நல்லதொரு நல்லிணக்க நிலை உருவாகும்.

எல்லா மதங்களும் பெண்களுக்கான ஒழுக்கமான ஆடையமைப்பை வலியுறுத்தியுள்ளன. ஏனைய சமயத் தலைவர்கள் தமது மத போதனைகளுக்கு ஏற்ப தமது மதப் பெண்களை ஆடையணிவிப்பதில் தோற்றுப் போயுள்ளனர். தமது மதப் பெண்களை மாற்ற முடியாது என்ற நிலையில் முஸ்லிம் பெண்கள் இஸ்லாமிய அடிப்படையில் ஆடை அணிவதை எதிர்த்து தமது தோல்வி மனப்பான்மையை வெளிப்படுத்தி வருவது வேதனைக்குரியதாகும்.

எனவே, அபாயாவை எதிர்ப்பதை விட்டு விட்டு தத்தமது சமூகப் பெண்களின் ஆடையமைப்பை ஒழுக்கமானதாக அவரவர் மதக் கலாசாரத்திற்கு ஏற்றதாக மாற்ற முயல்வதே ஆரோக்கியமானதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.