இலங்கையில் கடந்த சில வருடங்களாக முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்களும்;, முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களும் தொடந்த வண்ணமே உள்ளன.
இந்த இனவாத செயற்பாடுகளுக்கு ஓமல்பே சோபித்த தேரர் சில காரணங்களை முன்வைத்துள்ளதாக ‘திவயின’ சிங்களப் பத்திரிகையில் 21.03.2018 ஆம் திகதி வெளிவந்த செய்தியொன்றின் தமிழ் வடிவம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இது தொடர்பான எனது பார்வையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
ஓமல்பே சோபித தேரர் இந்நாட்டின் பிரபல பௌத்த துறவியாவார். இவர் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னால் தலைவரும் தென் பகுதிப் பிக்குகளுக்கான பிரதம தேரருமாவார். அவர் தனது கருத்துக்களை இவ்வாறு முன்வைத்துள்ளார்.
உண்மையில் இன்று இடம் பெற வேண்டிய முக்கிய விடயம் நாட்டின் சட்டத்தை சகலருக்கும் சமமாக நடைமுறைப் படுத்துவதாகும்.
சட்டத்தின் முன் சகலரும் சமம் என்பது சரியான கருத்துதான். முஸ்லிம்களுக்கான தனியார் சட்டம் தொடர்பில்தான் கௌரவ தேரர் இக்கருத்தைக் கூறியுள்ளார். பெரும்பான்மைக்கு ஒரு சட்டம், சிறுபான்மைக்கு ஒரு சட்டம் என்று சட்டம் இடம் கொடுக்காவிட்டாலும் சகல துறையிலும் இனவாதம் நுழைந்து சட்டத்தில் பாரபட்சம் காட்டப்படுவதைத் தேரர் கண்டிப்பாரா?
ஊரடங்கு நேரத்தில் காவல் துறையினரின் கண்முன்னாலேயே சிங்கள இளைஞர்கள் தாக்குதல் நடத்தும் போது பள்ளியில் இருந்த மதகுருக்களை வெளியில் எடுத்து வந்து பாதுகாப்புப் படையினர் தாக்கியதைத் தேரர் கண்டிப்பாரா?
பௌத்த மதகுருக்கள் என்ன செய்தாலும் அவர்களது ஆடைக்கு கண்ணியம் கொடுத்து சட்டம் தன் கைகளைக் கட்டிக் கொண்டு சும்மா இருக்கும் நிலையை தேரர் இதுவரை கண்டித்ததில்லையே! பௌத்த மதகுருக்களின் ஆடைக்கு காவல் துறை மதிப்புக் கொடுக்கும் போது, காவல்துறையின் ஆடைக்கு அவர்கள் மரியாதை கொடுக்காமல் அத்துமீறி நடப்பதைத் தேரர் கண்டிப்பாரா?
நாட்டுச் சட்டத்தின் முன்னால் முஸ்லிம்களுக்கு வரப்பிரசாதங்கள் அதிகமாக உள்ளன என்ற கருத்து சிங்கள மக்களிடையே ஆழமாகப் பதிந்துள்ளது. நாட்டின் பொதுவான சட்டங்கள் முஸ்லிம்களுக்கு நடைமுறைப்படுத்தப்படாமல் அவர்களுக்கென்று ஷரீஆ சட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றது.
இந்த நாட்டில் திருமணம், விவாகரத்து, சொத்துப் பங்கீடு ஆகிய துறைகளில் முஸ்லிம்களுக்கு தனியார் சட்ட மூலம் உள்ளது. இவ்வாறு பிற சமூகங்களுக்கும் உள்ளது. முஸ்லிம்களுக்கு பொதுச் சட்டம் இல்லை என்பது பொய்யான வாதமாகும். இந்த மூன்றும் தவிர்ந்த ஏனைய அனைத்து விடயங்களிலும் அவர்களும் பொதுச் சட்டத்தின் கீழ்தான் உள்ளனர். இந்த தனிச்சட்டம் என்பது இன்று நேற்று வந்ததல்ல. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் இருந்தே இந்த சட்ட மூலம் இலங்கையில் உள்ளது. அப்படி இருக்கும் போது, இப்போது ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு இதைக் காரணம் காட்டுவதென்பது பிழையான வழிமுறை யாகும். தனியார் சட்டத்திற்கும் முஸ்லிம் கடைகளில் நீங்கள் பொருள் வாங்காதீர்கள் என்ற பிரச்சாரத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது? உண்மையில் இன்று ஏற்பட்ட பிரச்சினை களுக்கு அடிப்படைக் காரணம் பௌத்த இனவாத மற்றும் மதவாத செயற்பாடுகள்தான். இதைத் தேரர் அந்த சமூகத்திற்கு தெளிவுபடுத்துவாரா?
திருமணச் சட்டங்களுக்கு தனியான வக்பு நீதி மன்றம் உள்ளது.
முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருமணம், விவாகரத்து இரண்டும் உள்ளடங்குவதால் இது தொடர்பான பிரச்சினைகளுக்கு காழி நீதிமன்றங்கள் உள்ளன. இது இலங்கையில் மட்டுமன்றி முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகள் அனைத்திலும் உள்ளன. தேரர் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளும் இந்த தனி நீதிமன்றத்தின் மூலமே தீர்வு காணப்படுவது போன்ற தோரணையில் பேசியுள்ளார் போலுள்ளது.
தனியான பாடசாலைக் கட்டமைப்பொன்று செயற்படுத்தப்படுகின்றது. அந்தப் பாடசாலை களுக்கு முஸ்லிம்களுக்கு மட்டுமே செல்ல முடியும். இலங்கையில் உள்ள சிங்கள, தமிழ் மக்களுக்கு அப்படி விஷேட பாடசாலை இல்லை.
இது பொய்யான தகவலாகும். இலங்கையில் சிங்களப் பாடசாலை, தமிழ் பாடசாலை, முஸ்லிம் பாடசாலை என மூன்றுமே உள்ளன. முஸ்லிம் பாடசாலைகளில் முஸ்லிம் மாணவர்களும் தமிழ் மாணவர்களும் கற்கின்றனர். இவ்வாறுதான் சிங்களப் பாடசாலைகளில் தமிழ், முஸ்லிம் மாணவ மாணவிகளும் சிங்கள மொழி மூலம் கற்று வருகின்றனர். முஸ்லிம் பாடசாலைகளில் மூவின ஆசிரியர்களும் கல்வி சாரா ஊழியர்களும் சேவையாற்றி வருகின்றனர். அத்துடன் இவை அரச பாடசாலைகள் என்பதும் கவனத்திற்குரியதாகும்.
சில வேளை அரபு மத்ரஸாக்களைக் கருத்திற் கொண்டு தேரர் இந்தக் கருத்தைச் சொல்லி யிருக்கலாம். அரபு மத்ரஸாக்கள் குர்ஆனை மனனமிடுவதற்கும் முஸ்லிம்களின் மதக் கடமைகளை முன்நின்று நடாத்துவதற்கான ‘ஆலிம்’ (புரிந்து கொள்வதற்காகக் கூறுவதென்றால்) மதகுருமார்களை உருவாக்குவதற்காக இயங்கி வரும் தனியார் பாடசாலையாகும். இவை அரச அங்கீகாரத்துடன் சட்டப்படி இயங்கி வருகின்றன. முஸ்லிம் மத குருக்களை உருவாக்கும் மதப் போதனைப் பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மாணவர்கள் எப்படி இணைத்துக் கொள்ளப்பட முடியும்?
தேரர் ஒரு கலாநிதியாவார்! இது எந்த வகையில் நியாயமான வாதமாக அமையும்?
சிங்கள மாணவர் ஒருவருக்கு அரசினால் பாடசாலை சீருடையொன்றுக்கு 750 ரூபா மாத்திரமே வழங்கப்படுகின்றது. ஆனால், முஸ்லிம் மாணவர் ஒருவருக்கு பாடசாலை சீருடைக்காக 1500 ரூபா வழங்கப் படுகின்றது. இந்த சட்டம் நடைமுறையில் பாரிய வேறுபாடாகத் தென்படுகின்ற தல்லவா?
உண்மையில் இதை வேறுபாடாக நோக்க வேண்டியதில்லை. கட்டை காற்சட்டை அணியும் மாணவர்களை விட நீளக் காட்சட்டை அணியும் மாணவர்களுக்கு வழங்கப்படும் பணத்தில் வித்தியாசம் உள்ளது. இது வேறுபாடு அல்ல. அவரவர் அணியும் ஆடையின் அளவுக்கு ஏற்ற நிர்ணயமாகும். முஸ்லிம் மாணவிகள் தலை மறைப்பதற்காக மேலதிகமாக துணி வழங்கப்படுகின்றது. உண்மையில் இது முரண்பாடாகத் தென்பட்டால் சகலருக்கும் சம அளவில் வழங்கும்படி அரசை வேண்டினால் அது நியாயமானதாகும்.
தமது தலையை மறைப்பதற்காக முஸ்லிம்கள் தமது சொந்தப் பணத்தில் துணி வாங்கிக் கொள்வார்கள். அரசின் அங்கீகாரம் பெற்ற இச்செயற்பாட்டை அரசிடம் கோரி நிறுத்த நடவடிக்கை எடுத்தால் அது நியாயமான வழிமுறையாகும். ஆனால், தனியார் சட்டம், காழிக் கோட், பாடசாலைச் சீருடையில் வேறுபாடு போன்ற பிரச்சினைகளைக் காரணம் காட்டி முஸ்லிம் கடைகளில் பொருள் வாங்காதீர்கள், உணவில் கர்ப்பத்தடை மாத்திரை உண்டு, சாப்பாட்டில் துப்பித் தருகின்றார்கள், ஆடையிலும் கர்ப்பத் தடை மருந்து தடவி வைத்திருக்கின்றார்கள்… என்றெல்லாம் பிரச்சாரம் செய்து சிங்கள மக்கள் மனதில் முஸ்லிம்கள் பற்றிய வெறுப்புணர்வை விதைப்பது எந்த வகையில் நியாயமானது? அன்பையும் அஹிம்சையையும் போதிக்க வேண்டிய மதகுருக்கள் பொய்யைச் சொல்லி வன்முறையையும் இனவாதத்தையும் தூண்டுவது எந்த வகையில் நியாயமாகும்?
18 வயதை அடைந்தால் மாத்திரமே திருணம் முடிக்க முடியும் என சட்டம் உள்ளது. இருப்பினும் திருமணத்தில் கூட முஸ்லிம் களுக்கு இந்தச் சட்டம் செல்லுபடியாவ தில்லை.
திருமணத்தில் கூட அல்ல. திருமணம் என்பது தனியார் சட்டம் சார்ந்தது. அதில் முஸ்லிம்களுக்கு 18 வயது என்ற கட்டுப்பாடு இல்லையென்பது உண்மைதான் முஸ்லிம் பெண்களுக்கு திருமண வயதைக் கூட்ட வேண்டும் எனக் கோரும் கௌரவ தேரர் அவர்களே! காதலுக்கு வயதெல்லை உண்டா? 14, 16 வயது சிறுமிகளும் பஸ் வண்டிகளிலும், பொதுப் பூங்காக்களிலும், கடற்கரையோரங்களிலும் பகிரங்கமாக சல்லாபித்துக் கொண்டுள்ளனரே! இதற்கு ஏதும் வயது வரையறையோ சட்டமோ இல்லையா? இதைக் கண்டிக்கவோ, தடுக்கவோ யாரும் இல்லையா? இதைப் பற்றி கவலைப்படாதவர்கள் முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை குறித்து ஏன் அதிகம் அக்கறை செலுத்துகின்றனர்?
அடுத்து தேரர் 14 வயது மாற்றுமதப் பெண் ஒருத்தி இஸ்லாத்திற்கு வந்து திருமணம் முடித்ததாக ஒரு கதை சொல்கின்றார். இது நடந்திருக்க வாய்ப்பில்லை. 14 வயதுப் பெண் இஸ்லாத்திற்கு வந்தால் அதுவும் பெற்றோரின் விருப்பமின்றி வந்தால் ஊர் ஜமாஅத் ஏற்றுக் கொள்ளாது. அத்துடன் அந்த நிலையில் உள்ள சிறுமிக்கு திருமணமும் நடத்தி வைக்கப்படவும் மாட்டாது.
எனவே, இது எங்கு? எப்போது நடந்தது? என்பது பற்றிய உண்மை நிலை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
முஸ்லிம் பெண்கள் 18 வயதுக்கு முன்னரும் திருணம் முடிக்கலாம் என்ற சட்டத்தின் மூலம் முஸ்லிம்கள் சிங்களவர்களை விட சிறப்பிக்கப் படுகின்றனர் என்ற கூற்று தவறானது. பௌத்த தேரர்கள் திருமணம் முடிக்க முடியாது. பௌத்த மக்கள் திருமணம் முடிக்கலாம். எனவே, பௌத்த தேரர்களை விட பௌத்த மக்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளனர் என வாதிட்டால் அது தவறாகவே அமையும். இது போன்றதுதான் இந்த வாதமாகும்.
சமூக காரணங்களால்தான் இள வயது திருமணங்கள் நடக்கின்றன. தந்தை, தாயை இழந்த பெண் பிள்ளை பாட்டியின் பராமரிப்பில் இருக்கலாம். அந்தப் பிள்ளையின் பாதுகாப்பு கருதி மிக விரைவாக திருமணத்தை நடத்தவே அந்தப் பாட்டி விரும்புவாள். இது போன்ற காரண-காரியங்கள் உள்ளன என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும்.
முஸ்லிம்களின் வழக்குகள் சாதாரண நீதிமன்றத் துக்கு வருவதில்லை.
இது அபத்தமான பொய்யாகும் என்பது அனைவருக்கும் தெரியும். வக்ப், தலாக் போன்ற முஸ்லிம்களின் மார்க்கம் தொடர்பான பிரச்சினை களுக்குத்தான் தனி நீதிமன்றங்கள் உள்ளன. பொய்யான தகவல்களை வழங்கி இதுவரை நடந்த இனவாத செயற்பாடுகளை நியாயப்படுத்த முயல்வது கண்ணியம் மிகுந்த கலாநிதிப் பட்டம் பெற்ற ஒரு தேரருக்கு அழகல்ல.
இது போன்ற சிறப்புரிமைகள் சிங்களவர்களுக்குக் கூட இல்லை. இதனால் சிங்கள மக்கள் இது தொடர்பில் எதிர்ப்பை வெளியிடுவது நியாயமானது!
இதுவரையில் குறிப்பிட்டதில் தனியார் சட்டம் தவிர வேறு எந்த ஒன்றையும். தேரர் முன்வைக்க வில்லை. அதுவும் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இருந்து வருவதுதான். இதைக் கூறி சிங்கள மக்களின் எதிர்ப்பை நியாயப்படுத்துகின்றார். எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. அந்த எதிர்ப்பை அரசிடம் அல்லவா தெரிவிக்க வேண்டும்! அந்த எதிர்ப்பையும் நியாயமான முறையில்தானே வெளியிட வேண்டும்.
இனவாதமாகவும், மதத்தைக் கொச்சைப் படுத்தியும் பேசலாமா? கடைகளை, பள்ளிகளைத் தாக்கலாமா? இதுதான் எதிர்ப்பை வெளிப்படுத்தும் முறையா? எதிர்ப்பை நியாயப்படுத்தும் தேரர் அந்த எதிர்ப்பை யாரிடம் வெளிப்படுத்துவது என்பதை ஏன் சொல்லாமல் விட்டீர்கள்?
உங்கள் சமூகத்தின் இனவாத, மதவாத செயற்பாட்டை இப்படி நியாயப்படுத்துவது உயர்ந்த இடத்தில் இருக்கும் உங்களுக்கு அழகாகுமா?
அடுத்து, முஸ்லிம் பெண்கள் நீதிமன்றத்துக்கு வர வெட்கப்படுகின்றார்கள் என்று முஸ்லிம்கள் கூறுவதாகச் சொல்கின்றார். திருமணம், தலாக் விடயத்தில் காழிக் கோட்டில் உள்ளதால் அங்கு அவர்கள் அதைப் பார்த்துக் கொள்வார்கள். பொது விடயங்களில் அவர்கள் விசாரிக்கப்படுகின்றனர், சிறையிலும்; உள்ளனர்.
அடுத்து முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இடங்களில் மோட்டார் சைக்கிலில் செல்பவர்கள் தலைக் கவசம் அணிவதில்லை என்கின்றார். இது முஸ்லிம்களின் தவறு மட்டுமல்ல. மாறாக, அந்தப் பகுதியில் கடமை புரியும் அதிகாரிகளின் தவறும் கூட. அதிகாரிகள் கடமையைச் செய்யட்டும். இந்தத் தவறு தானாக நின்றுவிடும்.
இந்தக் காரணங்களைக் கூறி முஸ்லிம்கள் மீதான சிங்கள மக்களது எதிர்ப்புணர்வை நியாயப் படுத்தியுள்ளார்.
கூறப்பட்ட காரணங்கள் தவறானவை. அரசியல் மற்றும் பொருளாதார, மத ரீதியான பொறாமை உணர்வால் உருவாக்கப்பட்ட இனவாத நடவடிக்கைகளுக்கு இவ்வாறான போலிக் காரணங்கள் கூறப்படுகின்றன என்பதே உண்மையாகும்.
முஸ்லிம்களும் இது தொடர்பில் விழிப்புடன் இருப்பதுடன் நாட்டின் பொதுச்சட்ட விதிமுறைகளை மதித்து நடந்து கொள்வது கட்டாயமானதாகும்.