மாற்றத்தை வேண்டி நிற்கும் இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம்!

மாற்றத்தை வேண்டி நிற்கும் இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம்!

இஸ்லாம் கற்றலையும் கற்பித்தலையும் போற்றும் மார்க்கமாகும். இஸ்லாம் கல்விக்கு வழங்கியுள்ள முக்கியத்துவத்தை வேறு எந்த சமயமும் வழங்கியிருக்காது என்று அடித்துக் கூறலாம். அந்தளவுக்கு இஸ்லாம் கல்வியை வலியுறுத்துகின்றது.

இஸ்லாத்தின் தூது கூட ‘இக்ரஃ” – ஓதுவீராக!, படிப்பீராக! என்றுதான் ஆரம்பமானது. நபியவர்களுக்கு வழங்கப்பட்ட ஆரம்ப ஐந்து வசனங்களிலும் வாசிப்பு, கற்றல், கற்பித்தல், பேனை போன்ற கற்றல் கற்பித்தலின் அடிப்படை அம்சங்கள் பேசப்பட்டுள்ளன. எனவே, இஸ்லாம் அறிவியல் எழுச்சி மூலமாக ஒரு சமூக மாற்றத்தை உருவாக்க விரும்பும் மார்க்கம் என்பதைப் புரியலாம்.

ஆனால், இன்றைய முஸ்லிம் சமூகத்தின் கல்விசார் நடவடிக்கைகள் ஆழ்ந்த கவலையைத் தரும் நிலையில் உள்ளன. பெரும்பாலும் முஸ்லிம் சமூகம் கல்வியில் பின்தங்கியுள்ள நிலைதான் நமது நாட்டில் காணப்படுகின்றது.

கற்கும் ஆர்வம் எமது சமூகத்தில் குறைந்து வருகின்றது. குறிப்பாக ஆண்கள் மத்தியில் பெருமளவு இந்த மந்த போக்கைக் காணலாம். கா.பொ.த. சாதாரண தரம் முடித்த பின்னர் ஆட்டோ ஓட்டுவது அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுவது என்ற மனநிலையில் பலரும் உள்ளனர். இந்த மனநிலையில் மாற்றம் வேண்டியுள்ளது. கல்வியில் கவனமெடுக்காத சமூகம் அடுத்தவர்களுக்கு மத்தியில் கை கட்டி நிற்கும் நிலைதான் நீடிக்குமே தவிர தலை நிமிர்ந்து நிற்கும் நிலை ஏற்படாது.

இது ஒரு தனி மனிதனது தொழில் பிரச்சனையோ அல்லது ஜீவாதார பிரச்சனையோ அல்ல. இது ஒரு சமூகப் பிரச்சனை!

எமது சமூக மக்கள் உயர்ந்த உத்தியோகத்தில் இருக்க வேண்டும். அது சமூகப் பாதுகாப்பாகவும், சமூகத்தின் மதிப்பைக் கூட்டுவதாகவும் அமையும்.

எனவே, மாணவர்களுக்கு மத்தியில் கல்வி மூலம் உயர்வடைய வேண்டும் என்ற எண்ணம் ஊட்டப்பட வேண்டும். இலட்சியமற்ற வாழ்க்கைப் போக்கின் விபரீதம் உணர்த்தப்பட வேண்டும். ஆதலால் கல்வி விழிப்புணர்வை வழங்க வேண்டியுள்ளது.

முஸ்லிம் பெண்களிடம் படிக்கும் ஆர்வமும் திறமையும் ஓரளவு வெளிப்பட்டு வருவதை அண்மைக் காலமாக உணர முடிகின்றது. இருப்பினும் இது கூட பிரச்சினையாக உருவெடுக்க ஆரம்பித்துள்ளது. கற்காத ஆண்கள் நிறைந்த சமூகத்தில் பெண்கள் நல்ல முறையில் கற்கும் சூ ழல் பெரிய சமூகப் பிரச்சினையை உருவாக்கும்.

கற்ற பெண்களுக்கு தகுதியான மாப்பிள்ளைகள் இல்லாத சூழல் ஏற்படும். இதனால் படித்த பெண்களில் சிலர் தமக்குத் தேவையான ஆண் துணையை அந்நிய சமூகத்தில் தேடும் நிலை ஏற்படலாம். படித்த பெண்களுக்கு மாப்பிள்ளை இல்லாத சூழ்நிலையை அவதானிக்கும் பெற்றோர் பெண் பிள்ளை அதிகம் படித்தால் தகுதியான மாப்பிள்ளை தேடுவது கஷ்டம் என்பதால் பெண் பிள்ளைகளின் கல்வியை இடைநிறுத்தும் நிலை ஏற்படலாம்.

ஓரளவு கற்ற மாப்பிள்ளைகளை பணக்காரர்கள் பணம் கொடுத்து வாங்கிக் கொள்வார்கள். படித்த ஏழை முஸ்லிம் பெண்களுக்கு சரியான வாழ்க்கைத் துணை அமையாது போகும். படித்த ஆண்களும் பணத்திற்கு ஆசைப்பட்டு படிக்காத பெண்களுக்கு வாழ்க்கைப்பட சம்மதிப்பர். இதனால் சரியான சோடி அமையாத காரணத்தினால் குடும்பப் பிரச்சினைகள் தலை தூக்கலாம். தலாக் மற்றும் குடும்பக் குழப்பங்கள் அதிகரிக்கலாம்.

எனவே, கல்வி நடைமுறையில் எமது சமூகத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டே ஆக வேண்டும்.

மற்றொரு புறம் முஸ்லிம் பாடசாலைகள் கல்வி மற்றும் பண்பாட்டுத் துறையில் வீழ்ச்சியடைந்து வருகின்றன. ஆசிரியர்களுக்கு மத்தியில் இருக்கும் போட்டி, பொறாமை உணர்வு, கடமையுணர்வு இன்மை, கட்சி மற்றும் ஜமாஅத் வேறுபாடுகள், நிர்வாக ஆளுமை இல்லாத போக்குகள் போன்ற பல காரணங்களால் முஸ்லிம் பாடசாலைகளின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டு வருகின்றது.

உலகின் பெரும் பகுதியை ஆண்ட சமூகத்திடம் இருந்த நிர்வாக ஆற்றல் இப்போது அற்றுப் போனது. முஸ்லிம் பாடசாலைகளுக்கு தகுந்த அதிபர்களைப் பெறுவது பெரும் கஷ்டமாக மாறி வருகின்றது. ஆண்களின் கல்வி ஆர்வம் குன்றி, பெண்களே அதிகம் கற்பதால் முஸ்லிம் பாடசாலைகளில் மட்டுமல்லாது இலங்கையில் கூடுதலாக பெண் ஆசிரியைகள்தான் அதிகரித்துள்ளனர். ஆசிரியர்கள் குறைந்து ஆசிரியைகள் அதிகரித்த பாடசாலைகளில் கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தையும் கொண்டு வருவது மற்றுமொரு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி, பண்பாட்டு வீழ்ச்சி காரணமாக செல்வந்த முஸ்லிம்கள் தமது பிள்ளைகளை சிங்கள மற்றும் ஆங்கில மொழி பாடசாலைகளில் சேர்த்துவிடுகின்றனர். இஸ்லாமிய சூழலில் முஸ்லிம் பிள்ளைகள் கற்க வேண்டும் என்ற இலட்சியத்தில்தான் எமது முன்னோர்கள் முஸ்லிம் பாடசாலைகளை உருவாக்கித் தந்தனர். இஸ்லாம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, எமது பிள்ளை கட்டை கவுன் அணிந்தாலும் பரவாயில்லை நன்கு படித்து, உயர் பெறுபேறு எடுக்க வேண்டும் என்ற மனநிலைக்கு எமது பாடசாலைகள் மக்களைக் கொண்டு வந்திருப்பது வேதனையாக உள்ளது.

பணக்கார பிள்ளைகள் வெளிப் பாடசாலைகளுக்குச் செல்வதால் ஊரிலுள்ள முக்கியஸ்தர்களுக்கும், செல்வந்தர்களுக்கும் ஊர் பாடசாலைகளுடனான தொடர்பு குறைகின்றது. இதனால் பாடசாலைகளின் முன்னேற்றங்களில் பின்னடைவு ஏற்படுகின்றது.

அடுத்து, வெளிப்பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்கு உள்ளூர் தொடர்புகள் குறைகின்றது. அவர்களிடம் மேட்டுக்குடி மனோநிலை ஏற்படுகின்றது. இது சமூக ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும்.

சிங்கள பாடசாலைகளில் கற்கும் மாணவர்களிடம் பெரும்பாலும் மார்க்க ரீதியான பின்னடைவு ஏற்படுகின்றது. கலாசார சீரழிவுகள் ஏற்படுகின்றன. மார்க்க ரீதியான ஒழுக்க வீழ்ச்சிகள் அதிகரிக்கின்றன.

சிங்கள மொழியில் கற்பதை நாம் குறை காணவில்லை. எப்படி தமிழ் மொழி மூலம் முஸ்லிம் பாடசாலைகள் இருக்கின்றனவோ அதே போன்று சிங்கள மொழி மூல முஸ்லிம் பாடசாலைகள் உருவாக வேண்டும். இஸ்லாமிய சூழலில் சிங்கள மொழி மூலம் முஸ்லிம் மாணவர்கள் கற்க வேண்டும். இது ஆரோக்கியமான நல்ல முடிவுகளைப் பெற்றுத் தரும்.

அடுத்து, வேறு எந்த சமூகத்திலும் இல்லாத அளவுக்கு பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் முஸ்லிம் சமூகத்தில் இருக்கின்றன. ஒரு கட்சிக்காரர்கள் ஒரு அதிபரை அழைத்து வந்தால் அடுத்த கட்சிக்காரர்கள் அந்த அதிபரை விரட்டுவதற்கு பெரும் பிரயத்தனம் எடுக்கின்றனர்.

ஒரு கட்சி பாடசாலை முன்னேற்றத்திற்காக ஏதாவது ஒரு செயற்றிட்டத்தை முன்னெடுத்தால் அடுத்த கட்சிக்காரர்கள் அதைத் தடுப்பதற்காக பகீரத பிரயத்தனத்தை மேற்கொள்கின்றனர். ஈற்றில் அவர்களது ‘நானா? நீயா?” என்ற போராட்டத்தில் ஊருக்கோ, சமூகத்திற்கோ உருப்படியான எந்த நன்மையும் அமையாமலேயே போய்விடுகின்றது. அரசியல் தலைவர்களும் ‘நீங்க செய்யச் சொல்விங்க அவங்க செய்ய வேண்டாம் என்று சொல்வாங்க! நாங்க என்ன செய்யுரது?” என்ற டயலொக்கைப் பேசிப் பேசியே சமூகத்திற்கு ஒன்றும் செய்யாமல் நழுவிவிடுகின்றனர்.

பாடசாலைகள், பள்ளிவாயில் போன்ற பொது இஸ்தாபனங்களில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. அரசியல் செல்வாக்குள்ளவர்கள் தமக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி நல்லது செய்ய வேண்டும். மாற்றுக் கட்சியினர் கூட இருந்து ஒத்துழைக்க வேண்டும். அதற்கு விருப்பமில்லை என்றால் உபத்திரவம் செய்யாமல் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். முஸ்லிம்களிடம் காணப்படும் இந்த அரசியல் போட்டியால் எமது சமூகம் நிறையவே இழந்துள்ளது. இனியும் இதனால் இழப்புக்கள் ஏற்படக் கூடாது என்றால் தேவையற்ற இந்த அரசியல் போட்டியை நிறுத்த வேண்டும். நல்லதை யார் செய்தாலும் அதற்குத் துணை நிற்க வேண்டும். தனது அரசியல் ஆதாயத்திற்காக சமூகத்திற்குப் பயனளிக்கும் நல்ல திட்டங்களுக்கு எதிர்ப்பாக இருக்க முனையும் அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியாக இருந்தாலும் அவர்களை சமூக விரோதிகளாகப் பார்த்து மக்கள் ஒதுக்க முன்வந்தால் இந்தப் பிரச்சனையை ஒழிக்கலாம்.

முஸ்லிம்களின் சமூக மாற்றத்திற்கான அடித்தளம் பள்ளிவாயில்களிலிருந்தும், பாடசாலைகளிலிருந்தும் முறையாக முன்னெடுக்கப்பட்டால் நல்ல மாற்றத்தைக் காணலாம். முஸ்லிம்களது கல்வி சார்ந்த பார்வை மாற வேண்டியுள்ளது. படித்து என்ன செய்ய என்ற சிந்தனை ஒழிய வேண்டும். படித்தால்தான் எதையும் செய்ய முடியும் என்பதை உணர வேண்டும். பாடசாலைகள் சீரமைக்கப்படுவதன் மூலம் நல்ல சமூக மாற்றத்தை உருவாக்கப் பாடுபடுவோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நமது நல்ல எண்ணங்களை அங்கீகரித்து எமது முயற்சிகளை வெற்றிபெறச் செய்வானாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.