எதிர்பாராத அரசியல் மாற்றங்கள் அவ்வப்போது இடம் பெற்று வருவதுண்டு. உலக நடப்புக்களை அவதானிக்கும் போது ஒரு அரசியல் மாற்றத்திற்கான அத்திவாரங்கள் இடப்பட்டுவிட்டனவா என சிந்திக்க வேண்டியுள்ளது.
நபி(ஸல்) அவர்களது காலத்தில் உரோம, பாரசீகப் பேரரசுகள் உலக வல்லரசுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஈற்றில் இரு பெரும் வல்லரசுகளும் இஸ்லாத்திடம் சரணடைந்தன. இவ்வாறே சென்ற நூற்றாண்டில் அமெரிக்கா, ரஷ்யா என்பன இரு பெரும் வல்லரசுகளாகத் திகழ்ந்தன. உலக நாடுகள், அமெரிக்க ஆதரவு அணி, ரஷ்ய ஆதரவு அணி, அணி சேரா நாடுகள் என பிரிந்து செயற்பட்டன.
இந்த இரு வல்லரசுகளும் அரசியல் களத்தில் நேரடியாக மோதிக் கொண்டாலும் ஆயுத களத்தில் நேரடியாக மோதாமல் தமது நட்பு நாடுகள் மூலமாக மோதி வந்தன.
முஸ்லிம் நாடுகளும் அமெரிக்க அணி, ரஷ்ய அணி என பிளவுபட்டது. சவூதி போன்ற செல்வந்த நாடுகள் அமெரிக்கா சார்பு நிலைப்பாட்டை எடுத்தன. ரஷ்யா கொம்யூனிச நாடு, அது நாஸ்திகத்தை அடிப்படையாகக் கொண்டது. முதலாளித்துவத்தை விட நாஸ்திகம் ஆபத்தானது என்ற அடிப்படையில் அவை அமெரிக்க ஆதரவு அணியாக செயற்பட்டன. இதனால் அமெரிக்கா பெரும் ஆதாயத்தை அடைந்து வந்தது.
இஸ்ரேல் பலத்தோடு இருக்கும் காலம் எல்லாம் அறபு நாடுகள் பாதுகாப்புக்கு தன்னை நாடியே இருக்க வேண்டும் என்பதால் அமெரிக்கா இஸ்ரேலையும் வளர்த்துக் கொண்டு அறபு நாடுகளுடனும் நற்பைப் பேணி வந்தது.
இதே வேளை மத்திய கிழக்கில் ஏதேனும் பிரச்சினை இருந்து வந்தால்தான் இவர்கள் தமது ஆதரவை நாடி இருப்பார்கள் என்பதால் ஷீஆ, சுன்னி பிரச்சனையையும் வளர்த்து வந்தது.
இதே வேளை, ரஷ்யா ஆப்கானை ஆக்கிரமித்து அங்கு அராஜகங்களை நிகழ்த்தி வந்ததாலும் செச்னியா, பொஸ்னியா போன்ற இடங்களில் அது நடத்தி வந்த மிருகத்தனமான செயற்பாடுகளாலும் முஸ்லிம்கள் ரஷ்யா மீது வெறுப்புக் கொண்டார்கள். ஈற்றில் ரஷ்யா தோல்வியடைந்து சிதறிப் போனது. அமெரிக்கா தனது வல்லாதிக்கத் தேவையை முஸ்லிம்களின் போராளிகளினூடாக அடைந்து கொண்டது.
அதன் பின்னர் அமெரிக்கா தனிக்காட்டு இராஜாவாகியது. எனவே, திட்டம் போட்டு ஆப்கான், ஈராக், லிபியா என முஸ்லிம் நாடுகளை கருவறுக்க ஆரம்பித்தது.
இந்த சூழ்நிலையில்தான் சவூதியின் மன்னராக ஸல்மான் பதவியேற்றார்.
அவர் பதவியேற்ற பின்னர் சவூதி அரசுக்குள் பல களையெடுப்புக்கள் நடந்தன. கட்டிப் போடப்பட்ட இஸ்லாமியவாதிகள் பலரது கட்டுக்கள் அவிழ்த்துவிடப்பட்டன. அத்தோடு சில அதிகாரப் பறிப்புக்களும் நடந்தன.
ஸல்மான் அமெரிக்காவின் அடிவருடியாகச் செயற்பட விரும்பவில்லை. அவர் ஒரு இஸ்லாமியவாதியாக இருந்தார். ஒபாமாவின் வருகையின் போது உலக வல்லரசுத் தலைவரை விட்டு விட்டு அவர் தொழுகைக்குச் சென்ற நிகழ்ச்சி இதைத் தெளிவாக உணர்த்தியது. அது மாத்திரமின்றி யெமனை விடுவிப்பதற்கான போரை அமெரிக்காவின் அனுமதியின்றி சுயமாக ஆரம்பித்தார். இஸ்லாமியப் படையை உருவாக்கினார். இஸ்ரேல் தொடர்பான காரசாரமான முடிவுகளை வெளியிட்டார். ஐ.நா. விலும் பலஸ்தீன் விவகாரத்தில் உலக நாடுகளின் இரட்டை முகம் கண்டிக்கப்பட்டது. இப்படி தொடராக அவரது செயற்பாட்டை அமெரிக்கா ரசிக்கவில்லை. இருப்பினும் முஸ்லிம்கள் மீதான பற்றை அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் வெளிக்காட்ட ஆரம்பித்தன. ஹிஜாபுக்கு எதிராக எவரும் பேசக் கூடாது என ஒபாமா ஒப்பாரி வைத்தார். பிரிட்டன் கூட ஐம்பது இலட்சம் முஸ்லிம்கள் பிரிட்டனில் இருக்கின்றார்கள். அதனால் இஸ்லாம் பிரிட்டனில் ஓர் அங்கம் என்றெல்லாம் ‘ஐஸ்’ வைத்தது. ஆம், சவூதியின் மாற்றம் அமெரிக்காவை இப்படிப் பேச வைத்தது.
இப்போது சவூதி இலேசாக ரஷ்யாவின் பக்கம் சாய ஆரம்பித்திருப்பது போன்று தென்படுகின்றது. சவூதியும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்யாவுடன் நெருக்கம் கொண்டால் அது அமெரிக்காவுக்குப் பெரும் அரசியல், பொருளாதார சரிவை ஏற்படுத்திவிடும். அது மட்டுமன்றி ரஷ்யாவின் மீள் எழுச்சிக்கு ஒட்சிசன் கொடுப்பதாகவும் அமைந்துவிடும்.
எனவே, அமெரிக்கா இதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கப் போவதில்லை. மன்னர் பைஸல் இஸ்லாமிய நாடுகளை ஒருங்கிணைக்கவும், சுதந்திரமாகச் செயற்படவும் முற்பட்ட போது குடும்ப உறுப்பினர் ஒருவரை வைத்து அவரைப் படுகொலை செய்தனர். இப்போது சவூதி அரசியலிலும் குழப்பத்தை உண்டுபண்ண முயற்சிக்கின்றனர்.
சவூதியின் மன்னராட்சி அற்புதமானது. மன்னர் சுஊதின் பிள்ளைகள் ஒருவர் பின் ஒருவராக ஆண்டு வருகின்றனர். ஒருவர் மரணிக்கும் வரை மற்றவர் ஆட்சிக்காகக் காத்திருக்கின்றனர். ஆட்சிக்காக ஒருவர் மற்றவரைக் கொலை செய்ததில்லை.
இப்போது மன்னர் ஸல்மானுக்கு அடுத்த கட்டத்தில் இருப்பவருக்கு ஆட்சிப் பொறுப்பு அளிக்கப்பட வேண்டும் என்று ஒரு புரளி கிளப்பிவிடப்பட்டுள்ளது. மன்னர் ஸல்மான் இந்த சதியை சாதித்து வெல்வாரா? இல்லையா? என்பதைப் பொறுத்து சவூதியின் அரசியல் எதிர்காலம் அமையலாம்.
ஸல்மானும் அதற்குப் பின்னர் மற்றவர்களும் தொடர்ந்து மன்னராட்சி முறையில் நாட்டைக் கொண்டு செல்வார்களா? அல்லது மன்னராட்சியின் முடிவு காலத்தை சவூதி நெருங்கிக் கொண்டிருக்கின்றதா? என்று சிந்திக்க வேண்டியுள்ளது. எது எப்படியிருப்பினும் சவூதியின் மன்னராட்சி ஒரு முடிவுக்கு வரும் என்பது நபி(ஸல்) அவர்களின் ஒரு முன்னறிவிப்பாகும்.
‘உங்கள் மத்தியில் அல்லாஹ் நாடும் வரை நபித்துவம் இருக்கும். அல்லாஹ் நாடும் போது அதை உயர்த்திவிடுவான். அதன் பின்னர் அல்லாஹ் நாடும் கால அளவுக்கு நபித்துவத்தின் அடியொற்றிய கிலாபத் இருக்கும். அல்லாஹ் நாடும் போது அது நீங்கிவிடும். பின்னர் மன்னராட்சி இருக்கும். அல்லாஹ் நாடும் வரை அது நீடிக்கும். அதன் பின் சர்வாதிகார ஆட்சி இருக்கும். அல்லாஹ் நாடும் காலம் வரை அது இருக்கும். அதன் பின் நபித்துவத்தின் அடிப்படையிலான கிலாபத் ஏற்படும்’ என நபி(ஸல்) அவர்கள் கூறிய செய்தி அஹ்மத் உட்பட மற்றும் பல கிரந்தங்களில் இடம்பெற்றுள்ளது.
இது அறபு தேசத்தில் மன்னராட்சி முடிவு பற்றி அறிவிப்பதுடன் அடுத்து வரும் ஆட்சி சர்வாதிகார ஆட்சியாக இருக்கும் என்றும் எச்சரிக்கை செய்கின்றது.
நடந்து வரும் அரசியல் மாற்றங்கள் இந்த ஹதீஸ் சொல்லும் செய்தியை நோக்கி அறபுலகம் நகர்ந்து கொண்டிருக்கின்றதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றது.