மாமிச உணவு மனித இனத்திற்கு எதிரானதா?

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் குறிப்பிட்ட சில குழுக்கள் மாமிச உணவுக்கு எதிராகக் குரல் எழுப்பி வருகின்றன. இறைச்சிக்காக விலங்குகளை அறுப்பதும், கொல்வதும் கூடாது என்பது இவர்களின் கொள்கையாகும். ஏனினும், இது கொள்கைக்காக எழும் பிராச்சாரமாக இல்லாமல் இஸ்லாத்தையும், முஸ்லீம்களையும் எதிர்ப்பதற்கான ஒரு ஊடகமாகவே பயன்படுத்தப்படுகின்றது.

இந்தியாவிலே RSS போன்ற அமைப்புக்கள் முஸ்லிம்கள் மாடு அறுக்கிறார்கள் என்ற காரணத்தினால் அவர்களைக் கடுமையாக எதிர்க்கின்றனர். இறந்த மாட்டின் தோலை உரித்துக் கொண்டிருந்த சில தாழ்த்தப்பட்ட மக்களை பசுவின் மீது கொண்ட பக்தியால் இவர்கள் அடித்தே கொலை செய்த நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன.
இவ்வளவு தீவிரமாக மாமிசத்திற்காக விலங்குகளை அறுப்பதை எதிர்க்கும் இவர்களது ஆட்சியும் செல்வாக்கும் அதிகம் உள்ள பகுதிதான் உத்திர பிரதேசம். மாமிச உணவை எதிர்க்கும் பாரதீய ஜனதாக் கட்சி தான் உத்திர பிரதேசத்தை 1992 இல் ஆண்டது. இங்கு தான் இந்தியாவிலேயே அதிக அளவில் இறைச்சி விற்பனையாகின்றது என இந்தியா டுடே (1992 ஜுலை 21-5) தகவல் கூறுகின்றது. உத்திர பிரதேசத்திலிருந்து குவைட் நாட்டிற்கு 700 கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள இறைச்சி ஏற்றுமதியாகியதாகவும், 1992 இல் இரகசியமாக இறைச்சி விற்பனை செய்த 850 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அதில் 80% வீதமானோர் இந்துக்கள் என்றும் அத்தகவல் கூறுகின்றது.
பசுவதை கூடாது என்று சட்டம் போடுவது! மாமிசம் உண்னும் முஸ்லிம்களை காட்டுமிறாண்டிகள் என்று கொச்சையாகப் பேசுவது! ஆனால், கோடிகோடியாக மாமிசம் விற்றுப் பணம் குவிப்பது! ஏன் இந்த முரண்பட்ட நிலை? இஸ்லாத்தை எதிர்ப்பதற்காகவே இந்த போலிப் பிரச்சாரம் என்பது வெளிப்படையான இரகசியமாகும்.
இலங்கையில் அண்மையில் இந்தப் பிரச்சினையை சிலர் பெரிது படுத்தி வருகின்றனர். இறைச்சிக்காக மாடு அறுப்பதைத் தடுப்பதற்காக சிலர் ஜனநாயக ரீதியில் கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளனர். சில அதிகாரிகள் இதற்குத் தமது அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றனர். சில அரசியல் சண்டியர்கள் தமது சண்டித்தனத்தைப் பயன்படுத்துகின்றர். இதில் ஒரு சிலர் கொள்கைக்காகப் பேசுபவர்களாக இருக்கலாம். பெரும்பாலானவர்கள் இன ரீதியான பொறாமையாலும் போட்டியாலுமே இதில் குதித்துள்ளனர்.
ஜப்பான், சீனா, பர்மா, கொரியா, தாய்லாந்து போன்ற பௌத்த நாடுகளில் எவ்விதப் பிரச்சினைகளும் இல்லாமல் மாமிச உணவுகள் தாராளமாக உட்கொள்ளப்படுகின்றன. இலங்கையில் இது சர்ச்சையாக்கப்படுவதற்கு பௌத்தம் காரணம் அல்ல. சிங்கள இனவாதமும், முஸ்லிம் எதிர்ப்புணர்வுமே இதற்கு அடிப்படையாகும்.
உலக சனத்தொகையில் 95% சதவீதமானோர் மாமிசம் உண்பவர்களே! மாமிசம் உண்ணக் கூடாது என்ற கருத்துடையோர் வெறும் 5% சதவீதம் மட்டுமே. இந்த 5% சதவீதமான மக்களும் தமது கருத்தின் படிதான் மீத 95% சதவீதமானோரும் செயல்பட வேண்டும். இல்லையென்றால் அவர்களை எதிர்ப்போம் என்று கூறுவது எந்த வகையில் நியாயம் என்று நினைத்துப் பாருங்கள்.
உலகில் முஸ்லிம்கள் மட்டுமன்றி கிறிஸ்தவர்கள், யூதர்கள், பெரும்பாலான இந்து-பௌத்த சகோதரர்கள் மற்றும் மதமே இல்லாத நாஸ்தீகர்கள் என சகல இனத்தவர்களும் மதத்தவர்களும் மாமிசம் உண்னும் போது மாமிசம் உண்ணாத மக்கள் முஸ்லிம்களை மட்டும் குறிவைத்து குதறுவது நியாயமா? முஸ்லிம்கள் மீதும், இஸ்லாத்தின் மீதும் கொண்ட போட்டியும், பொறாமையும் தான் இந்த எதிர்ப்புணர்விற்குக் காரணம் என்பதை இது உணர்த்தவில்லையா?
மனிதனைப் படைத்த இறைவன் அவனை மாமிசம் உண்ணும் இயல்பு கொண்டவனாகத்தான் படைத்துள்ளான். ‘புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது’ என்பார்கள். புலி மாமிச உண்ணியாகும். அது புல்லைத் தின்னாது. தின்றாலும் செமிக்காது. அப்படித்தான் அதை இறைவன் படைத்துள்ளான்.
யானை பெரிய மிருகம். அது மாமிசம் உண்ணாது. உண்டாலும் அது அதற்கு ஒத்துக் கொள்ளவோ, சமிபாடடையவே மாட்டாது. ஆனால், மனிதன் கீரை வகைகளையும், காய் கறிகளையும், மீன் மற்றும் மாமிச வகைகளையும் உண்ணலாம். இரண்டும் சமிபாடடையத்தக்க உடல் அமைப்புடன் இறைவன் அவனைப் படைத்துள்ளான். மாமிசம் உண்ணவே கூடாது எனப் பிரச்சாரம் செய்பவர்கள் படைத்த இறைவனைக் குறை கூறப் போகின்றார்களா?
தாவர உண்ணிகள் இலை குழைகளை அசை போட்டு உண்ணத்தக்க பல் அமைப்பைக் கொண்டவை. மாமிச உண்ணிகள் மாமிசத்தை கீறிக் கிழித்து உண்ணத்தக்க வேட்டைப் பல் கொண்டவை. மனிதன் இரண்டு பற்களையும் கொண்டவனாகப் படைக்கப்பட்டுள்ளான். மாமிசம் உண்ணத்தக்க பல் அமைப்புடனும், மாமிசத்தை சீரணிக்கத்தக்க உடல் அமைப்புடனும், மனிதனைப் படைத்த இறைவனை இவர்கள் குறை காண்பார்களா?
உணவுக்காக அறுக்கப்படும் ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற பிராணிகள் தினமும் ஆயிரக்கணக்கில் அறுக்கப்பட்டாலும் அருகி அழியாத தன்மையுடையதாக இறைவனால் படைக்கப்பட்டுள்ளன.
உண்ணப்படாத உயிர்களான சிங்கம், புலி, யானை, கரடி, காண்டா மிருகம் போன்ற உயிர்கள் வேட்டையாடி கொல்லப்பட்டால் அப்படியே அருகி அழிந்துவிடும். இவ்வாறு வேட்டையாடப்படும் உயிர்கள் அழிந்து வருவது ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வேட்டைகளைத் தடுக்கக்கூடிய சட்டங்கள் அனைத்து நாடுகளிலும் உள்ளன.
இதிலிருந்து எல்லாம் வல்ல இறைவன் மனிதனுக்கு உணவாக அமையத்தக்க விதத்தில் தான் இந்த உயிரினங்களைப் படைத்துள்ளான் என்ற உண்மையைப் புரியலாம்.
இதற்கு மாற்றமாக இந்த உயிரினங்கள் அறுக்கப்படாவிட்டால் அவை அபரிமிதமாகப் பெருகி மனிதனுக்கு இழப்புக்களை ஏற்படுத்துவது மட்டுமன்றி உணவின்றியும், நோயின் காரணமாகவும் தானாகவே அழிய ஆரம்பித்துவிடும்.
இலங்கையில் ஒரு நாளைக்கு சுமார் 30,000 மாடுகள் அறுக்கப்படுவதாக வைத்துக் கொள்ளுங்கள். வருடத்திற்கு சுமார் 10,950000 மாடுகள் அறுக்கப்படாமல் விடுபடப் போகின்றன. இது 10 வருடங்கள் தொடர்ந்தால் மாடுகளின் வளர்ச்சியால் மனிதன் பாதையில் பயணிக்க முடியாத நிலை ஏற்படும். புற்பூண்டுகள் அதிகம் உண்ணப்படுவதால் புதிதாக புற்பூண்டுகள் முளைக்காது மழை வீழ்ச்சி பாதிக்கப்படும். இவ்வளவு மாடுகளும் நீர் அருந்தப் போனால் நீர்த்தட்டுப்பாடு உண்டாகும்…. இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம்.
இதை நாம் கற்பனையாகக் கூறவில்லை. இந்தியாவில் ஒரு கிராமத்தில் உள்ள கோவிலுக்கு ஆடு, மாடுகள் காணிக்ககையாக செலுத்தப்பட்டு வந்தது. அந்த ஊர் மக்கள் முன்வைத்த பிரச்சினை என்னவெனில் ‘இந்த மாடுகளை ஏதாவது செய்ய வேண்டும். பாதையில் போகும் போது கையில் இருக்கும் பைகளைப் பரித்து உணவு தேடுகின்றது. தோட்டத்தில் புகுந்து துவம்சம் செய்கின்றது. காடுகளையும் அழித்து வருகின்றது’ என அவர்கள் முறைப்பாடு நீண்டு செல்கின்றது.
உலகின் துருவப் பகுதியில் வாழும் எஸ்கிமோக்கள் உள்ளனர். அவர்கள் மாமிசத்தையே பிரதான உணவாக உண்டு வாழ்க்கை நடாத்துகின்றனர். அவர்களுக்குத் தாவர உணவு கிடையாது. அவர்கள் தாவர உணவு தான் உண்ண வேண்டும். இல்லையென்றால் உண்ணாமல் சாக வேண்டும் என்று கூறப்போகின்றனரா?
எல்லாக் கோவில்களிலும், பௌத்தமத கிரியைகளிலும் மேளம் முக்கியத்துவம் பெறும். மேளம் இல்லாமல் கலாச்சார நிகழ்ச்சிகள் இடம் பெறாது. இந்த மேளத்துக்கான பதனிடப்பட்ட தோல்கள் அறுக்கப்பட்ட மாடுகளிலிருந்து தான் பெறப்படுகின்றன. மாடு அறுக்கக் கூடாது என்ற கொள்கைக்கு இது முரண்பாடாகத் தென்படவில்லையா?
உணவுக்காக மாடு அறுக்கக் கூடாது என்று பிரச்சாரம் செய்யும் இனத்தைச் சேர்ந்தவர்களே உணவுக்காக அறுக்கப்படும் இடங்களுக்கு மாடுகளை விற்பனை செய்து பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்கின்றனர். அறுக்கக் கூடாது என்றால் அறுப்பதற்காக விற்பதும் கூடாது. அறுப்பதற்காக நான் விற்கிறேன். ஆனால், நீ அறுப்பதை நான் எதிர்க்கிறேன் என்பது எவ்வளவு பெரிய முரண்பாடு! காசு கிடைத்தால் கடவுளையே கொன்று விற்கலாமா? அல்லது ஆதாயம் எனக்கென்றால் பழி உனக்கு என்றால் முடியாது என்ற சுயநலமா?
உயிர்களை உணவுக்காகக் கொல்லக் கூடாது என்றால் மாடு மட்டுமன்று மீன், கோழி எல்லாமே உயிர் தானே! இலங்கையின் கடல் வளத்தைப் பயன்படுத்தாமல் அப்படியே விட்டு விடுவோமா? கோழிப் பண்ணைகளையெல்லாம் மூடிவிடலாமா? நாட்டின் பொருளாதாரம் எங்கே போய் நிற்கும்?
உணவுக்காக முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் விலங்குகளைக் கொள்கின்றனர். முஸ்லிம்கள் அறுப்பதற்கும், ஏனைய சகோதரர்கள் கொல்வதற்குமிடையில் பலத்த வித்தியாசம் இருக்கிறது. இந்த வேறுபாட்டையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
மாற்று சமூகத்தவர்கள் மின்சாரம் பாய்ச்சியோ, தடிகளால் அடித்தோ, துப்பாக்கியால் சுட்டோ விலங்குகளைக் கொல்கின்றனர். இஸ்லாம் இதைத் தடுக்கின்றது. விலங்குகளின் தொண்டைக் குழியில் கூறிய கத்தி வைக்கப்பட்டு விரைவாக மிக விரைவாக அதன் நரம்புகள் அறுக்கப்படும். அதன் மூலம் மூளைக்கும் உடலுக்குமிடையில் உள்ள உறவு துண்டிக்கப்படும். உடலில் உள்ள இரத்தம் முழுவதும் பீறிட்டு வெளியே பாயும். இதனால் அந்த மாமிசம் உண்பதற்கு ஏற்றதாக மாறுகின்றது. அடுத்து நரம்புகள் துண்டிக்கப்படுவதால் அந்த விலங்கு வேதனையை உணர மாட்டாது. இரத்தம் பீறிட்டு ஓடுவதால் அதற்கு வலிப்பு ஏற்படும். வேதனையை உணராமலே அது மிக விரைவில் இறந்து விடும். இது குறித்து செய்யப்பட்ட ஆய்வுகள் இஸ்லாமிய முறைப்படி அறுப்பதால் விலங்குகள் வேதனையை உணர்வதில்லை என்பதை உறுதி செய்கின்றது.
எனவே, மாடு அறுப்பதைத் தடுக்க வேண்டும், இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என்பது இலங்கையில் மீண்டும் இனவாதத்தைத் தூண்டும் பிரச்சாரமாகும்.
ஒரு மனிதன் மாமிசம் உண்பதைத் தவிர்ப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை. அனுமதிக்கப்பட்ட உணவை விரும்பியவர் உண்ணலாம். விரும்பியவர் தவிர்க்கலாம். இந்த அடிப்படையில் மாமிசம் உண்பதை விரும்பினால் தவிர்க்கவும் உரிமை இருக்கிறது. பௌத்த மதம் அதைத் தடுக்கிறது. என்றால் மாமிசம் உண்ணாதீர்கள் என்று பிரச்சாரம் செய்யும் உரிமை பௌத்தர்களுக்கு உண்டு. மாமிசம் உண்பதைத் தவிர்க்கப் போகிறேன் என்று அதன் மூலம் மக்கள் முடிவு செய்தால் அதுவும் பிரச்சினையில்லை.
புத்த மதம் மாமிசம் உண்ணக் கூடாது என்று கூறுகின்றது. எனவே, பௌத்தர்கள் மாமிசம் உண்ணக் கூடாது என்று கூறினால் அது நியாயம். புத்த மதம் மாமிசம் உண்ணக் கூடாது என்கிறது. அதனால் முஸ்லிம்கள் மாமிசம் உண்ணக் கூடாது என்பது என்ன நியாயம்? நாம் தாம் பௌத்தத்தை மதமாக ஏற்றுக் கொள்ளவில்லையே!
‘எமது மதம் எமக்கு! உங்கள் மதம் உங்களுக்கு!’ என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். எமது மதப்படி நாம் செயல்படுகின்றோம் உங்கள் மதப்படி நீங்கள் செயற்படுங்கள். யாரும் யாருடைய மதத்தையும் அடுத்தவர்கள் மீது திணிக்கக் கூடாது என்பது தானே நியாயம்.
இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என்பதற்காக கையெழுத்து வேட்டையில் இறங்கியிருக்கும் மத குருக்களே! உயர் அதிகாரிகளே! இதற்குப் பக்க துணையாக இருக்கும் அரசியல் தலைவர்களே! பௌத்த மதம் மதுபானத்தையும் தடை செய்கின்றதே! இதனால் இலங்கை மக்களில் பலர் தமது வாழ்வையே இழந்து தவிக்கின்றனரே!
மதுபான சாலைகளையும், மதுக் கடைகளையும் மூட வேண்டும் என்று ஏன் நீங்கள் போராட்டம் நடத்தவில்லை?
பௌத்த மதம் ஆபாசத்தைத் தடுக்கின்றது. ஆபாசமான சினிமாக்கள், களியாட்டங்கள், இசைக் கச்சேரிகள், ஆபாச பத்திரிகைகள் இவற்றுக்கு எதிராக ஏன் போராட்டம் நடாத்தவில்லை?
இந்தப் போராட்டத்தில் இறங்கியிருப்பவர்கள் பௌத்தத்திற்காக இந்தப் போராட்டத்தில் இறங்கவில்லை. பௌத்தத்தின் பெயரைப் போலியாகப் பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கு பௌத்தத்தின் மீது பற்றுக் கிடையாது. இவர்களின் செயற்பாடுகள் கௌதம புத்தரின் போதனைகளுக்கே முரணானது. இஸ்லாத்திற்கும் முஸ்லீம்களுக்கும் எதிராக மக்கள் உணர்வுகளைத் தூண்டிவிட பௌத்தத்தின் பெயரைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்பதே உண்மையாகும்.
எனவே, பௌத்தத்தை நேசிக்கும் நல்ல பௌத்தர்களும், மாமிசம் உண்ணாத இன நல்லுணர்வை மதிக்கும் பௌத்த சகோதரர்களும் இவர்களின் தீய நோக்கத்திற்குத் துணை போகக் கூடாது என்பதே எமது பணிவான வேண்டுகோலாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.