மாடு பேசியதாக வரும் ஹதீஸ் குர்ஆனுக்கு முரணானதா?

மாட்டின் மீது ஏறி சவாரி செய்ய முடியுமா?

முஃதஸிலா பாணியில் ஹதீஸ்களை மறுத்துவரும் வழிகேடர்கள் மறுத்து வரும் ஹதீஸ்களில் பின்வரும் நபிமொழியும் ஒன்றாகும்.

அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.

بَيْنَا رَجُلٌ يَسُوقُ بَقَرَةً إِذْ رَكِبَهَا فَضَرَبَهَا فَقَالَتْ إِنَّا لَمْ نُخْلَقْ لِهَذَا إِنَّمَا خُلِقْنَا لِلْحَرْثِ فَقَالَ النَّاسُ سُبْحَانَ اللهِ بَقَرَةٌ تَكَلَّمُ فَقَالَ فَإِنِّي أُومِنُ بِهَذَا أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَمَا هُمَا ثَمَّ وَبَيْنَمَا رَجُلٌ فِي غَنَمِهِ إِذْ عَدَا الذِّئْبُ فَذَهَبَ مِنْهَا بِشَاةٍ فَطَلَبَ حَتَّى كَأَنَّهُ اسْتَنْقَذَهَا مِنْهُ فَقَالَ لَهُ الذِّئْبُ هَذَا اسْتَنْقَذْتَهَا مِنِّي فَمَنْ لَهَا يَوْمَ السَّبُعِ يَوْمَ لَا رَاعِيَ لَهَا غَيْرِي فَقَالَ النَّاسُ سُبْحَانَ اللهِ ذِئْبٌ يَتَكَلَّمُ قَالَ فَإِنِّي أُومِنُ بِهَذَا أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَمَا هُمَا ثَمَّ

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுகை தொழுதார்கள். புpன்னர் மக்களை நோக்கி,(பனு இஸ்ராயீல் சமுதாயத்தில்) ஒருவர் ஒரு பசுமாட்டை ஓட்டிச் சென்று கொண்டிருக்கையில் அதில் ஏறிச் சவாரி செய்து அதை அடித்தார். அப்போது அந்தப் பசுமாடு, நாங்கள் இதற்காக படைக்கப்படவில்லை. நாங்கள் படைக்கப்பட்டது (நிலத்தில்) உழுவதற்காகத் தான்’ என்று கூறியது. எனக் கூறினார்கள். மக்கள்.சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்!) பசுமாடு பேசுமா? என்று (வியந்து போய்க்) கூறினார்கள். இதைக்கேட்ட நபி(ஸல்) அவர்கள், நானும் அபூ பக்ரும் உமரும் இதை நம்புகிறோம்’ என்று கூறினார்கள். அப்போது அங்கே அபூ பக்ர்(ரலி) அவர்களும் உமர்(ரலி) அவர்களும் இருக்கவில்லை.

தொடர்ந்து, நபி(ஸல்) அவர்கள், ஒருவர் தன் ஆடுகளுக்கிடையே (அவற்றை மேய்த்துக்கொண்டு) இருந்தபோது ஓநாய் (ஆட்டு மந்தைக்குள் புகுந்து) ஓடி, ஆட்டை(த் தாக்கிக் கவ்விக் கொண்டு சென்றது. அந்த ஆட்டைத் தேடி, ஓநாயிடமிருந்து அவர் காப்பாற்றிவிட்டார். உடனே, அந்த ஓநாய் அவரைப் பார்த்து, இவனே! இதை என்னிடமிருந்து இன்று நீ காப்பாற்றிவிட்டாய். ஆனால், கொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் (உலக முடிவு) நாளில் இதற்கு (பாதுகாவலர்) யார் இருக்கிறார்கள்? அந்நாளில் இதற்கு என்னைத் தவிர பாதுகாவலர் யாரும் இல்லையே என்று கூறியது. எனக் கூறினார்கள். இதைக் கேட்ட மக்கள்,.சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்) ஓநாய் பேசுமா? என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், நானும் அபூ பக்ரும், உமரும் இதை நம்புகிறோம்’ என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களும் உமர்(ரலி) அவர்களும் அங்கே அப்போது இருக்கவில்லை.

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்புத் தொடரிலும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டிருக்கிறது. (ஆதாரம் புகாரி 3471, 3284, 3663, 3463, 3471, முஸ்லிம் 6334, அஹமத் 7345 7351 தபரானி 851 இப்னு ஹிப்பான் 6485 நஸாஈ 8111, 8112, 8113 போன்ற பல்வேறு கிதாபுகளில் பதியப்பட்ட ஆதாரபூர்வமான ஹதீஸ்களாகும்.)

இந்த ஹதீஸின் இறுதிப் பகுதி அல்லாஹ்வின் தூதர் ஒன்றை சொன்னால் அது நடைமுறைக்கும் நமது பகுத்தறிவுக்கும் முரணாகத் தென்பட்டாலும் ஈமான் கொள்வதுதான் உண்மையான முஃமினுடைய பண்பாகும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

நானும் நம்புகிறேன் அபூபக்கரும் நம்புகிறார் உமரும் நம்புகிறார் என நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரும் இல்லாத நிலையிலும் கூட கூறினார்கள். இதேபோல உண்மையான முஃமினாக இருந்தால் இதை நிச்சயமாக நம்பித்தான் ஆக வேண்டும் என்பதையே இந்த ஹதீஸ் உணர்த்துகிறது. இந்த அடிப்படையை ஏற்றுக் கொண்டால் ஹதீஸ் மறுப்பு எனும் தமது வழிகெட்ட போக்கின் அடித்தளம் ஆட்டம் கண்டுவிடும். என்பதற்காக போலியான காரணங்களைக் கூறி இந்த ஹதீஸ் மறுக்கப்பட்டுள்ளது. இந்த ஸஹீஹான ஹதீஸை மறுக்கும் இவர்கள் கூறும் வாதத்தை ஏற்றுக் கொண்டால் ஏற்படும் விளைவுகளை விரிவாக நோக்குவோம்.

இந்த ஹதீஸில் அந்த மாடு பேசும் போது (நாம் விவசாயத்துக்கு மட்டுமே படைக்கப்பட்டுள்ளோம் எங்கள் மீது பயணிக்கக் கூடாது) என்று கூறியதாம் ஆனால் அல்குர்ஆனில் பல வசனங்களில் மாடு விவசாயத்துக்கு மட்டும் படைக்கப்படவில்லை பயணிப்பதற்காகவும் படைக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றன. எனவே இந்த ஹதீஸ் குர்ஆனுடன் நேரடியாக மோதுகின்றது என்பது தான் ஹதீஸை மறுக்கும் இவர்களின் அடிப்படையானவாதமாகும்.

பொதுவாக ஹதீஸ் மறுப்பாளர்கள் ஒரு ஹதீஸை மறுக்கும்போது அந்த ஹதீஸ் சொல்லாத ஒரு கருத்தைத் தாமாக உருவாக்கி அதை அடிப்படையாக வைத்தே ஹதீஸை மறுத்து வருகின்றனர். அல்லது குர்ஆன் சொல்லாத ஒரு கருத்தை உருவாக்கி அந்தக் கருத்திற்கு ஹதீஸ் முரண்படுவதாக கூறி ஹதீஸை மறுப்பர். இந்த ஹதீஸின் விடயத்திலும் இந்த இரண்டு வழிமுறைகளையும் இவர்கள் கடைபிடித்துள்ளனர். உண்மையில் குர்ஆனும் ஹதீஸூம் முரண்படவில்லை. குர்ஆனையும் ஹதீஸையும் தவறாக சித்தரித்து இவர்கள் உருவாக்கிய செய்திதான் முரண்பாட்டை உரு வாக்குகிறது.

ஹதீஸ் மறுப்போரின் வாதம்.

மாடு விவசாயத்திற்கு மட்டுமா?

இந்த ஹதீஸ் மாடு விவசாயத்துக்கு மட்டுமே என்ற கருத்தைத் தருகிறது. மாடு விவசாயத்திற்கு மட்டுமின்றி உணவிற்காக, பாலுக்காக, பயணத்திற்காக என பல பயன்பாடுகளுக்காகவும் படைக்கப்பட்டுள்ளது என்பது இவர்களின் வாதமாகும்.

إِنَّمَا இன்னமா எனும் வார்த்தைக்கு மட்டும் என்றும் அர்த்தம் செய்யலாம். அது மட்டுமின்றி முக்கியமாக “இதற்குத் தான்“ என்றும் அர்த்தம் செய்யலாம். ஒரு விடயத்தை மிகைப்படுத்திக் கூறுவதற்காக இந்த “இன்னமா“ பயன் படுத்தப்படலாம். இன்னமா என்ற இடைச் சொல் “மட்டும் என்று மட்டும் தான் பொருள் செய்யவேண்டும் என்பது மட்டரகமான போக்காகும். ஹதிஸை மறுக்கும் வழிகேடர்கள் விவசாயத்திற்காக மட்டுமே படைக்கப்பட்டுள்ளோம் என்றுதான் பொருள் செய்ய வேண்டும். அப்படி பொருள் செய்யும் போது விவசாயம் தவிற உணவுக்காக பயணத்திற்காக படைக்கப்படவில்லை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி பொருள் செய்யும் போது குர்ஆனின் பல வசனங்களுக்கு முரணாக அது அமையும் என்பது அவர்களின் நிலைப்பாடாகும்;

இவர்கள் சொல்வது போல் இன்னமா என்பதற்கு ‘மட்டும்’ என்று மட்டும் பொருள் செய்தால் ஏற்படும் விளைவைப் பாருங்கள்.

إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ بِهِ لِغَيْرِ اللَّهِ) البقرة : 173(

தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகள்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான். ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்ற மில்லை. நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான். (2:173)

இங்கும் இன்னமா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுதான் உள்ளது. இதை வைத்து இங்கு சொல்லப்படுபவவை ‘மட்டும்’ தான் ஹராம் மற்ற அனைத்து ஹலால் என்பார்களா?

மேலும் கழுதை வேட்டைப் பிராணிகள் போன்றவற்றைத் தடைசெய்யும் ஹதீஸ்கள் இந்த குர்ஆன் வசனத் திற்கு முரண்படுகின்றது என்று கூறு வார்களா?

இது போன்ற பல வசனங்கள் ‘இன்னமா’ வை பயன்படுத்தி நபியை நோக்கி எச்சரிக்கை செய்பவரே! என்று உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்பவர் மட்டும்தான் என்று இதற்கு அர்த்தம் செய்தால் நற்செய்தி சொல்பவராகவும் அனுப்பப்பட்டார்கள். (2:119, 5:19, 11:2, 34:88, 35:24, 44:4) என்று வரும் வசனங்களை மறுப்பதா?

يَا أَيُّهَا الَّذِينَ كَفَرُوا لَا تَعْتَذِرُوا الْيَوْمَ إِنَّمَا تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُونَ)التحريم : (7

(அன்று காஃபிர்களிடம்) நிராகரித்தோரே! இன்று நீங்கள் எந்தப்புகலும் கூறாதீர்கள். நீங்கள் கூலி கொடுக்கப் படுவதெல்லாம். நீங்கள் செய்து கொண்டிருந்ததற்குத்தான். (66:7)

மேற்படி வசனத்தில் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்களோ அதற்குத்தான் கூலி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இங்கு ‘இன்னமா’ வுக்கு ‘மட்டும்’ என அர்த்தம் செய்தால் ஒருவருக்கு பகரமாக மற்றொருவர் ஹஜ் செய்வது நோன்பு நோற்பது ஸதகா செய்வது போன்றவற்றை அனுமதிக்கும் ஹதீஸ்களை நிராகரிக்க நேரிடும்? இவ்வாறு ஒருவர் மற்றொருவருக்கு நல்வழிகாட்டினால் அவருக்குக் கிடைப்பது போன்ற கூலி நல்வழி காட்டியவருக்கும் உண்டு என்று அடிப்படையில் வரும் ஹதீஸ்களையும் முரண்பாடாக பார்க்க நேரிடும்? இவ்வாறே இவர்கள் சொல்லும் ‘இன்னமா’வுக்கு ‘மட்டும்’ என அர்த்தம் கொடுத்து அதற்கு மாற்றமான கருத்துக்களை மறுப்பது என்ற நிலைப்பாட்டை நாம் எடுத்தால் ஹதீஸ்களுக்குள்ளும் பல குளறுபடிகள் ஏற்படும்.

உதாரணமாக إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ

செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அங்கீகரிக்கப்படுகின்றன. (புஹாரி-01)

இந்த ஹதீஸிற்கு எண்ணங்களை மட்டும் வைத்து அமல்கள் அங்கீகரிக்கப்படுவதாக அர்த்தம் செய்ய முடியாது நல்ல எண்ணத்தில் செய்யும் பித்அத்கள் அங்கீகரிக்கப்படமாட்டாது. இங்கு ‘மட்டும்’ என்ற அர்த்தம் பொருந்தாது. நிய்யத் முக்கியத்துவப்படுத்தப்படுகிறது என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

பனு இஸ்ராயீல் சமுதாயத்தார் அழிந்து போனதெல்லாம் இதை அவர்களின் பெண்கள் பயன்படுத்தியபோது தான் என்று சொல்வதையும் நான் செவியுற்றிருக்கிறேன்’ என்று சொல்லக் கேட்டேன் (புஹாரி 3468)

இஸ்ரவேலர்களின் சமுதாயப் பெண்கள் பொய் முடிவைத்ததினால் தான் அவர்கள் அழிக்கப்பட்டார்கள் என்று வேறு காரணங்களுக்காக அல்ல என்று இதற்கு அர்த்தம் தந்தால் பல குர்ஆன் வசனங்களுக்கு ஹதீஸ்கள் முரண் படும்.

கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். பிறகு (அவ்வுரையில்), உங்களுக்கு முன்னிருந்தவர்கள், அழிக்கப்பட்டதெல்லாம் அவர்களில் உயர் குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை (தண்டிக்காமல்) விட்டு வந்தார்கள் அவர்களில் பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வன் திருடிவிட்டால் அவனுக்கு தண்டனையளித்து வந்தார்கள் என்பதால் தான். (புஹாரி 3475)

ஆளுக்கு ஒரு நீதி என்ற அடிப்படையில் நடந்ததினால் தான் முன்பிருந்த சமுதாயம் அழிக் கப்பட்டது என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. இதற்கு ஆளுக்கொரு நீதி என்ற அடிப்படையில் நடந்ததால் மட்டுமே அவர்கள் அழிக்கப்பட்டார்கள். வேறு காரணங்களுக்காக அல்ல என்று அர்த்தம் செய்தால் குழப்பம் தான் ஏற்படும். இவ்வாறு ஏராளமான ஹதீஸ்களை எடுத்துக் காட்டலாம்.

இவர்கள் மாடு பேசிய ஹதீஸூக்கு அறியாமையினால் “இன்னமா“ வுக்கு “மட்டும்“ என்ற அர்த்தம் செய்வது போல் அர்த்தம் செய்தால் அர்த்தம் அனர்த்தமாகிவிடும்? எனவே நாம் விவசாயத்திற்காகவே படைக்கப் பட்டுள்ளோம் என்பது “பெரும்பாலும்“ என்ற அர்த்தத்திலோ அல்லது “முக்கியமாக“ விவசாயத்திற்காக படைக்கப் பட்டுள்ளோம் என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி சரியாகப் புரிந்து கொண்டால் மாடு பிரதானமாக விவசாயத்திற்காகப் படைக்கப்பட்டுள்ளது. பால் மாமிசத்திற்காகவும் அது படைக்கப்பட்டுள்ளது. ஏறி அதன் மீது பயணிப்பதற்காக அது படைக்கப்படவில்லை என்று புரிந்து கொள்ளலாம். பால் மாமிசத்திற்காக ஆடு மாடுகளை வளர்ப்தும் கால் நடை விவசாயம் என்றுதான் அழைக்கப்படுகின்றது என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்;

மாடு பயணத்திற்காகப் படைக்கப்பட்டுள்ளது.

இந்த ஹதிஸ் மாடு விவசாயத்திற்காக மட்டுமே படைக்கப்பட்டுள்ளது. புயணம் செய்வதற்காக படைக்கப்படவில்லை என்று கூறுகிறது. ஆனால் குர்ஆன் மாடு விவசாயத்திற்காக மட்டும் படைக்கப்படவில்லை பயணம் செய்வதற்காகவும் படைக்கப்பட்டுள்ளது என்று கூறுவதாக இவர்கள் கூறுகின்றனர்.

விவசாயத்திற்காக மட்டும் மாடு படைக்கப்பட்டதாக, வேறு தேவைகளுக்காக அது படைக்கப்படவில்லை என ஹதீஸ் கூறுகின்றது என அவர்கள் புரிந்து கொண்டது முதல் தவறாகும்.

மாடு பயணம் செய்வதற்காகவும் படைக்கப்பட்டுள்ளது என குர்ஆன் கூறுவதாக இவர்கள் கூறுவது குர்ஆனையும் ஹதீஸையும் மோதவிடும் இவர்களின் அறியாமையினால் ஏற்பட்ட செய்தியாகும். இவர்களின் குறைமதியை இந்தச் செய்தி தெளிவுபடுத்திக் காட்டுகிறது.

அல்குர்ஆனில் பயணிப்பதற்கு என்று பெயர் குறிப்பிட்டு சில பிராணிகள் குறிப்பிடப்படுகின்றன.

وَالْخَيْلَ وَالْبِغَالَ وَالْحَمِيرَ لِتَرْكَبُوهَا ) النحل : 8 (

குதிரைகள் கோவேறு கழுதைகள் கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்வதற்காக படைத்துள்ளான்……(16:8)

இது அல்லாமல் கால்நடைகள் பயணத்திற்கு உரியன என்று பொதுவாக கூறப்பட்டுள்ளது. கால் நடை யில் மாடும் அடங்கும்; மாட்டின் மீது ஏறி பயணிப்பதற்காக மாடு படைக்கப்பட்டுள்ளதாக குர்ஆன் கூறி அதேபோல் குறித்த ஹதீஸில் மாட்டின் மீது ஏறி பயணிக்கக் கூடாது என்று கூறப்பட்டிருந்தால் இரண்டும் முரண்படுவதாக கூறலாம். அப்படி இருந்தாலும் கூட ஹதீஸை மறுக்க வேண்டிய அவசியம் கிடையாது. எங்களுக்கு ஆகுமாக்கப்பட்டிருந்த பல விடயங்கள் இஸ்ரவேலர்களுக்குத் தடுக்கப் பட்டிருந்தன.

எங்களுக்கு மாட்டின் மீது ஏறி பயணிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு அது தடுக்கப்பட்டிருந்திருக்கலாம் என்று முடிவு செய்து ஹதீஸை ஏற்கலாம். ஆனால் குர்ஆனில் கால்நடைகள் பயணிப்பதற்காக என்று பொதுவாக கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு பொதுவாக கூறப் பட்டு அதற்கு மாற்றமான செய்தி வந்தால் பொது விடயத்திலிருந்து அது விதி விலக்கு பெற்றது என்றே எடுக்க வேண்டும். அதாவது கால் நடைகள் பயணத்திற்காக படைக்கப்பட்டுள்ளது. ஆனால் கால் நடைகளில் ஒன்றான மாடு ஏறி பயணிப்பதற்காக படைக்கப்பட்டது அல்ல என்ற முடிவு செய்ய வேண்டும் இதற்கு நடை முறையில் அனைவரும் அறிந்தவிடயத்தை கூறலாம். இறந்தவைகள் ஹராம் என குர்ஆன் கூறுகிறது.

நீர்வாழ் உயிர் இனங்கள் இறந்தாலும் ஹலால் என்று ஹதீஸ் கூறுகிறது இதை முரண்பாடாக எடுக்காமல் இறந்தவை ஹராம் என்பது பொது சட்டம் மீன் செத்தாலும் ஹலால் என்பது பொது சட்டத்திலிருந்து விதி விலக்குபெற்றது என்று எடுத்துக் கொள்வதைப் போல இதையும் எடுத்துக் கொள்ளவேண்டும்.

குர்ஆனில் அனைத்துக் கால்நடைகளும் பயணம் செய்வதற்காக படைக்கப்பட்டுள்ளன என்று கூறப்படவில்லை “கால்நடைகளில் சுமப்பதையும், சுமக்காதவற்றையும் அவன் படைத்தான்“ (6:142) (குறிப்பு இது சகோதரர் பி.ஜே அவர்களின் மொழிபெயர்ப்பாகும்) கால்நடைகளில் சுமக்காதவைகளும் உண்டு என்று அல் கூறும்போது எல்லாக் கால்நடை களும் பயணத்திற்காக படைக்கப்பட்டுள்ளன என்று முடிவு செய்தது குர்ஆனுக்கு முரணானதாகும். குர்ஆனுக்கு மற்றமாக முடிவு செய்துவிட்டு அல்லாஹ் மாட்டின் மீது ஏறி பயணம் செய்ய சொல்கிறான் என்ற கருத்தை தாமாகவே உருவாக்கி அதை அல்லாஹ்வின் கருத்தாகக் காட்டி விட்டுத்தான் இவர்கள் ஹதீஸை மறுத்துள்ளனர்.

அன்ஆம் (கால்நடை) ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை உள்ளடக்கக் கூடியதாகும். அல்லாஹ் பொதுவாக கூறியதை வைத்து அது மாட்டைக் குறிக்கிறது என முடிவு செய்து அதை வைத்து ஹதீஸை மறுக்கும் விதத்தில இவர்கள் வாதிப்பதன் மூலம் இவர்கள் குழப்பக்காரர்கள் என்பதையும் இவர்களின் உள்ளங்களில் நோய் உள்ளது என்பதையும் உறுதிப் படுத்தியுள்ளனர்.

அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும்; எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிட மிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக் கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள். (3:7)

பலபொருள் தரக்கூடிய ஒரு வார்த்தையை வைத்து இதுதான் அதன் அர்த்தம் என அடம்பிடிப்பவர்களின் உள்ளங்களில் வழிகேடு இருக்கிறது. அவர்கள் குழப்பம் விழைவிப்பதைத்தான் நாடுகிறார்கள். என்ற குர்ஆனின் கூற்றுக்கு ஏற்ப இந்த ஹதீஸை மறுக்கும் இவர்களின் போக்கு அமைந்துள்ளது. எனவே இந்த ஹதீஸை மறுக்கும் போக்கைவைத்து இவர்கள் வழி கெட்ட பிரிவினர் தம் மனம் போன போக்கில் தப்பும் தவறுமாக குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் அர்த்தம் கற்பித்து அவற்றை நிராகரிக்கும் பிரிவினர் என்பதை அறிந்து இந்த வழிகெட்ட கொள்கையை விட்டும் விலகி இருப்போம்.

மாடுபேசிய ஹதீஸை நபி (ஸல்) அவர்கள் ஈமானுக்கு அடையாளமாக கூறினார்கள். ஆனால் இவர்கள் அதை மறுக்கின்றனர் எனவே இவர்கள் ஈமானுக்கு எதிராக செயல்படும் குழுவினர் என்பதற்கு இவர்களின் பிழையான இந்த அணுகுமுறை சாட்சியாக மாறிவிட்டது.

அல்லாஹ்வின் தூதர் சொன்னது போல நாமும் அந்த ஹதீஸை நம்பி நமது ஈமானை உறுதிபடுத்துவோமாக.

4 comments

 1. இஸ்லாமிய சட்டங்கள் பட்ப்படியாகத்தான் மக்களுக்கு அறிமுகப் படுத்தப்பட்டன .ஆரம்ப காலத்தில் அனைத்தையும் உண்ணு வந்த மக்கள் மத்தியில் முதலில் வந்த சட்டம் இது …….இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்கு தடை செய்கிறார்.186 அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.7:157
  இங்கே நபிஸல் அவர்களுக்கு அல்லாஹ் தூய்மை அற்றவைகளை தடை செய்ய அனுமதிக்கிறான் .அதன் அடிப்படையிலே அதன் பின்னர் நபிசல் அவர்க தூய்மையற்றவைகளை தடை செய்துளார்கள் .ஆகவே குரானுக்கு முரண்படாத ஒன்றை தன்னுடைய வாதத்திற்காக முரண்படுவது போல காட்டுகிறீர்கள்

 2. ///நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்பவர் மட்டும்தான் என்று இதற்கு அர்த்தம் செய்தால் நற்செய்தி சொல்பவராகவும் அனுப்பப்பட்டார்கள். (2:119, 5:19, 11:2, 34:88, 35:24, 44:4) என்று வரும் வசனங்களை மறுப்பதா?////
  அற்புதங்களை செய்ய குறைஷிகள் வற்புறுத்துகையில் எச்சரிக்கை செய்பவர் மட்டுமே என்ற வார்த்தை வருகிறது .அப்படி என்றால் அவர் நற்செய்தி சொல்பவர் இல்லையா ? என்ற வினோதமான கேள்வியை கேட்டுள்ளீர்கள் .
  நன்றாக படி நன்றாக படித்தால்தான் அதிக மார்க்க வாங்க முடியும் அப்போதுதான் மெரிட்டில் நல்ல காலேஜில் இடம் கிடைக்கும் வேலை வாய்ப்பும் எளிதாக இருக்கும் .நன்றாக படிக்கலேன்ன ,வேலைகிடைக்காது ,சீரழிவுதான் ஏற்படும் என்று மாணவரை எச்சரித்தால் ,இந்த எச்சரிக்கையில் நற்செய்தி இல்லையா சலபி அவர்களே ?

 3. ///(அன்று காஃபிர்களிடம்) நிராகரித்தோரே! இன்று நீங்கள் எந்தப்புகலும் கூறாதீர்கள். நீங்கள் கூலி கொடுக்கப் படுவதெல்லாம். நீங்கள் செய்து கொண்டிருந்ததற்குத்தான். (66:7)

  மேற்படி வசனத்தில் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்களோ அதற்குத்தான் கூலி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

  இங்கு ‘இன்னமா’ வுக்கு ‘மட்டும்’ என அர்த்தம் செய்தால் ஒருவருக்கு பகரமாக மற்றொருவர் ஹஜ் செய்வது நோன்பு நோற்பது ஸதகா செய்வது போன்றவற்றை அனுமதிக்கும் ஹதீஸ்களை நிராகரிக்க நேரிடும்? இவ்வாறு ஒருவர் மற்றொருவருக்கு நல்வழிகாட்டினால் அவருக்குக் கிடைப்பது போன்ற கூலி நல்வழி காட்டியவருக்கும் உண்டு என்று அடிப்படையில் வரும் ஹதீஸ்களையும் முரண்பாடாக பார்க்க நேரிடும்?///

  நிராகரிப்போருக்கு அவர்கள் செய்த பாவங்களுக்கு வழங்கப்படும் என்று சொன்னதை நம்பிக்கையாளர்கள் செய்யும் நன்மையுடன் ஒப்பிட்டு கூறுவது உங்களது பீஜெமீதுள்ள பகைமையை காட்டுகிறது 66’7 காபிர்களுக்கும் 66’8 முஹ்மின்களுக்கும் தெளிவாக இருப்பதை வழிய முரண்பாட்டுக்கு இழுத்து செல்லுவது ஏற்புடையது அன்று .

  /////செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அங்கீகரிக்கப்படுகின்றன. (புஹாரி-01)

  இந்த ஹதீஸிற்கு எண்ணங்களை மட்டும் வைத்து அமல்கள் அங்கீகரிக்கப்படுவதாக அர்த்தம் செய்ய முடியாது நல்ல எண்ணத்தில் செய்யும் பித்அத்கள் அங்கீகரிக்கப்படமாட்டாது///////
  நல்ல எண்ணத்தில் செய்யும் பித்அத்கள் ,மார்க்கத்தில் அப்படி இருக்கிறதா ? பித் அத்கள் அனைத்தும் வழிகேடுகள் என்று நபிசல் அவர்கள் சொல்லியிருக்க ,அதெப்படி நெல்லேன்னத்தில் வரும் ? நீங்கள் ஹதீசுக்கு முரண்படுவது வெளிப்படையாக உங்களுக்கு தெரியவில்லையா?
  இன்சா ல்லாஹ் இன்னும் விமர்சிப்பேன்

 4. masha allah !!!!
  allah em anaivarinadum E-manaiyum uruthip paduththuvanaha!..
  thank you ADMIN for good explanation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.