மாடு அறுப்பது தடுக்கப்பட்டால்…

பசுக்கள் மீது பாசம் இருப்பது போல் வேசம் போடும் நாசகாரக் கும்பல் ஒன்று மாடு அறுப்பதற்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிட்டு வருகின்றது. நாட்டில் பல இடங்களில் இறைச்சிக்கடைகள் தீ மூட்டப்பட்டும், மாடு ஏற்றி வரும் வாகனங்கள் தாக்கப்பட்டும் வருகின்றன.

இதுவரை பல வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றும் எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படாத அளவுக்கு நாட்டில் சட்ட ஒழுங்கு பேணப்படுகின்றது. இனவாத, மதவாதக் குழுக்களின் தாளத்துக்கு ஏற்ப அரசும் ஆடத் துவங்கிவிட்டதால் பெரும்பாலும் ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முன்னர் அல்லது தேர்தல் முடிந்த கையோடு பசுவதைத் தடைச்சட்டத்தின் கீழ் இறைச்சிக்காக மாடு அறுப்பது தடுக்கப்படலாம். மாடு அறுப்பதைத் தடுத்துவிட்டால் ஏற்படப்போகும் சில விபரீதங்களை இங்கே தொட்டுக்காட்ட விரும்புகின்றோம்.

பெருகும் மாடுகள்:
இலங்கையில் ஒரு நாளைக்கு குறைந்தது 5000 மாடுகள் அறுக்கப்படுகின்றன. இது குறைந்த அளவிலான கணக்குதான். ஒரு நாளைக்கு 5000 மாடுகள் அறுப்பது நிறுத்தப்பட்டால் (5000 X 30) 150,000 மாடுகள் மாதாந்தம் அறுக்கப்படாமல் மிஞ்ச ஆரம்பிக்கும். ஒரு வருடத்திற்கு இதனால் மாடுகளின் எண்ணிக்கை 150,000 X 12 = 18000000 இனால் அதிகரிக்கும். சுமார் பத்து வருடங்களுக்கு மாடுகளை அறுக்காவிட்டால் ஒரு கோடியே என்பது இலட்சமாக (18000000) மாடுகள் பெருகும். அறுக்கப்படாத மாடுகள் ஈன்றெடுக்கும் குட்டிகளையும் கணக்கெடுத்தால் பத்து வருடத்தில் ஒரு இலங்கைப் பிரஜைக்கு ஒரு மாடு எனும் அளவுக்கு மாடுகள் பெருகும். முஸ்லிம்கள் அதிகம் பிள்ளை பெறுகிறார்கள் எனப் பிரச்சாரம் செய்பவர்கள் அதிகம் குட்டி ஈனும் மாடுகளுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்ய நேரிடலாம்.

உணவு, தண்ணீர் தட்டுப்பாடு:
தண்ணீர் தட்டுப்பாட்டின் விபரீதத்தை இலங்கை மக்கள் அண்மையில் ஏற்பட்ட கோடையில் அறிந்திருப்பர். மனிதர்களின் குடிநீருக்கே பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆறு, குளம் எல்லாம் வற்றி வரண்டு போனது. மாடுகள் அறுப்பு தடுக்கப்பட்டால் இது உணவு, தண்ணீர் தட்டுப்பாட்டை பாரிய அளவில் ஏற்படுத்தும். உதாரணமாக ஒரு மாடு சுமாராக ஒரு நாளைக்கு 5 லீட்டர் தண்ணீர்குடிப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். வழமையாக அறுக்கப்படும் 5000 மாடுகள் அறுக்கப்படாததினால் (5000 X 5 = 15000) லீட்டர் தண்ணீர் மேலதிகமாக செலவாகும். அடுத்த நாளும் மாடு அறுக்கப்படாததினால் மேலதிகமாக இன்னும் தண்ணீரின் அளவு 30000 லீட்டராக அதிகரிக்கும். அதற்கு அடுத்த நாளும் அறுக்கப்படாததினால் 45000 லீட்டராக அது உயரும். ஒரு நாளைக்கு 15000 லீட்டர் வீதம் அதிகரித்துச் சென்றால் மாதம் வருடமாக மாறும் போது கோடான கோடி லீட்டர் தண்ணீர் மேலதிமாக செலவாக மாறும். இதே வேளை கோடையின் கோரமுகம் தென்பட்டால் தண்ணீருக்காக மக்கள் மாட்டோடு போராட வேண்டி ஏற்படலாம்.

ஒரு மாடு ஒரு நாளைக்கு 1Kg புல்லு உண்பதாக வைத்துக் கொண்டால் தினமும் மாடு அறுக்கப்படாமல் விடப்படும் போது ஒரு நாளைக்கு 5000kg புல்லு இரண்டாம் நாள் 10000kg புல்லு, மூன்றாம் நாள் 15000kg புல்லு.. என கோடிக்கணக்கான அளவில் புல் தேவைப்படும்.
இதற்கான சரியான மேய்ச்சல் நிலங்கள் இல்லாத போது மக்களது கைகளில் உள்ள பொதிகளை மாடுகள் பறித்து உண்ணும் நிலை ஏற்படலாம். ஒரு வருடம் மாடு அறுப்பது நிறுத்தப்பட்டாலே இந்த விபரீதத்தை எம்மால் கண்களால் காணலாம்.
உணவுக்காக மாடுகள் கடைகளை நாடும் விளைச்சல் நிலங்களை அழிக்கும் பாதையில் மரக்கறி போன்ற பொருட்களை கைகளில் கொண்டு செல்லவே முடியாத நிலை உருவாகிவிடும்.
பாதிக்கப்படும் சிங்கள வியாபாரிகள்:
முஸ்லிம்கள் பெரும்பாலும் மாடுகளை வளர்ப்பதில்லை. இறைச்சிக்கடை வியாபாரிகள் தாம் அறுப்பதற்கான மாடுகளை சிங்கள சகோதரர்களிடமிருந்துதான் பெரும்பாலும் கொள்வனவு செய்கின்றனர். நாட்டில் ஒரு நாளைக்கு 5000 மாடுகள் அறுக்கப்பட்டால் ஆகக் குறைந்தது அதில் 2500 மாடுகள் சிங்கள சகோதரர்களிடமிருந்தே கொள்வனவு செய்யப்படுகின்றது. மாடு அறுப்பது தடுக்கப்பட்டால் சிங்கள மாட்டு வியாபாரிகள் பெரும் பொருளாதார இழப்பை சந்திப்பார்கள் என்பது உறுதியே!

உதாரணமாக, சிங்கள வியாபாரி களிடமிருந்து ஒரு மாடு 20,000 ரூபாவுக்கு வாங்கப்படுவதாக வைத்துக் கொள்ளுங்கள். இது மிகக் குறைந்த அளவிலான கணக்குத்தான். ஒரு நாளைக்கு 2500 மாடுகள் சிங்கள சகோதரர்களிடமிருந்து வாங்கப் படுகின்றது. இதனால் 2500 X 20000 = 5000000 வருமானத்தை சிங்கள மாட்டு வியாபாரிகள் இழப்பர். இது ஒரு மாத்தில் 5000000 X 30 = 15000000 இழப்பாக உயரும். வருடமாகும் போது இது 18000000000 ஆக உயர்ந்து செல்லும். இது சிங்கள சகோதர சமூகத்தைப் பொறுத்தவரை பெரும் இழப்பாகவே அமையும்.
அரசின் இழப்பு:
மாடு அறுப்பது தடுக்கப்பட்டால் அரசுக்கு அது பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். இலங்கையில் 5000 மாடுகள் அறுக்கப்படுகின்றது என்றால் குறைந்தது 2500 இறைச்சிக் கடைகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒரு இறைச்சிக் கடை மூலம் அண்ணளவாக அரசுக்கு மாதம் 30000 வருமானம் கிடைக்கின்றது. அப்படியென்றால் (2500 X 30000 = 75000000) சுமார் ஏழரை கோடி ரூபாய் மாதாந்தம் நஷ்டமாக மாறும். இது வருடமாகும் போது 900000000 ஆக உயரும்.

இது மட்டுமன்றி மாடு அறுப்பதைத் தடை செய்யும் அரசு வெளிநாட்டிலிருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்யப் போகின்றதாம். முஸ்லிம்கள் மாடு அறுப்பது பாவம், வெளிநாட்டுக் கம்பனிகள் அறுப்பது பாவம் இல்லை போலும். இந்த மாடு அறுப்பு எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுவோர் வெளிநாட்டுக் கம்பனிகளிடம் இதற்காகக் கோடிக்கணக்கில் இலஞ்சம் பெற்றிருப்பார்கள் என்பது நிச்சயம்.
உள்நாட்டில் மாடு தாராளமாக இருக்க வெளிநாட்டிலிருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வது என்பது நாட்டு நலனிலும் உள்நாட்டு உற்பத்தியிலும் ஆர்வம் உள்ள அரசு செய்யும் வேலையாக இருக்காது. முதலில் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும்.
இவ்வாறு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் மாட்டிறைச்சியை முஸ்லிம்கள் பெரிதும் கொள்வனவு செய்ய மாட்டார்கள். ஏனெனில் அது ஹலால் முறையில் அறுக்கப்பட்டதா? அல்லது கொல்லப்பட்டதா? என்பதில் சந்தேகம் இருக்கின்றது. அந்த சந்தேகம் தீர வேண்டுமானால் இறக்குமதி செய்யப்படும்
நாட்டிலிருந்து ஹலால் சான்றிதழ் பெற நேரிடும். எனவே, இவர்கள் இலஞ்சம் வாங்கிய கம்பனிகளின் வேண்டுதலுக்கு ஏற்ப அதற்கு ஹலால் சான்றிதழை அங்கீகரிப்பார்கள் போலும்.
வெளிநாட்டிலிருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்யப்படும் போது அதை அதிகம் வாங்கப் போவது சிங்களமக்களேயாவர். இதனால் சிங்கள மக்களே பாதிப்படையப் போகின்றனர். விலையேற்றம், பி(க)ரஸ்ஸான மாமிசம் கிடைக்காமை போன்ற பல்வகையான பிரச்சினைகளுக்கு சிங்கள சமூகத்தை உள்ளாக்கப் போகின்றனர்.
பாதிக்கப்படும் கால்நடை வளர்ப்பாளர்கள்:
நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல் சிங்கள-தமிழ் மக்களே கால்நடை வளர்ப்பதில் அதிகம் ஈடுபடுகின்றனர். கால்நடைகளை வளர்ப்பவர்கள் வெறுமனே பாலுக்கு மட்டும் ஆடு, மாடுகளை வளர்ப்பதில்லை. மாமிசத்திற்கும் சேர்த்தே வளர்க்கின்றனர். மாடு அறுப்பது தடுக்கப்பட்டால் பசு பால் தரும். அதை வளர்ப்பதில் ஒரு வருவாய் இருக்கின்றது. மாறாக காளை மாட்டை வைத்து என்ன செய்வது?

ஆரம்ப காலத்தைப் போல் வண்டி இழுப்பதற்கு, விவசாயம் செய்வதற்கு, பொதி சுமப்பதற்கு மாடுகள் பயன்படுத்தப் படுவதில்லை. இவற்றை இன்று இயந்திரங்களே செய்கின்றன. காளை மாட்டில் பாலும் வராதுÉ அதை வைத்து வேலையும் வாங்க முடியாதுÉ அறுப்பதற்கு விற்கவும் முடியாது எனும்போது காளை மாட்டை தீணி போட்டு வளர்க்க மாடு வளர்க்கும் ஏழை விவசாயிக்கு என்ன தேவை இருக்கின்றது? எனவே, காளை மாடுகள் விரட்டிவிடப்படும். இவற்றைப் பராமரிக்க அரசு பெரிய செலவை ஏற்க நேரிடும்.
அடுத்து பசு பால் தரும். ஆனால், தொடர்ந்து தந்து கொண்டே இருக்காது. அது பால் தரும் பருவத்தைத் தாண்டிய பின்னர் அதை உரிமையாளர்கள் மாமிசத்திற்காக விற்று ஆதாயம் அடைகின்றனர். இதைத் தடுத்துவிட்டால் பால் தந்த பசு பால் தராத வயதை அடைந்துவிட்டால் சும்மா வைத்து அதை யாராவது வீணாக சிரமப்பட்டு உணவு கொடுத்து கவனித்துக் கொண்டிருப்பார்களா? எனவே, பசுக்கள் விரட்டிவிடப்படும். அவ்வாறு விரட்டப்படும் பசுக்களை அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
மாடு அறுப்புத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டால் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் பெரிதும் நஷ்டமடைவார்கள். இதனால் பெரிதும் பாதிக்கப்படப்போவது சிங்கள மக்களேயாவர்.
அழியப்போகும் மாட்டினம்:
மாடு அறுப்புத் தடை என்பது மாடுகளுக்கு எதிரான சட்டமாகும். இதனால் மாடுகள் அழியப் போகின்றன. எந்த இனம் அளவுக்கு மீறி வளர்கின்றதோ அந்த இனம் தானாகவே அழியும். மாடுகள் இலட்சக் கணக்கில் பெருக ஆரம்பித்துவிட்டால் உணவுக்கான போட்டி ஏற்படும். உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு அதனால் மாடுகள் பட்டினி கிடந்து சாகும் நிலை உருவாகும். இது நாமே சட்டமியற்றி அவற்றை கொலை செய்யும் மிருக வதைக்குள் அல்லவா அடங்குகின்றது?

அமெரிக்காவில் ஒரு மான்கள் சரணாலயம் இருந்தது. அங்கிருந்த வேட்டை மிருகங்கள் மான்கள் நலன் கருதி அப்புறப் படுத்தப்பட்டன. இதனால் மான்கள் பெருக ஆரம்பித்தன. பின்னர் மான்கள் ஒரு உச்சகட்டத்தை அடைந்து உணவுத் தட்டுப்பாட்டால் அழிய ஆரம்பித்தன. எனவே, மீண்டும் அந்தப் பகுதியில் வேட்டை மிருகங்களை விடவேண்டியேற்பட்டது. இதே நிலை இங்கும் ஏற்படும். இறைவன் படைப்பில் சமநிலைத் தன்மை பேணப்பட வேண்டும் என்றால் இயற்கைத் தன்மை பேணப்பட வேண்டும்.
ஆடு, மாடு போன்றவற்றை இறைவன் மனிதனின் உணவுத் தேவைக்காகவே படைத்துள்ளான். மனிதன் உண்ணத்தக்க இந்தப் பிராணிகள் குறித்த காலம் இன்றி எல்லாக் காலங்களிலும் குட்டி ஈனும் தன்மை கொண்டதாகும். நாய் மாட்டை விட அதிக குட்டி போட்டாலும் உணவுக்காக நாய் கொல்லப்படா விட்டாலும் நாட்டில் நாய்களின் எண்ணிக்கையை விட மாடுகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இதுதான் இறைவனின் படைப்பின் இரகசியமாகும். மாடுகள் அறுக்கப் படாவிட்டால் தொடர்ந்து குட்டி போடும் இந்த இனம் பெருகி இறுதியில் தானாக அழிய ஆரம்பிக்கும். அப்போதாவது நாட்டு நலனில் அக்கறை இல்லாது மாட்டு நலனில் அக்கரை இருப்பது போல் மோட்டு வாதம் புரியும் குருட்டுக் கும்பலுக்கு உண்மை புரியுமா என்று பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.