மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (தொடர் 02)

அன்புள்ள வாசகர்களுக்கு,
இக்கட்டுரையை நிதானமாக நடுநிலையோடு வாசியுங்கள். சத்தியத்தை விட தனிநபரை நேசிக்கும் வழிகேட்டிலிருந்து விடுபட்டு வாசியுங்கள். கட்டுரைத் தொடர் முடியும் வரை முடிவு எடுக்காது உண்மையைத் தேடும் உணர்வுடன் வாசியுங்கள். சூனியம் இருக்கின்றது என்று நாம் கூறுவதை சூனியம் சம்பந்தமாக நடைபெறும் ‘ஷிர்க்’குகளையோ மூட நம்பிக்கைகளையோ நாம் ஆதரிக்கிறோம் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
இங்கு சூனியம் என்ற அம்சத்தை விட ஹதீஸ் மறுக்கப்படுவது என்ற அம்சமே பிரதானமானது என்பதைக் கவனத்திற் கொள்ளுங்கள். தர்க்கவியல் வாதங்களை விட பகுத்தறிவு கேள்விகளை விட ஹதீஸ் உயர்வானது என்ற இஸ்லாத்தின் அடிப்படையில் நின்று வாசியுங்கள். (ஆசிரியர்)
சென்ற (உண்மை உதயம் இஸ்லாமிய மாத) இதழில் தமிழ் உலகில் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுக்கும் சிந்தனை பாமர மக்கள் மத்தியிலும் பரவலாகச் செல்வாக்குப்பெற்று வருவது குறித்தும், அதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்த சகோதரர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்களின் ஆற்றல்கள், வாத-வலிமை குறித்தும் பார்த்தோம். அத்துடன் இந்தச் சிந்தனை இவரிடம் அண்மையில் ஏற்பட்ட கொள்கைத் தடுமாற்றம் என்பது குறித்தும் ஆரம்பத்தில் இவர் இக்கருத்துக்கு மாற்றமாக எழுதி வந்ததையும் குறிப்பிட்டோம். அத்துடன் (2:102) வசனம் சூனியம் இருப்பதை உறுதி செய்கின்றது என்பது குறித்தும் சூனியத்திற்கு Magic எனப் பொருள் கொள்ள முடியாது என்பது குறித்தும் தெளிவாக நோக்கினோம். இந்த இதழில் அதன் தொடராக சூனியம் இருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் சிலவற்றைப் பார்த்து விட்டு நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்ட ஹதீஸை மறுப்பதற்காக வைக்கப்படும் வாதங்களின் போலித்தன்மையை விரிவாக விளங்க முயற்சிப்போம்.
சூனியம் பற்றி விரிவாகப் பேசும் 2:102 வசனத்திற்கு அர்த்தம் செய்யும் போது பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் மொழிபெயர்ப்பில் மிகப் பெரிய தவறிழைத்துள்ளார் என்பதை அறிந்த பின்னர்தான் இது குறித்து எழுதுவதும், பேசுவதும் மார்க்கக் கடமை என்ற உணர்வைப் பெற்றோம்.
“அல்ஜன்னத்” மாத இதழில் பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் தொடராக குர்ஆன் விளக்கவுரை எழுதி வந்தார். குறிப்பாக குதர்க்கவாதிகளும், குழப்பவாதிகளும், இஸ்லாத்தின் எதிரிகளும் தவறாக விளக்கம் கொள்ளும் பல்வேறுபட்ட வசனங்களுக்குத் தெளிவான விளக்கங்களை வழங்கி வந்தார். அதில் 2:102 வசனமும் ஒன்றாகும். பில்லி-சூனியம் என்ற பெயரில் இக்கட்டுரை இடம்பெற்றது. அதன் பின் அது தனி நூலாகவும் வெளிவந்தது. இதன் பின்னர் 1995 இலும், 1997 இலும் இக்கட்டுரைகள் “திருக்குர்ஆன் விளக்கம்” என்ற பெயரில் தனி நூலாக வெளிவந்தது. அந்த நூலில் “ஸிஹ்ர்” எனும் சூனியக்கலை பற்றி மூன்று விதமான அபிப்பிராயங்கள் முஸ்லிம் அறிஞரிடையே நிலவுகின்றன.
“ஸிஹ்ர்” என்று ஒன்று கிடையாது. அதனால் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது.
“ஸிஹ்ர்” என்ற கலை மூலம் எது வேண்டுமானாலும் செய்யமுடியும். எத்தகைய பாதிப்பையும் ஏற்படுத்த முடியும்.
“ஸிஹ்ர்” எனும் ஒரு கலை உண்டு, அதன் மூலம் நினைத்ததையெல்லாம் செய்ய முடியாவிட்டாலும் சில பாதிப்புக்களை ஏற்படுத்த முடியும்.
இப்படி மூன்று விதமான அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. அவற்றில் முதலிரண்டு அபிப்பிராயங்களும் தவறானவை. மூன்றாவது அபிப்பிராயம் சரியானது என்பதை இவ்வசனம் விளக்குகின்றது.
கணவன்-மனைவியரிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவ்விருவரிடமிருந்தும் மக்கள் கற்றுக்கொண்டார்கள். “ஸிஹ்ர்” எனும் கலை மூலம் எதுவுமே செய்ய முடியாது என்றிருந்தால், “கணவன்-மனைவியரிடையே பிளவை ஏற்படுத்தும்” என்று இறைவன் கூறியிருக்க மாட்டான் என்று பில்லி-சூனியம் பற்றி இஸ்லாத்தின் சரியான கண்ணோட்டத்தை விபரித்துச் செல்கிறார்.
(பார்க்க: “திருக்குர்ஆன் விளக்கம்” 1997, பக்:86-87)

இந்த சரியான நிலையில் அவர் இருக்கும் போது, அவர் எழுதிய “அல்ஜன்னத்” மாத இதழ் கட்டுரையிலும், “பில்லி-சூனியம்” என்ற தனி நூலிலும், “திருக்குர்ஆன் விளக்கவுரை” என்ற நூலிலும் 2:102 வசனத்திற்குச் செய்த மொழிபெயர்ப்பு, அவரது பிற்பட்ட தற்போதைய மொழிபெயர்ப்புக்கு முரண்படுகின்றது.
‘அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் (இதன் மூலம்) இழைக்க முடியாது.’ (“திருக்குர்ஆன் விளக்கம்” பக்:71)
இதன் மூலம், அதாவது சூனியத்தின் மூலம் சூனியக்காரர்கள் அல்லாஹ்வின் அனுமதியின்றி யாருக்கும் எந்தத் தீங்கும் செய்ய முடியாது என்கிறான். சூனியத்தின் மூலம் அல்லாஹ்வின் நாட்டம் இன்றி தீங்கிழைக்க முடியாது எனும் போது, அல்லாஹ் நாடினால் சூனியத்தின் மூலம் பாதிப்பு ஏற்படும் என்பதை இந்த வசனம் தெளிவாகக் கூறுகின்றது. எனினும், சூனியம் குறித்த சரியான நிலைப்பாட்டில் இருக்கும் போது வசனத்தை முழுமையாக மொழியாக்கம் செய்த பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள், தமது அல்குர்ஆன் மொழிபெயர்ப்பில், “பிஹி ” (அதன் மூலம், அதாவது சூனியத்தின் மூலம்) என்ற வார்த்தையையே மொழியாக்கம் செய்யாது விட்டு விட்டார்.
‘அல்லாஹ்வின் விருப்பமின்றி யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்யமுடியாது’ (2:102) – பி.ஜெய்னுலாப்தீன் தர்ஜுமா
இது தெரியாமல் நடந்தது என்று கூறலாமா? (அப்படி நடந்திருந்தால் அல்லாஹ் மன்னிக்கட்டும்) ஆரம்பத்தில் பல தடவை இந்த இடத்தைச் சரியாக மொழியாக்கம் செய்தவர் கருத்து மாறிய பின் ஒரு பதத்தையே தவற விடுகின்றார் என்றால்(?) வேண்டுமென்று விட்டிருக்கவே அதிக வாய்ப்புள்ளது.
தனது கருத்துக்கு மாற்றமாக இருக்கின்றது என்பதற்காக ஒரு சொல்லை விட்டு மொழிபெயர்க்கும் அளவுக்குப் பகுத்தறிவுவாதம் எல்லை தாண்டி விட்டதா? என்று சிந்தித்த போதுதான் மாற்றுக் கருத்தை மக்களிடம் வைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தோம்.
இது தெரியாமல் நடந்த மொழி பெயர்ப்புத் தவறு என்றால், இத்தனை பதிப்புக்களிலும் எப்படித் திருத்தப்படாமல் விடப்பட்டது? எதையும் நுணுக்கமாக ஆய்வு செய்யும் பி.ஜெய்னுலாப்தீன் அவர்களின் ஆய்வுக் கண்ணுக்கு எப்படி அது தென்படாமல் போனது!? தர்ஜுமா குறித்த விமர்சனங்கள் எழுவதால் பி.ஜெய்னுலாப்தீன் தர்ஜுமாவை நுணுக்கமாக மீண்டும் மீண்டும் பார்த்திருக்க வேண்டும்!! அவருக்கோ, அவரது குழு ஆலிம்களுக்கோ இது எப்படித் தென்படாமல் போனது?
இமாம்களினதும், வழிகெட்ட பல பிரிவினர்களினதும் நூற்களை நுணுக்கமாக ஆராய்ந்து அவற்றில் உள்ள தவறுகளை அக்குவேறு-ஆணிவேறாக விபரிக்கும் பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள், தனது தர்ஜுமாவின் தவறு குறித்து கண்டுகொள்ளாதிருப்பது நியாயமா? தர்ஜுமாவில் ஏற்பட்ட தவறுகள் சிலவற்றை பி.ஜெய்னுலாப்தீன் திருத்தியுமுள்ளார்.
உதாரணமாக, 38:31 என்ற வசனத்தின் மொழிபெயர்ப்பில் ஆரம்பத்தில் بالعشي “பில் அஷிய்யி” (மாலையில்) என்ற சொல் இடம்பெற்றிருக்கவில்லை. பின்னர் வந்த பதிப்பில் அந்தத் தவறு திருத்தப்பட்டுள்ளது. முந்திய பிரதிகளை எடுத்தவர்கள் குர்ஆன் மொழிபெயர்ப்பில் ஒரு சொல் விடுபட்ட நிலையில்தான் குர்ஆனைப் புரிந்துகொள்வார்கள். இந்தத் தவறு திருத்தப்பட்டது ஊன்றிக் கவனிப்பவர்களைத் தவிர வேறு எவருக்கும் தெரியவராது. அடுத்தவர்களின் நூற்களில் காணப்படும் குறைகளை விளக்க நூற்கள், மாநாடுகள், பொதுக் கூட்டங்கள், தொடர் கட்டுரைகள் எனப் பல ஏற்பாடுகளைச் செய்யும் இவருக்கு இந்த வசனத்தில் விடப்பட்ட தவறு தற்செயலானது அல்ல என்றே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
மூஸாவும், சூனியக்காரர்களும்:
மூஸா(அலை) அவர்களுக்கும், சூனியக்காரர் களுக்குமிடையில் பிர்அவ்ன் போட்டி வைக்கின்றான். அந்தப் போட்டி நிகழ்ச்சி சூனியம் என்று ஒரு கலை இருக்கின்றது அதன் மூலம் சில பாதிப்புக்களை அல்லாஹ் நாடினால் ஏற்படுத்த முடியும் என்பதை மிகத் தெளிவாகவே எடுத்துக் காட்டுகின்றது.
அந்த சூனியக்காரர்கள் போட்டிக்கு வந்த போது அவர்களது சூனியத்தின் காரணமாக அவர்கள் போட்ட கயிறுகளும், தடிகளும் ஓடும் பாம்புகள் போன்று போலித் தோற்றமளித்ததாக அல்லாஹ் கூறுகின்றான்.
”நீங்கள் போடுங்கள்” என அவர் கூறினார். அவர்கள் போட்ட போது, மக்களின் கண்களை மயக்கி, அவர்களை அச்சமுறச் செய்தனர். இன்னும், பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர். (7:116)
அடைப்புக்குறிப் பயன்பாட்டுப் பிழை:
சூனியக்காரர்கள் வித்தைகளைப் போடவில்லை. அவர்கள் கயிறுகளையும், தடிகளையும்தான் போட்டார்கள் என்பது தெளிவாகவே குர்ஆனில் கூறப்படுகின்றது.
‘அ(தற்க)வர், ‘இல்லை, நீங்கள் போடுங்கள்’ என்றார். அப்போது அவர்களது கயிறுகளும், அவர்களது தடிகளும் அவர்களுடைய சூனியத்தின் காரணமாக ஊர்ந்து வருவதைப் போல அவருக்குத் தோற்றமளித்தன.’ (20:66)
”நீங்கள் போடக்கூடியதைப் போடுங்கள்” என்று மூஸா அவர்களிடம் கூறினார்.
‘உடனே அவர்கள் தமது கயிறுகளையும் தமது தடிகளையும் போட்டனர். ‘பிர்அவ் னின் கண்ணியத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக நாமே வெற்றியாளர்கள்’ என்றும் கூறினர்.’ (26:43-44)
எனவே, “அவர்கள் போட்ட போது” என்பதற்கு அடைப்புக்குறி போடவேண்டும் என்றால், “அவர்களது கயிறுகளையும், தடிகளையும் போட்ட போது” என்றே அடைப்புக்குறி போடவேண்டும். அதற்கு மாற்றமாகத் தனது கருத்தின் பக்கம் மக்கள் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் (வித்தைகள்) என பி.ஜெய்னுலாப்தீன் தனது தர்ஜுமாவில் அடைப்புக்குறி போட்டிருப்பது மற்றுமொரு தவறு என்று கூறலாம்.
”நீங்களே போடுங்கள்” என்று மூஸா கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது, மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள்.
(7:116) – பி.ஜெய்னுலாப்தீன் தர்ஜுமா

அல்குர்ஆன் தெளிவாகவே கயிறுகளையும் தடிகளையும் என்று கூறும்போது வித்தைகளைப் போட்டதாக வித்தியாசமான அடைப்புக்குறி எதற்கு?
சூனியம் மெஜிக் அல்ல:
அ(தற்க)வர், ”இல்லை, நீங்கள் போடுங்கள்” என்றார். அப்போது அவர்களது கயிறுகளும், அவர்களது தடிகளும் அவர்களுடைய சூனியத்தின் காரணமாக ஊர்ந்து வருவதைப் போல அவருக்குத் தோற்றமளித்தன. அப்போது மூஸா தனக்குள் அச்சத்தை உணர்ந்தார்.’ (20:66-67)
சூனியக்காரர்கள் கயிறுகளையும், தடிகளையும்தான் போட்டார்கள் அவர்கள் Magic செய்யவில்லை. Magic என்பது வெறும் தந்திரமாகும். Magic செய்வதென்றால் கயிற்றையும் வைத்திருக்க வேண்டும், பாம்பையும் வைத்திருக்க வேண்டும். கயிற்றைக் காட்டி விட்டுப் பாம்பைப் போடவேண்டும். கயிற்றைப் பாம்பாக்கியதாக மக்களை நம்பவைக்க வேண்டும். இவ்வாறுதான் Magic செய்வோர் ஒன்றும் இல்லாத(?) பெட்டிக்குள்ளிருந்து முயல், புறா போன்றவற்றை எடுக்கின்றனர்.
ஆனால் இவர்கள் கயிற்றையும், தடியையும் போட்டனர். அது வெறும் கயிறும், தடியும்தான். எனினும் அவர்களின் சூனியத்தின் காரணமாக மூஸா நபிக்கும், அந்த ஒட்டுமொத்த மக்களுக்கும் ஓடும் பாம்பு போல் போலித் தோற்றத்தை ஏற்படுத்தியது. இது அவர்களின் சூனியத்தின் மூலம் நிகழ்ந்ததாக குர்ஆன் குறிப்பிடுகின்றது.
இந்த நிகழ்ச்சி சூனியத்திற்கு ஒரு தாக்கம் உள்ளது என்பதை மிகத் தெளிவாகவே கூறுகின்றது! குர்ஆனை நம்பும் யாரும் சூனியத்தை இல்லை என்று கூறமுடியாது.
அல்லாஹ் நாடினால் சூனியத்தின் மூலம் இல்லாததை இருப்பது போன்ற போலி தோற்றத்தை ஏற்படுத்தலாம்.
கணவன்-மனைவிக்கிடையே பிளவை உண்டுபண்ணலாம்.
அல்லாஹ் நாடினால் அதன் மூலம் சூனியக்காரர்கள் பிறருக்குச் சில தீங்குகளை ஏற்படுத்தலாம் எனக் குர்ஆன் மிகத் தெளிவாகவே கூறுகின்றது.
குர்ஆனின் இந்த நிலைப்பாடு தனது பகுத்தறிவுக்குச் சரியாகப் படவில்லை அல்லது முறையாகப் புலப்படவில்லை என்பதற்காக சூனியமே இல்லை என்று மறுப்பது குப்ரை ஏற்படுத்தும் என்பதைச் சகோதரர்கள் கவனத்திற்கொண்டு இந்த வழிகேட்டிலிருந்து தம்மைத் தற்காத்துக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளனர். இதுவரை நாம் குறிப்பிட்டவை சூனியம் என்று ஒன்று உண்டு. அதன் மூலம் நினைத்ததையெல்லாம் செய்ய முடியாவிட்டால் கூட கணவன்-மனைவிக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தலாம். மனதில் மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முடியும். அல்லாஹ் நாடினால் சில தீங்குகளை ஏற்படுத்த முடியும் எனக் குர்ஆன் கூறுகின்றது. இப்படி இருக்க நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப் பட்டதாகக் கூறும் ஹதீஸ் எப்படிக் குர்ஆனுக்கு முரண்பட்டதாக இருக்கமுடியும்?
குர்ஆனுக்கு முரண்படுகின்றது என்று போலிக் காரணம் கூறி, பகுத்தறிவுக்கு முரண்படும் காரணத்தால் மறுக்கப்படும் சூனியம் பற்றிய ஹதீஸ் குறித்து செய்யப்படும் வாதங்களுக்கான விரிவான பதில்களைத் தொடர்ந்து நோக்குவோம்.
-இன்ஷா அல்லாஹ்-
அன்புடன்
எஸ்.எச்.எம் இஸ்மாயில் ஸலபி
ஆசிரியர், உண்மை உதயம் இஸ்லாமிய மாத இதழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.