பாதுகாக்கப்பட்ட இறைவேதம்:
நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட ஹதீஸை ஏற்றுக்கொண்டால் குர்ஆனின் நம்பகத் தன்மையில் அது சந்தேகத்தை ஏற்படுத்தி விடும் என்ற வாதத்தை முன்வைத்து பிஜே அவர்கள் அது பற்றிய ஸஹீஹான ஹதீஸை மறுக்கின்றார். அவர் முன்வைக்கும் வாதத்தின் போலித் தன்மையையும்,
அவர் தனக்குத் தானே முரண்படும் விதத்தையும், தனது வாதத்தை நிலைநிறுத்துவதற்காக ஹதீஸில் கூறப்பட்டதற்கு மாற்றமாக மிகைப்படுத்தும் அவரது போக்கையும், குர்ஆன் தொகுப்பு வரலாற்றில் குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் வண்ணம் அவர் கூறியுள்ள கருத்துக்கள் பற்றியும் இந்தத் தொடரில் விரிவாக அலசுவோம்.
அவர் தனக்குத் தானே முரண்படும் விதத்தையும், தனது வாதத்தை நிலைநிறுத்துவதற்காக ஹதீஸில் கூறப்பட்டதற்கு மாற்றமாக மிகைப்படுத்தும் அவரது போக்கையும், குர்ஆன் தொகுப்பு வரலாற்றில் குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் வண்ணம் அவர் கூறியுள்ள கருத்துக்கள் பற்றியும் இந்தத் தொடரில் விரிவாக அலசுவோம்.
பிஜே தர்ஜமா: பக்கம்-1296
‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதன் காரணமாக அவர்களது மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டது, அந்தப் பாதிப்பு ஆறு மாதம் நீடித்தது, தாம் செய்யாததைச் செய்ததாகக் கருதும் அளவுக்கு அந்தப் பாதிப்பு அமைந்திருந்தது’ என்று மேற்கண்ட ஹதீஸ்களில் கூறப்படுவதை நாம் அப்படியே ஏற்பதாக இருந்தால் அதனால் ஏராளமான விபரீதங்கள் ஏற்படுகின்றன.
திருமறைக் குர்ஆனின் நம்பகத்தன்மைக்கு ஏற்படும் பாதிப்பு முதலாவது விபரீதமாகும்.
தமக்குச் சூனியம் வைக்கப்பட்டதின் காரணமாக தாம் செய்யாததைச் செய்ததாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் என்றால் அந்த ஆறு மாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட வஹீ – இறைவேதம் – சந்தேகத்திற்குரியதாக ஆகிவிடும்.
தம் மனைவியிடம் இல்லறத்தில் ஈடுபட்டதைக் கூட நினைவில் வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்றால் ‘இறைவனிடமிருந்து வஹீ வராமலேயே வஹீ வந்ததாகவும் அவர்கள் கூறியிருக்கலாம்’ என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தும். ஆறு மாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட அனைத்துமே சந்தேகத்திற்குரியதாக ஆகிவிடும்.
எந்த ஆறு மாதம் என்ற விபரம் கிடைக்காததால் மதீனாவில் அருளப்பட்ட ஒவ்வொரு வசனமும் ‘இது அந்த ஆறு மாதத்தில் அருளப்பட்டதாக இருக்குமோ?’ என்ற சந்தேகத்தை ஏற்படுத்திவிடும்.
இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்கு இன்று நம்மிடம் உள்ள ஒரே அற்புதம் திருக்குர்ஆன் தான். திருக்குர்ஆனில் சந்தேகம் ஏற்படுத்தும் அனைத்தையும் நாம் நிராகரித்துத் தான் ஆக வேண்டும்.
பிஜே தர்ஜமா: பக்கம்-1296
சுட்டிக்காட்டப்பட்ட இப்பகுதியில் இடம்பெற்றிருக்கும் அடிப்படையான தவறுகளை ஒவ்வொன்றாக இனங்காணுவோம்:
தவறு – 01:
நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்ததனால் அவர் தாம்பத்தியத்தில் ஈடுபடாமலேயே ஈடுபட்டதாக போலித் தோற்றம் அவருக்கு ஏற்பட்டது. அதையும் அவர் அறிந்தே இருந்தார். அதனால் தான் அவர் தனது ஈடேற்றத்திற்காகப் பிரார்த்தித்தார். இதை மனநிலை பாதிப்பு என்று கூறமுடியாது. இந்தப் பதத்தின் மூலம் சூனியத்தால் நபி(ஸல்) அவர்களுக்குப் பைத்தியம் பிடித்ததாக ஹதீஸ் கூறுவதாகச் சித்தரிக்க முயற்சிக்கின்றார். அவரது அமைப்பின் அழைப்பாளர்கள் தமது உரைகள், உரையாடல்கள் மூலம் சூனியம் செய்யப்பட்டதால் நபி(ஸல்) அவர்களுக்குப் பைத்தியம் பிடித்ததாக ஹதீஸ் கூறுவதாகக் கூறியுள்ளனர். இது நபி(ஸல்) அவர்கள் மீது துணிந்து இட்டுக்கட்டும் இவர்களது இழிசெயலின் ஒரு பகுதி எனலாம்.
தவறு – 02:
தாம் செய்யாததைச் செய்ததாகக் கருதும் அளவுக்கு அந்தப் பாதிப்பு இருந்தது என்று முதல் பந்தியில் கூறி விட்டு அடுத்த பந்தியிலேயே ‘தமக்கு சூனியம் வைக்கப்பட்டதின் காரணமாக தாம் செய்யாததைச் செய்ததாக நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள் .. ஹதீஸின் கருத்தை மிகைப்படுத்தி, திரிபுபடுத்தியுள்ளார்.
தான் செய்யாததைச் செய்ததாகப் போலித் தோற்றம் (மாயை) நபியவர்களுக்கு ஏற்பட்டது என்றுதான் ஹதீஸ் கூறுகின்றது. தான் செய்யாததைச் செய்ததாக நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் கூறவே இல்லை. அப்படியிருக்க முதல் பந்தியில் கருதினார்கள் என்றும் இரண்டாம் பந்தியில் செய்யாததைச் செய்ததாகக் கூறினார்கள் என்றும் ஏன் நபி (ஸல்) மீது இட்டுக்கட்ட வேண்டும். ஹதீஸில் கூறப்படாத ஒரு கருத்தை ஏன் பொது மக்கள் மனதில் பதிக்க வேண்டும்?
தனது தர்ஜமாவில் 1298ம் பக்கத்தில் இக்கருத்தை மேலும் வலுவூட்டுவதற்காக அழுத்தம் கொடுத்து பின்வருமாறு கூறுவது வேதனையானது. ‘முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார். செய்ததைச் செய்யவில்லை என்கின்றார். செய்யாததைச் செய்தேன் என்கின்றார்…’ பக் (1298) நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதால் இப்படியான பாதிப்பு எல்லாம் ஏற்பட்டன என்று ஹதீஸில் இடம்பெறாத கருத்துக்களை ஹதீஸின் கருத்தாகப் புனைந்து, அவற்றைப் பெரிதுபடுத்தி, நபியவர்களது அந்த சூழ்நிலை பற்றித் தப்பெண்ணத்தை ஏற்படுத்தி குறிப்பிட்ட அந்த ஸஹீஹான ஹதீஸை மறுக்கும் மனநிலைக்கு மக்களைக் கொண்டுவர முயற்சிக்கின்றார். நியாயமாக விமர்சிப்பதாக இருந்தால் ஹதீஸில் கூறப்பட்டது குர்ஆனுக்கு முரண்படுகின்றது என்பதையல்லவா எடுத்துக்காட்ட வேண்டும். அதை விட்டு விட்டு ஹதீஸில் சொல்லப்படாத கருத்தைத் திணித்து நிரூபிக்க முனைவது எந்த வகையில் நியாயமானது என்பதைப் பொதுமக்கள் நடுநிலை நின்று நிதானமாகச் சிந்திக்க வேண்டும்.
இனி பி.ஜே அவர்களது நபியவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது சம்பந்தமான ஹதீஸ்களை மறுப்பதற்காக முன்வைக்கும் வாதங்களை அலசுவோம்.
‘தம் மனைவியிடம் இல்லறத்தில் ஈடுபட்டதைக் கூட நினைவில் வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு நபிகள் நாயகம்(ஸல்) பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்றால் -இறைவனிடமிருந்து வஹீ வராமலேயே வஹீ வந்ததாகவும் அவர்கள் கூறியிருக்கலாம்-‘ என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தும்’ என்று எழுதியுள்ளார்.
திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு என்ற பொதுத் தலைப்பில் ‘நபிகள் நாயகத்தின் உள்ளத்தில் …’ என்ற சிறு தலைப்பில் அவர் எழுதியதை அப்படியே கீழே தருகிறோம்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு அவ்வப்போது திருக்குர்ஆன் அருளப்பட்டவுடன் அதை அவர்கள் தமது இதயத்தில் பதிவு செய்து கொள்வார்கள். இவ்வாறு பதிவு செய்து கொள்வதற்கு மற்றவர்களைப் போல் அவர்களும் ஆரம்பக் கட்டத்தில் மிகுந்த சிரத்தை எடுக்கலானார்கள். அது தேவையில்லை என்று திருக்குர்ஆன் மூலமாகவே அவர்களுக்குச் சொல்லப்பட்டது. (திருக்குர்ஆன் 75:16, 20:14)
‘திரும்பத் திரும்ப ஓதி மனனம் செய்வதற்காக நீர் முயற்சிக்க வேண்டாம். அதை உமது உள்ளத்தில் ஒன்று சேர்ப்பது நமது பொறுப்பு’ என்று திருக்குர்ஆன் கூறியது.
இன்னொரு வசனத்தில் ‘உமக்கு நாம் ஓதிக் காட்டுவோம், நீர் மறக்க மாட்டீர்’ (திருக்குர்ஆன் 87:6) எனவும் அல்லாஹ் உத்தரவாதம் அளித்தான்.
எனவே ஜிப்ரீல் என்ற வானவர் நபிகள் நாயகத்திற்கு அதிகமான வசனங்களைக் கூறினாலும் கூறிய உடனே ஒலி நாடாவில் பதிவது போல் அவர்களின் இதயத்தில் அப்படியே அவை பதிவாகி விடும்.
தனது தூதராக இறைவன் அவர்களை நியமித்ததால் அவர்களுக்கு இந்தச் சிறப்பான தகுதியை வழங்கியிருந்தான். எனவே இறைவனிடமிருந்து வந்த செய்திகளில் எந்த ஒன்றையும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மறதியாக விட்டிருப்பார்கள் என்று கருதவே முடியாது.
திருக்குர்ஆன் நபிகள் நாயகத்தினுடைய உள்ளத்தில் இவ்வாறு பாதுகாக்கப்பட்டது.
ஜிப்ரீல்(அலை) அவர்கள் ஓத-ஓத ஒலிநாடாவில் பதிவது போல் நபியவர்களது உள்ளத்தில் அது பதியும்ள, அதை அவர் மறக்க மாட்டார். அவரது உள்ளத்தில் பதியும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக்கொண்டான் என்றெல்லாம் எழுதி விட்டுத் தன் மனைவியிடம் தாம்பத்தியத்தில் ஈடுபட்டதையே நினைவில் வைத்துக் கொள்ள முடியாதவர்ள, வஹீ வராமலேயே வஹீ வந்ததாகக் கூறியிருக்கலாமே! என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தும் என்று கூறுவது எவ்வளவு பெரிய முரண்பாடு என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றதல்லவா?
‘வஹீ விஷயத்தில் மட்டும் உள்ளது உள்ள படி கூறினார்கள், மற்ற விஷயங்களில்தான் மனநிலை பாதிப்பு ஏற்பட்டது என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர். இந்த விளக்கம் நகைப்பிற்குரியதாகும்’ என்று தனது தர்ஜமாவில் (பக் 1298) குறிப்பிடுகின்றார்.
வஹீயைப் பாதுகாப்பதற்காக அல்லாஹ் உத்தரவாதம் அளித்துள்ளான். திருக்குர்ஆனில் எந்தத் தவறும் வராது (பார்க்க பிஜே குறிப்பு 351)
(நபியே! குர்ஆன் இறக்கப்படும் போது) அதற்காக நீர் அவசரப்பட்டு உமது நாவை அசைக்க வேண்டாம். நிச்சயமாக அதனை ஒன்றுசேர்ப்பதும் அதனை ஓதும்படி செய்வதும் எமது பொறுப்பாகும். (75:16-17)
(நபியே!) நாம் உமக்கு (குர் ஆனை) ஓதிக்காட்டுவோம். அல்லாஹ் நாடியதைத் தவிர நீர் மறக்கமாட்டீர். (87:6)
நிச்சயமாக நாமே இவ்வேதத்தை இறக்கியுள்ளோம். இன்னும் நிச்சயமாக நாமே அதனைப் பாதுகாப்பவர்களாவோம். (15:09)
(குறிப்பு: இந்த வசனத்திற்கு பிஜெ விளக்கக் குறிப்பு எழுதும்போது 143ம் குறிப்பில் குர்ஆன் எழுத்துப் பிசகாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது என்ற கருத்தைப் பதிவு செய்கிறார். தொகுக்கப்பட்ட வரலாற்றில் எழுத்துப் பிழை ஏற்பட்டதாக எழுதுகிறார்)
என்றெல்லாம் குர்ஆன் கூறுவதால் நபி(ஸல்) அவர்களுக்கு சூனியத்தின் மூலம் ஏற்பட்ட பாதிப்பு வஹீயுடன் சம்பந்தப்பட்டது அல்ல என்று கூறுவது எப்படி பிஜேயை நகைக்க வைத்தது என்பது புரியாத புதிராக இருக்கின்றது!
நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதால் வஹீயிற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. நபி(ஸல்) அவர்கள் வஹீ வராமலேயே வஹி வந்ததாகக் கூறியிருக்கலாமே! என்ற நகைப்புக்கிடமான வாதத்தை ஒரு வாதத்திற்காக ஏற்றுக்கொண்டால் கூட ஹதீஸை நம்புபவர்களுக்குக் குர்ஆனில் சந்தேகம் கொள்ள இடம் இல்லை.
ஏனெனில் ஒவ்வொரு வருடமும் ரமழான் மாதத்தில் ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அது வரை அருளப்பட்ட குர்ஆனை ஓதவைத்து சரி பார்ப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் மரணித்த ஆண்டில் இரு முறை மீட்டிப் பார்த்தார்கள் என ஹதீஸ் கூறுகின்றது.
(குறிப்பு: இந்த ஹதீஸில் கூட பிஜே தவறு விட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு முறை ஜிப்ரீல் என்ற வானவர் வந்து அந்த வருடத்தில் அருளப்பட்ட வசனங்களைத் திரும்ப நினைவுபடுத்தி, முறைப்படுத்தி, வரிசைப்படுத்திச் செல்வார். (பக்கம் 36) என்று ஹதீஸுக்கு மாற்றமாக ‘அந்த வருடத்தில்’ என்பதை இடைச் செருகல் செய்துள்ளார்.)
அவரது வாதத்தை அப்படியே ஏற்றுக்கொண்டால் கூட நபி(ஸல்) அவர்கள் வஹீ வராமலேயே வஹீ வந்ததாகக் கூறியிருந்தால் ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்து மீட்டிப் பார்க்கும் போது, ‘இன்னின்ன வசனங்கள் நான் கொண்டு வராமல் நீங்களாகவே சேர்த்துள்ளீர்கள்’ என்று கூறி வஹீயைப் பாதுகாத்திருக்க மாட்டார்களா? அல்லது வஹியில் நபிக்கு தவறு எற்பட்டிருந்தால் அல்லாஹ் சுட்டிக் காட்டியிருக்கமாட்டானா?
குர்ஆன் இறைவேதம்தான் என்பதை முழுமையாக நம்புகின்ற இன்றைய மக்களின் நிலையிலிருந்துகொண்டு இவர்கள் இந்த விளக்கத்தைக் கூறுகின்றார்கள். (பக் 1298)
மார்க்கத்தைக் காஃபிர்கள் இப்படிக் கேட்பார்கள் என்ற மனநிலையிலிருந்து ஆய்வு செய்வதுதான் அவரது அண்மைக்கால புதிய நிலைப்பாடுகளுக்கு அடிப்படைக் காரணமாகும். எதைக் கூறினாலும் அது காஃபிர்களைத் திருப்திப்படுத்துமா? என்றுதான் சிந்திக்கின்றார்.
குர்ஆனில் தவறு இல்லை. அது நபி(ஸல்) அவர்களது உள்ளத்தில் ஒலிநாடாவில் பதிவது போல் பதியப்பட்டது என்ற பீ.ஜேயின் கருத்தைக் கூட காஃபிர்கள் ஏற்கும் வண்ணம் நிரூபிக்க முடியாதுதானே? இந்த இடத்தில் காபிர்கள் திருப்தியடையாத சில விடயங்கள் பற்றிய கேள்விகளை நாம் கேட்க விரும்புகின்றோம்.
நபி(ஸல்) அவர்களுக்கு மறதி ஏற்பட்டுள்ளது. 4 றக்அத்துடைய தொழுகையை இரண்டு றக்அத்திலேயே முடித்து விடுகின்றார்கள். துல்யதைன் என்பவர் நினைவூட்டிய பின்னர் கூட அது அவர்களுக்கு நினைவுக்கு வரவில்லை. துல்யதைன் கூறியதை ஏனைய நபித் தோழர்கள் உறுதிப்படுத்திய பின்னர்தான் அது அவர்களுக்கு நினைவில் வந்தது என ஹதீஸ் கூறுகின்றது.
(முஅத்தாஇ புகாரிஇ முஸ்லிம்இ அபூதாவூத்இ திர்மிதி)
நபி(ஸல்) அவர்களுக்கு மறதி ஏற்படும் என்பதையும், (18:24) ஏனைய நபிமார்களுக்கும் மறதி ஏற்பட்டுள்ளது (20:115, 18:73) என்பதையும் அல்குர்ஆன் உறுதி செய்கின்றது.
இதை வைத்து சாதாரண ஒரு மனிதர் உங்கள் நபிக்கு ஞாபக மறதி ஏற்பட்டுள்ளது. அவர் அல்லாஹ் அருளிய பல வசனங்களை மறதியாக விட்டிருக்கலாம். தொழுகையில் ஏற்பட்ட மறதியை துல்யதைன் நினைவூட்டினார். ஆனால்இ வஹீயில் ஏற்பட்ட மறதியை மனிதர்கள் நினைவூட்ட முடியாதல்லவா? எனவே இறக்கப்பட்ட பல வசனங்களை மறதியாக அவர் விட்டிருக்க வாய்ப்புள்ளதல்லவா? என்று கேட்டால் என்ன கூறுவது? இவ்வாறே தமது மனைவிமார்களின் திருப்திக்காக தேனை ஹராம் என நபி(ஸல்) அவர்கள் கூறியதைப் பின்வரும் வசனம் கண்டிக்கின்றது.
‘நபியே! உமது மனைவியர்களின் திருப்தியை நாடிஇ அல்லாஹ் உமக்கு ஆகுமாக்கியதை நீர் ஏன் தடைசெய்து கொள்கிறீர்? அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்ள, நிகரற்ற அன்புடையவன்.’ (66:01)
இதை வைத்து ஒரு காஃபிர் உங்கள் நபி மனைவிமாரைத் திருப்திப்படுத்துவதற்காக ஹலாலை ஹராம் என்று கூறியுள்ளார். மனைவியைக் கணவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கப் பல வழிகள் உள்ளன. மனைவியிடமே இப்படி நடந்துகொண்டவர் மக்களைத் திருப்பதிப்படுத்த எத்தனை ஹராம்களை ஹலாலாக்கினாரோ? எனவேஇ அவர் கூறிய குர்ஆன்-ஹதீஸ் இரண்டுமே சந்தேகத்திற்குரியவை என்று கூறினால் என்ன கூறுவது? அந்த வசனத்தைப் பொய்யானது என்பதா? அல்லது இந்த வாதத்தை ஏற்றுக்கொள்வதா?
எனவே, காஃபிர்கள் திருப்திப்படுவார்களா? என்பதை வைத்து நாம் குர்ஆன்-ஹதீஸை ஆராய முடியாது! சகோதரர் பிஜே அவர்களும் காஃபிர்களைத் திருப்திப்படுத்தும் விதத்தில் இஸ்லாத்தின் கருத்துக்களை திசைதிருப்பவோ அதன் கருத்துக்களுக்கு வலிந்து பொருளுரை செய்யவோ முடியாது என்பதை ஆணித்தரமாகக் கூறிக்கொள்கின்றோம்.
‘நபிகள் நாயகம்(ஸல்) காலத்தில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையைப் பார்த்துத்தான் அவர்கள் கூறுவது இறை வாக்கா? அல்லவா? என்பதை முடிவு செய்யும் நிலையில் மக்கள் இருந்தனர்.’ (பக் 1298) என்று தனது வாதத்திற்கு வலு சேர்க்க வரலாற்றையே மாற்றி எழுதுகின்றார்.
நபித் தோழர்களைப் பொறுத்தவரையில் நபி(ஸல்) அவர்கள் கூறும் அனைத்தையும் ஏற்கும் நிலையில் இருந்தனர். காஃபிர்களைப் பொறுத்தவரையில் நபி(ஸல்) அவர்கள் கூறும் அனைத்தையும் மறுக்கும் மனோ நிலையில் இருந்தனர். இதற்கு மாற்றமாக நபி(ஸல்) அவர்களது நடைமுறையை வைத்து, சொல்லும் செய்தியை எடை போடும் நிலை ஸஹாபாக்களிடம் இருக்கவில்லை. அப்படி இருந்தாலும் அது சூனியம் செய்யப்பட்ட ஹதீஸை மறுப்பதற்கான ஆதாரமாக அமையாது. ஏனெனில் நபி(ஸல்) அவர்களுக்குச் செய்யப்பட்ட சூனியத்தால் தாம்பத்தியத்தில் ஈடுபடாமலேயே ஈடுபட்டதாக அவர்கள் எண்ணினார்கள். அவ்வளவுதான்! இது வெளி உலகத்திற்குத் தெரியக் கூடிய சமாச்சாரம் அல்ல என்பது தெளிவு. அப்படியிருக்க அவரது குடும்பத்துடன் சம்பந்தப்பட்ட இந்த நிலை வஹீயில் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று வாதிட வரலாற்றையே புரட்ட வேண்டிய தேவை என்னவோ? ‘செய்யாததைச் செய்ததாகக் கூறும் ஒருவர் எதைக் கூறினாலும் அதைச் சந்தேகத்திற்குரியதாகத்தான் மக்கள் பார்ப்பார்களே தவிர, வஹீக்கு மட்டும் விதி விலக்கு என்று நம்பியிருக்க மாட்டார்கள்’ எனக் கூறித் தனது வாதத்தை முடிக்கின்றார். நபி(ஸல்) அவர்கள் செய்யாததைச் செய்ததாகக் கூறவில்லை என்பதை நாம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம்.
குர்ஆனைப் பாதுகாக்கின்ற பொறுப்பை அல்லாஹ் எடுத்துக்கொண்டதாலும், ‘நாம் உமக்கு ஓதிக் காட்டுவோம்ள, நீர் அதனை மறக்கமாட்டீர்’ என அல்லாஹ் கூறுவதாலும், நபி(ஸல்) அவர்களது உள்ளத்தில் ஒலிநாடாவில் பதிவது போல் ஜிப்ரீல்(அலை) அவர்கள் வஹீயை இறக்கும் போது அது பதிவு செய்யப்பட்டு விடும் என்பதாலும் நபி(ஸல்) அவர்களுக்கு சூனியத்தின் மூலம் ஏற்பட்ட பாதிப்பு வஹீயைத் தாக்காது என்பதை ஏற்றுக்கொள்வது கடுகளவு ஈமான் உள்ளவர்களுக்கும் கஷ்டமான விஷயம் அல்ல. எனவே, நபி(ஸல்) அவர்களுக்கு இல்லறத்தில் ஈடுபடாமலேயே ஈடுபட்டதாக சூனியத்தின் மூலம் ஏற்பட்ட போலி உணர்வு(பிரக்ஞை)க்கும் வஹீக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதால் பிஜேயின் இந்தப் பிழையான வாதம் வலுவற்றுப் போய் விடுகின்றது.
திருக்குர்ஆனில் சந்தேகம் ஏற்படுத்தும் அனைத்தையும் நாம் நிராகரித்துத்தான் ஆகவேண்டும். (பக் 1296) என்று கூறியே இவர் நபியவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது தொடர்பான ஹதீஸ்களை மறுக்கும் தனது நிலையை நியாயப்படுத்தி வருகின்றார். குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதத்தில் இவர் செய்திருக்கும் சில விபரீதங்களை இங்கே தொட்டுக் காட்ட விரும்புகின்றோம்.
அல்குர்ஆனின் எழுத்துப் பற்றிப் பேசும் போது ‘எழுதுகின்ற எழுத்தர்கள் கவனக் குறைவாக சில இடங்களில் பிழையாக எழுதியுள்ளனர்’ (பக் 58) என்று குறிப்பிட்டு குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளார்.
59 ஆம் பக்கத்தில் பிழையாக எழுதப்பட்ட இடங்கள் என்ற ஒரு பட்டியல் போட்டுள்ளார். இதனைத் தனியாக ஒரு இணையத் தளத்தில் சிலர் வெளியிட்டு குர்ஆனில் பிழைகள் உள்ளதாக இஸ்லாமிய மூதறிஞர் கூறுகின்றார் என தகவல் போடும் நிலை ஏற்பட்டுள்ளது..
‘தவறாக எழுதப்பட்ட இந்த வசனங்களை மனனம் செய்தவர்கள் சரியாகத்தான் மனனம் செய்தார்கள்.‘ (பக் 60) என்று எழுதிக் குர்ஆனில் வசனங்கள் தவறாக எழுதப்பட்டுள்ளன எனக் கூறிக் குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளார்.
வசனங்களின் எண்கள் என்ற தலைப்பில் வசனங்களுக்குத் தவறாக எண்களை இட்டவர்கள் குறித்து கூறும் போதுஇ ‘மற்றவர்கள் குர்ஆனைப் பற்றி தவறான எண்ணம் கொள்வதற்கு நாம் காரணமாக ஆகிவிட்டோம் என்பதும் அவர்களுக்குத் தோன்றவில்லை’ (பக் 55) என எழுதுகிறார்.
7 வசனங்களையுடைய அத்தியாயம் எனக் குர்ஆன் கூறும் (15:87)) சூறதுல் பாத்திஹாவை 6 வசனங்களையுடையதாகக் கூறிக் குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளார்.
அல்குர்ஆனின் அத்தியாயங்கள் பற்றி கூறும் போது சில அத்தியாயங்கள் 286 வசனங்கள் கொண்டதாகவும், சில அத்தியாயங்கள் மூன்றே மூன்று வசனங்களைக் கொண்டதாகவும் அமைந்திருப் பதாகக் கூறி விட்டு (பக் 46) 113 ஆவது அத்தியாயம் அல்ஃபலக்கையும், 109 ஆவது அத்தியாயம் அல்காஃபிரூனையும் ஒரு வசனங்களையுடைய சூறாக்களாகச் சித்தரித்து அல்குர்ஆனில் விளையாடியுள்ளார்.
இறுதியாகஇ இவரது இந்நிலையில் இவர் நியாயத்துடன் நடந்துகொள்ளவில்லை என்பதற்கு மறுக்க முடியாத ஒரு சான்றை முன்வைக்க விரும்புகின்றோம்.
மலக்குகள் ஆசா-பாசங்களுக்கு அப்பாற்பட்டவர்கள்ள, அல்லாஹ்வின் ஏவல்களை எடுத்து நடப்பதே அவர்களது பணி. அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறுசெய்ய மாட்டார்கள். இது ஸலபுஸ்ஸாலிஹீன்களான அஹ்லுஸ்ஸுன்னா ஜமாஅத்தினரினதும் உறுதியான நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கைக்கு மாற்றமாக பிஜே பின்வருமாறு எழுதியுள்ளார்.
மனிதனைப் படைப்பது பற்றி அல்லாஹ் கூறிய போது, ‘பூமியில் குழப்பம் விளைத்து இரத்தம் சிந்துபவர்களையா நீ படைக்கப் போகின்றாய்?’ என மலக்குகள் கேட்டதாகக் குர்ஆன் கூறுகின்றது. (2:30)
இது பற்றிப் பிஜே எழுதும் போது,
‘முன்பு ஆட்சேபனை செய்த போது அவர்களுடன் ஷைத்தான் இருந்தான். மேற்கண்டவாறு ஆட்சேபனை செய்யுமாறு அவர்களை அவன் தூண்டி விட்டிருக்க முடியும்’ என்று எழுதியுள்ளார்.
(பார்க்க: தர்ஜமா-பக்கம்:1337, விளக்கக்குறிப்பு:395,
‘இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்’-பக்கம்:59)
இந்தக் கூற்று குர்ஆனுக்கு முரண்பட்டதாகும்இ அத்தோடு ஈமானுக்கும் வேட்டு வைக்கும் உளரலாகும். இந்த உளரலின் அடிப்படையில் நோக்கும்போது மலக்குகள் ஷைத்தானின் சூழ்ச்சிக்குள்ளாகலாம்ள, அவனது தூண்டுதலால் அல்லாஹ்வுக்கே ஆட்சேபனை செய்வார்கள் என்றால் ஷைத்தானுக்கு வழிப்படும் இயல்பும், அல்லாஹ்வுக்கு மாறுசெய்யும் இயல்புமுள்ள மலக்குகள் கொண்டு வந்த ஒட்டுமொத்த குர்ஆனிலும் சந்தேகம் வந்து விடுமே! இந்த வசனம் ஷைத்தானின் தூண்டுதலால் கொண்டு வரப்பட்டதாக இருக்குமோ? என்று ஒவ்வொரு வசனத்திலும் சந்தேகத்தை ஏற்படுத்தி விடுமல்லவா? பிஜேயின் இந்தத் தவறு பல விதத்திலும் அவருக்கு உணர்த்தப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் தனது தவறான அந்த வாதத்தை அவர் கைவிடாது ‘சூனியம்’ என்ற புதிய புத்தகத்திலும் அக்கருத்தைக் கூறியுள்ளார் என்றால், குர்ஆனைப் பாதுகாக்கவே அதற்கு முரண்படும் ஹதீஸ்களை மறுக்கின்றோம் என்ற அவரது வாதத்தை எப்படி நம்பமுடியும்?
‘ஹதீஸ் குர்ஆனில் சந்தேகத்தை உண்டுபண்ணினால் அதைத் தூக்கி வீசவேண்டும் எனக் கூறும் இவர், குர்ஆனில் அல்ல, மொத்த வஹீயிலேயே சந்தேகத்தை ஏற்படுத்தும் தனது உளரலை இது வரை ஏன் தூக்கி வீசவில்லை?
ஹதீஸ் ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் தொடருடன் வந்திருந்தாலும்இ அது குர்ஆனுக்கு முரண்பட்டால் ஏற்கக் கூடாது என்பதில் உறுதியைக் காட்டும் இவர் குர்ஆனுக்கு முரண்பட்ட தனது கூற்றை இது வரை தூக்கியெறியாதுள்ளாரே! ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் வரிசையுடன் வந்துள்ள ஹதீஸை விட ‘ஷைத்தான் தூண்டியதால் மலக்குகள் ஆட்சேபனை செய்திருக்கக் கூடும்’ என்ற இவரது உளரல் உயர்வாகி விட்டதா? ஹதீஸை விட மார்க்கத்திற்கு முரணான இவரது சுய விளக்கமும் முக்கியத்துவம் பெற்றவிட்டதா?
இது வரை நாம் கூறியதிலிருந்து நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புக்கும்இ வஹீக்கும் சம்பந்தமில்லை. அதனால் வஹீ பாதிக்கப்பட்டிருக்குமே! என்ற சந்தேகத்திற்கே இடமில்லை என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டோம். அத்துடன் பிஜேயின் வாதங்கள் குர்ஆனுக்கும், ஸுன்னாவுக்கும் மட்டுமன்றி அவரது சொந்த விளக்கங்களுக்கே முரணாக அமைந்துள்ளது என்பதையும் அறிந்துகொண்டோம். அடுத்த இதழில் ‘எதிரிகள் விமர்சனம் செய்யாதது ஏன்?’ என்ற அடிப்படையில் அமைந்த அவரது வாதத்திற்குரிய தெளிவான பதிலை எதிர்பாருங்கள். (இன்ஷா அல்லாஹ்)