‘அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை மரணித்தவர்கள் என்று கூறாதீர்கள். மாறாக, அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள். ஆனால், நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள்.’ (2:154)
அல்லாஹ்வின் பாதையில் உயிர்த்தியாகம் செய்தவர்களை ‘அம்வாத்’ – ‘இறந்தவர்கள்’ என்று கூறாதீர்கள். அவர்கள் உயிருடன் இருக்கின்றனர். எனினும், நீங்கள் உணரக் கூடிய விதத்தில் அல்ல என்று இந்த வசனம் கூறுகின்றது.
‘அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டவர்களை மரணித்தவர்கள் என்று நிச்சயமாக நீர் எண்ண வேண்டாம். மாறாக, அவர்கள் தமது இரட்சகனிடத்தில் உயிருடன் இருக்கின்றனர். (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகின்றனர்.’‘அவர்களுக்கு அல்லாஹ் தனது அருட்கொடையிலிருந்து வழங்கியதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சி அடைந்தவர்களாகவும், தங்களுடன் சேராமல் தங்களுக்குப் பின் (வீர மரணமடையாது உயிருடன்) இருப்பவர்கள் பற்றி ‘அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்’ என்று மகிழ்வுற்றவர்களாகவும் இருக்கின்றார்கள்.’‘அல்லாஹ்விடமிருந்துள்ள அருளைக் கொண்டும், பாக்கியத்தைக் கொண்டும்;, மேலும் நம்பிக்கையாளர்களின் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கிவிடமாட்டான் என்பதனாலும் அவர்கள் மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர்.’(3:169-171)
உயிர்த்தியாகிகள் பற்றி இந்த வசனங்கள் பேசுகின்றன. இந்த வசனங்கள் சில விடயங்களைத் தெளிவுபடுத்துகின்றன.
- அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டவர்களை இறந்தவர்கள் என்று எண்ணாதீர்கள்.
- அவர்கள் தமது இரட்சகனிடத்தில் உயிருடன் உள்ளனர்.
- உணவும் அளிக்கப்படுகின்றனர்.
- அல்லாஹ் தமக்கு வழங்கிய சிறப்பின் காரணமாக மகிழ்வுடன் இருக்கின்றனர்.
- தமக்குப் பின்னர் உயிர்த்தியாகம் செய்து தம்முடன் வந்து சேரக் காத்திருப்பவர் களுக்கும் அச்சமோ, துக்கமோ இல்லை என்பதை அறிந்து நன்மாராயம் பெற்றுள்ளனர்.
- நம்பிக்கை கொண்டோரின் பணி களுக்கான கூலிகளை அல்லாஹ் வீணாக்கிவிமாட்டான் என்பதை அறிந்து மகிழ்வுடன் உள்ளனர்.
இவ்வாறான பல அம்சங்களை இந்த வசனங்கள் கூறுகின்றன. அல்லாஹ்வுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்கள் உயிருடன் உள்ளனர் என்றால் பூமியில் அவர்கள் உயிருடன் இருப்பதில்லை; அல்லாஹ்விடம் அவர்கள் சுவனத்து இன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் சாதாரணமான முறையில் உயிருடன் இருப்பதாக எடுத்துக் கொண்டால் அவர்களின் மனைவியர் மறுமணம் செய்ய முடியாது. அவர்களின் சொத்துக்கள் வாரிசுகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட முடியாது. எனவே, அவர்கள் உயிருடன் உள்ளனர் என்பது சராசரியாக உயிருடன் இருப்பதாகக் கூறுவதாகாது!
பொதுவாக மரணிக்கும் அனைவருக்கும் ‘பர்ஸக்’ உடைய வாழ்க்கை உண்டு. ஆனால், அல்லஹ்வுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்கள் நேராக சுவனம் நுழைவர். அவர்கள் தமது சொந்த உடலுடன் சுவனம் நுழைவதென்பது மறுமையில் நடக்கும். ஆனால், மரணித்தவுடனேயே அவர்கள், ‘பச்சை நிறப் பறவையின் வடிவில் சுவனம் நுழைவர். அங்கு அவர்களின் உயிர்கள் இன்பம் அனுபவித்துக் கொண்டிருக்கும்’ என நபி(ச) அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள். (முஸ்லிம்)
இறந்து போன மகான்களிடம் தமது தேவைகளைக் கேட்கும் வழிகேடான வழிமுறைகளைக் கடைப்பிடிக்கும் சிலர் இந்த வசனங்களை ஓதி அவ்லியாக்கள், நாதாக்கள் என்போர் மரணித்தும் உயிர் வாழ்பவர்கள். எனவே, அவர்களிடம் எமது கோரிக்கைகளை முன்வைக்கலாம் என்று வாதிட்டு வருகின்றனர். பல காரணங்களால் இது தவறானதாகும்.
பிரார்த்தனைகள் அல்லாஹ் ஒருவனிடம் மட்டுமே கேட்கப்பட வேண்டும்.
‘அல்லாஹ் அல்லாதவர்களிடம் பிரார்த்தித்த நிலையில் யார் மரணிக்கின்றானோ அவன் நரகம் நுழைவான்’ என நபி(ச) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத்
ஆதாரம்: புஹாரி
எனவே, இறந்தவர்கள் உண்மை யிலேயே கப்ரில் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தால் கூட அவர்களிடம் பிரார்த்திப்பது இணை வைத்தலாம்.
ஈஸா(ர) அவர்கள் ஒரு இறைத்தூதர்; பல்வேறுபட்ட அற்புதங்களை அல்லாஹ்வின் உதவியால் நிகழ்த்தியவர்; அற்புதமாகப் பிறந்தவர்; இன்றுவரை உயிருடன் இருப்பவர்; இப்படி இருந்தும் ஈஸா(ர) அவர்களிடம் தேவைகளை முன்வைப்பது ஷpர்க் என்றால் நல்லவரா? கெட்டவரா? என்பது தெரியாத அற்புதம் செய்யும் அருளைப் பெற்றவரா என்பது தெரியாத இறந்து போனவர்களிடம் வேண்டுதல் வைப்பது எப்படிச் சரியாகும்?
அடுத்து, இந்த வசனம் மகான்கள், அவ்லியாக்கள் பற்றிப் பேசவில்லை. அல்லாஹ்வின் பாதையில் உயிர்த்தியாகம் செய்தவர்கள் பற்றியே பேசுகின்றது.
உயிருடன் இருப்பவனிடம் கூட பரஸ்பரம் உதவுதல் என்ற அடிப்படையில் சில உதவிகளைக் கோரலாமே தவிர, எல்லா உதவிகளையும் கோர முடியாது.
ஒருவர் நல்லவர் உயிருடன் உள்ளார். அவரிடம் அவரால் செய்யக் கூடிய உதவியைக் கேட்கலாம். அந்த நல்லவர் பரம ஏழையாக இருக்கின்றார். அன்றாடம் உண்ண உணவில்லாமல் வாடும் அவரிடம் சென்று ஒரு கோடிப் பணம் வேண்டும் என்று கேட்டால் ஒன்று, அவரைக் கிண்டல் பண்ணுவதாக எடுத்துக் கொள்வார். அல்லது கேட்பவரைப் பைத்தியமாகப் பார்ப்பார்கள். உயிருடன் இயங்கிக் கொண்டிருப்பவரிடமே எதைக் கேட்க முடியுமோ எதை அவரால் செய்ய முடியுமோ அதை மட்டுமே கேட்க வேண்டும் என்றிருக்கும் போது, மகான்களின் மண்ணறைகளில் மண்டியிட்டு பிள்ளைப் பாக்கியத்தையும், நோய் நிவாரணத்தையும் கேட்பது எப்படி அறிவுப் பூர்வமாக அமையும் என்று சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
இவர்கள் யாரிடம் உதவி தேடுகின்றார்களோ அவர்கள் பூமிக்கு மேலே உயிருடன் இருந்தால் கூட இவற்றைக் கேட்க முடியாது எனும் போது பூமிக்குக் கீழே இறந்து போன நிலையில் இருப்பவர்களிடம் எப்படிக் கேட்க முடியும்!? உயிர்த்தியாகிகள் கூட சுவர்க்கத்தில்தான் உயிருடன் உள்ளனர்; மண்ணறைகளில் அல்ல என்பது கவனிக்கத் தக்கதாகும்.
அல்லாஹ்வின் பாதையில் உயிர்த்தியாகம் செய்வதை ஊக்குவிப்பதற்காக அருளப்பட்ட இந்த வசனங்களைத் தமது தவறான கொள்கைக்கு ஆதாரமாக இவர்கள் முன்வைக்கின்றனர். இவர்களின் இந்தச் செயற்பாட்டிற்கும் இந்த வசனங்களுக்கும் எள்ளளவு கூட சம்பந்தம் இல்லை என்பதே உண்மையாகும்.