மகாமு இப்றாஹீம் (அல்குர்ஆன் விளக்கம்)

கஃபாவில் இருக்கின்ற மகாமு இப்றாஹீம் குறித்து இந்த வசனம் பேசுகின்றது. இதனை ஒரு அற்புதமாகவும், அத்தாட்சியாகவும் அல்குர்ஆன் எடுத்துக் காட்டுகின்றது. இது குறித்து மற்றுமொரு வசனம் இப்படிப் பேசுகின்றது
அதில் தெளிவான அத்தாட்சிகளும், மகாமு இப்றாஹீமும் உள்ளன. மேலும் அதில் யார் நுழைகிறாரோ அவர் அச்சமற்ற வராகி விடுவார். மனிதர்களில் அதற்குச் சென்றுவர சக்தி பெற்றவர்கள் மீது அல்லாஹ்வுக்காக அவ்வீட்டை ஹஜ் செய்வது கடமையாகும். எவர் நிராகரிக்கின்றாரோ நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.” (3:97)
மகாமு இப்றாஹீம் என்பதற்கு, “இப்றாஹீம் நின்ற இடம்”, “இப்றாஹீம் குடியிருந்த இடம்என இரண்டு வகையில் அர்த்தம் செய்யலாம். இந்த வசனத்தில் இப்றாஹீம் நின்ற இடம்என்ற அர்த்தத்தில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை நபிமொழிகள் தெளிவுபடுத்துகின்றன.
இப்றாஹீம் (அலை) கஃபாவைக் கட்டும் போது ஒரு கல் மீது கட்டுமான வேலையை இலகுவாக்க மேற்கொள்வதற்கு ஏற்ப ஏறி நின்று கட்டினார்கள். அந்தக் கல் அவர்களின் தேவைக்கு ஏற்ப ஏறி இறங்கியது. அந்தக் கல்லில் இப்றாஹீம் நபியின் காலடித் தடமும் பதிந்துள்ளது. இது ஒரு அற்புதம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இது குறித்து,
இஸ்மாஈல் (அலை) அவர்கள் கற்களைக் கொடுக்க இப்றாஹீம்(அலை) அவர்கள் (கஃபாவைக்) கட்டிக் கொண்டு வந்தார்கள். கட்டடம் உயர்ந்த போது இந்தக் கல்லைக் கொண்டு வந்து வைத்தார்கள். அதன் மீது ஏறி நின்று இப்றாஹீம் நபி கட்டினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(வ)
ஆதாரம்: புஹாரி- 3364
இந்த அறிவிப்பில் அல் ஹஜர்” – இந்தக் கல் என்ற பதம் பயன் படுத்தப்பட்டுள்ளது. குறித்த ஒரு கல் பற்றித்தான் பேசப்படுகின்றது என்பதை உணர்த்துகின்றது. ஃப காம அலைஹி” – “அதன் மீது ஏறி நின்றார்என்று கூறுப்படுகின்றது. எனவே மகாமு இப்றாஹீம் என்றால் இப்றாஹீம் நபி ஏறி நின்ற இடம்என்பதே அர்த்தமாகும்.
கஃபாவைத் தவாப் செய்தவர்கள் தவாபின் முடிவாக இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும். மகாமு இப்றாஹீமை கஃபாவுக்கும் தமக்கும் நடுவில் வைத்து அந்த இரண்டு ரக்அத்துக்கள் தொழப்படும். இது குறித்துத்தான் இந்த வசனம் இப்படிப் பேசுகின்றது.
இப்றாஹீம் நபியின் கோரிக்கைகள்:
என் இரட்சகனே! (மக்காவாகிய) இதை அபயமளிக்கும் நகரமாக ஆக்குவாயாக! மேலும், இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம் பிக்கை கொள்கின்றார்களோ அவர்களுக்குக் கனி வர்க்கங்களில் இருந்து உணவளிப்பாயாக! என்று இப்றாஹீம் பிரார்த்தித்த போது, “யார் நிராகரிக்கின்றானோ (அவனுக்கும் வழங்கி) அவனை சொற்ப காலம் சுகமனுபவிக்க விட்டு வைப்பேன். பின்பு நரக வேதனையின்பால் அவனை இழுத்துச் செல்வேன். செல்லுமிடத்தில் அது மிகக் கெட்டதாகும்”“ என அவன் கூறினான்.” (2:126)
இந்த வசனத்தில் இப்றாஹீம்(அலை) இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்கள்.
1. மக்காவை அமைதியான பூமியாகவும், பாதுகாப்பளிக்கும் பட்டனமாகவும் ஆக்குமாறு வேண்டியுள்ளார்கள். அது இன்றும் நிதர்சனமாக இருந்து வருகின்றது.
2. மக்காவில் வாழ்கின்ற, அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பக் கூடிய மக்களுக்கு பழங்களைக் கொண்டு உணவளிப் பாயாக! என்று வேண்டினார்கள். எனினும் காபிர்களுக்கும் உணவளிப்பேன். பின்னர் அவர்கள் நரகத்திற்குச் செல்வார்கள் என்ற திருத்தத்துடன் அந்த துஆவையும் அல்லாஹ் அங்கீகரித்தான். இன்று வரை அந்தப் பாலைவன பூமியில் அனைத்து வகை கனி வர்க்கங்களையும் உண்டு, அந்த மக்கள் வாழ்கின்றனர்.
இப்றாஹீமும் இஸ்மாஈலும் இந்த வீட்டின் அடித்தளங்களை உயர்த்திய போது, “எங்கள் இரட்சகனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயமாக நீயே செவியுறுபவனும், நன்கறிந்தவனுமாவாய்” (என்று பிரார்த் தித்தனர்.)
எங்கள் இரட்சகனே! எம் இருவரையும் உனக்குக் கட்டுப்பட்டவர்களாக ஆக்கி, எமது சந்ததியிலிருந்து உனக்குக் கட்டுப்படும் ஒரு சமுதாயத்தையும் உருவாக்குவாயாக! எமக்குரிய (ஹஜ்) வணக்க முறைகளை எமக்குக் காண்பித்துத் தருவாயாக! எம்மை மன்னிப்பாயாக! நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்பவனும் நிகரற்ற அன்பு டையவனுமாவாய்.
எங்கள் இரட்சகனே! உனது வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காட்டி, வேதத்தையும் ஞானத்தையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தும் ஒரு தூதரை அவர்களில் இருந்தே அவர்களுக்கு அனுப்புவாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் மிகைத்தவனும், ஞானமிக்கவனுமாவாய் (என்றும் பிரார்த்தித்தனர்.)” (2:127-129)
கஃபாவைக் கட்டி முடிந்த பின்னர் தாம் மேற்கொண்ட பணியை ஏற்று அங்கீகரிக்குமாறு பிரார்த்தித்தார்கள்.
எம்மிருவரையும், எமது சந்ததியில் பெரும் கூட்டத்தையும் உனக்குக் கட்டுப்பட்ட முஸ்லிம்களாக ஆக்கி வைப்பாயாக! என்று பிரார்த்தித்தனர்.
ஹஜ்ஜினுடைய கிரியைகளை எப்படிச் செய்ய வேண்டும் எனக் காட்டித் தா! எனப் பிரார்த்தித்தனர்.

மக்கா மக்களுக்கு அல்லாஹ்வின் வசனங்களையும் ஞானத்தையும் ஓதிக் காட்டி அவர்களைப் பரிசுத்தப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களில் இருந்தே அனுப்பி வை! என்று பிரார்த்தித்தனர். அந்தப் பிரார்த்தனைகள் அத்தனையும் நடந்தேறின. கஃபா ஆலயத்தைக் கட்டுதல் என்ற அந்த மிகப் பெரிய பணியைச் செய்த இப்றாஹீம்(அலை), இஸ்மாயீல்(அலை) ஆகிய அந்த இரண்டு நபிமார்களும் தமக்கும் தமது சந்ததிகளுக்கும் மக்கா வாழ் மக்களுக்கும் அகில உலகிற்குமாகச் செய்த நுணுக்கமான, தூர நோக்கு மிக்க வேண்டுதல்களாகவே இந்தப் பிரார்த்தனைகளைக் காண முடிகின்றது. அல்லாஹ்விடம் கோரிக்கைகளை முன் வைக்கும் போது எவ்வளவு தூர நோக்குடனும், தெளிந்த சிந்தனையுடனும் முன்வைக்க வேண்டும் என்பதற்கு இந்தப் பிரார்த்தனைகள் முன்மாதிரியாகத் திகழ்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.