பொறுமையும்… உறுதியும்… [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 23]

لَـتُبْلَوُنَّ فِىْۤ اَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ وَلَـتَسْمَعُنَّ مِنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَمِنَ الَّذِيْنَ اَشْرَكُوْۤا اَذًى كَثِيْـرًا وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا فَاِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِ‏

‘நிச்சயமாக நீங்கள் உங்களது செல்வங் களிலும் உங்கள் உயிர்களிலும் சோதிக்கப் படுவீர்கள். இன்னும் உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப் பட்டோரிடமிருந்தும் இணைவைத்தோரிடமிருந்தும் அதிகமான நிந்தனை(வார்த்தை)களையும் நீங்கள் செவியுறுவீர்கள். நீங்கள் பொறுமையாக இருந்து, (அல்லாஹ்வை) அஞ்சி நடந்தால் நிச்சயமாக அது உறுதிமிக்க காரியங் களில் உள்ளதாகும்.’ (3:186)

உங்கள் செல்வங்கள், உயிர்களில் நீங்கள் சோதிக்கப்படுவீர்கள் என்று முதலில் குறிப்பிடப் படுகின்றது. இந்த சோதனை அல்லாஹ்வினாலும் ஏற்படலாம், அடுத் த சமூகத்தினாலும் ஏற்படலாம்.

‘நிச்சயமாக நாம் ஓரளவு பயத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள், மற்றும் விளைச்சல்கள் ஆகியவற்றில் ஏற்படும் இழப்புகளாலும் உங்களைச் சோதிப்போம். பொறுமையாளர்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!’

‘அவர்கள் யாரெனில் தமக்கு ஏதேனும் துன்பம் நேரிடும் போது ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்’ (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்) என்று கூறுவார்கள்.’

‘அத்தகையோருக்கே அவர்களின் இரட்சகனிட மிருந்து புகழுரைகளும், கருணையும் உண்டாகும். அவர்களே நேர்வழி பெற்றவர்கள்.’
(2:155-157)

இந்த வசனம் சோதனை பற்றியும் பொறுமைக்கு சுவனம் இருக்கின்றது என்பது பற்றியும் பேசுகின்றது.

இதே போன்று இயற்கையான நிகழ்வுகள் மூலம் இல்லாமல் இஸ்லாமிய எதிரிகளால் எமது உயிருக்கும் உடமைக்கும் பங்கம் ஏற்படலாம்.

இதே போன்று சிலை வணக்கம் புரிவோர் வேதம் வழங்கப்பட்ட யூத-கிறிஸ்தவர்கள் மூலமும் உங்கள் உள்ளம் புண்படத்தக்க வார்த்தைகளை நீங்கள் கேட்கலாம். இந்த சந்தர்ப்பத்தில் இரண்டு விடயங்களை நீங்கள் கைக்கொள்ள வேண்டும் என்று இந்த வசனம் கூறுகின்றது.

ஒன்று:
பொறுமை
நபி(ச) அவர்கள் ஆட்சித் தலைவராக இருந்தும் கூட மதீனாவில் வாழ்ந்த சிறுபான்மை சமூகமான யூதர்களின் நோவினை தரும் வார்த்தை களை சகித்துள்ளார்கள். அவர்கள் கண்டிக்கப்படவும் இல்லை, தண்டிக்கப்படவும் இல்லை. அவர்கள் பாணியில் தக்க பதிலடி கொடுக்கப்படவும் இல்லை.

நபி(ச) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ர) கூறினார்கள்: ‘யூதர்களில் ஒரு குழுவினர் இறைத்தூதர்(ச) அவர்களிடம் வந்து, ‘அஸ்ஸாமு அலைக்கும்’ (-உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி சலாம்) கூறினர். அவர்கள் கூறியதைப் புரிந்து கொண்ட நான், அவர்களுக்கு ‘வ அலைக்கும் அஸ்ஸாமு வல்ல அனா (அவ்வாறே உங்களின் மீது மரணமும் சாபமும் உண்டாகட்டும்)’ என்றேன். அப்போது இறைத்தூதர்(ச) அவர்கள், ‘ஆயிஷா! நிதானம்! எல்லா விஷயங்களிலும் நளினத்தைக் கையாளுவதையே அல்லாஹ் விரும்புகிறான்’ என்று கூறினார்கள். அப்போது நான், ‘இறைத்தூதர் அவர்களே! அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ச) அவர்கள், ‘நான்தான் ‘வ அலைக்கும்’ (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்லிவிட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?)’ என்று கேட்டார்கள்.’ (புகாரி:6024) இந்த ஹதீஸ் அதற்கு தக்க சான்றாகும்.

இரண்டாவது:
தக்வா
அல்லாஹ்வை அஞ்சி அவனது கட்டளையைப் பேணி வாழும் வாழ்க்கை இது இரண்டும் சோதனையின் போது மிக முக்கியம் என்று இந்த வசனம் கூறுகின்றது. இது பற்றி மற்றுமொரு வசனத்தில் இப்படிக் கூறுகின்றான்.

‘உங்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால் அது அவர்களை வருந்தச் செய்கின்றது. உங்களுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால் அது குறித்து அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். நீங்கள் பொறுமையாக இருந்து, (அல்லாஹ்வை) அஞ்சி நடந்தால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீங்கையும் விளைவிக்காது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவை பற்றி சூழ்ந்தறிபவனாவான்.’ (3:120)

இந்த வசனம் சோதனையின் போதும், எதிரிகள் காயப்படுத்தும் பேச்சுக்களின் போதும் பொறுமையாக வும் மார்க்கத்தில் தக்வாவுடன் உறுதியாகவும் இருப்பது உறுதிமிக்க நடவடிக்கை என்று போற்றப்படுகின்றது.

இந்த அத்தியாயத்தை அல்லாஹ் இதைச் சொல்லித்தான் நிறைவும் செய்கின்றான்.

‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் பொறுமையாக இருங்கள். (எதிரிகளை மிஞ்சும் வண்ணம்) சகிப்புத் தன்மையைக் கடைப்பிடியுங்கள். இன்னும் உறுதியாக இருங்கள். நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.’
(3:200)

(சூரா ஆல இம்றானுக்கான குறிப்புக்கள் முடிவுற்றன. இன்ஷா அல்லாஹ் அந்நிஸா அத்தியாயத்திற்கான விளக்கக் குறிப்புக்கள் தொடரும்.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.