பைபிளில் முஹம்மத். (05) |இஸ்மாயில் நபியின் சந்ததியில் இறைத்தூதர் முஹம்மத் நபி (ச) | Article.

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி
(ஆசிரியர்: உண்மை உதயம்)

இஸ்மவேல் ஈஸாக் (இஸ்மாயீல்-இஸ்ஹாக்) ஆகிய இரு தூதர்களும் ஆசிர்வதிக்கப்பட்டனர். இஸ்ஹாக் நபியின் சந்ததியில்தான் ஏராளமான இறைத்தூதர்கள் வந்தார்கள். இஸ்மாயில் நபியின் சந்ததியில் ஒரேயொரு இறைத்தூதர்தான் வந்தார். அவர்தான் இறுதி இறைத்தூதர் முஹம்மத் நபியாவார்கள். முஹம்மது நபியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் இஸ்மவேல் – இஸ்மாயில் நபி ஆசிர்வதிக்கப்பட்டார் என்ற பைபிளின் செய்தி பொய்ப்பிக்கப்பட்டதாகிவிடும் என்பது குறித்து ஏற்கனவே நாம் விபரித்தோம்.

எதிர்பார்க்கப்பட்ட அந்த நபி முஹம்மத்(ச) அவர்களே!:
‘எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது,”

‘அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டது மன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான்.”

‘அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள் அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா? என்று கேட்டார்கள். அதற்கும்: அல்ல என்றான்.”

‘அவர்கள் பின்னும் அவனை நோக்கி: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படிக்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள்.”

அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியைச் செவ்வைபண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத் திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்.”

‘அனுப்பப்பட்டவர்கள் பரிசேயரா யிருந்தார்கள்.”

‘அவர்கள் அவனை நோக்கி: நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, தீர்க்கதரிசியான வருமல்லவென்றால், ஏன் ஞானஸ்நானங் கொடுக்கிறீர் என்று கேட்டார்கள்.”
(யோவான் 1:19-25)

யஹ்யா(ர) அவர்களிடம் அந்த மக்கள் கேட்ட கேள்விகள்தாம் இவை. அந்த மக்கள் மூன்று இறைத்தூதர்களை எதிர் பார்த்திருந்தனர்.

1. எலியா எனும் யஹ்யா நபி.
2. கிறிஸ்து எனும் ஈஸா நபி.
3. தீர்க்கதரிசியானவர்.

யஹ்யா(அ) அவர்கள் ஏனோ இந்த இடத்தில் தான்தான் (யஹ்யா) என்பதை ஏற்கவில்லை. எனினும் இவர்கள் எலியா யஹ்யா தீர்க்கதரிசி என இயேசுவே கூறியுள்ளார்.

அடுத்து, நீர் இயேசுவா எனக் கேட்கின்றனர். அடுத்து அந்த மக்கள் தீர்க்கதரிசியானவரா என்று கேட்கின்றனர். அப்படியென்றால் இயேசு அல்லாத மற்றுமொரு தூதரை மக்கள் எதிர்பார்த்திருந்திருக்கின்றனர் என்பது எள்ளளவும் சந்தேகம் இல்லாமல் உறுதியாகின்றது. அந்த தீர்க்கதரிசிதான் முஹம்மத் நபியவர்கள்! நபி என்பதற்கு தீர்க்கதரிசி என்பதுதான் அர்த்தமாகும். கிறிஸ்தவ உலகு இயேசுவை ஏற்று முஹம்மத் எனும் இறுதித் தூதரை எற்காவிட்டால் தூதுத்துவத்தை முழுமையாக ஏற்றதாக ஒரு போதும் ஆகாது!

எலியா, இயேசு, தீர்க்கதரிசியானவர் (நபி) என மூவரை அந்த மக்கள் எதிர்பாக்கின்றனர். அந்த மூவரில்,

நீங்கள் எலியாவை ஏற்றீர்கள்!:
இயேசுவை ஏற்கிறீர்கள்! ஏன் அந்த தீர்க்கதரிசியான அவரை ஏற்கக் கூடாது? கடவுள் அனுப்பினவரை ஏற்காமல் மறுப்பது கடவுளையே மறுப்பதாக அமையுமல்லவா? இது குறித்து கிறிஸ்தவ உலகு சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளது.

பாரானில் பிரகாசித்த பரிசுத்த ஆவி:
பழைய ஏற்பாடு ஆதியாகமம் 21:13-21 வரையுள்ள வசனங்களில், இப்றாஹீம் நபி தனது மனைவி ஹாஜர் அவர்களையும் மகன் இஸ்மாயீல் அவர்களையும் மக்கா பாலைவனத்தில் விட்ட நிகழ்ச்சி வருகின்றது. அதில் ஆதியாகமம் 21:21 என்று இடம் பெற்றுள்ளது.

‘அவன் பாரான் வனாந்தரத்திலே குடியிருக்கையில், அவனுடைய தாய் எகிப்து தேசத்தாளாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம் பண்ணுவித்தாள்.” (ஆதியாகமம் 21:21)

பாரான் பிரதேசம் இஸ்மாயீல் நபியுடன் சம்பந்தப்பட்டது என்பதைக் கூறுவதற்காகவே இதனை இங்கே சுட்டிக் காட்டுகின்றேன்.

அவர்கள் எடுத்துச் சென்ற நீர் முடிந்த பின்னர் ஓர் நீரூற்று ஏற்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. அதுதான் மக்காவில் உள்ள ஸம் ஸம் கிணறாகும். இலட்சோப இலட்சம் மக்கள் அதில் தினமும் நீர் அருந்தியும் வற்றாது காட்சியளிக்கும் அந்த சின்னக் கிணறு ஓர் உலக அதிசயமாகும்.

இப்றாஹீம் நபி தன் மகனையும் மனைவியையும் விட்ட இடம் ஸபா என்று அழைக்கப்படுகின்றது. அந்த இடத்திற்கு இப்றாஹீம் நபி மீண்டும் மீண்டும் வந்துள்ளார். (ஆதியாகமம் 25:23) அங்கே தொழுதுள்ளார். (ஆதியாகமம் 21:33) யஃகூப் நபியும் அந்த இடத்திற்குப் போனார்கள் (ஆதியாகமம் 25:10) என்றெல்லாம் பைபிள் கூறுகின்றது.

இப்றாஹீம் நபி தன் மனைவியையும் மகனையும் விட்ட அந்தப் பெயர் ஸபாவில் இருந்துதான் முஹம்மத் நபி தோன்றினார்கள். ஏன் அவரை கிறிஸ்தவ உலகு ஏற்கத் தயங்குகின்றது.

மக்காவில் ஸபா-மர்வா என்ற இரு மலைகள் உள்ளன. தன் மகன் தாகத்தால் கதறி அழுத போது இந்த இரு மலைகளுக்குமிடையே ஓடியோடித்தான் தண்ணீர் தேடினார்கள். இதனால் உம்றா, ஹஜ் செய்யச் செல்லும் முஸ்லிம்கள் ஸபா-மர்வா மலைகளுக்கிடையில் ஏழு முறை ஓடி வருகின்றனர். ஸபா மலையடிவாரத்தில்தான் அந்த ஸம் ஸம் அற்புதக் கிணறு உள்ளது.

அறபு மொழியும் பைபிளின் மொழியும் சகோதர மொழிகளாகும். அந்த மொழிகளுக் கிடையே நெருக்கம் உள்ளது. அறபியில் கிணறு என்பதற்கு ‘பிஃரு” என்று கூறுவர். ஸம் ஸம் எனும் கிணறு ஸபா மலையடிவாரத்தில் இருந்ததால் ‘பிஃரு ஸபா” ஸபா கிணறு, ஸபா மலையடிவாரக் கிணறு என்று அந்த இடம் அழைக்கப்பட்டிருக்கலாம். பிஃரு ஸபா என்பதுதான் பைபிளின் மொழியில் பெயர் செபா என அழைக்கப்படுகின்றது. அந்த இடத்தில் ஆபிரகாம் நபி வாழ்ந்ததாகக் குறிப்பிடப் படுகின்றது.

‘ஆபிரகாம் பெயெர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை அவ்விடத்தில் தொழுதுகொண்டான்.”
(ஆதியாகமம் 21:33)

இப்றாஹீம் நபி தொழுத இடம்தான் கஃபா ஆலயமாகும். அந்த ஆலயம், அற்புத நீரூற்றும் அமைந்த அந்த இடத்தை இப்றாஹீம் நபி மற்றும் யஃகூப் நபி போன்றோர் வந்து தரிசித்துச் சென்றுள்ளனர். (ஆதியாகமம் 25:10, 28:1, 45:5)

அந்த இடத்திலிருந்து வந்த இறைத்தூதர் முஹம்மதை ஏன் கிறிஸ்தவ உலகு ஏற்கக் கூடாது?

இப்றாஹீம் நபி தன் மகனை விட்ட இடம் பெயர் ஸபா. அங்கே ஆலயம் உண்டு. அந்த இடத்திற்கு முழுப் பெயர்தான் ‘பாரான்” என்று பைபிள் கூறுகின்றது.

‘அவன் பாரான் வனாந்தரத்திலே குடியிருக்கையில், அவனுடைய தாய் எகிப்து தேசத்தாளாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம் பண்ணுவித்தாள்.” (ஆதியாகமம் 21:21)

இந்த வசனத்தின் மூலம் பாரான் பிரதேசம் இஸ்மாயீல் நபியுடன் தொடர்புபட்டது என்பதை அறியலாம்.

இப்போது இந்த பைபிளின் முன்னறிவிப்பைப் பாருங்கள்.

‘தேவனுடைய மனுஷனாகிய மோசே தான் மரணமடையுமுன்னே இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதித்த ஆசீர்வாதமாவது:”

‘கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி, சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்; பாரான் மலையிலிருந்து பிரகாசித்து, பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்; அவர்களுக்காக அக்கினி மயமான பிரமாணம் அவருடைய வலது கரத்திலிருந்து புறப்பட்டது.”

‘மெய்யாகவே அவர் ஜனங்களைச் சிநேகிக்கிறார்; அவருடைய பரிசுத்தவான் களெல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து, உம்முடைய வார்த்தை களினால் போதனையடைவார்கள்.”
‘மோசே நமக்கு ஒரு நியாயப் பிரமாணத்தைக் கற்பித்தான்; அது யாக்கோபின் சபைக்குச் சுதந்திரமாயிற்று.”
(உபாகமம் 33:1-4)

மூஸா நபி மரணமடையும் முன்னர் இஸ்ரவேல் சமூகத்தை ஆசிர்வதித்து சொன்ன செய்திகள் இவை. இங்கே மூன்று இடங்கள் பற்றிப் பேசப்படுகின்றது.

01. சீனாய் : மலை
02. சேயீரி : மலை
03. பாரான் : (மக்கா)

இந்த மூன்று இடங்களில் இருந்தும் முக்கியமான மூன்று இறைத் தூதர்கள் வந்துள்ளார்கள்.

தூர்ஸீனா மலை மூஸா நபியுடன் சம்பந்தப்பட்டது. பலஸ்தீனில் உள்ள சேயிரி எனும் மலை ஈஸா நபியுடன் சம்பந்தப்பட்டது. பாரான் என்பது இஸ்மாயீல் நபியுடைய சந்ததிகளில் வந்த முஹம்மது நபியுடன் சம்பந்தப்பட்டது. மூஸாவையும், இயேசுவையும் நம்பும் கிறிஸ்தவ உலகம் ஏன் முஹம்மத் நபியை நம்பக் கூடாது?

பைபிளில் கூறப்படும் இந்த ஒழுங்கு குர்ஆனிலும் கூறப்படுகின்றது.

‘அத்தியின் மீதும், ஸைத்தூனின் மீதும் சத்தியமாக, ‘தூர்ஸினாய்” மலை மீது சத்தியமாக!, அபயமளிக்கும் இந்நகரத்தின் மீது சத்தியமாக!” (95:1-3)

இங்கே அத்தியின் மீதும் ஷைத்தூனின் மீதும் சத்தியம் செய்யப்படுகின்றது. அத்தி, ஸைத்தூன் என்பன பலஸ்தீனில் விளையக் கூடியனவாகும். இது இயேசுவுக்குரிய இடமாகும். தூர்ஸீனாய் என்பது மூஸா நபியுடன் சம்பந்தப்பட்ட இடமாகும். அபயமளிக்கும் இந்த பூமி என்பது பைபிளில் குறிப்பிடப்பட்ட ‘பாரான்” பூமியாகும். அதுதான் மக்காவாகும்.

பாரான் என்பது முஹம்மது நபியுடன் சம்பந்தப்பட்டது. இதில் வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது என்பது மிகத் தெளிவானதாகும்.
இங்கே ஸீனாயிலிருந்து எழுந்தருளினார். சேயீரியில் இருந்து உதயமானார். பாரான் மலையிலிருந்து பிரகாசித்தார் என்று கூறப்படுகின்றது. மூஸா, ஈஸா, முஹம்மத் ஆகிய மூன்று நபிமார்களின் போதனையில் முஹம்மத் நபியின் போதனையுடன் கர்த்தரின் போதனை முடிவடைவதை இது காட்டுகின்றது. முஹம்மத் நபியுடன் தீர்க்கதரிசிகளின் வருகை முற்றுப் பெற்றது.

10,000 பரிசுத்தவான்களுடன் பிரசன்னமானார் என்று இங்கு முன்னறிவிப்புச் செய்யப்படுகின்றது.

ஆபிரகாம் மற்றும் இஸ்மவேலால் கட்டப்பட்ட ஆலயத்தில் 360 சிலைகள் வைக்கப்பட்டு விக்கிரக ஆராதனை செய்யப்பட்டு வந்தது. அதற்கெதிரான போராட்டத்தின் இறுதியில் 10,000 தோழர்களுடன் முஹம்மது நபி மக்காவைக் கைப்பற்றி அங்கிருந்த விக்கிரங்களை அகற்றி அந்த ஆலயத்தை பரிசுத்தப்படுத்தினார்கள்.

பாரானில் பிரகாசித்து 10,000 தோழர்களுடன் பிரசன்னமானது யார்? முஹம்மத் நபியைத் தவிர வேறு ஒருவரை வரலாற்றில் காட்ட முடியுமா?

என் மகிமையின் ஆலயத்தை மகிமைப்படுத்துவேன் (ஏசாயா 60:7) என்று ஏசாயா தீர்க்கதரிசியால் கூறப்பட்டது; நடந்தேறியது.

அடுத்து முஹம்மது நபியின் ஷரீஅத் போதனை அக்கினிமயமானது என்று கூறப்படுகின்றது. அவர் வெறும் போதனை பற்றி மட்டும் பேசாது அந்தப் போதனைகளை மீறுபவர்களுக்கான தண்டனைகளையும் போதித்தார். திருடக் கூடாது என்றார். திருடினால் கை வெட்டப்படும் என்றார். அது நிறைவேற்றவும் பட்டது. இதுவே அக்கினி மயமான பிரமாணம் என்று கூறப்படுகின்றது.

அவர் ஜனங்களை நேசிக்கிறார் என்று கூறப்படுகின்றது. முஹம்மது நபி பற்றி இதே செய்தியைக் குர்ஆன் இப்படிக் கூறுகின்றது.
‘நிச்சயமாக உங்களில் இருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் சிரமப்படுவது அவருக்கு வருத்தத்தை யளிக்கின்றது. உங்கள் விடயத்தில் அவர் அதிக ஆர்வமுடையவராக இருக்கிறார்; நம்பிக்கை யாளர்களுடன் கருணையும் இரக்கமுடைய வருமாவார்.” (9:128)

அவருடைய பரிசுத்தவான்களெல்லோரும் உம்முடைய கையில் இருக்கின்றார்கள் என்பதன் மூலம் நபித்தோழர்களின் சிறப்புக் கூறப்படுகின்றது. அவர்கள் கடவுளுக்கு விருப்பமானவற்றைச் செய்வார்கள் என்று கூறப்படுகின்றது.

மோஸேயின் நியாயப் பிரமாணம் இஸ்ரவேல் சபைக்குச் சொந்தமாயிற்று. அதாவது, இஸ்ரவேல் சமூகத்தில் மூஸா நபிக்குப் பின்னர் வந்த தூதர்கள் தவ்றாத்தை அடிப்படையாகக் கொண்டே மக்களை வழிநடாத்தினர். ஈஸா நபிக்கு இன்ஜீல் வழங்கப்பட்டாலும் அவர் தவ்றாத்தை முழுமையாக மாற்றவில்லை. அதன் அடிப்படையிலேயே பிரச்சாரம் செய்தார்கள். இந்த தோரா எனப்படும் தவ்றாத் யாக்கோபின் சபைக்கு அதாவது, இஸ்ரவேல் சமூகத்துக்குரியதாக இருந்தது. ஆனால், இஸ்மவேல் சமூகத்தில் வரும் இறுதி இறைத் தூதர் அக்கினிமயமான புதிய பிரமாணத்தைக் கொண்டு வருவார் என்பதும் உணர்த்தப்படுகின்றது. இந்த முன்னறிவிப்புக் களுக்கு முஹம்மத் நபியைத் தவிர வேறு யாரும் எந்த அடிப்படையிலும் உரிமை கொண்டாட முடியாது.

முஹம்மது நபியை ஏற்காவிட்டால் பைபிளின் இந்த முன்னறிவிப்புக்கள் பொய்யாகிவிடும். முன்னறிவிப்புக்கள் பொய்யாகிப் போனால் பைபிள் இறைவேதம் என்ற தகுதியையும் இழந்துவிடும்.

கிறிஸ்தவ சமூகமே! பைபிள் முன்னறிவித்த இந்த இறைத்தூதரை ஏற்பதன் மூலம் பைபிளையும் உண்மைப்படுத்தி கடவுளின் அன்பைப் பெறப் போகின்றீர்களா? அல்லது இந்த இறைத் தூதரை மறுப்பதன் மூலம் பைபிளையும் பொய்ப்பித்து பரலோக இராஜ்ஜியத்தில் நுழையும் பாக்கியத்தை இழக்கப் போகின்றீர்களா? முடிவு உங்கள் கைகளில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.