இஸ்லாம் அழைக்கிறது – 4
பெண்ணின் உரிமை காக்கும் இஸ்லாம்
இஸ்லாம் பலதார மணத்தை அனுமதித்துள்ளது. ஒரு ஆண் ஒரே நேரத்தில் நான்கு பெண்களை மணந்து அவர்களுடன் இல்லறம் நடாத்தலாம் என்பது இஸ்லாமிய சட்டமாகும். இந்த சட்டத்தின் மூலம் இஸ்லாம் பெண்ணினத்திற்கு அநீதி இழைத்துள்ளது. இஸ்லாம் ஆணாதிக்க சிந்தனையுடன் செயற்படுகின்றது! ஆண்களுக்கு அளித்த இந்த சலுகையை இஸ்லாம் பெண்களுக்கு அளிக்குமா? என்றெல்லாம் கேள்வி எழுப்பப்படுகின்றது.
இஸ்லாம் பலதார மணத்தை அனுமதித்துள்ளது என்பது உண்மையே! இருப்பினும் இது பெண்ணினத்திற்கு எதிரானது என்பது தவறான பார்வையாகும். இந்த விமர்சனத்தை உரிய முறையில் புரிந்து கொள்ள பலதார மணம் பற்றிய அடிப்படையான ஒரு உண்மையைப் புரிந்து கொள்வது அவசியமாகும்.
உலகமெல்லாம் ஏகபத்தினி விரதம் பூண்டிருந்தது போன்றும், இஸ்லாம் ஒன்றுதான் பலதார மணத்தை ஆரம்பித்து அறிமுகப்படுத்தியது போன்றும் உலகம் நோக்குகின்றது.
இந்துப் புராணங்கள் சிறப்பித்துப் பேசும் பல தம்பதிகள் பலதார மணம் புரிந்திருப்பதை ஏனோ மறந்து விடுகின்றனர். இவ்வாறே யூத, கிஸ்தவ வேதங்களும் இஸ்லாமும் சிறப்பித்துப் பேசும் ஆப்றஹாம், தாவீது, மோஸே, ஸாலமோன் போன்ற தீர்க்கதரிசிகளும் பலதார மணம் புரிந்திருந்தனர் என பைபிள் கூறுகின்றது.
இந்து, யூத, கிறிஸ்தவ வேதங்கள் சொல்லும் பலதார மணம் என்பது வரையறை அற்றது. நிபந்தனைகள் அற்றது. பல்லாயிரம் மனைவியரை மணந்தவர்களும் உள்ளனர். இஸ்லாம் ஒரே நேரத்தில் நால்வருடன் மட்டுமே இல்லற வாழ்க்கை வாழலாம் என்கின்றது. அனைவருடனும் சரி சமமாக நடக்க வேண்டும் என்கின்றது. நீதமாக நடக்க முடியாதவர்கள் ஒருத்தியுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்கின்றது.
அனைவரினதும் பாலியல், பொருளாதார தேவைகளை நிறைவு செய்யும் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த அனுமதி என்கின்றது. இஸ்லாம் பலதார மணத்தை ஆரம்பித்து வைக்கவில்லை. அதற்கு கட்டுப்பாடுகள், வரையறைகள், நிபந்தனைகளை விதித்து ஒழுங்கு படுத்தியுள்ளது. முதலில் இந்த உண்மையை விமர்சகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அனுமதி மட்டுமே கட்டளை அல்ல:
முஸ்லிம் அல்லாத மக்கள் ஒருவருக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாட்டுடன் வாழும் போது முஸ்லிம்கள் அனைவரும் நான்கு பெண்களை மணந்திருப்பது போன்று சிலர் கற்பனை பண்ணுகின்றனர். வசதிவாய்ப்பும், தேவையும் உள்ளவர்களுக்கான வெறும் அனுமதியாகவே பலதார மணம் உள்ளது. ஒவ்வொருவரும் கட்டாயம் பலதார மணம் செய்தாக வேண்டும் என்ற கட்டளையும் இல்லை. இதே வேளை, முஸ்லிம்களிலும் மிகக் குறைந்த தொகையினரே பலதார மணம் புரிந்துள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.
பாவம் அல்ல பரிகாரம்:
பலதார மணத்தைப் பாவமாக பலரும் பார்க்கின்றனர். இது பாவம் அல்ல. மிகப்பெரும் பரிகாரமாகும். உலக சனத்தொகையைக் கருத்திற் கொண்டால் ஆண்களை விட பெண்களே அதிகமாகப் பிறக்கின்றனர். இறப்பு விகிதத்தை எடுத்துக் கொண்டால் பெண்களை விட விரைவாகவே ஆண்கள் மரணித்து விடுகின்றனர். போர்கள், விபத்துக்கள், கலவரங்கள், மது, விபச்சாரம்… போன்ற தவறான நடத்தைகளால் நோயுற்று மரணித்தல் போன்ற அனைத்து விதங்களிலும் ஆண்களின் மரண வீதம் பெண்களின் மரண வீதத்தை விஞ்சி உள்ளது. இதனால் விதவைகள் தொகை அதிகரித்து வருகின்றது.
ஆண்களை விட பெண்கள் விரைவாகவே திருமணத்திற்குத் தயாராகிவிடுகின்றனர். ஒரு ஊரில் முறையாக ஒவ்வொரு வருடமும் 25 ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் பிறப்பதாக வைத்துக் கொள்வோம். நான்கு வருடங்கள் கழியும் போது அந்த ஊரில் (25 ஒ 4 ஸ்ரீ 100) 100 ஆண் பிள்ளைகளும் 100 பெண் பிள்ளைகளும் இருப்பார்கள். 20 வருடங்கள் தாண்டும் போது அந்த அந்த 100 பெண் பிள்ளைகளும் திருமணத்திற்காக ஏங்கிக் கொண்டிருப்பார்கள்.
ஆனால், அந்த 100 ஆண் பிள்ளைகளும் இன்னும் ஓரிரு வருடங்கள் கழித்து திருமணம் செய்யலாம் என்ற மனநிலையில் இருப்பார்கள். இந்த அடிப்படையில் பார்க்கும் போது திருமண சந்தையில் ஆண்களுக்கு கிராக்கி அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனால்தான் சீதனக் கொடுமை வளர்ந்து கொண்டே செல்கின்றது.
பெண்கள் ஆண்களை விட அதிகரித்துச் செல்கின்றனர். இலங்கையில் ஆண்களை விட பெண்கள் 18 இலட்சம் பேர் அதிகமாக உள்ளனர் என புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
இப்போது அதிகமாகப் பிறக்கும் பெண் பிள்ளைகளுக்கும் இளம் விதவைகளுக்கும் தீர்வு என்ன? ஒன்றில் ஆண்களையும், பெண்களையும் சரிசமமாகப் பெற வேண்டும். இது எமது கையில் இல்லை. அல்லது ஒருவனுக்கு ஒருத்தி என்று கூறும் கடவுளாவது கணக்குத் தப்பாமல் ஆண்-பெண் படைப்புகளைச் சரியாகப் படைக்க வேண்டும். அதுவும் இல்லை. ஆண்களை விட அதிகமாக இருக்கும் பெண்களுக்கு மாற்றுத் தீர்வு என்ன? அந்தப் பெண்களுக்கு பாலியல் ஆசையே இருக்கக் கூடாதா? அவர்கள் தமது ஆசையை அடக்கிக் கொண்டு கம்மென்று இருக்க வேண்டும் என்று சொல்ல முடியுமா?
அல்லது, அவர்கள் திருமண பந்தம் இல்லாமலே கண்டவர்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள அனுமதிப்பதா? இதை ஒழுக்கத்தை விரும்பும் எந்த சமூகமாவது ஏற்றுக் கொள்ளுமா?
அல்லது, ஒருவனுக்கு ஒருத்திதான். மீதமுள்ள பெண்களை மனைவி என்று சட்டபூர்வ திருமணம் இல்லாமல் சின்னவீடாக வைத்துக் கொள்ளலாம் என்று கூறுவதா?
பலதார மணத்தை மறுக்கும் அனைவரும் இதைத்தான் தீர்வாகச் சொல்கின்றார்கள்.
இப்படி சின்னவீடாக வைத்துக் கொள்ளும் பெண்களுக்கு சட்டபூர்வ மனைவி அந்தஸ்துக் கிடைக்காது. இவளுடன் தொடர்பு வைத்திருப்பவனின் சொத்தில் பங்கு கிடைக்காது. இவனுக்குப் பிறக்கும் குழந்தை சட்டபூர்வ குழந்தையாகாது. அந்தக் குழந்தைக்கு சொத்தில் பங்கு கிடைக்காது. இது பெண்ணினத்திற்கு எதிரான கொடுமை யில்லையா?
முதல் மனைவி மட்டும்தான் பெண்ணா? இரண்டாவது வாழ்க்கைப்படுபவளும் பெண்தானே! அவளது உரிமைகள் குறித்து யாராவது சிந்தித்ததுண்டா?
இவ்வாறு சின்னவீடாக வைத்துக் கொள்வதை விட சட்டபூர்வமாகத் திருமணம் செய்து அவளுக்கு மனைவி என்ற அந்தஸ்தையும் அவளுக்குப் பிறக்கும் குழந்தைக்கு தந்தை என்ற ஸ்தானத்தை வழங்கி சொத்திலும் சமபங்கு வழங்கச் சொல்லும் இஸ்லாம் பெண்ணினத்தின் உரிமையைக் காக்கிறதா? அல்லது சின்னவீடு நடைமுறை காக்கின்றதா? நடுநிலையாகச் சிந்தித்தால் பெருகிவரும் பெண்ணினத்தின் பிரச்சினைக்கு இஸ்லாம் சொல்லும் பலதார மணத்தை விட சிறந்த தீர்வை யாராலும் கூற முடியாது.
பெண்ணுக்கு அனுமதிக்க முடியாது:
இஸ்லாம் பலதாரமணத்தை அனுமதித்ததற்கான நியாயமான பல காரணங்கள் உள்ளன. இஸ்லாமிய பலதார மணச் சட்டத்தை விமர்சிப்போர் நான்கு ஆண்களை ஒரு பெண் மணக்க முடியாதா? எனக் கேள்வி எழுப்புகின்றனர். பெண்களின் உடல் கூறுக்கும் ஆண்களின் உடல் அமைப்புக்கும் இடையில் உள்ள மாற்ற முடியாத இயல்புகளைப் புரிந்து கொண்டாலும் புரிந்து கொள்ளாதது போன்று கேள்வி எழுப்புகின்றனர்.
ஒரு ஆண் ஒரே நேரத்தில் நான்கு பெண்களை மணக்கின்றான். நான்கு பெண்களும் குழந்தைகளைப் பெறுகின்றனர். நான்கு குழந்தைகளுக்கும் தந்தை யார் என்பது அனைவருக்கும் தெரியும். அந்தக் குழந்தைகளுக்கு அவன் பொறுப்பேற்பான்.
இதே வேளை, ஒரு பெண் ஒரே நேரத்தில் நான்கு ஆண்களை மணந்தால் அவள் ஒரே நேரத்தில் ஒரு குழந்தையைப் பெறுவாள். அந்தக் குழந்தைக்கு யார் தந்தை என்பதில் குழப்பம்தான் வரும். நால்வருமே அது தன் குழந்தை என்று உரிமை கொண்டாடினாலும் பிரச்சினை, நாள்வரில் நாள்வருமே அது தனது குழந்தை இல்லை என மறுத்தாலும் பிரச்சினைதான். எனவே, பெண்கள் ஒரே நேரத்தில் பல ஆண்களுடன் வாழ்க்கை நடாத்துவது என்பது தீர்வாகாது. பிரச்சினையைத்தான் தோற்றுவிக்கும்.
இஸ்லாம் சொல்லும் பலதார மணம் என்பது பெண் இனத்திற்கான உரிமைகளை உண்மையான வடிவில் வழங்கும் தன்மை கொண்டது. பலதார மணத்தை மறுப்பதுதான் பெண்ணினத்திற்கான அநீதியாகவும் கொடுமையாகவும் அமையும்.
எனவே, பலதார மணத்தை தகுதியும் தேவையும் உள்ளவர்களுக்கு அனுமதிப்பதன் மூலம் பெண்ணினத்தின் உரிமையை உரிய விதத்தில் காத்திட இஸ்லாம் உங்களை இரு கரமேந்தி அழைக்கின்றது.