பெண்களின் வெளிநாட்டு வேலை வாய்ப்பு! ஒரு சமய, சமூகவியல் பார்வை

ரிஸானாவிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனையைத் தொடர்ந்து வெளிநாட்டு வேலை வாய்ப்புக் குறித்த சிந்தனை மக்களுக்கு எழுந்துள்ளது. இந்தச் சாதகமான சூழ் நிலையைக் கருத்திற் கொண்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புத் தொடர்பாக சில தகவல்களை மக்களுக்கு வழங்குவது விழிப்புணர்வூட்டுவதாக அமையும் என்பதால் விரிவான இந்த ஆக்கத்தை வெளியிடுகின்றோம்.

ஏற்கனவே வெளிநாடு சென்றவர்கள் வெளிநாட்டுக்குப் பெண்களை வேலைக்கு அனுப்பும் முகவர்கள் போன்றோர் நிச்சயமாக இந்த ஆக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்பது எமக்குத் தெரியும். ஏற்பவர் ஏற்கலாம், எதிர்ப்பவர் எதிர்க்கலாம், போற்றுவோர் போற்றட்டும், புழுதி வாரித் தூற்றுவோர் தூற்றட்டும் என்ற துணிவுடனேயே இதனை எழுதுகின்றோம்.
ஏற்கனவே வெளிநாடு சென்று வந்த பெண்களைக் கொச்சைப்படுத்த வேண்டும் என்பது எமது நோக்கம் அல்ல. வெளிநாடு செல்லும் ஆசையில் இருப்பவர்களுக்கு அந்த ஆசையை நீக்கி அதன் ஆபத்தைப் புரிய வைக்க வேண்டும் என்பதே எமது நோக்கம். யாரையும் வேண்டுமென்றே குற்றம் சாட்டுவது எமது நோக்கம் அல்ல. பெரும்பாலும் நடக்கக் கூடிய நிலைகளைக் கூறி விழிப்புணர்வை ஊட்ட விரும்புகின்றோம்.
01. ஹராமானது:
பெண்கள் மஹ்ரமான ஆண் துணை இல்லாமல் வெளிநாடு செல்வது ஹராமாகும். வெளிநாடு செல்லும் பெண்கள் ஹராமான பயணத்தில் இருப்பதுடன் ஹராத்தில்தான் தனது இரண்டு வருட வாழ்க்கையையும் கழிக்கின்றனர் என்பது கவனத்திற் கொள்ளத் தக்கதாகும்.

“இரண்டு நாட்கள் பயணம் செய்யும் பெண்மணி கணவனோ அல்லது மணமுடிக்கத் தகாத (மஹ்ரமான) ஆண் உறவினரோ இல்லாமல் பயணம் செய்யக் கூடாது என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.”
(அறிவிப்பவர்: அபூஸயீதுல் குத்ரி(வ)
ஆதாரம்: புஹாரி (1197)

இரண்டு நாள் பயணம் செய்யக் கூடாது எனும் போது இரண்டு வருடம் பயணம் ஹராமானது என்பது தெளிவாகும்.
“அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய எந்தப் பெண்ணும் ஒரு பகல், ஒரு இரவு தொலைவுடைய பயணத்தை மணமுடிக்கத் தகாத (மஹ்ரமான) ஆண் உறவினர் இல்லாமல் மேற்கொள்வது கூடாது என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.”
அறிவிப்பவர்: அபூஹுரைரா(வ)
ஆதாரம்: புஹாரி: (1088)

மஹ்ரம் என்பது நிரந்தர மஹ்ரமாக இருக்க வேண்டும். ஒரு பெண்ணையும் அவளது சகோதரியையும் ஒரே நேரத்தில் மணமுடிக்கக் கூடாது. இந்த அடிப்படையில் சகோதரியின் கணவன் தற்காலிக மஹ்ரமாகின்றான். இந்த உறவு (மச்சான்) தனித்து இருப்பதையோ சேர்ந்து தனியாக பயணம் செய்வதையோ அனுமதிக்காத மஹ்ரமீ உறவாகும். மனைவி இறந்துவிட்டால் அல்லது அவளை விகாகரத்து செய்துவிட்டால் அவளது சகோதரியை (மதினியை) மணமுடிப்பதற்கு உள்ள தடை நீங்கிவிடும். இத்தகைய மஹ்ரம் பற்றி இங்கே பேசப்படவில்லை.
ஒரு பெண் வெளிநாடு செல்வதென்றால் கணவன் அல்லது சகோதரன், மகன், தந்தை போன்ற உறவினருடன் செல்வதாக இருந்தால் ஷரீஆ ரீதியாக அதைக் குறை சொல்ல முடியாது.
இந்த இடத்தில் பெண்ணை வெளிநாட்டுக்கு அனுப்பும் முகவர்கள் செய்யும் ஒரு அக்கிரமத்தைக் கோடிட்டுக் காட்ட வேண்டும்.
சில வீடுகளில் (ஊழரிடநள) பெண்ணும் அவளுடன் மஹ்ரமான உறவுடைய ஆண் ட்ரைவரும் தேவை என்பார்கள். தமக்கு செட்டான பெண்ணின் கணவருக்கு வாகனம் ஓட்டத் தெரியாது. எனவே, வாகனம் ஓட்டத் தெரிந்த ஒருவரையும் சம்பந்தமே இல்லாத ஒரு பெண்ணையும் அவரது மனைவியென்றும் இணைத்து அனுப்பிவிடுகின்றனர்.
அங்கே சென்றால் சிலபோது தனியாக ஒரு அறையில் தங்கவைக்கப்படுவார்கள். இதற்குப் பின் நடப்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.
மஹ்ரம் எனும் போது கணவன் என்றே பதிய வேண்டும் என்று அவசியமில்லை. மாமா, சாச்சா என்ற உறவு உள்ளவர்களுக்குக் கூட கணவன் என்று பதிந்துவிடுவார்கள்.

“ஒரு பெண்ணையும் அவளது தந்தையின் தம்பி சாச்சாவையும் கணவன்-மனைவி எனப் பதிந்து அனுப்பிவிடுகின்றனர். அவர்கள் இருவரையும் கணவன்-மனைவி என்று நம்பிய வீட்டுக்காரர்கள் இருவருக்கும் ஒரே அறையை ஒதுக்குகின்றனர். ஒரே அறையில் தங்கிய சாச்சாவும் மகளும் காலப்போக்கில் கணவன்-மனைவியராகவே நடந்து கொண்டனர்……” இது இலங்கையில் நடந்த ஒரு சம்பவமாகும்.
முகவர்கள்தான் இப்படி நடந்து கொள்கின்றார்கள் என்றால் உலமாக்கள் கூட இப்படி நடந்து கொள்ளும் சந்தர்ப்பம் உண்டு. ஒரு கணவர் வெளிநாட்டில் பணி புரிகின்றார். அவரது இளம் மனைவியை உம்ராவுக்கு எடுத்து சந்திக்க விரும்புகின்றார். எல்லா ஏற்பாடுகளும் நடக்கின்றது. அந்தப் பெண் உம்றா செல்ல மஹ்ரமான ஆண் துணையைப் பதிந்து கொள்ள வேண்டும். அழைத்துச் செல்லும் ஆலிம் தன்னை அவளது கணவன் என்று போட்டுவிடுகின்றார்.
உம்றாவுக்குச் சென்ற பின் கணவன் தகவல் அறிந்து ஏன் இதற்கு சம்மதித்தாய்? என மனைவியுடன் சண்டை பிடிக்க மனைவிக்கு அப்போதுதான் விடயம் தெரிந்து ஆத்திரத்தில் பாஸ்போட்டில் இருந்து அந்தத் தாளைக் கிழிக்க அவள் நாடு வருவதற்கு பெரும் சிரமப்பட நேர்ந்தது.
அப்படித்தான் போட வேண்டும் என்றால் சாச்சா, மாமா என்றாவது போடலாமல்லவா? கொஞ்சம் கூட மனச்சாட்சியே இல்லையா? இந்த ஆலிம்(சாக்)களுக்கு!
ஒரு இளம் பெண்ணின் கணவர் புலிகளால் கொல்லப்பட்டுவிட்டார். அவள் தனது சகோதரி வீட்டில் வசித்து வருகின்றாள். அவள் வெளிநாடு செல்ல ஏற்பாடாகின்றது. சோடியாக (ஊழரிடந) யாரோ ஒருவரைக் கணவனாகப் பதிந்து கொண்டு போக ஏற்பாடாகின்றது. அந்த ஆண் வேலையுடன் கூடவே ஒரு பெண்ணும் கிடைத்த சந்தோஷத்தில் மிதக்கின்றான்.
இடையில் உறவுக்காரர்கள் சிலர் பார்த்துவிட்டு விடயத்தைச் சொன்னதும் பெண்ணின் தந்தை மறுக்க முகவர் தடுமாறுகின்றார். பின்னர் அந்த ஆணை அழைத்து திருமணத்திற்கு ரெஜிஸ்டர் பண்ணினால் எமது மகளை அனுப்புகின்றோம் என பெண் தரப்பு கூற போய் வந்து முடித்துக் கொள்கின்றேன் என ஆண் கூறினான்.

நான் அந்தப் பெண்ணின் மச்சானிடம் நீங்கள் ஏன் இதற்கு சம்மதித்தீர்கள்? உங்களுக்கு இது பற்றித் தெரியாதா? எனக் கேட்ட போது, தெரியும், நான் வைத்து எத்தனை நாளைக்குத்தான் பார்க்க முடியும்! என அவர் கேட்கிறார். தெரிந்து கொண்டே தனது மனைவியின் சகோதரியைத் தாரைவார்க்க சம்மதிக்கிறார் என்றால் சமூகத்தின் மனநிலை எப்படி மாறியிருக்கின்றது என்று சிந்தித்துப் பாருங்கள்.
வெளிநாட்டுக்குப் பெண்களை அனுப்புவதே ஹராம் எனும் போது சம்பந்தம் இல்லாத இருவரை இணைத்து கணவன்-மனைவி என அனுப்பும் இந்த முகவர்கள் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் என்ன பதில் சொல்லப் போகின்றார்களோ! பெரும்பாலும் அடுத்தவர்களின் குடும்பங்கள் சீரழியக் காரணமாக இருக்கும் இத்தகைய முகவர்களின் குடும்பங்களும் உருப்படாமல் இருப்பது அவர்களுக்குக் கிடைக்கும் இம்மைத் தண்டனை என்றே கூற முடியும்.
மார்க்க ரீதியில் பெண்கள் மஹ்ரம் துணை இல்லாமல் வெளிநாடு செல்வது ஹராம் என்றிருக்கும் போது பெண்கள் ஏன் வெளிநாடு செல்கின்றார்கள்? அதற்கான காரணங்கள் என்ன? என்பதைக் கண்டறிய வேண்டும்.
பெண்கள் ஏன் வெளிநாடு செல்கின்றனர்:
1. உலமாக்களின் அசிரத்தை:
பெண்கள் வெளிநாடு செல்வது அதிகரித்துப் போனதற்கு உலமாக்களும் மூல முதற் காரணமாகத் திகழ்கின்றார்கள். உலமாக்கள் இந்தத் தீமையை எதிர்ப்பதைக் கைவிட்டு விட்டனர். இது சமூக அங்கீகாரம் பெற்ற ஹராமாக மாறிவிட்டது. ஆரம்ப காலத்தில் பெண்கள் வெளிநாடு செல்வதை உலமாக்கள் எதிர்த்தனர். காலப் போக்கில் அங்குள்ள அரபிகளுக்குக் கடிதம் எழுதி அதற்குப் பணமும் வாங்கினர். இப்போது யாரும் இதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்வது கிடையாது. இதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்யப்பட்ட பகுதிகளில் பெண்களின் வெளிநாட்டுப் படையெடுப்பு குறைந்தே காணப்படுகின்றது.

எனவே, உலமாக்கள் இந்தத் தீமையைக் கண்டித்து குத்பா உரைகள் செய்ய வேண்டும். உலமாக்களின் குடும்பப் பெண்களே வெளிநாடு சென்று வருவதால் உலமாக்களில் சிலர் சங்கடப்படுகின்றனர். இந்தக் சங்கடத்தை தூக்கி ஒரு புறம் எறிந்துவிட்டு எதிர்ப்புப் பிரச்சாரத்தை முடுக்கிவிட வேண்டும். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் இதற்கான தூண்டுதலை வழங்க வேண்டும்.
2. ஆடம்பர மோகம்:
பெரும்பாலான பெண்கள் இருக்கும் வசதிகளை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆடம்பர நோக்கத்தில்தான் வெளிநாட்டு வேலைவாய்ப்பைத் தேர்ந்தெடுக்கின்றனர். உண்ண போதிய உணவோ, அணிய போதிய ஆடையோ இல்லை என்பதற்காக வெளிநாடு செல்பவர்கள் மிகவும் குறைவாகும். அடுத்த வீட்டைப் பார்த்துவிட்டு அதைவிடப் பெரிய வீடும் அவர்களை விட பெரிய வுஏயையும் வங்க வேண்டும் எனக் கனவு காண்கின்றனர். இளம் பெண்கள் கூட இந்த ஆடம்பர மோகத்தில்தான் பெரும்பாலும் வெளிநாடு செல்கின்றனர்.

3. ஆண்களின் பேடித்தனம்:
ஆண்களின் பேடித்தனம் பெண்கள் வெளிநாடு செல்வதற்கு மிக முக்கிய காரணமாகும். குடும்பத்தில் கொஞ்சம் கஷ்டம் வந்ததும் மனைவி வெளிநாடு போகிறேன், உங்கள் கஷ்டம் குறையும் என்றதும் தனது மனைவியைக் கண் காணாத இடத்திற்கு அனுப்ப சம்மதித்துவிடுகின்றான். அங்கு அவள் போய் என்ன கஷ்டப்படுவாள் என்று சிந்தித்துப் பார்ப்பதில்லை. உண்மையான எந்த ஆணும் இதற்குச் சம்மதிக்கமாட்டான். பெண்களும் ஆண்களின் சம்பாத்தியத்திற்கு ஏற்ப சிக்கனமாகவும் எளிமையாகவும் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

ரிஸானாவின் வீட்டைப் பார்த்தால் அவர்களின் வறுமையின் கோரம் புரியும். இந்த நேரத்தில் ரிஸானாவின் தந்தை ரிஸானாவை அனுப்பாமல் அவர் வெளிநாடு செல்ல எண்ணியிருந்தால் அதைப் பாராட்டலாம். வயது குறைந்த பிள்ளையை வயதைக் கூட்டிப் போட்டு சட்ட விரோதமாக ரிஸானாவை அனுப்பாமல் ரிஸானாவின் தாயை அனுப்பியிருந்தால் கூட மார்க்கத்திற்கு முரண் என்றாலும் நாட்டுச் சட்டம் மீறப்படவில்லை என்றாவது கூறலாம். இங்கு இரண்டும் மீறப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கதாகும்.
4. சீதனக் கொடுமை:
இஸ்லாத்திற்கு எள்ளளவும் உடன்பாடு இல்லாத சீதனக் கொடுமை எம் சமூகத்தில் தலைவிரித்துத் தாண்டவமாடுகின்றது. ஆண்கள் பெண்களாக மாறி சீதனம் பெறுகின்றனர். சீதனமில்லாமல் பெண்கள் கரைசேர முடியாத நிலை நீடிக்கின்றது. பெற்ற பிள்ளைக்கு சீதனம் சேர்ப்பதற்காகத் தாய்மார்களும் தமக்குத் தாமே சீதனம் சேர்ப்பதற்காக சகோதரிகளும் கடல் கடந்து செல்கின்றனர். அங்கு அவர்கள் படும் அனைத்து அவஸ்தைகள், அவமானங்கள் அசௌகரியங்கள் அனைத்திலும் சீதனம் வாங்கும் ஆண்களுக்குப் பங்குள்ளது. சீதனம் தேடப்போய் எத்தனை பேர் கற்பையும் வாழ்வையும் இழந்து வருகின்றனர் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

5. சமூகப் பொறுப்பு உணரப்படாமை:
எமது சமூக நிலையும் பெண்கள் வெளிநாடு செல்லக் காரணமாக உள்ளது. எமது சமூகத்தில் உள்ள செல்வந்தர்கள் உரிய முறையில் ஸகாத், ஸதகாக்களை வழங்கி வந்தால் இஸ்லாம் கூறும் குடும்ப உறவு முறைகள், அயலவர் உரிமைகள் சரியாகப் பேணப்பட்டால் நிறையப் பிரச்சினைகளைத் தீர்க்கலாம். இவ்வாறே அநாதைகள் முறையாக அரவணைக்கப்பட்டால் அவர்களுக்காக கணவனை இழந்த பெண்கள் அந்நிய நாட்டில் அடிமைத்துவ வாழ்க்கை வாழ வேண்டியிருக்காது.

கணவனை இழந்த அல்லது விவாகரத்தான பெண்களுக்கு மறுவாழ்வுக்கான வழிகள் அருகி வருகின்றது. சில இளம் விதவைகள் வாழும் வழியில்லாமல் வெளிநாடு செல்கின்றனர். வெளிநாடு என்பது உழைப்புக்காக மட்டும் அல்ல. அவர்களது உடல் தேவையை கலங்கம் இல்லாமல் தீர்த்துக் கொள்ளும் வழியாகவும் அது அமைந்து விடுகின்றது. கணவன் இல்லாத பெண் தனியாக பஸ்ஸில் பயணித்தால் அடுத்தவர்களுடன் சிரித்துப் பேசினால் கூட எமது சமூகம் அவர்களைக் கேவலமாகப் பார்க்கின்றது. ஆனால், வெளிநாடு சென்றால் அவர்களை யாரும் குறையாக எண்ண மாட்டார்கள். இந்தப் பெண்களுக்கு மறுவாழ்வுக்கு வழியில்லை எனும் போது வெளிநாட்டு வாழ்க்கை என்பது அவர்களின் தாகங்களுக்குக் கஷ்டம் இல்லாத தீர்வாகவும் மாறிவிடுகின்றது.
6. வறுமையின் கோரம்:
தாங்கிக்கொள்ள முடியாத வறுமை காரணமாகவும் மாற்று வழியில்லாமலும் வெளி நாடு செல்லும் பெண்களும் உள்ளனர். தனது வாழ்வு பட்டுப் போனாலும் பரவாயில்லை, தனக்குக் கீழுள்ள சகோதர சகோதரிகளின் வாழ்வாவது ஒளிவீசட்டும் என்ற தியாக சிந்தனையுடன் வேண்டா வெறுப்புடன் செல்பவர்களும் உள்ளனர். ரிஸானாவைப் போன்ற இத்தகைய பெண்கள் மிகவும் அரிது. நூற்றுக்குப் பத்துப் பெண்கள் கூட இப்படி இருக்கமாட்டார்கள். இத்தகைய பெண்கள் பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் முயற்சித்தால் சொந்த நாட்டிலேயே உழைத்து வாழ வழியிருக்கும். அந்த வழியைக் கண்டு பிடித்து முயற்சிக்க வேண்டும். அப்படி முயற்சித்தால் அல்லாஹ் அருள் புரிவான்.

7. முகவர்களின் தூண்டுதல்:
ஸப் ஏஜென்ட் எனக் கூறப்படும் இவர்கள் வீடு வீடாகப் போய் கதை கொடுத்து வெளிநாடு செல்ல ஒத்துக் கொண்டு பாஸ்போட்டைத் தந்தால் இவ்வளவு கிடைக்கும் என்று ஆர்வமூட்டுகின்றனர். அப்பாவிப் பெண்கள் பாஸ்போட்டைக் கொடுத்துவிட்டு பத்து, இருபது ஆயிரங்களை வாங்கிச் செலவழித்து விட்டு மாற்று வழியில்லாமல் வெளிநாடு செல்கின்றனர்.

வெளிநாடு செல்ல வேண்டும் என்ற எண்ணமே இல்லாத பெண்களின் உள்ளங்களிலும் இந்த iஷத்தான்கள் ஊசலாட்டத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். முதலில் முஸ்லிம் சமூகம் இவர்கள் விடயத்தில் ஒரு முடிவுரை காட்ட வேண்டும்.
பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்பி பணம் பெறும் இந்தப் போக்கிரிகள் எந்த அயோக்கியத்தை வேண்டுமானாலும் செய்யத் தயாராக உள்ளனர். திருட்டுப் பாஸ்போட் தயாரித்தல், வயதை மாற்றுதல், காபிரானவர் களை முஸ்லிம் என்ற பெயரில் அனுப்புதல் என இவர்களின் அடாவடித்தனங்கள் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கின்றன.
வெளிநாட்டுப் பயணத்தின் பாதிப்புக்கள்
1. கற்பை இழக்கும் பெண்கள்:
வெளிநாட்டு வேலை வாய்ப்பால் ஏற்படும் பெரிய பாதிப்பு இதுதான். எமது பெண்களில் பலர் கற்பை இழக்கின்றனர். வெளிநாட்டில் மட்டுமன்றி உள்நாட்டிலும் அவர்கள் உருக்குலைக்கப்படுகின்றனர். அவர்களை வேட்டையாடும் முதல் ஓநாய்கள் முகவர்களாவார்கள்.

சிறு வயதுப் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பும் முகவர்கள் அவர்களுக்கு அடையாள அட்டை, பாஸ்போட் எடுக்க கொழும்புக்கு அழைத்துச் செல்கின்றனர். விரைவில் முடிக்கக்கூடிய வேலையாக இருந்தாலும் எப்படியாவது தாமதிக்க வைத்து தங்க வைக்க முயற்சிப்பர். தங்கும் சந்தர்ப்பத்தில் அவர்களை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
சிலர் வெளிநாட்டுப் பயணத்திற்கான முன்னேற்பாட்டுக்காக கொழும்பு வந்து சில நாட்கள் தங்கும் இத்தகைய பெண்களை வேறு ஆண்களுக்கு தொடர்பு பண்ணிக் கொடுக்கும் கேவலமும் பரவலாக இடம்பெறுகின்றது.
சிலர் எல்லாம் முடிந்து வெளிநாட்டுக்கு அனுப்ப விமான நிலையம் வந்து அனுப்பி விட்டு உறவினர்களை “நீங்கள் போங்கள்! உங்கள் மகள் பிலைட் ஏரிட்டா” என அனுப்பி விடுகின்றனர். உள்ளே சென்ற பெண் ஏதோ சில சிக்கல் என்று வெளியே வந்தால் குடும்பத்தினர் சென்றிருப்பார்கள். அவளுக்கு மிஞ்சியிருக்கும் ஒரே துணை அந்த ஏஜன்ட்தான்.
இப்படி நாம் கூறும் போது இதில் நூற்றில் ஒன்றுதான் எவ்வளவோ நல்ல முகவர்கள் இருக்கிறார்கள் என்று கூறலாம். உண்மைதான் ஆனால், நல்ல முகவர்கள் இருக்கிறார்கள் என விளம்பரப்படுத்துவதற்காக இந்தக் கட்டுரையை நாம் எழுதவில்லை. இப்படியெல்லாம் நடக்கின்றது என்று எச்சரிக்கை செய்யவே எழுதுகின்றோம். தனக்கு இப்படி நடந்து ஒரு முகவர் மூலமாகத் தனது கற்பு சூறையாடப்பட்டதை ஒரு பெண்மணி எழுத்து மூலமாக எமக்கு அறியத் தந்துள்ளார்.
விமானம் ஏறும் முன்னரே இவ்வாறு திட்டமிட்டுக் கருவறுக்கப்படும் அப்பாவிப் பெண்கள் ஏராளம் உள்ளனர். அங்கு சென்ற பின்னர் அந்நிய வீட்டில் இரண்டு வருடங்கள் தங்க வேண்டும். அந்த வீட்டில் உள்ள தந்தை, மகன், வீட்டு டிரைவர் என பல ஆண்களின் காம வேட்டைக்கு அவள் ஆளாகும் வாய்ப்பு உள்ளது. சில வீடுகளில் தந்தை நல்லவனாக இருந்தால் மகன் நல்லவனாக இருக்கமாட்டான். மகனும் நல்லவனாக இருந்தால் குடும்பத்தைப் பிரிந்து தனியாக வாழும் டிரைவரின் பார்வையில் இருந்து தப்புவது பெரும் கஷ்டம். இவர்கள் மூவரும் நல்லவர்களாக இருந்தாலும் போகின்ற பெண்ணும் நல்லவளாக இருக்க வேண்டுமல்லவா?

2. வேலி தாண்டும் வெள்ளாடுகள்:
வெளிநாடு செல்லும் சில பெண்கள் உள்ளுரில் நல்லவர்களாக இருந்தாலும் வெளிநாடு சென்ற பின்னர் கால சூழலாலும் சந்தர்ப்பவசத்தாலும் தவறு செய்கின்றவர்களாக மாறி வருகின்றனர்.

சிலர் பணத்துக்காகத் தவறுக்கு விரும்பியே இணங்குகின்றனர். சில டிரைவர்கள் எனது வீட்டுப் பணிப்பெண்ணுக்கு என்னை விட சம்பளம் குறைவு. ஆனால் அவள் மாதாமாதம் என்னை விட அதிகமாக வீட்டுக்குப் பணம் அனுப்புகிறாள் என முணுமுணுப்பவர் களும் உள்ளனர்.
இவ்வாறு உழைக்க வந்துவிட்டோம், உழைத்துவிட்டுப் போவோம் என்ற நிலையில் சில பெண்கள் விரும்பியே தவறுக்கு இணங்குகின்றனர்.
மற்றும் சில யுவதிகள் வெளியில் பணி செய்யும் ஆண்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்கின்றனர். சில வீடுகளில் தனியாக வெளியில் செல்ல அனுமதிப்பர். இந்த மாதிரியான நட்பு தவறாகப் பயன்படுத்தப் படுகின்றது. இளம் பெண்கள் தங்கள் ஆண் நண்பர்களுக்கு ஆபாசமாக முக்கி முணங்கிப் பேசும் பேச்சுக்கள் அடங்கிய ஒளி நாடாக்கள் ஏராளமாக உலாவுகின்றன. சில பெண்கள் குறிப்பாக, கணவன் இல்லாத பெண்களுக்கு வெளிநாடு உழைப்புக்கு மட்டுமன்றி ஊடலுக்கும் பரிகாரமாக உள்ளது.
சில பெண்கள் பணி முடிந்து வரும் போது விமானத்திலேயே ஆண்களுடன் நெருங்கிப் பழகி வரும் காட்சிகளைக் காண்கின்றோம். இவர்கள் வீட்டில் எப்படி இருந்திருப்பர் என்று யூகிக்கலாம்.
பஸ் பயணத்தில் பக்கத்து இருக்கையில் இருக்கும் ஆணின் சபலத்திற்கு இணங்கும் பெண்கள் வெளிநாட்டில் இரண்டு வருட வாழ்க்கiயில் எப்படி நடந்து கொள்வர் என்று அனுமானிக்கலாம். ஒரே வார்த்தையில் கூறுவதென்றால் “அவர்கள் முற்றும் துறந்த முனிவர்களும் அல்லர். இங்கிருந்து செல்பவர்கள் அனைவரும் படி தாண்டாத பத்தினிகளும் அல்லர்” என்றுதான் கூற வேண்டும்.
(அங்கு சென்று ஒழுக்கமான வீட்டில் ஒழுக்கமாக வாழ்ந்துவிட்டு வரும் பெண்கள் தயவு செய்து மன்னிக்கவும்)
3. சீரழியும் குடும்பம்:
குடுபம் என்பது கணவன், மனைவி, பிள்ளைகள் என்கின்ற உறவுகளைக் கொண்டது. ஒரு பெண் வெளிநாடு செல்வதால் குடும்பத் தலைவி வீட்டில் இல்லாமல் போய்விடுகின்றாள். குடும்பம் மாலுமி இல்லாத கப்பலின் நிலைக்கு வந்து விடுகின்றது.

கணவன்:
ஆண்களில் பெரும்பாலானவர்கள் சுயநலக்காரர்கள். சும்மா இருந்து சுகம் அனுபவிக்க கிடைத்தால் அதற்குப் பழகிப் போவார்கள். மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு பிள்ளைகளைப் பார்க்க வேண்டும் என்று சாட்டுச் சொல்லி செய்யும் தொழிலையும் விட்டு விட்டு மனைவி அனுப்பும் பணத்தையும் வீண்விரயமாக்கும் ஆண்களே அதிகம் உள்ளனர். வீடு கட்டுவதற்காக வெளிநாடு செல்லும் பெண்கள் கடைசி வரை வெளிநாடு சென்று கொண்டே இருக்க வேண்டியதுதான்.

மனைவி என்பவள் கணவனுக்கான மூக்கணாங் கயிறு. அவள் இல்லையென்றால் மூக்கணாங் கயிறு இல்லாத மாடு போன்று அவன் அலையத் துவங்குகின்றான். நிறைய ஆண்கள் மதுவுக்கும் சூதுக்கும் இத் தருணங்களில் அடிமையாகின்றனர். மனைவியை வெளி நாட்டுக்கு அனுப்பி விட்டு குறைந்தது மூன்று மாத்திற்கு ஒரு முறையாவது தவறான பாலியல் உறவை ஒரு ஆண் நாடுவான். சிலர் விபச்சாரிகளை நாடுகின்றனர். சிலர் தன்னினச் சேர்க்கைக்கு உள்ளாகின்றனர்.
மூத்த ஆண் மகன்:
தாய் இல்லா வீட்டுடன் ஆண் மகனுக்கு அதிக பிடிப்பு இருக்காது. எனவே, அதிகமாக அவன் வெளியில் காலத்தைக் கழிப்பான். இச் சந்தர்ப்பங்களில் களவு, சிகரட், அபின், பான்பராக், குடு, ஆபாச சினிமா…… போன்றன கெட்ட நட்புக்கள் காரணமாக அவனது வாழ்வில் குடிகொண்டு விடுகின்றன. தந்தை மீது தனயனும் தனயன் மீது தந்தையும் வெறுப்புக் கொள்கின்றனர். அதிகமாக வீட்டை விட்டும் வெருண்டோடும் சந்தர்ப்பங்கள், இள வயதுத் திருமணங்கள் கூட இதனால் நடை பெறுகின்றன.

மகள்:
ஒரு பெண் வெளிநாடு செல்கின்றாள் என்றால் அவளது மூத்த மகள் படிப்பை விடுகின்றாள். எதிர்காலக் குடும்பத் தலைவி ஒருத்தி அறிவு பெறும் உரிமையை இழக்கின்றாள். தந்தையின் பொடுபோக்கு, சகோதரனின் தவறான நடத்தை, இள வயதில் குடும்பத்தைச் சுமக்கும் மனப் பாரம், வீட்டில் தாய் தந்தை இல்லாத போது பக்கத்து வீட்டுப் பையன், உறவுக்கார ஆண்களின் சீண்டல்கள், தூண்டல்கள், தாயின் அரவணைப்பு மற்றும் ஆலோசனையின்றி சூடேற்றும் சினிமாப் படங்கள் மற்றும் பாடல்கள், நாடகங்கள்……. இவ்வாறான பல காரணங்களால் அவள் காதல் வயப்படுகின்றாள். சில போது வீட்டை விட்டும் ஓடும் நிலைக்கு ஆளாகின்றாள். சில போது உறவுகளாளேயே தவறாக வழி நாடாத்தப் படுகின்றாள். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில போது தந்தையால் கூட தவறாக நடாத்தப்பட்ட பெண் பிள்ளைகளும் உள்ளனர்.

சின்னப் பிள்ளைகள்:
ஒரு தாய் வெளிநாடு செல்லும் போது அவளது இளைய சிறு பிள்ளைகள் தாயின் தாயிடம் அல்லது சகோதரிகளிடம் அல்லது மூத்த மகளிடம் வளர்கின்றது. பாட்டி பாசத்தைக் காட்டினாலும் தேவையான வழிகாட்டலை வழங்கமாட்டாள். சகோதரிகள் சில நாட்கள் நன்றாகப் பார்த்தாலும் காலப் போக்கில் பிள்ளையைப் பார்ப்பதை விட “செக்” எப்ப வரும்! எவ்வளவு வரும்! என்பதில் தான் அக்கறை இருக்கும். இள வயது சகோதரியால் குழந்தையை சரியாகப் பராமரிக்க முடியாது. தந்தையைப் பொறுத்த வரையில் அந்தக் குழந்தைகளுடன் போதிய பொறுமையுடன் நடந்து கொள்வதில்லை. பச்சிளம் பருவத்தில் தாய் இருந்தும் அவளது அன்பையும் அரவணைப்பையும் பெற முடியாமல் தவிக்கும் அந்தப் பிஞ்சு உள்ளங்களைப் புரிந்து கொண்டாவது தாய்மார்கள் வெளிநாடு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

இளம் பெண்கள்:
சில போது இளம் பெண்கள் வெளிநாடு செல்கின்றனர். சில தந்தையர்கள் அந்தப் பெண்கள் அனுப்பும் பணத்தைக் கூட சூறையா டிவிடுகின்றனர். சில அநாதைப் பிள்ளைகள் வெளிநாடு சென்று தமது திருமணத்திற்காகத் தமது சகோதரர்களுக்குப் பணத்தை அனுப்பினால் அதைக் கபளீகரம் செய்துவிடும் ஆண்கள் கூட இருக்கின்றனர். எனவே, வெளிநாட்டு வாழ்க்கை சிலரது வாழ்வில் விளக்கேற்றினாலும் பலரது வாழ்வில் இருக்கின்ற பிரகாசத்தை அழித்து இருளாக்கி உள்ளது என்பதே உண்மையாகும்.

சகோதரிகள்:
சில பெண்கள் வெளிநாடு சென்ற பின்னர் பிள்ளைகளை அவர்களது சகோதரிகள் கண்காணிக்கின்றனர். இத்தகைய மதினிகளைத் தங்கள் ஆசைக்கு இணங்கச் செய்து சில குடும்பங்கள் சீரழிந்துள்ளன. சிலர் சொந்த மாமியுடன் கூட அதாவது, மனைவியின் தாயுடன் தவறாக நடந்த நிகழ்ச்சிகளும் உண்டு.

இவ்வாறு பார்க்கும் போது வெளிநாட்டுப் பயணம் என்பது பலரது வாழ்வை இருளாக்கி மங்கி மடியச் செய்து விடுகின்றது.
முஸ்லிம் சமூகத்தில் இடம் பெறும் பல குற்றச் செயல்களுக்கும் அறிவு வீழ்ச்சிக்கும் அடிப்படைக் காரணமாக பெண்களின் வெளிநாட்டுப் படையெடுப்பு அமைந்துள்ளதால் தயவு செய்து பெண்களே! வெளிநாட்டுக் கனவைக் கைவிடுங்கள். உள்நாட்டிலேயே நிச்சயமாக இறைவன் உங்களுக்கு “ரிஸ்க்” அளந்திருப்பான். முயற்சித்துப் பாருங்கள்!
முஸ்லிம் சமூகத் தலைமைகள் வெளிநாட்டுப் படையெடுப்பைத் தவிர்க்க ஆவண செய்ய வேண்டும். முறையான ஸகாத் விநியோகம், பைதுல்மால் அமைப்புக்கள், சுயதொழில் ஊக்குவிப்பு….. போன்ற திட்டங்களைத் தீட்ட வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் வரதட்சனைக் கொடுமையை ஒழிக்க முன்வர வேண்டும். வரதட்சனை வாங்கும் ஆண்கள் பெண்கள் அனைவரும் அங்கு நடக்கும் அத்தனை பாவங்களிலும் பங்குதாரர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். இன்னும் நிறைய விடயங்கள் சொல்ல வேண்டி இருந்தாலும் உள்ளத்தில் இருப்பதையெல்லாம் எழுத முடியாதுள்ளது.
(Moderated by admin on 10/3/2013)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.